முகின், கவின், சாண்டி, தர்ஷன், லாஸ்லியா, சேரன் – இந்தப் பெயர்களை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். என்னவென்று பின்னால் சொல்கிறேன். நல்லா இருந்த வீட்டில் புகுந்த நாத்தனார் வனிதா என்கிற ஆர்.டி.எக்ஸ் எங்கெல்லாம் வெடித்தது என்பது தான் இன்றைய ஸ்பெஷல்.

ஷோ ஆரம்பித்த ஐம்பதாவது நாள் நேற்று. பிக் பாஸ் வீட்டுக்குள் இவர்களின் 50வது நாள் இன்று ஒளிபரப்பப்பட்டது. சிறப்பு விருந்தினராக வனிதா வந்ததும் அவர் போட்ட ஆட்டமும்தான் இன்றைய ஹைலைட்ஸ்!

வனிதா

நட்புக்குப் பெயர்தான் ஷெரின்!

நாமினேஷன் பிராசஸுக்கு முன்பு, இன்றைய ஆக்டிவிடியாக மன்னர் சாண்டி மக்களின் குறைகளைக் கேட்டார். அமைச்சர் கவின் மக்களிடம் மன்னர் சார்பாக, குறைகளைக் கேட்டார், தன் ஆப்பைத் தானே தேடிப்போய் உட்கார்ந்த குரங்குக்கதையாய், மன்னர் மற்றும் அமைச்சர் மீதே குற்றப்பத்திரிகை வாசித்தார் மதுமிதா. “மன்னரும் அமைச்சரும் கிளீனிங் வேலைக்கு வருவதே இல்லை” என்பதே அந்தக் குற்றச்சாட்டு. சரி செய்வதாய்ச் சொன்னார் மன்னர் சாண்டி.

உள்ளே பக்கா ஃப்ரெண்ட் மெட்டீரியலாக ஒளிர்கிறார் ஷெரின். அபிராமிக்கும் முகினுக்கும் ஏதோ பிரச்னை மையமாக ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டுகொண்டு அபிராமியை “நீ ஓகேவா?” என்று கேட்டு கட்டியணைத்துக்கொண்டார். பிறகு முகினிடம் “நீ அபிகிட்ட பேசினியா?” என்றும் கேட்டுக்கொண்டார்.

ஷெரின்

இருவரின் பெர்சனலைப் பற்றி நேரடியாகக் கேட்கவே இல்லை என்பதால்தான் ஷெரினை ஃப்ரெண்ட்ஷிப் குயின் என்கிறேன். ‘உங்க பிரச்னை என்னனு என்கிட்ட சொல்லத் தேவையில்லை. அது எனக்கு முக்கியமும் இல்லை. ஆனால் நீங்கள் சரியில்லை என்பதை உணர்கிறேன். எதுவானாலும் கடந்து வாருங்கள். ஜாலியாக இருங்கள்” என்று சொல்லாமல் சொல்கிறார் ஷெரின்.

நாமினேஷன் பிராசஸின்போதும் ஷெரினின் கண்ணீரில் உண்மை நூறு சதம் இருந்தது. கவினை நாமினேட் செய்த அவர் “கவினும் எனக்கு நண்பன்தான். ஆனால் சாக்‌ஷியை ரொம்பவும் மிஸ் பண்றேன். சாக்‌ஷி, கவினின் அன்புக்குத்தான் ஏங்கினாள். ஆனால் ஒவ்வொரு வாரமும் நாமினேட் செய்யப்பட்டு அவள் வெளியேறிவிட்டாள். ஆனால் கவினுக்கு எந்த தண்டனையும் இல்லை. This is Not fair” என்று அழுகையினூடே சொன்னார் ஷெரின்.

இந்த வாரம் இவர்கள்!

அதே நாமினேஷன் பிராசஸின் போது, அபிராமி “நானே வெளில போறேன். என்னை யாருக்கும் பிடிக்கல” என்று ஓவராகவே அழுதார். அவரின் அழுகையும் உண்மைதான் எனினும் எப்போதுமே அழுவதால் அந்த அழுகைக்கு மதிப்பு இல்லாமல் போய்விட்டது. யாரையும் நாமினேட் செய்ய மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துவிட்டு பிறகு கவின் மற்றும் மதுமிதாவை நாமினேட் செய்தார்.

லாஸ்லியாவின் ஒரு நாமினேஷனில் நேர்மையின்மை இருந்தது. ஷெரினை நாமினேட் செய்ய அவர் சொன்ன காரணம்: “சாக்‌ஷி ஷெரினை யூஸ் பண்றானு தர்ஷன் சொன்னது சரியாப் படலை. அதை ஷெரினே சொல்லிருக்கலாம். இன்னொருத்தர் மூலமா ஏன் சொல்லணும்? அத தர்ஷன் சொல்லும்போதும் ஷெரின் ரியாக்ட் பண்ல” என்றார்.

லாஸ்லியா

’அதன்படி பார்த்தால் நீ தர்ஷனைத்தானே நாமினேட் பண்ணணும்? ஷெரின்தான் தர்ஷனை அப்படிப் பேசச் சொல்றாங்க என்று நீயே எப்படி முடிவு பண்ணலாம்?’ என்று கேட்கத் தோன்றியது இன்ஃபாக்ட், அதன்பிறகு தர்ஷனிடம் ஷெரினே அந்த ஸ்டேட்மெண்டுக்கு அதிருப்தி தெரிவித்திருந்தார். ஸாரி லாஸ்லியா.. யு ஆர் ராங்!

அபிராமி, கவின், மதுமிதா, லாஸ்லியா மற்றும் முகின் ஆகியோர் இந்த வார வெளியேறும் படலத்துக்கு நாமினேட் ஆனார்கள்.

நாமினேஷன் லிஸ்டில் முகின் பெயர் புதிது. அவர் நிச்சயம் வெளியேற மாட்டார் என்றும் நம்பலாம். மக்களின் அதிருப்திக்கு ஆளாகியிருப்பவர்களின் லிஸ்டை வரிசைப்படுத்தினால்,..

கவின் (ப்பப்பா… போதும்பா!)
அபிராமி (ரொம்ப அழுதுபா!)
லாஸ்லியா (சும்மா நடிச்சுட்டே இருக்காப்ல இருக்கு .. போரடிச்சுருச்சு!) – என்றுதான் இருக்கும். ஆனால் கவின் எஸ்கேப் ஆகி அபிராமி வெளியேறுவதற்கான வாய்ப்புகள் ரொம்பவே அதிகம்.

இது இன்றைய நிலவரம்தான். நான்கு நாட்களில் இவர்கள் நடந்து கொள்வதைப் பொறுத்து எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அதுதான் பிக்பாஸ்!

ஹோட்டலாக மாறிய வீடு!

ஐம்பதாவது நாளை முன்னிட்டு பிரியாணி வந்தது. அதன்கூடவே வந்த குலோப்ஜாமூனை மன்னர் சாண்டி அழகாக ஆட்டையைப் போட்டு அமைச்சர் கவினுடன் மட்டும் பகிர்ந்து கொண்டார். அரண்மணை விதூஷகன்போல ஜாலியாக சுற்றிக்கொண்டு சாண்டி செய்ததால் இதை ரசித்துக்கடக்கிறோமோ என்று தோன்றியது. முதல் சீசனில் கணேஷ் வெங்கட்ராம் முட்டையை ஒளித்துவைத்தது நினைவுக்கு வந்தது.

கமல் திரைத்துறையில் 60 வருடங்கள் தொட்டதற்கு ‘இந்தியன் 2’ பற்றிய சின்ன ஒரு ஆடியோ விஷுவல் திரையிடப்பட்டது. அனைவரும் வாழ்த்தினர். பிறகு பிக் பாஸ் வீடு, பிக் பாஸ் ஹோட்டலாக மாறியது. அதன்படி

கவின் | ஷெரின் | சாண்டி

ஹோட்டல் மேனேஜர் – சேரன்
செஃப் – மதுமிதா
ரூம் சர்வீஸ் – தர்ஷன், அபிராமி, கஸ்தூரி
ஹவுஸ் கீப்பிங் – கவின், சாண்டி
ஸ்பா – ஷெரின்
எண்டர்டெய்னர்ஸ் – லாஸ்லியா, முகின்

ஒரு விருந்தினர் வருவார் என்றும் அவர் தங்கி கொடுக்கும் ரேட்டிங்தான் லக்சுரி பட்ஜெட்டை நிர்ணயிக்கும் என்றும் சொன்னார் பிக் பாஸ்.

சேரன் எல்லா ஹவுஸ்மேட்ஸுக்கும் விருந்தினரை வரவேற்பது எப்படி என்று பாடமெல்லாம் எடுத்தார். எல்லாரும் தயாராக, பாடல் ஒலிக்க உள்ளே வந்த சீஃப் கெஸ்ட் வனிதா!

”கும்புட்ட கையக் கருக்கிப்போடோணும்” ரேஞ்சுக்கு கவின், சாண்டி, தர்ஷனின் ரியாக்‌ஷன் இருந்தது. அதிலும் வனிதா ‘வாடி ராசாத்தி’க்கு கொடுத்த ஒரு எக்ஸ்ப்ரஷனுக்கு ‘முடியல குருநாதா’ என்று மனசுக்குள் சொல்ல்லிகொண்டு தலையைக் கவிழந்துகொண்டார் சாண்டி.

வனிதாவை அழைத்துக்கொண்டு பிரத்யேக அறைக்கு (ஆண்களின் படுக்கையறை முழுவதும் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது) அழைத்துச் சென்றார் சேரன். அபிராமி ஜூஸ் கொண்டு வந்தார். ஜூஸு… ஜூஸு..

வனிதா

நெகடிவ் குடோன் வனிதா

“சும்மாவே ஆடுறவளுக்கு சலங்கையக் கட்டிவிட்டிருக்கானுக பாத்தீல்ல?” என்று பக்கத்தூட்டு லட்சுமியக்கா அங்கிருந்தே கத்தினார். வனிதா அதற்கேற்ப ஷெரினை தனியே அழைத்து “வீடு சரியில்ல, இவங்களுக்கு கேமே தெரியல. நிறைய மாத்த வேண்டிருக்கு” என்றெல்லாம் புகார் சொன்னார்.

நீங்க ஆஃபீஸ்ல ரொம்ப வருஷமா வேலை செஞ்சிட்டிருந்தா ஒரு விஷயத்தைக் கடந்து வந்திருப்பீங்க. உங்க ஆபீஸ்ல இருந்து போன ஒருத்தர், மீண்டும் வந்தார்னா, “ப்ச்.. நான் இருந்தப்ப அது அப்டி இருந்துச்சு.. இது இப்டி இருந்துச்சு. இப்ப சரியில்ல. நிறைய மாறிடுச்சு” என்று என்னமோ அவர் இருந்ததுதான் பொற்காலம், அவர் செய்ததெல்லாம் சரித்திர நிகழ்வுகள் அப்டின்ற லெவலுக்குப் பேசுவார். ’அப்படின்னா ஏன்யா உன்னை வெளில அனுப்பினாங்க?” என்று நமக்குக் கேட்கத் தோன்றும். வனிதாவும் அந்த கேஸ்தான். ஆனால் அவர் விஷமத்தனமாக “மக்கள் இல்ல முடிவு பண்றது. உள்ள இருக்கற சில ஆட்கள்தான் நாமினேட் பண்ணி வெளில அனுப்பறாங்க” என்றார். வனிதா வெளியில் போன வாரத்தில் அவரை நாமினேட் செய்தவர்கள்மீது ஏக காண்டில் இருப்பார் என்று நன்றாகவே புரிந்தது. அவரை நாமினேட் செய்தவர்கள் யார்யார் தெரியுமா? அந்த லிஸ்ட்தான் நீங்கள் முதல் வரியில் படித்தது!

கவின்

அறிவுரை என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று வனிதாவைப் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம். அதாவது அவர் என்னென்ன சொல்கிறாரோ அப்படியெல்லாம் ஒரு அறிவுரை இருக்கவே கூடாது என்பதை மீண்டும் வந்து நிரூபித்தார். உள்ளே இருக்கும் ஹவுஸ்மேட்ஸை எக்ஸ்போஸ் செய்கிறேன் என்று அவர் ஒவ்வொருவரிடமும் பேசியதெல்லாமே அவர் முகத்திரையைக் கிழித்து அவர் கோரப்பல்லைத்தான் காட்டியது.

 

புகார் 1… புகார்… 2 புகார் 3.. புகார் !

இரண்டு டாஸ்கில் நடுவராக கஸ்தூரி செயல்பட்டதில் அவர் தோற்றுவிட்டார் என்றார் வனிதா. தலைவரைத் தேர்வு செய்த டாஸ்கில் அவர் கணித்தது தவறு என்றார். சாக்‌ஷி, ஏற்கெனவே ஒரு மாடல்; ஆகவே மதுமிதாவுக்குத்தான் நீங்கள் பரிசு கொடுத்திருக்க வேண்டும் என்றார். ’லாஸ்லியா ரொம்பவே நடிக்கிறார்; நான் இங்கு இருக்கும் வரை லாஸ்லியாவின் ஒரிஜினல் முகத்தை வெளிக்கொணர்வேன்” என்றார். சேரன் எந்தப் பிரச்னையையும் துணிந்து, ஆணித்தரமாக எதிர்க்கவில்லை என்றார். “இவர்களெல்லாம் டைட்டில் வின்னர் நீ என்கிறார்கள். இவர்கள் பிச்சை போட்டு நீ வின்னர் ஆகணுமா?” என்று தர்ஷனைத் தூண்டிவிட்டார்.

முகின் அபிராமி பிரச்னையைப் பற்றிப் பேச ஆரம்பித்தார் வனிதா. அப்போது அவர் சொன்ன ஒரு பாய்ண்ட்டுக்கு நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.

வனிதா | அபிராமி

அபிராமியை அழைத்துப் பக்கத்தில் வைத்துக்கொண்ட வனிதா ”கமல் பேசும்போது அவனோட முன்னேற்றத்துக்கு நீ தடையா இருக்கக்கூடாதுனு கமல் சொன்னார். ஆனா உன்னோட முன்னேற்றத்துக்கு அவன் தடையா இருக்கக்கூடாது அவரும் சொல்லல. முகினும் உணரல” என்றார். ஹாட்ஸ் ஆஃப் வனிதா. நல்ல பாய்ண்ட் அது! முகின் ‘நான் சொன்னேன்’ என்று ஏதோ பேச ஆரம்பிக்க “இல்ல. நீ முழு முற்றா மறுக்கல” என்றார். “பெண்கள் ஏன் ஆம்பளைங்க பின்னாடி போறீங்க?” என்று கவினையும் குறிப்பிட்டுத் திட்டினார்.

தர்ஷனின் நம்பிக்கைக்கும், அவர்மீது மற்ற ஹவுஸ்மேட்ஸ் சொன்ன பாஸிடிவ் கமெண்ட்ஸுக்கும் மேல் ஹைலெவல் ஆர்.டி.எக்ஸைப் பற்ற வைத்தார். ”இவங்கள்லாம் சொல்லி உனக்கு டைட்டில் வரணுமா? அதென்ன பிச்சையா? இல்ல நீங்கள்லாம் என்ன சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்டா? அவன் ஹீரோ அவன் மட்டும் ஜெயிக்கட்டும்னு விடறதுக்கு? எல்லாருக்கும் தகுதி இருக்கு. மக்கள் முடிவு பண்ணணும். அவன் கஷ்டப்பட்டு வரணும். சேரன், மதுமிதா எல்லாருக்கும் 100% வின்னர் வாய்ப்பு இருக்கு. தர்ஷன் உயரத்துல பெரியவனா இருக்கலாம் மதுமிதா.. நீ மூளைல அவனைவிட பெரிய ஆள். கவின், உன் லவ்வுலாம் வொர்த் இல்ல. உன்கிட்ட பேசறதே வொர்த் இல்ல” என்றெல்லாம் பிரிவினைவாதத்தை உண்டுபண்ணி “கமல்சார்ட்ட கேட்டு கேட்டை 10 நிமிஷம் தொறந்துவிடச் சொல்லப்போறேன். லவ்வரு, அப்பா, மகள்னு இருக்கறவங்களலாம் வெளில போலாம். அதுக்காவ இங்க வந்திருக்கோம்? உங்க எல்லாருக்குள்ளும் போட்டி வரணும்.. பொறாமை வரணும்.. ஆண்கள் இந்த வீட்ல பெண்களைப் பகடைக்காயா யூஸ் பண்ணி முன்னாடி வந்துட்டிருக்காங்க. அதான் உண்மை.” என்று வனிதா அட்வைஸ் என்கிற பெயரில் உரையைப் பொழிந்து தள்ளினார்.

 

பிக் பிக் பாஸ் வனிதா

மதுமிதா

எனக்கு ஒரே சந்தேகம்தான். நிச்சயமாக வனிதா, தானாகவே இப்படியெல்லாம் பேசக்கூடியவர்தான். ஆனால் வனிதா, மீரா, சாக்ஷி என்று உள்ளே குழப்படி அடிக்கும் ஆட்களெல்லாம் வெளியே சென்றுவிட்டதால், இவர்கள் பாட்டுக்கு ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்று பாடிக்கொண்டிருந்தால் பாக்கி 50 நாளைக் கடப்பது எப்படி என்று நினைத்து, பிக் பாஸ்தான் இதையெல்லாம் சொல்லி அனுப்பினாரோ என்றும் தோன்றுகிறது.

’கண்டிசனா செய்வானுக கெரகம் பிடிச்சவனுக’ எனும் வசனத்தை பிக் பாஸுக்கே டெடிகேட் செய்கிறேன்!

Bigg Boss Trivia

பிக் பாஸ்னாலே சக்ஸஸ்தானா என்றால் இல்லை. பிக் பிரதர் ஸ்விஸ் என்று சுவிட்சர்லாந்தில் 2000, 2001 என இரண்டு வருடங்களில் ஒளிபரப்பப்பட்டதும் செல்ஃப் எடுக்கவில்லை. ’ப்ச். இதென்ன பிரமாதம்’ என்ற ரீதியில் ரசிகர்கள் டீல் செய்தார்கள். கடந்த 18 வருடங்களாக ’பிக் பிரதர் ஸ்விஸ்’ தொடரப்படவில்லை.

ஆனால் அதே சமயம், ஜெர்மன் மொழி பேசும் ஸ்விஸ் மக்கள் ஆடிஷனில் அனுமதிக்கப்பட்டார்கள். பிக் பிரதர் ஜெர்மன், ஸ்விஸ்சில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.