சாக்‌ஷி பாத்ரூம் கேமரா அருகே வந்து புலம்பினார். லாஸ்லியா அவரை நாமினேட் செய்தது அவரை காயப்படுத்துவதாகவும், அதனால் அவர் வீட்டில் இருக்க விரும்பவில்லை என்றும் புலம்பித் தள்ளினார். “அவகிட்ட பேச டிரை பண்றேன். பண்ல. என் கண்ணு முன்னாடியே கவினும் அவளும் கைகோத்துட்டுப் போறா. என்னால முடியல. ஒரேவீட்ல இருந்துட்டு இதைலாம் பார்க்க முடியல. என்னை வெளில அனுப்பிடுங்க ” என்றெல்லாம் புகார் சொல்லி அழுதுகொண்டிருந்தார்.

சாக்‌ஷி

`எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ எல்லாம் ரசிகர்களுக்குத்தானா பிக் பாஸ்? ஹவுஸ் மேட்ஸுக்கு இல்லையா? அவர்களுக்கும்
`எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லி, இப்படி யாராவது ’என்னை வெளில அனுப்பிடுங்க’ என்று புலம்பினால் சட்டென்று மைக்கில் ‘சாக்‌ஷி.. ஹவுஸ்மேட்ஸ் யாரிடமும் எதையும் சொல்லாமல் கன்ஃபஷன் ரூமுக்கு வரவும்” என்று சொல்லிவிட்டு , அவர் உள்ளே வந்ததும் ‘நீங்கள் ஆசைப்பட்டபடி வெளியே உடனே வரவும்” என்று அனுப்பிவிடுங்கள்.

ஒருதடவை இதைச் செய்யுங்கள் பிக்பாஸ். இந்த மாதிரி சீனெல்லாம் கொஞ்சம் குறையும்!

ப்ரீ-ஷோ

இன்றைய எபிசோடிலும் சரவணனே ஜொலித்தார். லாஸ்லியா காட்டிய ஆட்டிட்யூட் ‘கும்பிட்ட கையக் கருக்கிரணும்’ மொமண்டாக எரிச்சல் தருவதாக இருந்தது. சாக்‌ஷி, கவின் இருவருக்குமான உறவுச்சிக்கல் நீடித்துக்கொண்டே இருப்பது கண்கூடாகத் தெரிந்தது. அபிராமி – முகினுக்கும் கிட்டத்தட்ட அப்படியான உறவுதான் .ஆனால் அது இன்னும் சிக்கலாகாததற்குக் காரணம் அபிராமி முகினைப் பற்றியோ, முகின் அபிராமி பற்றியோ வேறொரு நபரிடம் பேசுவதில்லை என்பதே என நான் அவதானிக்கிறேன். கவின், சாக்‌ஷி விஷயத்தில் கேட் கண்ணாடி ஆரம்பித்து பாத்ரூம் கேமரா வரை எல்லாரிடமும் இவர்கள் தங்களைப் பற்றிப் பேசிப் பேசி பெரிதாக்கிவிட்டார்கள். அதன் விளைவு இன்றைக்குத் தெரிந்தது. விரிவாகப் பார்ப்போம்..

முகின் பட்டாஸூ!

சாண்டி முகின்

38ம் நாள் மார்னிங் சாங் முடிந்ததும் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’வுக்கு அபிராமி ஆடினார். சிறப்பான பரத ஸ்டெப்ஸ். அதன் பிறகு கொஞ்சநேரத்திலேயே ‘ஆடுங்கடா என்னைச் சுத்தி’ ஒலித்தது. சோஃபாவைத் தாண்டி குதித்து வந்தார் ‘விஜய்’ முகின். கெட்ட ஆட்டம் போட்டார்! அதில் விஜய்யுடன் பிரபுதேவா இணையும் பீட்டுக்கு முகினுடன் சாண்டி குதித்து இறங்கியது வேற வேற வேற லெவல் பெர்ஃபார்மென்ஸ்! கிட்டத்தட்ட முழுப்பாடலும் ஒளிபரப்பினார்கள்.

அடுத்ததாக இளமை இதோ இதோ. நேற்று தேவா பாட்டுக்கு கிராமி அவார்டைச் சொன்னேனா? 37 வருடங்களாக நியூ இயர் பாடலாக இருக்கும் இதற்கு இளையராஜா விருதுதான் கொடுக்கவேண்டும். அதைவிட பெரிய விருது என்ன இருக்கு! அந்தப் பாடலுக்கு தர்ஷன் ஆடினார். ஆட்டத்தைக் கொஞ்சநேரம்தான் காட்டினார்கள். பாடலில் ஆரம்பத்தில் முகின் பைக்காய் மாறி நிற்க, தர்ஷன் ஓட்டியது குட் ஐடியா! சம்பளமே இல்லாமல் சாண்டி, அங்கே எல்லாருக்கும் டான்ஸ் மாஸ்டர் வேலை செய்திருக்கிறார் என்று தெரிந்தது.

 

பிக்பாஸ் விற்ற ‘பதனி.. பதனீஈஈஈஈ!

செந்தில் `பதனி பதனீஈஈ’ என்று விற்பது போல, `மொட்டக்கடுதாசி’ என்ற புதிய டாஸ்குடன் வந்தார் பிக்பாஸ். ஹவுஸ் மேட்ஸ் இருவரிடம் கேட்க விரும்பும் கேள்வியை ஒரு கடிதமாக எழுதிப் போடவேண்டும் என்று டாஸ்க். கேட்டது யாரென்று சொல்லத் தேவையில்லை; அந்தக் கேள்விக்கு பதில் எல்லார் முன்னிலையும் சொல்லப்படும்!

ஷெரின்

 • சாக்‌ஷி, உங்க கேரக்டர் ஏன் அடிக்கடி சேஞ்ச் ஆகுது – அபிராமி
 • அபிராமி, உங்க ஃப்ரெண்ட்ஸ் சாக்‌ஷி & ஷெரின் உங்களுக்கு உண்மையா இருக்காங்களா – லாஸ்லியா
 • லாஸ்லியா, சாக்‌ஷிகூட ஏன் மிங்கிள் ஆகமாட்டீங்கறாங்க? – சாக்‌ஷி
 • லாஸ்லியா, உங்கள் உண்மையான சுயரூபம் என்ன – மதுமிதா
 • முகின், வெளியில் காதலி இருந்தும் அபிராமியை ஏன் கன்ஃப்யூஸ் செய்கிறீர்கள்? – மதுமிதா
 • சாண்டி, நடனத்தைத் தவிர அன்பு, பாசம், நட்பு, காதல் எதாவது தெரியுமா? – சரவணன்
 • சேரன், நீங்க அவ்ளோ பெரிய டைரக்டர். அதத்தாண்டி இங்க என்ன கிடைக்கும்? இது எதை நோக்கிய பயணம்? – சரவணன்
 • சரவணன், நீங்க ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குப் பிறகு ஒதுங்கியே இருக்கீங்களே? ஏன்? – சேரன்
 • சேரன், நீங்க ஸ்ட்ராட்டஜிக் கேம் ப்ளே பண்றீங்களா – முகின்
 • கவின், உங்களுக்கும் சாக்‌ஷிக்கும் என்ன நடக்குது – சாண்டி
 • கவின், உங்களுக்கும் சாக்‌ஷி, லாஸ்லியாவுக்கும் நடந்த பிரச்னைக்கு அப்பறம் நீங்க அவங்களைப் பார்க்கும் கண்ணோட்டம் எப்படி உள்ளது – தர்ஷன்

கன்ஃபெஷன் ரூமுக்குள் சென்று, இப்படி ஆளாளுக்குப் பல கேள்விகள் கேட்டு, பெட்டியில் போட்டார்கள். அந்தக் கேள்விகள் எழுதப்பட்டு வந்தன. கேட்டவர் யார் என்று தெரியாமல் ஹவுஸ்மேட்ஸ் விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

 

விஜய் சேதுபதி சேரனுக்குச் சொன்ன அட்வைஸ்:

 

சாக்‌ஷி மீதான தன் கண்ணோட்டம், இப்போது சாக்‌ஷி தனக்கு யார் என்று கவின் ரொம்ப நேரம் விளக்கம் சொன்னார். `மன்னிப்புக் கேட்டேன். சாக்‌ஷியே இனி ஃப்ரெண்ட்ஸ்னு சொன்னாங்க. அப்பறம் பல விஷயஙளுக்கு அப்பறம் விரிசல் அதிமாச்சு. பிறகும் மன்னிப்புல்லாம் கேட்டு, அப்பறம் நாமினேட் பண்ணினது எனக்கு ஷாக்கா இருந்துச்சு. அதுக்கு நான் மன்னிக்கல’னு அவங்க சொல்லிருக்கலாம். கெட்டவனா கூட இருந்துரலாம். கேனயனா இருந்திருக்கேன்னு நினைக்கறப்ப கஷ்டமா இருந்துச்சு” என்றார். அவர் பேசும்போது அழுது, அபிராமியும் அழுது… ‘க்யாரோ செட்டிங்கா’ என்று சாண்டி கலாய்க்குமளவு நடந்தது அவர் உரையாடல்.

சேரன்

சேரன், ‘இது எதை நோக்கிய பயணம்’ என்ற கேள்விக்கு விரிவாக பதில் சொன்னார். “நான் ஆட்டோகிராஃப் வெற்றி மட்டும்தான் கடைசியா ஃபீல் பண்ணினது. அதுக்கப்பறம் போராடிட்டேதான் இருந்தேன். இப்ப இருக்கற மக்களுக்கு நான் அந்நியமாய்ட்டேன். எனக்கு திரும்ப மக்கள்கிட்ட என் முகம் பதியவைக்கணும். விஜய் சேதுபதிதான் என்னை அனுப்ச்சது. ‘உங்க 35 வருஷ அனுபவங்களை ஷேர் பண்ணிட்டே இருங்க. அது மக்களுக்கு பயன்படட்டும்’னு சொன்னது விஜய் சேதுபதிதான். எனக்கும் மக்களுமான இடைவெளிய குறைக்கத்தான் வந்தேன்” என்றார்.

சரவணன், அவருக்குக் கோபம் வராதா என்ற கேள்விக்கு “எல்லாரையும்விட அதிகமா வரும். ஆனா என் வாழ்க்கை என்னை கோபப்படக்கூடாதுனு மாத்தி வெச்சிருக்கு. அதுனால பேசறதே இல்ல. பேசறது பிரயோஜனமே இல்லை. யாருக்குமே வாழ்க்கைக்கு அது சரிப்பட்டு வராது. அதுனால கம்மியாவே பேசிக்கறது” என்றார்.

 

`அவஷ்யம்’ இல்லே

 

லாஸ்லியா ”உங்க ஒரிஜினாலிட்டியைப் புரிஞ்சுக்க முடியல. எந்த உரையாடலிலும் கலந்துக்க மாட்டீங்கறீங்க?” என்ற கேள்விக்கு “நீங்க பெரும்பாலும் மத்தவங்களப் பத்தி கதைக்கறீங்க. அதுல கலந்துக்கணும், மத்தவங்களப் பத்தி பேசணும்கற அவஷ்யம் எனக்கு இல்லே. பின்னுக்குப் போய் கதைக்கணும்னு அவஷயம் இல்ல” என்று ஆட்டிட்யூட் வழிய சொன்னார். அதற்கடுத்த கேள்விக்கு பதில் சொல்லும்போதும் “நான் எனக்காகத்தான் இருக்கேன். உங்க யாருக்காகவும் ஆடல. பாடல. அந்த அவஷ்யமும் இல்ல. வேறு தோற்றம் உங்களுக்குத் தோணிச்சுன்னா அத அப்டியே வெச்சுக்கோங்க. எனக்கு பிராப்ளம் இல்லே” என்றார். முடிலம்ம்மா… முடில! உன்ர ஆர்மில ஆளு கொறஞ்சுட்டே போவுது போ!

லாஸ்லியா

சரவணன் ‘ஒரு குறிப்பிட்ட வட்டத்துல இருக்கீங்க. அதத்தாண்டி யார் தப்பு பண்ணாலும் கண்டுக்க மாட்டீங்கறீங்க” என்ற கேள்விக்கு பதில் சொன்னார். “சேரன் பத்தி மீரா புகார் சொன்னப்ப நான் எந்த இன்ஃப்ளூயன்ஸும் இல்லாம ‘நீ பண்ணது தப்பு’னு சொன்னேன். வேற இதுல நீங்க ஏன் கலந்துக்கல, பதில் சொல்லலனு கேட்டா, ஒரு பொண்ணும் பையனும் நைட் 10 மணிக்கு மேல தனியா போய்ப் பேசிக்கறாங்க. அவங்க என்ன பேசினாங்கனு உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. இதுல நான் என்ன குரல் கொடுக்கறது? ரெண்டு பேரும் என்கிட்ட ‘நான் இந்த மாதிரி பேசினேன். எனக்கு அட்வைஸ் சொல்லுங்க’னு சொன்னா நான் எதாவது சொல்லலாம். எதுமே தெரியாம நான் என்ன பேசறதுனு பேசாம இருக்கேன். நீங்களும் பேசாமத்தான் இருக்கணும். ஆனா நீங்க, என்ன நடந்ததுனு தெரியாததுக்கெல்லாம் பதில் சொல்லிட்டிருக்கீங்க. இதான் நடந்திட்டிருக்கு வீட்ல. என்கிட்ட கேட்டா கண்டிப்பேன். பொதுவா ‘நானும் கண்டிக்கறேன்.. நானும் கண்டிக்கறேன்’னெல்லாம் என்னால சொல்ல முடியாது. ‘எப்பொழுதெல்லாம் உங்கள் குடும்பமாய் உணர்கிறீர்கள்’னும் கேட்டிருக்காங்க. எப்பவுமே அப்படித்தான் உணர்றேன். அதுக்கு ஒரே உதாரணம். என் மனைவிக்கும், என் உறவுகளுக்கும் எப்படி சமைச்சுப் போடுவேனோ.. முகம் சுளிக்காம அப்படித்தான் உங்களுக்கெல்லாம் சமைச்சுப் போடறேன். எனக்கு பெட்ஷீட் துவைக்கத் தெரியாது; வீடு கூட்டத்தெரியாது. எனக்குத் தெரிஞ்ச சமையல உங்களுக்கு மனசார செய்யறேன்” என்றார். நீ கலக்கு சித்தப்பு!

தன்னைப் பற்றிய இரண்டு கேள்விகளும் சரவணன் அளித்த பதில் சிக்ஸர்கள் க்ரவுண்டைத் தாண்டி பறந்து விழுந்தது!

 

உறவுச் சிக்கல்கள்

 

முகின் தனக்கு வந்த கேள்விக்கு சொன்ன பதில் தெளிவிலும் தெளிவு. “அபிராமிக்கும் எனக்கும் இருக்கற நட்பை, எல்லாருக்கும் விளக்கறதைவிட நானும் அபியும் புரிஞ்சுகிட்டா போதும்னு நினைக்கறேன். ‘உனக்கு ஒரு லைஃப் இருக்கு. உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு. உனக்காக எப்பவும் நான் இருப்பேன். என் அன்பு இருக்கும்னு ஒருத்தங்க சொல்றது ரொம்பப் பெரிய விஷயம். என்கிட்ட அபிராமி அதைச் சொன்னாங்க. காதலிச்சு பாதில அவங்கள கஷ்டப்படுத்திட்டுப் போறதுக்கு பதிலா, நண்பனா அவங்ககூட கடைசி வரைக்கும் டிராவல் பண்ணனும்னு நினைக்கறேன்” என்றார் முகின். தவிர தான் குடும்பத்தில் தனிமைப்பட்டது போல, தன் மகனும், மனைவியும் படக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதாகக் கூறினார்.

சரவணன் | சாண்டி

முகின் பேசிமுடிந்து வந்ததும் அவர் தோளில் சாய்ந்து அழுதார் அபிராமி. எல்லாரும் அவர்கள் இருவரின் பெர்சனலுக்கு மரியாதை கொடுத்து அமைதியாக இருந்த அந்தத் தருணம் அழகாக இருந்தது.

 

சாக்‌ஷி…கவின்…லாஸ்லியா

 

சாக்‌ஷியும் தன் கேள்விக்கு பதில் சொல்லும்போது கவினுக்கும் தனக்கும் நடந்த உறவுச்சிக்கல்களை விவரித்தார். “கவின் ஆரம்பத்துல என் பின்னாடியே திரிஞ்சார். எந்தப் பொண்ணுக்கும் அது பிடிக்கும். நானும் நார்மல் பொண்ணுதானே. சனி, ஞாயிறு முடிஞ்சதும் அவர் டக்னு என்கூட இல்ல. எனக்கு ஹர்ட் ஆகும்னு தெரிஞ்சும், என் முன்னாடி இன்னொரு பொண்ணுகூட நைட் மூணு நாலு மணிநேரம் உட்கார்ந்து பேசறீங்க. அப்ப நீங்க என்னை ‘taken for granded’ ஆ நினைச்சிருக்கீங்க. ஒரு விஷயம் நடந்துட்டிருக்கறப்ப டக்னு நீங்க மாறிட்டீங்க. எனக்கு ஸ்பேஸ் கொடுக்காம, வேற பொண்ணுகூட கையப் பிடிச்சு சுத்திட்டிருக்கீங்க. ஓபன் நாமினேஷன்ல கவின் பேர் சொன்னாதான், அவன் என்னை வெறுப்பான்னுதான் நான் சொன்னது” என்றார் சாக்‌ஷி.

சாக்‌ஷி பேசி முடிந்ததும் லாஸ்லியா தானாக வந்து விளக்கம் சொன்னார்: “கவின் நாமினேட் ஆனான், போயிருவான்னு நான் கொஞ்சம் அவன்கிட்ட க்ளோஸா இருந்தேன். அவன் எனக்கு நல்ல ஃப்ரெண்ட். இங்கயும் பிடிக்கும், வெளில போன பின்னும் அவன எனக்குப் பிடிக்கும். அத நான் எல்லாருக்கும் விளக்கணும்னு அவஷ்யம் இல்ல. நான் கவின் கையப் பிடிச்சேன்னா, எனக்கு என் லிமிட் தெரியும்..” என்று தொடர சாக்‌ஷி “இப்ப யார் உங்ககிட்ட விளக்கம் கேட்டது. கவின் அவன் தரப்ப சொன்னான்; நான் என் தரப்ப சொன்னான். உங்களுக்குக் கேள்வி வந்தா பேசுங்க. உங்க விளக்கத்தை யார் கேட்டா?” என்றார். பிறகு எழுந்து “நான் முழுசா பேசி முடிச்சுடறேன்” என்று பேச ஆரம்பித்தார்.

சாக்‌ஷி

சாக்‌ஷி பேச ஆரம்பித்ததுமே லாஸ்லியா எழுந்து பாத்ரூம் போனார். சேரன் “அப்படிப் போகக்கூடாது” என்று குரல் கொடுத்தும் நடந்து போய்க்கொண்டே இருந்தார். சாக்‌ஷி தொடர்ந்து பேச கவின் “எல்லாத்தையும் பேசி நார்மல் ஆகிட்டு, முடிச்சுக்கலாம். யார்ட்டயும் இதப் பேச வேண்டாம்னு என்கிட்ட சொல்லிட்டு, எல்லார்ட்டயும் இதப் பேசிட்டே இருக்கறது நீ” என்றார். “மொதல்ல இருந்தே இதோட வீரியம் என்னனு தெரிஞ்சாதானே இதப்பத்தி எல்லாருக்கும் தெரியும்” என்றார் சாக்‌ஷி. “எனக்கு எல்லாம் புரிஞ்சுடுச்சு மச்சான். போதும்” என்று கையெடுத்துக் கும்பிட்டார் கவின்.

இதோட முடியாது.. இனிதான் மெய்ன் பிக்சரே இருக்கு!

Bigg Boss Trivia

மதுமிதா | ரேஷ்மா

பிக் பிரதர் சீசன் ஒன்றில் Megan Lowder என்ற பெண் போட்டியாளர் எட்டாவது நாளே “நம்மால முடியாது சாமி” என்று வெளியேறிவிட்டார். அவருக்கு முன்னமே நடந்த பாலியல் ரீதியான துன்புறுத்தல் காரணமாக PTSD (Post-traumatic stress disorder) இருப்பதாகவும். பிக் பிரதர் வீட்டில் ஆளாளுக்குத் தன்மீது கத்தும்போது, அந்த மனப்பிரச்னை அதிகரிப்பதாகவும் சொல்லி அவராகவே வெளியேறிவிட்டார்.

பொண்ணுககிட்ட கத்திப் பேசாதீங்கப்பா!!!