தண்ணீர் பிரச்னை, இரட்டைத் தலைமை, 37 எம்.பிக்கள், பிகில் இவற்றிற்கெல்லாம் மூளையில் கொஞ்சம் ஓரமாக இடமளித்துவிட்டு, இன்றிரவிலிருந்து இன்னொரு விஷயத்துக்குத் தாவிவிடும் தமிழ்ச்சமூகத்தின் ஒரு கூட்டம்.

அது… பிக்பாஸ் சீசன் 3. ‘ஊர்ல இத்தனை பிரச்னை இருக்கறப்ப இதெல்லாம் சரியா.. தவறா’ என்ற பட்டிமன்றங்களுக்கெல்லாம் போகாமல் ‘நல்லது கெட்டதெல்லாம் கலந்ததுதான் பாஸ் லைஃப்’ என்று ஜாலியாக, கலாயாக, கலக்கலாக, எமோஷனலாக பிக்பாஸை நூறு நாளைக்கு அலசி ஆராயப்போகிறேன். நான் ஸாரோ.

அதற்குமுன், பிக்பாஸ் கான்செப்டின், அடிப்படை எங்கிருந்து வந்தது எனச் சுருக்கமாகப் பார்ப்போம்.

நெட்ஃப்ளிக்ஸில் ‘லேய்லா’ என்றொரு சீரிஸ் வந்திருக்கிறது. 2049ல் இந்தியாவில் மதவாத ஆட்சி ஒன்று நடக்குமானால், என்னென்ன ஆகும் என்பதுதான் ஒன்லைன். 70 வருடங்களுக்கு முன்பு, 1949-ல் ஆங்கில எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல் என்பவர் ‘1984’ என்றொரு நாவல் எழுதினார். குழப்பமாக இருந்தால் முந்தைய வரியை இன்னொரு முறை படித்துவிடுங்கள். 1949ல் வந்த அந்த நாவல், 35 வருடங்களுக்குப் பின் 1984ல் ஒரு சர்வாதிகார அரசாங்கம் தன் சொந்த மக்களை ரகசியமாகக் கண்காணிப்பதாக இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து எழுதப்பட்டிருந்தது. அந்த நாவலில், நாட்டை ஆளும் Party (இதுதான் கட்சியின் பெயர்)யின் தலைவர் Big Brother. பிக்பிரதர் மக்களைக் கண்காணித்து, அவர்களுக்கு டாஸ்க் கொடுத்து, அவர்களின் சிந்தனைகூட தனக்கு எதிராக இல்லாத வண்ணம் பார்த்துக்கொண்டார். நீங்கள் என்ன செய்தாலும் Big Brother is watching என்பதுதான் அந்த நாவல். இந்தப் பெயரிலிருந்தும், கான்செப்டிலிருந்தும் கவரப்பட்ட நெதர்லாந்தின் எண்டமோல் நிறுவனம் பிக்பிரதர் என்ற டெலிவிஷன் ஷோவை வடிவமைத்தது.

நெதர்லாந்தின் பிக்பிரதர் ஒளிபரப்பானது 1999ல். கடந்த 20 வருஷத்தில் ஒவ்வொரு நாட்டிலும், பல மொழிகளில் இது ஒளிபரப்பப்பட்டு… 435க்கும் மேற்பட்ட சீசன்கள் முடிந்திருக்கின்றன! இப்போது தமிழுக்கு வருவோம்.

2017ல் விஜய் டிவியில் முதல் சீசன் ஒளிபரப்பானது. கமல்ஹாசன் தொகுத்துவழங்கினார். ஒரு விஷயத்தை மீண்டும் ஞாபகப்படுத்திவிடுகிறேன். கமல் பிக்பாஸ் அல்ல. பிக்பாஸ் என்பவர் கண்ணுக்குத் தெரியாத ஒருவர். அதுதான் கான்செப்டே! பிக்பாஸின் ஆணைகளை ஹவுஸ்மேட்ஸுக்குத் தெரிவிப்பதும், அவர்களின் செயல்பாடுகளை விமர்சித்து நெறிப்படுத்துவதும் என, பிக்பாஸுக்கும் ஹவுஸ்மேட்ஸுக்கும் மய்யமாக இருப்பவர்தான் கமல். பிக்பாஸில் கமல் என்றதும் எதிர்பார்ப்பு எகிற அவரும் அதைப் பூர்த்தி செய்தார்.

பிக்பாஸ் சீசன் 1 நடந்தது என்ன?

ஸ்ரீ, அனுயா, வையாபுரி, காயத்ரி ரகுராம், பரணி, ரைசா, சிநேகன், ஓவியா, ஆர்த்தி, ஆரவ், கஞ்சா கருப்பு, ஜூலி, கணேஷ் வெங்கட்ராம், சக்தி, நமீதா – இவர்கள்தான் சீசன் 1-ன் போட்டியாளர்கள். பிந்து மாதவி, காஜல், ஹரீஷ் கல்யாண், சுஜாவருணி ஆகியோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர்.

பிக்பாஸின் வெற்றி என்ன என்பதை இந்தப் பெயர்களைப் படிக்கும்போதே உணர்ந்துவிடலாம். சிலரோ அல்லது பலரோ.. ’இதுல ஸ்ரீ யாரு?’ என்று ஒரு நிமிஷம் யோசித்திருப்பார்கள். மாநகரம் பட ஹீரோ. முதல் சீசனில் நான்கே நாட்களில் வெளிவந்துவிட்டார். அதே சமயம், மேற்கண்ட பட்டியலில் ரைசா, ஆரவ், ஜூலி ஆகியோர் சீசன் ஆரம்பிக்கும்போது யாரென்ற அறிமுகம் பெரிதாக இல்லாதவர்கள். இவர்களுக்கு பிக்பாஸ் கொடுத்த வெளிச்சம் வெளியே வந்தும் உதவியது.

முதல் சீசனில் ஓவியா ஒரு பென்ச்மார்க் கோட்டைப் போட்டுவிட்டு வெளியேறினார். ‘போட்டியாளர்னா ஓவியாதாண்டா’ என்று ஒட்டுமொத்த பிக்பாஸ் பார்வையார்களையும் நினைக்க வைத்தார். அந்த போட்டி நடந்த காலகட்டத்தில் தமிழகத்தில் பிறந்த பெண்குழந்தைகளில் நூற்றில் ஒருவராவது ஓவியா என்று பெயர் பெற்றிருப்பார் எனும் அளவுக்கு ஓவியா அலையடித்தது. அவருக்கு பிக்பாஸ் வீட்டில் நடக்கும் அநீதிகளுக்கு பொங்கினர் பிக்பாஸ் பார்வையாளர்கள். ‘ஓவியா ஆர்மி’ சமூக வலைதளங்களில் டிரெண்டானது. போட்டி நடக்கும்போதே ஓவியா தற்கொலைக்கு முயன்றதாக தகவல் பரவி பலரும் அதிர்ச்சியாகினர். நிகழ்ச்சியை தடைசெய்ய பொதுநல வழக்கு தொடரப்பட்டது. ஓவியாவை ஓரம்கட்டிய ஹவுஸ்மேட்ஸை சனி ஞாயிறுகளில் அகம் டிவி வழியாக கமல் வறுத்தெடுக்க, ’இதை நடத்த சரியான ஆளு நீதான் ஆண்டவரே’ என்று அவருக்குக் கைகொடுத்தார்கள் ரசிகர்கள்.

ஒவ்வொரு முறை எவிக்‌ஷனில் சக போட்டியாளர்கள் எப்படியாவது வெளியேற்றிவிடவேண்டும் என்று ஓவியா பெயரை முன்மொழிந்தபோது, மக்கள் ஓட்டுப்போட்டு அவரைப் போட்டியில் தக்கவைத்தனர். ’ஓவியாக்குப் போட்ட வாக்குகளை எனக்காச்சும் போட்டிருக்கலாம்யா’ என்று அன்புமணி அங்கலாய்க்கும் அளவுக்கு ஓவியா ரசிகர்கள் தாக்கம் உச்சத்தில் இருந்தது.

ஓவியாதான் வின்னராவார் என்று எதிர்பார்த்த நிலையில் 41வது நாள் அவர் டாட்டா காட்டிவிட்டு வெளியேறினார். வைல்டு கார்டு எண்ட்ரி கொடுத்த ஹரீஷ் கல்யாண், மூன்றாவது இடத்தையும், சிநேகன் இரண்டாவது இடத்தையும் பெற முதல் சீசன் வின்னர் ஆனார் ஆரவ்.

சீசன் 2 – ரீவைண்ட்

யாஷிகா, பொன்னம்பலம், மஹத், டேனி, வைஷ்ணவி, ஜனனி, அனந்த் வைத்யநாதன், என்.எஸ்.கே.ரம்யா, செண்ட்ராயன், ரித்விகா, மும்தாஜ், தாடி பாலாஜி, மமதி சாரி, நித்யா பாலாஜி, ஷாரிக், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் ஹவுஸ் மேட்ஸ். விஜயலட்சுமி வைல்ட் கார்டு எண்ட்ரியில் வந்தார்.

ஏற்கெனவே சொன்னதுபோல, ஓவியா ஒரு பென்ச்மார்க்கை கொடுத்துவிட்டுச் சென்றதால், இரண்டாவது சீசன் ஆரம்பத்திலேயே யார் இந்த சீசனின் ஓவியா என்ற எதிர்பார்ப்புதான் இருந்தது. ஆனால் யாருமே அப்படி இருக்கவில்லை. தவிர, முதல் சீசனில் கலக்கிய கமலின் ஸ்கிரிப்ட் சொதப்பலோ என்னமோ அவரும் சொதப்பினார். பேசிவிட்டு கூட்டத்தை கைதட்டலுக்காகப் பார்ப்பது என்ற புது உடல்மொழியை தமிழ்கூறும் டிவி உலகுக்கு அறிமுகப்படுத்தினார். ரசிகர்கள் அவருக்கே சஸ்பென்ஸ் கொடுத்து, கைதட்டாமல் தேமே என்று பார்த்துக்கொண்டிருப்பதும் நடந்தேறியது. இரண்டாவது சீசனில் அவர் நடிகர் கமலாக மட்டும் வரவில்லை.; அரசியல்வாதியாகவும் ஆகியிருந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்திருந்தார். ஆகவே அவ்வப்போது அரசியல்வாதிகளைக் கேள்வி கேட்டு அவர் இரட்டுற மொழிந்தார். அது புரிந்தவர்கள் ரசித்தனர்.
இரண்டாவது சீசனில் யாஷிகா, ஐஸ்வர்யா, டேனி ஆகியோரின் கூட்டணி கொஞ்சம் சுவாரஸ்யம் கொடுத்தது. பிக்பாஸ் வெறும் போட்டியல்ல, உங்கள் வாழ்க்கையைவே மாற்றும் என்று சொல்லி தாடி பாலாஜியை சொல்லி அனுப்பி, அதன்படி மாற்ற பிரிந்திருந்த அவரது மனைவி நித்யாவையும் அனுப்பிவைத்தனர் பிக்பாஸ் குழுவினர். சும்மா ஃபைனலுக்காக மகள் சென்டிமென்ட் எல்லாமுமாக சேர்ந்ததாக, கமல் முன் ஐ லவ் யூவெல்லாம் பரிமாறிக்கொண்டாலும் அவர்கள் ஒன்று சேரவில்லை.

யாஷிகா எல்லா டாஸ்கையும் சிரத்தையாக மேற்கொண்டார். ஐஸ்வர்யா சிரத்தையாக மேற்கொள்கிறேன் பேர்வழி என்ற பெயரில், சர்வாதிகாரி டாஸ்கில் பாலாஜி மேல் குப்பையெல்லாம் கொட்டி நிஜ சர்வாதிகாரியாக மாறினார். வைல்டு கார்டு எண்ட்ரி கொடுத்த விஜயலட்சுமி ரசிகர்களைக் கவர்ந்தார். பெரிய பெரிய கண்களோடு எல்லாருக்கும் நல்லவராக இருந்த ஜனனி, ரித்விகா இருவரில் ஒருவர்தான் வெற்றி பெறுவார்கள் என்று நினைத்தார்கள். ஜனனிக்கு நான்காவது இடமே கிடைத்தது. விஜயலட்சுமி 3வது இடத்தையும், அத்தனை ஆர்ப்பாட்டம் செய்த ஐஸ்வர்யா இரண்டவது இடத்தையும் பெற ரித்விகா வின்னரானார்.

மூன்றாவது சீசன்.. ஒரு முன்னோட்டம்

முதல் சீசனில் ‘மைக்கேல் மதன காமராஜன்’ – மதன் ஸ்டைலில் மீசையில்லாமல் வந்த கமல்தான் என்னைப் பொறுத்தவரை பெஸ்ட் லுக். அட நம்மாளு’ என்ற தோற்றம் அது. இரண்டாவது சீசனில் மீசையை முறுக்கியவர், இப்போது இன்னும் முறுக்கியிருக்கிறார். முதல் சீசனில் நடிகர், இரண்டாவது சீசனில் அரசியல்வாதி என்று வந்தவர் இப்போது, இன்னும் ஒருபடி மேலே போய் ஒரு பொதுத்தேர்தலை வெற்றிகரமாகக் கையாண்ட அனுபவத்துடன் வருகிறார். புரிகிற மாதிரி பேசினால்தான் மக்களிடம் எடுபடும் என்பதை அரசியல் மேடைகளிலேயே கண்டுகொண்டவர் இங்கேயும் அப்படித்தார் பேசுவார் என்று எதிர்பார்க்கலாம். நாடாளுபவர்களுக்கு நேரடியாகவோ, வாழைப்பழத்தில் ஊசி போலவோ கருத்துகளைச் சொல்வார் என நினைக்கிறேன்

போட்டியாளர்கள் இவர்கள்தான் என்று ஆளாளுக்கு கணிப்புகளை அள்ளித் தெளித்துக்கொண்டிருக்கிறார்கள். பவர் ஸ்டார் சீனிவசன், இயக்குநர் சேரன், விசித்ரா, மதுமிதா, பருத்திவீரன் சரவணன், ஃபாத்திமா பாபு, நடிகை அபிராமி வெங்கடாசலம் (நேர்கொண்ட பார்வை படத்துல நடிச்சிருக்காராம்!), டான்ஸ் மாஸ்டர் சாண்டி, ’புஷ்பா புருஷன்’ காமெடியில் புஷ்பாவாக நடித்த ரேஷ்மா, ஸ்ரீலங்கா மாடல் லோசிலியா, ’சரவணன் மீனாட்சி’ கவின் , மோகன் வைத்யா, வனிதா விஜயகுமார் என்று லிஸ்ட் நீள்கிறது. .

தினமும் நடப்பவற்றை ஒரு ஃப்ரெண்டாக உங்களோடு பகிர்ந்துகொள்ளப் போகிறேன். நிகழ்ச்சியைப் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் நிகழ்வின் 360 டிகிரியையும் அலசுவதால் உங்களுக்கு சுவாரஸ்யம் தரலாம். ’கேட்டியாக்கா சேதிய..’ என்று நாம் பேசுவதை நிகழ்ச்சித் தரப்பினரும் படிப்பார்கள் என்பதால் நிகழ்ச்சியின் டாஸ்க், ஸ்கிரிப்ட்டிலும் இதன் தாக்கம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம். டீலா?

கடைசியாக ஒன்று:

ஸ்கிரிப்ட் என்று எதைச் சொல்கிறேன்? நிகழ்ச்சி கண்டிப்பாக 100% ஸ்கிரிப்டட் அல்ல. ஆனால் இங்கே எதைத் ’ட்ரிக்கர்’ செய்தால் – அங்கே பிக்பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்கமுடியும். நம் நண்பர் குழுவில் ஒரு கோபக்காரர் இருப்பார் என்றால் ‘அவன்கிட்ட போய் இப்படிச் சொன்னா.. இப்படி ரியாக்ட் பண்ணுவான்’ என்று நாம் சொல்லிக்கொள்வோமல்லவா.. அதுதான் பிக்பாஸின் ட்ரிக்.

சரி.. நாளையிலிருந்து தினமும் சந்திப்போமா?

Bigg Boss Trivia:

பிக்பாஸ் இந்தி 4வது சீசனில் (அங்கே 12 சீசன் முடிந்துவிட்டது!) ‘பே வாட்ச்’ புகழ் பமீலா ஆண்டர்சன் மூன்று நாட்கள் கெஸ்டாக வந்துபோனார். மூன்று நாட்களுக்கு அவருக்குக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் தொகை: 2.5 கோடி.