வார இறுதி எபிசோடின் இரண்டாம் நாள். கமல் நீலவண்ணக் கண்ணனாய் உடையணிந்து வந்தார். இன்னைக்கு என்ன காத்துட்டிருக்கோ என்ற எதிர்பார்ப்போடு இருந்தார்கள் அரங்கில் பலர். வனிதா அவுட்… ஆனா ‘ஜூலி 2.0’ மீரா இருக்க பயமேன் ! என்பதாக இருந்தது இந்த எபிசோடு…

கமல்

வேஸ்ட் ஆஃப் த வீக்!

Caller Of the Week என்று பார்வையாளர் ஒருவர் மோகன்வைத்யாவைக் கேள்வி கேட்டார் “நீங்க சிலர்கூட சண்டை போட்டுக்கறீங்க. அப்பறம் கொஞ்சநேரத்துலயே சமாதானமாய்டறீங்க. அப்டி சமாதானமாகறது செயற்கையா இருக்கே” – இதுதான் கேள்வி.

ஐயா, விஜய் டிவி தயாரிப்பு டீமுக்கு ஒரு விஷயம் சொல்லிக்கறேன். ஸ்பான்சர் கண்டெண்ட்தான். ஆனா இப்டி சப்புன்னா அதை ஹேண்டில் பண்ணுவீங்க? ‘இந்த வாரம் காலர் ஆஃப் த வீக் கேட்டான்பாரு ஒரு கேள்வி!’ அப்டினு வைரல் ஆகவேண்டாமா?

மோகன் வைத்யா

வாரம் முழுசும் இந்த நிகழ்ச்சியப் பார்த்த ஒருத்தர்கிட்ட என்ன கேள்வி கேட்கப்போறீங்கனு நாலைஞ்சு ஆப்ஷன் கேட்டு, அதைக் கேட்க வைப்பீங்கனு நெனைக்கறேன். இவ்வளவு மொக்கையான ஒரு கேள்வியையவா ஓகே பண்ணுவீங்க? இதுக்கு, மோகன் வைத்யா என்ன பதில் சொல்லுவாருனு எதிர்பார்த்தீங்க? “ஆமாங்க தப்புதான். வயசாய்டுச்சு”ன்னா சொல்லப்போறார்? யாரைக் கேட்டாலும் ’எப்பவுமே நான் அப்படித்தான் கோபப்பட்டாலும் மனசுல வெச்சுக்க மாட்டேன்னுதானே சொல்லுவாங்க? அதத்தான் அவரும் சொன்னாரு. இந்த அஞ்சு நிமிஷம் வேஸ்ட் பண்ணிட்டீங்க.. அவ்ளதான் சொல்லுவேன். அடுத்தவாரமாவது சரியான ஆள்கிட்ட, சரியான கேள்விய கேட்க வைங்க! எதும் ஐடியா வேணும்னா சொல்லுங்க.. தாரேன்!

தர்ஷன் மீரா

அடுத்து – தர்ஷன் – மீரா ப்ரச்னையை முதலாகக் கையிலெடுத்தார் கமல். மீரா ஒரு முக்கால் மணிநேரம் அதை விளக்க்க்க்க்கிப் பேசிக்கொண்டே இருந்தார். தர்ஷன் அமைதியாகக் கேட்டுக்கொண்டு, அவர் தரப்பை பேசும்போது மீரா பேசவே விடாமல் ஒவ்வொன்றும் தன் தரப்பை மறுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.

தர்ஷன் மீரா

சங்கதி இதுதான்: தர்ஷனிடம் மீரா ”உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு. அம்மாகிட்ட வந்து பேசறியா?” என்று கேட்டிருக்கிறார். தர்ஷன் தனக்கு வெளியில் ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் அதன்பிறகு மீரா இதை மாற்றி வீடெங்கும் சொல்லிவருகிறார். தர்ஷன் தன்மீது காதல் கொண்டதாகவும், அதன்பிறகு மறுதலித்ததாகவும் வீட்டுக்குள் சொல்லிவருகிறார். இதுதான் பஞ்சாயத்து.

மீரா பேசிக்கொண்டே இருந்து தன் நீண்ட உரையை முடிக்கவும், ‘ப்ப்பா!’ என்றா கமல். அதன்பிறகு தர்ஷன் சொல்லக்கொண்டிருக்கும்போது ‘நான் எங்கயும் போகல’ என்றார். இப்படி இவர்கள் உரையைக் கலாய்த்தபடி ரசித்துக்கொண்டிருந்தார் கமல். சேரனும் கவினும் ஜெயிலுக்குள் இருந்த இரவுதான் இந்த சம்பவங்கள் எல்லாம். அப்போது தான் கேட்ட உரையாடல் ஒன்றைச் சொன்னார் சேரன். அதையும் மீரா மறுத்தார்.

மீரா முழுக்க ஜூலியின் எலைட் வெர்ஷனாக இருக்கிறார் என்பது தெரிந்தது. நிறைய பொய்கள். நிறைய பேச்சுத்திரிப்புகள்.

குறும்படம் மிஸ்ஸிங்

கமல் குறும்படம் போடுவார் என்று எதிர்பார்த்தேன். ம்ஹும். ஏன் கமல் சார்? டக்கென்று அவர் “இதைலாம் புகார் சொல்லக் கேட்கல. இந்த ஜெனரேஷன் இப்படி ஓபனா இருக்கறது நல்லா இருக்கு. வெரி ஹானஸ்டா இருக்கு. எண்டர்டெய்ன்மெண்டா இருக்கு” என்று பாராட்டினார். சாண்டியும் ’ஆமாமா ஜாலியா இருக்கு’ என்றார் நக்கலாக.

வனிதா “இந்த வீட்ல என்னமோ இருக்கு சார். டக்கு டக்குனு லவ் வந்துடுது. அந்த எட்ஜ்ல இருக்க்கறவங்களை கரெக்டா செலக்ட் பண்ணி உள்ள அனுப்பறீங்களா.. இல்ல வந்ததும் டக்னு அப்டி ஒட்டிக்கறாங்களானு தெரியல” என்றவர் தொடர்ந்து, வரம் குடுத்தவன் தலைல கைவெச்ச கதையாக “நீங்க ரெண்டு நாள் வந்து இருந்தீங்கன்னா நான் கன்ஃபர்ம் பண்ணிக்குவேன் சார்” என்றார்.

மீரா தர்ஷன் கமல்

கமல் திடுக்கிட்டாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் “நான் வந்தா அவ்ளதான்” என்று சொல்ல ஷெரின், சாக்‌ஷி, ரேஷ்மா, வனிதா எல்லாருமாக “வாங்க சார் பார்த்துக்கலாம்” என்றார்கள் கோரஸாக.

என்ன ஆண்டவரே.. மைக்கேல் மதன் காமராஜன் பார்ட் டூ ப்ளான் பண்ணிடலாமா?

தப்பிச்சார் சித்தப்பு

அடுத்ததாக, சரவணனிடம் கதைத்தார் கமல். (ச்சே… லாஸ்லியா மொழி அப்டியே வந்துருது நமக்கும்!) ஜெயிலுக்குப் போகச் சொல்லியும் தன் தரப்பை எடுத்து வைத்து தீர்ப்பை மாற்றியதைப் பாராட்டினார். பிக்பாஸ் வீட்டுக்குள் இப்படி ஆனதில்லை என்றார். கூடவே, யாரும் தன் சார்பாகப் பேசாததை சரவணன் கண்டித்ததைச் சொன்ன கமல் “அதில் உரிமை தெரிந்தது… மனசுல இருந்ததை வெளிப்படையாச் சொன்னீங்க” என்றார். “ஆமா சார். என்னை இப்பவேகூட அனுப்புங்க.. வீட்டை மிஸ் பண்றேன். பையனை மிஸ் பண்றேன்” என்றார் சரவணன்.

“அதெல்லாம் அவன் டிவில பார்த்துப்பான். நீங்கதான் குழந்தையா இருக்கீங்க” என்று கமல் சொல்லவும் அடுத்ததாக முக்கியமான ஒரு விஷயத்தைச் சொன்னார் சரவணன்.

மீரா சரவணன்

“சார்.. என் ரெண்டு பொண்டாட்டிகளையும் ஒரே வீட்ல விட்டுட்டு வந்திருக்கேன். நான் இல்லாம ஒரே வீட்ல ரெண்டு பேரும் இருந்ததே இல்லை. ,இதான் மொதவாட்டி… அதுனால ஒரு மாதிரி இருக்கு சார்” என்றார்.

கமல் “இது ஒரு ரெஃபரியோட கவலைதான்” என்று கலாய்த்துவிட்டு, இந்த வீட்டில் எவிக்‌ஷனில் இருந்து தப்பித்து காப்பாற்றப்படும் இன்னொரு நபர் யாரென்பதை வீட்டுக்குள்ளேயே ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதைச் சொன்னார். எவிக்‌ஷன் லிஸ்டில் இருக்கும் மீரா, சரவணன், மதுமிதா, வனிதா நால்வரும் அதைத் தேடி, சரவணன் கண்டெடுத்தார். அதில் சரவணன் பெயர்தான் இருந்தது.

“தேங்க்ஸ் சார்” என்றார். அவர் சொன்னது, அது வெளியில் அனுப்பப்படும் நபர் என்று நினைத்து. சரவணனுக்குள் இருக்கும் வெள்ளந்தி கிராமத்தான் அழியாமலே வைத்திருக்கிறார் மனுஷன் என்று தோன்றியது. பிறகு, ”அது காப்பாற்றப்பட்ட பெயர், ஆகவே நீங்க வீட்டுக்குள்ளதான்” என்று பிறர் சொல்லவும் கொஞ்சம் முகம் சுண்டிப்போனது.

அதிர்ச்சியான வனிதா

அடுத்ததாக மதுமிதா காப்பாற்றப்படுகிறார் என்று சட்டென்று சொல்லிவிட்டார் கமல். அதற்கு மதுமிதா எந்த ரியாக்‌ஷனும் இல்லாமல் இருக்க, சாண்டி வந்து, :இன்னொருக்கா சொல்லுங்க சார்” என்றார். கமல் மறுபடியும் அதைச் சொல்ல சாண்டி சென்ற வாரம் மதுமிதா கொடுத்த ஓவர் ரியாக்‌ஷன்ஸை ரிப்பீட் செய்தார்.

பாக்கி இருப்பது மீரா, வனிதா. ”போற மாதிரி இருந்தா உள்ள இருக்கறவங்களுக்கு என்ன சொல்றீங்க” என்று கமல் கேக்க “ஒண்ணும் இல்ல சார். நிறைய சொல்லிட்டேன்” என்றார் வனிதா. மீராவும் அதைச் சொன்னார். “அப்ப இங்க வந்தா சொல்வீங்களா?” என்று கமல் கேட்க இருவரும் ஆம் என்றனர். “அப்ப இங்க வந்து சொல்லுங்க வனிதா” என்று கார்டைக் காட்டினார். வனிதா அவுட்.

வனிதா

அரங்கத்தில் ஷமி ஹாட்ரிக் எடுத்ததற்கு இணையான கைதட்டல்களும் விசிலும். “நான் சொன்னேன்ல கண்ணு… நம்பமாட்டேன்னியே” என்று பக்கத்துவீட்டிலிருந்து லட்சுமியக்கா கத்தலாகச் சொன்னார்.

வனிதாவுக்கு அதிர்ச்சி. ஆனால் காட்டிக்கொள்ளவில்லை. “நான் நேத்தே ஃபீல் ஆச்சுன்னு சொன்னேனே” என்றார். ரேஷ்மா மட்டும் வனிதாவிடம் மிக நட்பாக இருந்தவர். அவர் ஃபீல் ஆனார். அதில் உண்மை தெரிந்தது. சாக்‌ஷி, ஷெரின்கூட கேப்டன்ஷிப் போட்டியில் பின்னால் பேசியிருக்கிறார்கள்.

சாக்‌ஷி “இந்த வீட்லயே நீங்கதான் எல்லாத்துக்கும் உண்மையா பேசி, எதிர்த்துக் கேள்வி கேட்ட ஆளு. உங்களுக்கே இந்த நிலைமையா?” என்று முத்து படத்தில் சரத்பாபு ரஜினியை அனுப்பும்போது ஊரே அழுவது போல அழுது கேள்வி கேட்டார். மோகன் வைத்யா ஓவர் ரியாக்ட் செய்தார். ’என்னமோ நடக்குது. என்னானு தெரியல” என்று சொல்லிக்கொண்டே இருந்த வனிதா, தனக்குக் கொடுக்கப்பட்ட வின்னர் பேட்ஜை உடைத்துவிட்டு வெளியேறினார்.

வனிதா – ஒரு ஸ்கேனிங்

மேடைக்கு வந்தார் வனிதா. “என்ன ஆச்சு?” என்று கேட்க “தெரியலயே சார். நல்லாத்தான் கொலை பண்ணுனோம். மனசுல பட்டத டக்னு கேட்டுருவேன். குரல் கொஞ்சம் சத்தம் அதிகம். அது எங்க குடும்ப சொத்து. ஏன் ஓட்டு போடல.. என்ன திட்டி வெச்சிருக்காங்கனு வெளில போய்த்தான் பார்க்கணும்” என்றார் வனிதா.

“உள்ள எப்படி இருக்காங்கனு வெச்சுட்டு நான் பார்க்க மாட்டேன். குழந்தையா நெனைச்சுக்குவேன். அவங்களைலாம் குழந்தையா பார்த்தவன்தானே நான். எதையும் ஜட்ஜ் பண்ணிக்க மாட்டேன்” என்று தன் தரப்பையும் கமல் சொன்னார்.

அகம் டிவி வழியாக வனிதாவை ஹவுஸ் மேட்ஸுக்குக் காட்டினார் கமல். ரேஷ்மா அழுத கண்களோடு இருந்தார். மோகன் வைத்யா அழுதுகொண்டிருந்தார். “என்ன மோகன்…” என்று கமல் கேட்க, மோகன் வைத்யா அருகில் இருந்த சாண்டி, அவரது கண்களைத் துடைத்து “கூப்டறாரு பாருங்க” என்றவர் “என்ன கண்ல தண்ணியே வர்ல?” என்று கலாய்த்தார்.

ரேஷ்மா சாக்ஷி ஷெரின்

“உள்ள இருந்தவரைக்கும் சப்போர்ட்டா இருந்தாங்க. அவங்கதான் எனக்கு தைரியம் சொல்லிட்டே இருந்தாங்க” என்றார் மோகன் வைத்யா. “அப்ப அவங்களுக்கு பதிலா நீங்க போறீங்களா?” என்று யாரும் கேட்கவில்லை.

வனிதாவை ஹவுஸ்மேட்ஸுக்கு அறிவுரை சொல்லச் சொன்னபோது “நீங்க நீங்களா இருங்க. நான் அப்டித்தான் இருந்தேன். சேஃப் கேம் விளையாடாதீங்க. கர்மாவை நான் நம்பறேன்” என்றார். அந்த கர்மாதான் வனிதாவை திரும்ப வெளியே கொண்டு வந்து விட்டிருக்கிறது!

வனிதா பார்வையாளர்களுடன் அமர்ந்து, அவர்கள் சொல்வதைக் கேட்கலாம் என்று ஓர் அரிய ஆப்ஷனைக் கொடுத்தார் கமல். வனிதா அரங்கில் அமர, ”வனிதா ஏன் வெளியேற்றப்பட்டார் என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்பதை ஹானஸ்டாகச் சொல்லுங்கள்” என்று ஹவுஸ்மேட்ஸைக் கேட்டார் கமல்.

சேரன்:

பேசற விதம் இரிட்டேடிங்கா இருந்திருக்கும். இருந்தது. சில விஷயங்களை அடக்கி வாசிக்கணும். அதையும் ஓபனா கொண்டுவந்தாங்க. அதுனால சிலர் பாதிப்படைவாங்கன்றத உணராம பண்ணினாங்க. இதெல்லாம் நிறைய பேருக்கு அதிருப்தி ஏற்படுத்தியிருக்கும்.

கவின்

வனிதாக்கா பயங்கர போல்டு. சில விஷயங்கள்ல அவங்க டிசிஷன் ஸ்டிராங்கா இருந்துருக்கு. ஆனா எல்லா விஷயங்கள்லயும் அது ஒத்துப்போகல. தர்ஷன் பிரச்னை பண்ணினப்ப ‘ஆம்பள பொம்பளைட்ட வாய்ஸ் அடக்கிப் பேசிப்பழகு’னு சொன்னாங்க. ஆனா நான் மதுமிதா, மீராகிட்ட வாய்ஸ் ரெய்ஸ் பண்ணிப் பேசினப்ப எனக்கு அவங்க இந்த அட்வைஸை சொல்லல. `தமிழ்நாட்ல இருக்கேன்னு ஞாபகம் வெச்சுக்கோ’னு தர்ஷன்கிட்ட சொன்னாங்க. மது அதே தமிழ்ப்பொண்ணு சொன்னப்ப பிரச்னை டீவியெட் ஆகுதுனு நான் எந்திரிச்சுக் கத்தினேன். அதே தப்ப வனிதாக்கா பண்றாங்கனு தோணிச்சு. சுயநலமா இருக்காங்கனு தோணிச்சு.

லாஸ்லியா

அப்பறம் மீரா விஷயத்துல ’அதெல்லாம் தெரிஞ்சு மீரா ஒண்ணும் சூசைட் பண்ணிக்கல-ல்ல?’ அப்டினு ஒரு வார்த்தை விட்டாங்க. அப்டி சொல்லிட்டு சொல்லலனு வேற சொன்னாங்க. அத சொல்றப்ப நாந்தான் பக்கத்துல இருந்தேன். யாரா இருந்தாலும் அந்த மாதிரிலாம் வார்த்தைய விடக்கூடாது.

தர்ஷன்

தான் ஒரு தப்பு பண்ணினா அத சரிபண்றதுக்கு பார்க்கறாங்களே ஒழிய மத்தவங்க ஒபினியனை கேட்டுக்கறதே இல்லை.

லாஸ்லியா

நான் பார்த்தவரைக்கும் அவா வந்தநாள் தொட்டு அவ என்ன சொல்றாவோ அதுதான் சரின்ற மைண்ட் செட் அவாக்கு இருக்கு. இங்க நடக்கற சின்னச்சின்ன பிரச்னை எல்லாத்தையுமே வந்து அவங்கவங்களா கதைச்சாலே அந்தப் பிரச்னையெல்லாம் முடிஞ்சுரும். பட் அவ உள்ள வந்து அந்தப் பிரச்னைய எப்பவுமே பெரிசாக்கிட்டுதான் இருந்திருக்கா.. எல்லாப் பிரச்னைலயும். (கைதட்டல்கள்!) கடைசிய தர்ஷனுக்கு நடக்கைக்குள்ளகூட அவ நிறைய வார்த்தை விட்டா. தர்ஷனை ஸோரி சொல்லச் சொன்னாளே தவிர அவ ஸோரி சொல்லவெ இல்லே. சொல்லியிருக்கோணும் அவ. அவ சொன்ன வார்தைக்கு. (கைதட்டல்கள்!!!) சொல்லல. நிறைய விஷயம் செஞ்சிருக்கா. நான் பார்த்தவரைக்கும் இவ்ளோ இருக்கு.

அபிராமி

வேற ரெண்டு பேர் பிரச்னைக்கு அவங்க வந்து பேசாம இருந்தாலே சால்வ் ஆகிடும். என் ஃப்ரெண்ட்ஸ் என்கிட்ட முன்ன மாதிரி இல்லை. அதுக்கு அவங்களை குற்றம் சொல்லல. எனக்கு இன்னமும் வனிதாக்கான்னா யாருனு ஒரு கன்ஃப்யூஸ்டாதான் இருக்கு.

சாக்‌ஷி

அவங்க சத்தமா பேசுவாங்க. ஆனா நியாயமா பேசுவாங்க. எனக்கு அவங்க சிஸ்டர்லி, மதர்லி ஃபிகர்தான். அபிராமி சொல்றதுக்கு அவங்க காரணம் கிடையாது. 2 வாரம் கழிச்சு அபிராமிதான் மாறிட்டாங்க.

ஷெரின்

வனிதா சின்னக்குழந்தை மாதிரி. நாங்க பார்த்த வனிதா வேற. அப்பறம் அபி சொல்றது மாதிரி அதுக்கும் வனிதாக்கும் சம்பந்தம் இல்ல. அபிராமி… நீயும் எங்களை விட்டு தள்ளி இருந்திருக்க.

சாக்ஷி வனிதா

ரேஷ்மா

வனிதாகிட்ட நான் பார்த்தது குழந்தைகளை மிஸ் பண்ற தாய்; அப்பாவோட பாசத்துக்கு தவிக்கற ஒரு பெண். தனியா இந்த உலகத்துல பெண் குழந்தைகளை வெச்சுகிட்டு சொந்தக்கால்ல அவங்களைக் காப்பாத்த போராடற ஒரு பெண். அதுனாலதான் எனக்கு அவங்க மேல ஒரு கனெக்ட் இருந்தது. நானும் அப்டித்தான்றதால எனக்குப் புரிஞ்சது. ஆமா, அவங்களுக்குள்ளும் இம்பெர்ஃபெக்‌ஷன்ஸ் இருக்கு. அதைத்தாண்டி அந்த நல்ல மனசைத்தான் நான் பார்த்தேன்.

ல்லாவற்றையும் தன் மகள்களுடன் அமர்ந்து வெளிறிய கண்களோடு பார்த்துக்கொண்டிருந்தார் வனிதா. அவர் இருந்த அரங்கிலேயே கவின், லாஸ்லியா பேசியதற்கெல்லாம் கைதட்டல்கள் கிடைத்தன. தர்ஷன், லாஸ்லியாவுக்கு மட்டும்தான் வனிதாவைக் குற்றம் சாட்ட உரிமை உண்டு என்பேன். அவர்கள்தான் அங்கேயே நேரடியாகச் சொன்னவர்கள். ஆனால் ரேஷ்மா சொன்னது முழுக்க முழுக்க நேர்மையாக இருந்தது. ரேஷ்மா பேசும்போது வனிதாவின் உதடு துடித்தது. சிரமப்பட்டு அடக்கிக்கொண்டார். அதைவிட, அந்தத் தருணத்தில் அவரது மகள்கள் வனிதாவின் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தது கொஞ்சம் எமோஷனலாக இருந்தது.

’இந்தப் புரிதலை பாராட்டுகிறேன். அடுத்த வாரம் சந்திக்கிறேன்’ என்று சொன்னார் கமல். வீட்டுக்குள் அபியை அழைத்துக் கட்டிக்கொண்டார் ஷெரின். அபிராமிக்கு கண்களில் நீர். “அந்த ப்ராப்ளம் வந்தப்பறம், நான் வந்து உங்களைத் தொந்தரவு பண்ணவேண்டாம்னு நினைச்சுதான் விலகி இருந்தேன்” என்றார். “அப்படியெல்லாம் இல்லை. யார்கிட்டதான் நமக்கு பிரச்னை வராம இருக்கும்? அப்பாம்மாட்ட இல்லையா, சிஸ்டர்ஸ்கிட்ட இல்லையா.. ஃப்ரெண்ட்ஸ்கிட்ட இல்லையா.. லவ்வர்ஸ்கிட்ட இருக்கறதில்லையா..” என்று மிக மெச்சூர்டாகப் பேசினார் ஷெரின். ரேஷ்மாவும் அபிராமியை வந்து கட்டிக்கொண்டார். மோகன் வைத்யா வந்து கொஞ்சம் நடித்தார். ‘அவளை மிஸ் பண்றேன்’ என்றார்.

வாழ்க்கைப் பாடம்

வனிதா மீண்டும் மேடைக்கு வந்தார். “யாரும் கிண்டல் அடிக்கல பார்த்தீங்களா? உங்க மேல விமர்சனம் வெச்சவங்ககூட உங்க பாஸிடிவ்வை சொல்றாங்க” என்று கமல் சொல்லிவிட்டு “தாய்மார்களுக்கு உங்க அட்வைஸ் என்ன?” என்று கேட்டார்.

“என் லைஃப்ல நிறைய அப் & டவுன் இருக்கு. ஆனா எந்த சூழல்லயும் தற்கொலைன்ற முடிவு எடுக்காதீங்க. அதுக்கப்பறம் உங்களைச் சார்ந்தவங்க லைஃப் அப்டியே இருக்காது. அதுனால எதையும் எதிர்த்து நில்லுங்க. வாழ்ந்து காட்டுங்க” என்றார்.

கமல், அழைத்து கட்டிப்பிடித்துக்கொண்டார். அந்த உரையைக் கேட்டால் வனிதாமீது பாவம் என்றுதான் தோன்றியது. நம் பார்வையில் இருந்து மட்டும் பார்க்காமல், அவரது நிலையிலிருந்து யோசித்தால்… வனிதாவின் கோணத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.

 

ஜூலி 2.0

வனிதாவை வழியனுப்பிவிட்டு, கமல் கிளம்பினார். வீட்டுக்குள் மீரா, தர்ஷனிடம் வாதிட்டுக்கொண்டிருந்தார். `நான் ஓபனா உன்கிட்ட பேசினேன். ஆனா உனக்கு கேர்ள் ஃப்ரெண்ட் இருக்குனு எல்லார்ட்டயும் சொன்ன… என்கிட்ட சொல்லல?” என்று கேட்டார். தர்ஷனை பேசவிடாமல் பேசிக்கொண்டே இருந்தார். சொன்னதைத் திரித்துத் திரித்துப் பேச கடுப்பான தர்ஷன் “நீ யாரு எனக்கு.. எதுக்கு நான் உன்கிட்ட சொல்லணும். நான் வெறும் ஹவுஸ்மேட்தான். என்கிட்ட பேசாத” என்று சொல்லிவிட்டு எழுந்து போனார். மூன்று லட்சத்து நாப்பதாயிரமாவது முறையாக மீரா அழுதார். அழும்போது “என் பின்னாடி எத்தனை பசங்க வந்தாங்க தெரியுமா” என்று வேறு சேர்த்துக்கொண்டார்.

மீரா

கவின், சரவணன், சாண்டி ஆகியோருடன் மீரா உட்கார்ந்திருந்தார். கவின் “இனிமே சண்டைக்கு ஆளில்லைண்ணே…” என்று சொல்ல . “அதான் நான் இருக்கேனே. யாரச்சும் என்னை எதாச்சும் சொன்னா பச்ச பச்சையா கேட்பேன். வயசு வித்தியாசம் பார்க்காம அசிங்க அசிங்கமா கேப்பேன்” என்று பைத்தியக்காரத்தனமாக கத்திச் சொல்லிவிட்டு எழுந்து போனார். கவின் “இத லைட்டா பத்தவிட்டா போதும் போலயே” என்று கமெண்ட் அடித்தார்.

கடைசியில் போட்ட இந்தக் காட்சி ரசிகர்களுக்கு “வனிதா போய்ட்டாங்கனு கவலைப்படாதீங்க.. அதவிட ஸ்பெசல் ஆளு ஒண்ணு உள்ள இருக்கு” என்று சொல்லுவது போல இருந்தது! அது மீராதான். ஜூலி 2.0!

Bigg Boss Trivia

பிக்பாஸின் தாய் நிகழ்ச்சியான பிக்பிரதர் ஆரம்பிக்கப்பட்டபோது வந்த எதிர்ப்பு வழக்குகளில் முக்கியமானது சர்வைவர் எனும் ரியாலிட்டி ஷோவின் தயாரிப்புக்குழு போட்ட வழக்கு. ’இது எங்கள் நிகழ்ச்சியைப் பார்த்து காப்பி அடிக்கப்பட்ட வழக்கு’ என்பது அவர்கள் வாதம்.

சர்வைவர் நிகழ்ச்சி கிட்டத்தட்ட இதேபோல. ஆனால் காட்டுக்குள் அல்லது தனித்தீவுக்குள் பலரை அனுப்பி எல்லா கஷ்டமான சூழல், தட்பவெப்பம், உணவுக்கட்டுப்பாடுகள் என்று அவர்களை சோதித்து இறுதிவரை இருப்பவரை வின்னராக்கும் அதே ஃபார்மெட்தான்.