வனிதா வெளியேறியதுதான் இன்றைய மெகா ஹைலைட். அதைத்தவிர, உள்ளே போகாத சில உறவினர்கள் மேடையிலும் வீடியோவிலும் வந்து ஹவுஸ்மேட்ஸிடம் பேசினார்கள்.

உஷார் ஆகிக்கோ முகினு…

வெள்ளை பேண்ட், கறுப்பு ஸ்போர்ட்ஸ் ஷூ, கறுப்பு டிஷர்ட் என்று கலக்கல் காஸ்ட்யூமில் வந்தார் கமல்.

குழந்தைத் தொழிலாளர்கள் பிரச்னையைப் பேசினார் கமல். தேர்வு முறையில் அரசு கடுமையான மாற்றம் செய்வதால், சிறுவயதில் படிப்பு பாதிக்கப்பட்டு குழந்தைகளாக இருக்கும்போதே வேலைக்குச் சென்றுவிடுவார்கள் என்பதைப் பதிவு செய்து, அதைக் கண்டித்தார். இது அரசியல் அல்ல. இதைப் பேசுவது நம் கடமை என்றும் சொன்னார். பிறகு நிகழ்ச்சிக்குச் சென்றார்.

Bigg Boss Sept 15

சாண்டி, வின்னர் மெடலை பேண்டில் செருகியிருந்தார். லாஸ்லியாவிடம் கமல் “கால் மேல கால் போட்டுக்கோங்க” என்று சொல்லி அவர் தயக்கத்தை உடைத்தார்.

வெளியிலிருந்து அழைக்கும் அழைப்பாளர் முகினுக்கு தன்னுடைய கேள்வியை முன் வைத்தார்.

“நல்லா விளையாடறீங்க. நீங்க ஏன் பிரச்னைகள் நடந்துட்டிருக்கறப்ப அமைதியா எதும் கேட்க மாட்டீங்கறீங்க?” என்று கேட்டார் சுல்தானா என்ற பார்வையாளர்.

“பிரச்னைகள் நடக்கறப்ப நாம போய்ப் பிரச்னைல உள்ள புகுந்து அதுனால பிரச்னை பெரிசாகி மூட்டி விடற மாதிரி ஆகும்னுதான். அதுதான் காரணம்.”

Bigg Boss Sept 15

வெறியேற்றம் படலம் பற்றிப் பேச ஆரம்பித்தார். “இன்னும் மூணு வாரம்தான் இருக்கு. எட்டு பேர் இருக்கீங்க. உங்களுக்கே ஒரு கணிப்பு இருக்கும் இப்ப. அடுத்தடுத்து வெளியேறிப் போகக்கூடிய போட்டியாளர்கள் யாராக இருக்கும்? அதாவது எட்டு பேரில் மூன்று பேர், மூன்று வாரங்களில் வெளியேறுவார்களே.. அவர்கள் யார்.. எந்த ஆர்டரில் வெளியேறுவார்கள்” எனக் கேட்டார் கமல்.

“நான் போகணும்” என்று சாண்டி ஆரம்பிக்க “ஆசையெல்லாம் சொல்லக்கூடாது. கணிப்பைச் சொல்லணும்” என்றார் கமல்.

“என் கணிப்புப்படி கவினுக்கு இங்க இருக்க வாய்ப்பு இருக்கு. வனிதா போகறதுக்கு வாய்ப்பு இருக்கு. இந்த வாரம் சூப்பரா இருந்தாங்க. இதே மாதிரி முன்னாடில இருந்து இருந்திருந்தா செமயா இருந்திருக்கும். அதுனால வனிதா. அடுத்த ஆர்டர், ஷெரின். (சொல்லிவிட்டு ஷெரின் பக்கம் திரும்பி “கணிப்புதான். மோசமாலாம் சொல்லல” என்றார்) அடுத்தபடி நானோ கவினோ போவோம்.”

Bigg Boss Sept 15

கவினின் கணிப்பு: “வனிதாக்கா, நான், சேரன் அண்ணா. இல்லைன்னா இந்த மூணு பேரும் ஆர்டர் மாறி இருக்கலாம்.”

சேரன், “கணிப்பு மாறிட்டே இருக்கு. அதுனால இதச் சொல்றது சரியா வராது” என்று இழுக்க கமல் “நீங்க சொன்னாலும் சொல்லலைன்னாலும் 3 பேர் வெளியேறப்போறாங்க. அதை மக்கள் பார்த்துட்டுதான் இருக்காங்க” என்றார்.

உடனே “நான் தப்பாவே சொல்றேன் சார். நான், சாண்டி, தர்ஷன்” என்றார் சேரன். இது ஜெயிக்கற லிஸ்ட் மாதிரி இருக்கே என்று எனக்குத் தோன்றியது.

முகின்: “கவின் அண்ணா, வனிதாக்கா. ரெண்டு பேர்தான் வெளியேறுவாங்கனு தோணுது. மூணாவது எனக்குத் தெரியல.”

Bigg Boss Sept 15

தர்ஷன்: “வனிதாக்கா, கவின். மூணாவதா லாஸ்லியாவா இருக்கலாம். இப்ப லாஸ்லியா நல்லா விளையாடறாங்க. முன்னாடி நடந்தத வெச்சுப் பார்த்தா லாஸ்லியா வெளில போக வாய்ப்புண்டுன்னு தோணுது.”

ஷெரின்: “கவின், லாஸ்லியா. மூணாவது நான் அல்லது வனிதா, இருவரில் ஒருவர் ஏன்னு சொல்லத் தெரியல. ஒரு ஃபீலிங்ல சொல்றேன்.”

வனிதா: “இந்த ஓட்டிங் பற்றி கணிக்கவே முடியல. நான், ஷெரின், லாஸ்லியா. கேர்ள்ஸ் அவுட்” என்றார். அவர் சொன்ன முதல் வரிக்கும் இரண்டாவது வரிக்கும் இடையில் மக்கள் எப்டி ஓட்டுப் போடறாங்க, அதை விஜய் டிவி எப்படி எடுத்துக்குதுன்னு தெரியல என்று 10 நிமிடம் பேசியிருப்பார் என்பது எடிட்டிங்கைப் பார்த்தபோது புரிந்தது.

லாஸ்லியா: “கவின், வனிதாக்கி, நான்.” (இந்த லாஸ்க்கா, வனிதாக்காவை, வனிதாக்கி வனிதாக்கினுதான் சொல்லுறாங்கய்யா!)

நீங்க நல்லவரா கெட்டவரா வனிதா?

அடுத்து வனிதாவிடம் தலைமைப் பொறுப்பை விட்டுக்கொடுத்தது ஏன் என்று கேட்டார். “நெஜம்மா மக்கள் என்னைப் பிடிச்சு ஓட்டுப் போட்டு, போட்டியில தொடரணும்னு நெனைச்சா மட்டும் இருக்கலாம். கேப்டன் ஆகி, நாமினேஷன்ல வராம இந்த வீட்ல இருக்க விருப்பமில்லை” என்றார். இது ஜென்யூனான பதிலாக எனக்கு… ஸாரி… எகெய்ன், `எனக்கு’த் தோன்றவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் நல்லா விளையாடியதாகத் தன்னைத் தானே அவர் தேர்தெடுத்துக்கொண்டிருக்கத் தேவையில்லை. சரி, மனசு மாறி இவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம். இது ஜென்யூனாக இருக்கும் பட்சத்தில் வெல்டன் வனிதா!

Bigg Boss Sept 15

தர்ஷனிடமும் அதே விஷயத்தைப் பேசினார். அவர் லாஸ்லியாவுக்காக விட்டுக்கொடுத்ததைப் பற்றிக் கேட்டார். அதற்கு தர்ஷன் கொஞ்சம் முதிர்ச்சியான பதிலைச் சொன்னார்.

“சேரன் அண்ணாவும் போனதால அவ அப்செட்ல இருந்தா. அவ கேப்ட்னா இருந்ததில்லை. அப்படி இருந்தா அவளுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்னு தோணிச்சு. வெளிநாட்டுல இருந்து வந்துட்டு, ஒண்ணும் சாதிக்கலனு அவளுக்குத் தோணவேணாம்னு ஒரு சான்ஸ் கொடுக்கத் தோணிச்சு. சாக்‌ஷிகூட ஒருக்கா சொன்னாங்க. “தமிழ்நாட்லயே பலருக்குக் கிடைக்காத வாய்ப்பு உனக்குக் கெடைச்சிருக்கு. அத வேஸ்ட் பண்ணாதன்னு. மத்தபடி தியாகம்லாம் பண்ற அளவுக்கு நான் நல்லவனில்ல” என்றார். ஆடியன்ஸ் கைதட்டி வரவேற்றனர்.

“அப்ப இது விட்டுக்கொடுக்கல. இது மோட்டிவேஷன். ஏற்கெனவே அபிராமிக்கு கேப்டன்ஸில ஒருக்கா இதப் பண்ணினீங்க. அது விட்டுக்கொடுக்கறது. இது மோட்டிவேஷன்னு வெச்சுக்கலாமா?” – இது கமல்.

“இருக்கலாம் சார். அபிராமி கேப்டன்ஸிக்கு தகுதியில்லன்னு சொன்னாங்க. அதுனால….”

“ஓ.. அப்ப அதுவும் மோட்டிவேஷன்தான்” என்ற கமல் எவிக்ட் ஆகப்போறது யார்னு எழுதிருக்கற கவர் உள்ள இருக்கு. எடுத்துட்டு வரேன்” என்று இடைவெளி விட்டார்.

Bigg Boss Sept 15

பிறகு வந்தவர், “சாண்டி, மச்சினிச்சு சிந்தியா வந்தா நல்லாருக்கும்னார். அவங்க நேர்லயே வந்திருக்காங்க” என்று அழைத்தார்.

“செல்லக்குட்டி… மை டார்லிங். மை தவக்களை…” என்று கொஞ்சினார். எல்லோரும் ஹாய் சொல்ல, “சங்க் பாப்பா லவ் யூ. செமயா மிஸ் பண்றோம்” என்று அழுதார். பிறகு மற்ற ஹவுஸ்மேட்ஸுக்கு ஒரு செமயான வேண்டுகோள் வைத்தார். “நீங்க எல்லாரும் சேர்ந்து சாண்டிய கிண்டல் பண்ணிப் பாட்டு கம்போஸ் பண்ணி எழுதிப் பாடணும்” என்றார். பின், ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸ் பற்றியும் சொன்னார்.

“லாஸ்லியா என்னை மாதிரி இருக்காங்கனு நீங்க (சாண்டி) சொல்லிருந்தீங்க. அவங்கதான் அங்க இருக்கற தவக்களை. வனிதாக்கா பெஸ்ட் குக்.. இப்ப பெஸ்ட் மதர். ஷெரின், ஏஞ்சல். தர்ஷன், புலிக்குட்டி. ஆரம்பத்துல அப்படி பயந்தோம். அப்பறம் ரொம்ப அன்பும் கவனிப்புமா பூனையாய்ட்டார். கவின் ஹையர் லெவல் அஃபெக்‌ஷன். முகின் கிரியேட்டர். சேரன் அப்பா லவ்க்கு விளக்கமா இருக்கார். சங்க் பாப்பா (சாண்டி) இது எல்லாத்தோட கலவை. அவர் என் மச்சான்ங்கறதைவிட என் அப்பாவா பார்க்கறேன். விளையாட்டைவிட எல்லாரும் குடும்பமாய்ட்டீங்க. வெளில வந்தப்பறம் உங்களுக்கு நிறைய கிஃப்ட்ஸ், நிறைய ஆச்சர்யங்கள் வெச்சிருக்கோம்.”

மாமியார் மெச்சிய மருமகன்

Bigg Boss Sept 15

”டப்ஸ் எப்படி இருக்காங்க?” என்று கேட்டார். “டப்ஸ்ங்கறது நான் டிடிம்மானு கூப்பிடுவேன். டப்பா டார்லிங்கோட சுருக்கம்” என்றார். அது சாண்டியின் மாமியார்.

”லவ் யூ செல்லம். மோமோப்பா” என்று அழுதார் அவரின் மாமியார். “எனக்கு ரெண்டு பொண்ணு. என்னை மாதிரி இருக்கற அம்மாக்களுக்கு எப்பவும் ஒரு பயம் இருக்கும். வர்ற மாப்பிள்ளை எப்படி எங்ககூட மிங்கிள் ஆவார்னு இருக்கும். அப்படி இருந்த எனக்கு கடவுள் கொடுத்த வரம், சாண்டி. இதுவரைக்கும் ஒருதடவைகூட அவரை மாப்பிள்ளைனு கூப்பிட்டதில்லை. என்னோட அம்மாவும், அப்பாவும் சேர்ந்த உருவமாத்தான் பார்த்திருக்கேன். என் முகம் கொஞ்சம் மாறினாலும் கண்டுபிடிச்சு என்னானு கேட்பாரு. என் சின்ன மகளும் லாலாவும்தான் அவருக்கு உலகம். லவ் யூ. 80 நாள் உள்ள இருக்கீங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு..” என்று அவர் பேசப்பேச கீழே சாண்டியின் மனைவியும், உள்ளே சாண்டியும் ஆனந்தக் கண்ணீரில் இருந்தார்கள்.

”இதுவரைக்கும் சாமி, தங்கம், மோமப்பான்னெல்லாம்தான் கூப்டிருக்கேன். இன்னைக்கு சொல்றேன். ஜெயிச்சுட்டு வாங்க மாப்ள” என்றார்.

Bigg Boss Sept 15

அடுத்து ஷெரினின் சித்தி மேடையில் வந்து ஷெரினிடம் பேசினார். தர்ஷனின் பிறந்தநாள் என்பதால் வீடியோவில் தர்ஷனின் அப்பா வந்து வாழ்த்தினார். சேரனுக்கு அவரது உறவினர்கள் – சேரனின் அத்தை மகன் குடும்பம் – வாழ்த்தினார்கள். முகினுக்கு அவர் சகோதரர் பேசி வாழ்த்தினார். தொடர்ந்து அப்பாவும் பேசினார்.

பிக் பாஸ் குரல் அரங்கில் ஒலித்தது. “கமல் சார், உங்களுக்கும் ஒரு படம் இருக்கு” என்றார். திரையில் சாருஹாசன் தோன்றி கமலைப் பற்றிப் பேசி வாழ்த்தினார்.

“மதுரை வீரன் படத்தை தினமும் பார்த்து அதோட 100வது நாள் விழாவுல் அந்த தியேட்டர்காரர்கிட்ட கமல் பரிசு வாங்கினார். அப்ப கமலுக்கு 3 அல்லது 4 வயசு இருக்கும். பிக் பாஸ் பாக்கறப்ப நாம செஞ்ச தப்பை அங்கயும் பிரதிபலிக்கறதா தோணும். அந்த பிக் பாஸ்ல ஒரு பங்கை கமலும் எடுத்துட்டது எனக்கு மகிழ்ச்சி” என்றார் சாருஹாசன்.

Bigg Boss Sept 15

“எனக்கும் சாருஹாசனுக்கும் 24 வயசு வித்தியாசம். அதுனால நண்பனாகவும், அண்ணனாகவும், அப்பாவாகவும் இருக்கார். என் வீட்ல இருக்கற எல்லாருக்கும் திறமை உண்டு. அதை எனக்கு விட்டுக்கொடுத்து என்னை முன்னேற்றினாங்க” என்று நன்றி தெரிவித்தார் கமல்.

குட் பை வனிதா

எவிக்‌ஷனை வித்தியாசமாக அறிவித்தார் கமல். விருந்தினர்கள் வீட்டுக்குள் வரும்போது யார் யாருக்கு என்ன பாடல் ஒலித்ததோ, அந்தப் பாடல் அரங்கில் ஒலிக்கும். யாருடைய பாடல் ஒலிக்கப்பட்டதோ அவர் காப்பாற்றப்பட்டார் என்றார் கமல்.

முதலில் “என் ஃப்ரெண்டப் போல யாரு மச்சான்” ஒலித்தது. கவின் தப்பித்தார். அதைப் பலரும் எதிர்பார்த்திருக்கவில்லை. லாஸ்லியா, சாண்டி எல்லாம் மகிழ்ந்தனர். கவின் “வெளில இருக்கற ஓட்டுப் போட்ட மக்கள், என் நண்பர்களுக்காக விளையாடப்போறேன்” என்றார்.

Bigg Boss Sept 15

அடுத்து ‘காலையில் தினமும் கண்விழித்தால்’ ஒலிக்க, தப்பித்தவர் தர்ஷன். “போன வாரமே எனக்கு சந்தோஷம்தான். எங்க அம்மா எப்படியாவது டிவில வரணும்னு எதிர்பார்த்தேன். அதுவே ஹேப்பிதான். ஓட்டுப் போட்ட மக்களுக்கு..” என்று பெரிய கும்பிடு போட்டார்.

அடுத்த பாடல் “லாலா லாலா லாலா” ஒலிக்க அதற்கு டான்ஸ் ஸ்டெப்பிலேயே நன்றி தெரிவித்தார். “மகிழ்ச்சியா இருக்கு. மக்கள் நம்பிக்கைக்கு உரிய நியாயம் சேர்ப்பேன்” என்றார்.

“அடுத்து ஷெரின், வனிதா இருவரும்தான். பாட்டெல்லாம் போடவேண்டாம்” என்று கார்டை எடுத்துக் காண்பித்தார். வனிதா வெளியேற்றப்பட்டார். எந்த எமோஷனல் டிராமாவும் இல்லாமல் அழகாக எல்லாரையும் கட்டியணைத்து விடைபெற்றார் வனிதா. சேரன்தான் கொஞ்சம் சீன் போட்ட மாதிரி இருந்தது. “என்ன நடக்குது.. காரணமே இல்லாம.. தப்புத் தப்பா இருக்கே” என்று வனிதா சேரன் வெளியேறும்போது சொன்னதை திரும்ப மொய் வைத்தார். ”எனக்கு மனசில்ல அனுப்பறதுக்கு” என்றார்.

”இரண்டாவது முறை கொடுக்கப்பட்ட வின்னர் பேட்ஜை உடைக்க மாட்டேன். இதை நினைவா எடுத்துக்கறேன்” என்று சொல்லி எடுத்துக் கொண்டு போனார்.

Bigg Boss Sept 15

அரங்கிற்கு வந்தார் வனிதா. இரண்டாவது முறை வந்தபிறகு அவரது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் சொன்ன ஒரு விஷயம் கவனிக்க வைத்தது.

“மொதல்ல நாமினேஷன் பண்ணினதெல்லாம் ஓகே. ஆனா ஹவுஸ்மேட்ஸோட உறவினர்கள் வந்தப்பறம் நான் கொஞ்சம் உடைஞ்சு போய்ட்டேன். எல்லாரும் என்மேலயும் அன்பு காட்னாங்க. மரியாதை வெச்சிருந்தாங்க. இனிமே யாரை நாம எப்படி நாமினேட் பண்றதுனு தோணிச்சு. சாதாரணமா ஃப்ரெண்ட்ஸா இருக்கறது வேற; குடும்ப ரீதியா ஃப்ரெண்டா இருக்கறது வேற’னு புரிஞ்சது” என்றார். நல்ல ஒரு பார்வை அது.

கமலும் வனிதாவுக்கு அறிவுரை சொல்லி அனுப்பினார். அன்னை வனிதாவாக அவர் இருக்க வேண்டும் என்றார். அகம் டிவி வழியே வீட்டினரைச் சந்தித்தார். சில பல ஹாய் பாய் அட்வைஸ்கள் நடந்தன. “அடுத்த வாரம் நான் வருவேன்” என்றார் சேரன். வனிதா வெளியேற கமலும் அரங்கிலிருந்து விடைபெற்றுக்கொண்டார்.

Bigg Boss Sept 15

பிக்பாஸின் குறும்பு

84ம் நாளின் இரவு. தர்ஷன் மைக்கை மாட்டாமல் துணி மடித்துக் கொண்டிருக்க “என் கேப்டன்ஸில ஒழுங்கா ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்க. மைக்க மாட்டுங்க” என்றார் லாஸ்லியா.

“நான் ஒருக்காகூட ரூல்ஸ் மீறினதில்ல” என்று தர்ஷன் சொல்ல, “பிக் பாஸ் நானும் ரூல்ஸ மீறினதே இல்ல. உங்களுக்கே தெரியும் பிக் பாஸ்” என்றார் லாஸ்லியா.

“பேட்டரியக் கழட்டி குறும்படம் போட்டிங்கள்ல பிக் பாஸ். அது அவளுக்குத்தான்னு சொல்லுங்க” என்றார் தர்ஷன். “அது தெரியாமப் பண்ணினது” – லாஸ்லியா.

தர்ஷன்: “32 வயசாச்சு. என்ன தெரியாமப் பண்ணினது. குருநாதா சாண்டியண்ணா மொத சிஷ்யன். நான் ரெண்டாவது சிஷ்யன்.”

Bigg Boss Sept 15

லாஸ்லியா: “நான்தான் உங்க சிஷ்யை” என்று படுத்துக்கொண்டிருந்தார்.

சில நொடிகளில் ஸ்பீக்கரில் லாஸ்லியாவை அழைத்தார் பிக் பாஸ். ”நீங்கதான் ரூல்ஸை ஒழுங்கா ஃபாலோ பண்றீங்களே.. பெட்ஷீட்ல மைக்கை உரசாமப் பார்த்துக்கங்க” என்றார். (மைக் இருக்கும் இடத்தில் எதாவது உரசினால் அந்தப் பக்கம் வாய்ஸ் கேட்டுக்கொண்டிருக்க்கும் ஆட்களுக்கு காது வலிக்கற அளவு சத்தம் வரும்!)

பிக் பாஸ் இப்படிச் சொன்னதும் தர்ஷன் உட்பட பாய்ஸ் எல்லாரும் சிரித்துக் கலாய்த்தனர். “இதெல்லாம் ஒரு செயலா பிக் பாஸ்?” எனக்கேட்டார் லாஸ்லியா.

தர்ஷனுக்கு கேக் வந்தது. மைக்கில் “பிறந்தநாள் வாழ்த்துகள் சிஷ்யா” என்று பிக் பாஸ் சொன்னதும் மகிழ்ச்சியின் உச்சத்துக்குச் சென்றார் தர்ஷன். ஷெரினும் ‘குருநாதா’ டிஷர்டில் இருக்க சேரன் மட்டும் வேறுவண்ண உடையணிந்திருந்தார். சாண்டி மனைவி மனது வைப்பாரா? அவருக்கும் ஒன்று அனுப்பலாமே?

Bigg Boss Sept 15

Bigg Boss Trivia

வின்னர் என்பவர் ஒருத்தர்தான் என்பதெல்லாம் சிலசமயம் இருக்காது. பிக் பிரதர் வரலாற்றில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வின்னராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்க, பிலிப்பைன்ஸ் இரு நாடுகளிலும் இரண்டு சீசன்களில் இரண்டு பேர் வின்னர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். பரிசுத்தொகையைப் பிரித்தெல்லாம் கொடுக்காமல் அதே அளவுத் தொகயை இருவருக்கும் கொடுத்தார்கள். அதே போல இந்தி பிக் பாஸில் ஒரு முறை என்ன நடந்தது என்று நாளை இதே பகுதியில் சொல்கிறேன்.