நேற்றைக்கு லாஸ்லியா ஒருவரின் ஃபேமலியை உள்ளே விட்டு முழுநாளுக்குமான கண்டெண்ட்டை எடுத்த பிக்பாஸ், இன்று தர்ஷன், வனிதா, சேரன் என மூவரின் குடும்பத்தை அனுமதித்தார். சேரனின் மகள் சேரனுக்குக் கொடுத்த அட்வைஸ் இன்றைய ஹைலைட்டாக இருந்தது.

மீண்டும் பெர்சனல் பேசிய கவின் லாஸ்லியா

80ம் நாளின் தொடர்ச்சி. ”மரியநேசன், மேரி, ஜெனிஃபர், கிருஷ்ணிகா நான்கு பேரும் வந்ததுக்கு நன்றி. இப்போது நேரம் ஓவர். மெயின் டோர் வழியே வெளியே வாருங்கள்” என்றார் பிக் பாஸ். அடுத்த சில நிமிடங்கள் உணர்ச்சிப்பிழம்பாய் இருந்தன. எல்லாரையும் கட்டியணைத்து வாழ்த்தினார் மரியநேசன். வரும்போது இருந்த இறுக்கமோ, குழப்பமோ அவருக்கு இல்லை.

Bigg Boss Sept 12

கவினை மட்டும் மூன்று முறை கட்டியணைத்தோ கன்னத்தைத் தட்டியோ தேற்றினார். “இதெல்லாம் சகஜம், விளையாட்டை விளையாட்டா பாருங்க. யார் ஜெயிச்சாலும் ஓகே. நான் போனப்பறம் அழக்கூடாது” என்றெல்லாம் சொல்லி விடைபெற்றார் மரியநேசன். லாஸ்லியாவின் அம்மாவும் “பழைய லாஸ்லியாவா வா. நல்லா இரு” என்று அழுதார்.

பிறகு வனிதா லாஸ்லியாவிடம் பேசிக்கொண்டிருந்தார். “விட்டா உங்கப்பா சாத்திருவார் போல. அப்படி ஒரு அப்பா இருக்கணும். அதுதான் நமக்கும் பாதுகாப்பு. சில சமயம் நம்ம ஆசாபாசங்களை தியாகம் செஞ்சு உன்னை உன் அப்பா அம்மாவை உன் சகோதரிகளை யோசி” என்றார்.

இவ்வளவு ஆனபிறகும் யாருக்கென்ன எவருக்கென்ன என்று இரவு கவினும் லாஸ்லியாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ’இதை நம் அம்மா அப்பா பார்த்தால்?’ என்று லாஸ்லியா நினைத்த மாதிரியும் தெரியவில்லை. கவினிடம் தன்னிலை விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்.

Bigg Boss Sept 12

”கவின்.. ப்ளீஸ் ஓகேவா இரு. ப்ளீஸ்… ப்ளீஸ். நிறைய விஷயம் சொல்லிட்டுப் போயிருக்காங்க. நான் இருக்கற கொஞ்சநாள்ல அதப் பண்ணணும். அவங்களுக்காக நான் கேம் விளையாடணும். ப்ளீஸ். தங்கச்சிக ரியாக்ட் பண்ணினத வெச்சு கஷ்டமா இருந்துச்சு. ‘மொதல்ல எப்டி இருந்தியோ அப்டி இரு’னு சொன்னாங்க. வெளில என்ன பேசிருக்காங்கனு தெரியல. யாருமே என்னைப் பத்தி நல்லதா சொல்லல. எனக்கு அது ப்ராப்ளம் இல்லாம இருக்கலாம். ஆனா அவங்க அதை எதிர்கொள்ளணும்ல. ‘எதுக்கு வந்த.. என்ன பண்ணிட்டிருக்க’னு கேட்டாங்க. அது நியாயம்தானே. நான் பண்ற சில விஷயங்கள் அவங்களை பாதிக்குது. என்னைப் பெத்தாங்க… என்கூட பிறந்தாங்கனு அவங்க இதைலாம் தாங்கிக்கணும்னு அவஷ்யம் இல்லே. ஸாரி கவின்”
– இப்படி கவினை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தார்.

“எனக்காக ஒண்ணு பண்றியா. ஹேப்பியா இருக்கியா? அப்ப நானும் ஹேப்பியா இருப்பேன்” என்றும் வேண்டுகோள் வைத்தார்.

கவின் “ஹேய் இதெல்லாம் ஒண்ணும்ல” என்று எழுந்திருக்க வேண்டாமா. ம்ஹும். மூஞ்சியை அத்தனை பாவமாக வைத்துக் கொண்டு லாஸ்லியாவைப் பார்த்தார். இதுக்குதான் கவின் திட்டுவாங்கறது. இப்படி முகத்தை வைத்துக்கொண்டு அமைதியாக இருப்பதுதான் தப்பு. மீண்டும் லாஸ்லியாவை சிரமப்படுத்துகிற செயல் அது.

Bigg Boss Sept 12

“ஓகேவா. ஒகே ஆகு” என்றார் லாஸ்லியா.

உள்ளே வந்த கவின், சாண்டியிடம் “ஸாரி” என்றார் “ச்சே.. அதவிடுடா. நீதாண்டா சொன்ன. கஷ்டமாதான் ஆச்சு. அதவிடு. ஒண்ணு சொல்றேன். கோச்சுக்காத. நாளைல இருந்து நாம பாட்டுப்பாடறோம். ஜாலியா இருக்கோம். ஓகேல்ல?” என்று கேட்டார் சாண்டி

சாண்டி மாதிரி நண்பன் கிடைப்பதெல்லாம் சிலருக்கு வரம்.

சேரன், “உனக்கு இப்ப மனசு ஃப்ரீயா இருக்கும். எதையும் நினைச்சுக்காத” என்று சமாதானப்படுத்தினார்.

தர்ஷன் அம்மா எண்ட்ரி

81-ம் நாள் விடிந்தது. லாஸ்லியா, சாண்டி, முகின், தர்ஷன், ஷெரின் ஆகியோர் ‘ஜித்து ஜில்லாடி’ பாடலுக்கு டான்ஸ் ஆடிக்கொண்டிருக்க சேரனும் வனிதாவும் அதை ரசித்துக் கொண்டிருந்தார்கள். பிக் பாஸின் கேமராவே பாடலில் கடைசிக் குத்துக்கு இவர்களின் ஆட்டத்தை ரசித்து ஜூம் இன் ஜூம் அவுட் எல்லாம் போய் ரசித்துக்கொண்டிருந்தது.

Bigg Boss Sept 12

சாண்டி தன் மனைவி, மகளுக்காகக் காத்திருப்பதை வெளிப்படையாகவே சொல்லிக்கொண்டிருந்தார். சில பொருட்களை அடுக்கிக்கொண்டே “இதெல்லாம் அவங்ககிட்ட கொடுத்துவிட வேண்டியதுதான். இன்னைக்கா நாளைக்கா?” என்று சொல்லிக் கொண்டிருந்தார். பிறகு சேரனுடன் வந்தமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். சாண்டியை அடிக்கடி கலாய்க்கும் பிக் பாஸ் இன்றும் அப்படிக் கலாய்த்தார். “சாண்டி… மைக்க மாட்றது முக்கியமில்ல. எப்படி மாட்றோம்கறதுதான் முக்கியம். சரியா மாட்டுங்க” என்றார். வீட்டினர் எல்லாரும் சிரியோ சிரி என்று சிரித்தார். “குருநாதா.. என்ன குருநாதா ஃபுல் ஃபார்ம்ல இருக்கீங்க?” என்றார் சாண்டி

எல்லாரையும் ஃப்ரீஸ் சொல்லி ‘காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா’ பாடலைப் போட்டார் பிக் பாஸ். யோவ் பிக் பாஸு எல்லா சிச்சுவேஷனுக்கும் எழுதி வெச்சு மியூசிக் போட்டிருக்காங்கய்யா உனக்கு. நீ அதுகாச்சும் தேங்ஸ் சொல்லோணும்… என்னா?

“டே தர்ஷு… அம்மா” என்று சாண்டி குரல் கொடுக்க உள்ளே ஃப்ரீஸில் இருந்த தர்ஷன் ஓடினார். அதை யூகமாகத்தான் சொல்லியிருந்தார் சாண்டி. கண்ணாடிக் கதவு வழியே சிகப்பு கேட்டையே பார்த்துக் கொண்டிருந்த தர்ஷன் கதவு திறந்து அம்மாவும் தங்கையும் வரவும் ஓடிச்சென்று கட்டிப்பிடித்தார்.

Bigg Boss Sept 12

தர்ஷன் கண்ட்ரோலாகத்தான் இருந்தார். அம்மாதான் அழோ அழு என்றழுதார். பிறகு சாண்டியிடம் வந்து “சாண்டீ…. நீதான் சந்தோஷமா இருக்கியே” என்று கட்டியணைத்தார். ஷெரினையும் அதே போலக் கட்டியணைத்து ‘ஹாய்’ சொன்னார்.

தர்ஷன் சைடில் வர சாண்டியின் தோள்பிடித்து உள்ளே வந்தார் தர்ஷனின் அம்மா. “வீடே நீ இருக்கறதாலதான் சந்தோஷமா இருக்கு” என அவர் சொல்ல “டே டே.. இந்த டயலாக்கைக் கேட்டியா இல்லையா” என்றார் சாண்டி. “எங்கம்மா அப்பப்ப பொய் சொல்லுவாங்க” என்று கவுண்ட்டர் கொடுத்தார் தர்ஷன்.

தர்ஷன் பேசியிருந்ததை ஞாபகம் வைத்திருந்து தர்ஷனின் அம்மாவுக்கு அட்வான்ஸ் பர்த்டே விஷ் செய்தார் சாண்டி.

”சாண்டி அண்ணன் இல்லின்னா சீசன் 3 போருதான்” என்றார் தர்ஷனின் தங்கை. சட்டென்று கிடைத்த நேரத்தில் கிஃப்ட் ஒன்றை முகின் தயார் செய்து தர்ஷனை அழைத்து அதை அம்மாவிடம் கொடுக்கச் செய்தார். ‘தாயிற்சிறந்த கோயிலுமில்லை’ பாடலை சாண்டி பாட மீண்டும் தர்ஷனின் அம்மா சாண்டியைக் கட்டிக்கொண்டு உச்சிமுகர்ந்தார்.

Bigg Boss Sept 12

இவர்கள் கேட்டுக்கொண்டபடி பிக் பாஸ், தர்ஷனின் அம்மாவுக்காகக் கேக் கொடுத்தனுப்பினார். ‘தேங்ஸ் குருநாதா’ என்றபடி அதை எடுத்துச் சென்று அம்மாவை வெட்டச் செய்தனர். பிக் பாஸும் பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்ல எல்லாரும் தேங்க்யு குருநாதா என்றார்கள். தர்ஷனின் அம்மாவும் தேங்க்யூ குருநாதா என்றதுதான் ஹைலைட். ’குருநாதாவுக்கு ஸ்டெப்பப் போடுரா’ என சாண்டி சொல்ல, தர்ஷன் ‘குரு – நாதா’ என்று ஒரு ஸ்டெப் போட்டார்.

“உள்ள வந்த ரிலேஷன்ஷிப் வெளில வந்தாலும் இருக்கும். இப்ப கேம் விளையாடு. ஃபிஸிக்கல் டாஸ்கோ மெண்ட்டல் டாஸ்கோ அதை நல்லா பண்ணு. மனசுல தோண்றத பண்ணு. யாருக்காகவும் விட்டுக்கொடுக்காத” என்று தர்ஷனின் சகோதரி துஷாரா அட்வைஸ் செய்தார். துஷாராவைப் பார்த்த பிக் பாஸ் இப்போதே சீசன் 4 போட்டியாளராக புக் செய்துவிடலாமா என்று யோசித்திருப்பார்.

Bigg Boss Sept 12

வாயாடி பெத்த புள்ள…

லாஸ்லியா, வனிதா உறங்கிக்கொண்டிருக்க கன் ஷாட் ஒலிக்கச் செய்தார் பிக் பாஸ். அவரை கன்ஃபெஷன் ரூமுக்குள் அழைத்தார். “இந்த வாரத் தலைவர்?” என்று கேட்டார்

“நான்தான்” என்றார் லாஸ்லியா.

“அப்ப நீங்களே தூங்கலாமா. கேப்டன்சிய கொஞ்சம் சீரியஸா பண்ணுங்க” என்று கழுவி ஊற்றிவிட்டு அனுப்பினார்.

ஃப்ரீஸ் சொல்லிவிட்டு ‘வாயாடி பெத்தபுள்ள’ பாடலைப் போட்டார். சாண்டியும் வனிதாவும் ‘இது எனக்கா உனக்கா’ என்பது போல ரியாக்‌ஷன் கொடுத்தனர். வனிதா என் பொண்ணுகதான் வரப்போகுது’ என்பதாக நம்பிக்கையோடிருந்தார். அவரது மகள்கள்தான் வந்தனர்.

Bigg Boss Sept 12

முகின் இரு மகள்களூக்கும் வீட்டைச் சுற்றிக் காட்டினார். இருவரும் ஸ்கூலில் அவர்கள் மெடல் வாங்கியதையும், நல்ல மார்க் வாங்கியதையும் அம்மா வனிதாவிடம் பகிர்ந்து கொண்டனர்.

பிறகு ‘ஒன் டூ த்ரீ பம்பளபட்டி” என்ற ஃப்ரீஸ் செய்துவிட்டு சிரிக்க வைக்கும் கேம் விளையாடினார்கள். சின்னப்பெண் அவுட் ஆனதும் வந்து அவள் அக்காவை கன்னத்தில் அறைந்தார். மற்ற எல்லாரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

பெரிய மகள் அம்மாவுக்கு அறிவுரை சொன்னார். “நீ உன் கேமை விளையாடு.யாரையும் நம்பாத. உனக்குக் கெடச்ச வாய்ப்பை பயன்படுத்திக்கோ” என்றார். ‘டிக் டிக்… யாரது?’ விளையாடினர். முகின் கதை சொன்னார்.

ஜெனிதா ஜோவிதா இருவரும் வந்ததற்கு சந்தோஷம் என்று அறிவித்த பிக் பாஸ் அவர்களுக்காக ‘ரௌடி பேபி’ பாடலை ஒலிக்கவைத்தார். எல்லாருமாக டான்ஸ் ஆடினார்கள்.

Bigg Boss Sept 12

சேரனுக்கு செக்!

அடுத்து ‘ஞாபகம் வருதே’ ஒலிக்க சேரனின் குடும்பம் உள்ளே வந்தனர். சேரனின் அம்மா, சகோதரி, மகள் வந்தார்கள். உள்ளே வரும்போது உணர்ச்சிமயமாய் வந்த சேரனின் அம்மாதான் ஹவுஸ்மேட்ஸ் எல்லாரிடமும் பேசி கலகலப்பூட்டினார்.

“தெரிஞ்சோ தெரியாமலோ எங்க அப்பாவை டாடினு கூப்டுட்டீங்க. அவர் என்னைப் பார்த்துக்கற மாதிரி உங்களைப் பார்த்துப்பார். நீங்க அவர்கூட இல்லைன்னாலும் அவர் உங்ககூட இருப்பார்” என்றார் சேரன் மகள். பிறகு சேரனை தனியே அழைத்துச் சென்று பேசினார் அவரது மகள்.

“எதையும் கண்டுக்காம.. லாஸ்லியா பக்கம் திரும்பாம உங்க கேமை விளையாடுங்க. உங்க மைனஸே லாஸ்லியாவ ரொம்ப கேர் எடுத்துக்கறதுதான். புள்ளைனு சொல்லிட்டதால எல்லாரும் புள்ளையாய்டமாட்டாங்க டாடி. விட்டுக்குடுத்துப் பேசறா அவ. இதுக்கு மேல அவகிட்ட பேசினா நான் டென்சனாய்டுவேன். என் ஃப்ரெண்ட்ஸ்லாம் கொந்தளிக்கறாங்க. ’என்ன உங்கப்பா லாஸ்லியாவையே புள்ள புள்ளங்கறாங்க. உன்னைய மறந்துட்டாறா’னு கேட்கறாங்க. நானும் அக்காவும்தான் உங்களுக்குப் புள்ள. சீக்கிரமா வாங்க” என்றார். இது பிக் பாஸே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.

Bigg Boss Sept 12

சேரனின் அம்மா பாய்ஸ் க்ளப்போடு மிக்ஸ் ஆனார். “எம் புள்ள எதச் சொன்னாலும் நல்லதுக்காகத்தான் சொல்லுவான். நீங்க ‘எம்புள்ள இப்படிச் சொல்லுது.. அப்படிச் சொல்லுது’னு கோச்சுக்காதீங்க” என்றார். பசங்க ‘அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா’ என்றனர்.

‘கவினுடன் எந்த நெருக்கமும் வேண்டாம்’ என்று கண்டிப்பாய்ச் சொன்ன லாஸ்லியாவின் அப்பா, ‘ரிலேஷன்ஷிப்லாம் வெளில வந்து பார்த்துக்கலாம்’ என்ற தர்ஷனின் சகோதரி, “லாஸ்லியாவை பொண்ணுன்னா நான் கோச்சுக்குவேன்’ என்று சேரனிடம் சொன்ன அவரது மகள் என்று இந்த வாரம் நடந்த இந்நிகழ்வுகள் இனிவரும் 20 நாள் ஆட்டத்தை எப்படியெப்படி மாற்றப்போகிறது என்பதை…

ஆங்… அதான்… பொறுத்திருந்து பார்க்கலாம்!

Bigg Boss Sept 12

Bigg Boss Trivia

பிற நாடுகளில் எல்லாம் நாமினேஷனில் நடப்பதை டிஸ்கஸ் செய்தால் அபராதம் உண்டு. பெரும் தொகை, அதாவது லட்சக்கணக்கில் அபராதத்தைப் போட்டு, “இருந்தது இவ்ளோநாள். அதுல அபராதம் போக இவ்ளோ” என்று கழித்துவிடுவார் பிக் பாஸ்.

நாமினேஷன் பற்றி பிறருடன் பகிர்ந்து கொள்வது மட்டுமன்றி மைக்கை மாட்டாதது, நாமினேஷன் போது சரியான காரணம் சொல்லாதது, டாஸ்கை வேண்டுமென்றே விட்டுக்கொடுப்பது என்று பலவற்றுக்கும் அபராதம் உண்டு!