கடைசி வாரம். சண்டைகள் இல்லை. பஞ்சாயத்துகள் இலலை. ஒன்லி ஹேப்பி மெமரீஸ்தான்!

அன்பும் வாழ்த்துகளும்!

இந்த சீசனின் கடைசி வீக் எண்ட் எபிசோட். ”கதவு திறக்கும் கனவு மலரும். காட்சிகள் தொடரும்!” என்று ஸ்டைலாக வந்த கமல், இந்தக் கதவு தானாக இயங்குவதல்ல என்று அந்தக் கதவுக்குப் பின்னே இருக்கும் சிலரை முன் நிற்க வைத்தார். “இது தானியங்கில் கதவு அல்ல. நாமியங்கித் திறக்கும் கதவு. இந்தக் கதவுக்குப் பின்னே பலர் உழைப்பு என்கிறபோது மொத்த நிகழ்வுக்கும் எத்தனை பேர் இருப்பார்கள் என்று நீங்களே முடிவு செய்யுங்கள்” என்றார் கமல். “தொழிற்நுட்பக்கலைஞர்கள் நேரடியாக 300 பேர், மகிழுந்து ஓட்டிகள், சமையற்கலைஞர்கள் என்று மொத்தம் 500 பேர், இதனால் வாழ்க்கை பெறுகின்றனர்” என்றும் சுட்டிக் காட்டினார். சமையல்கலைஞர்கள் முதல் டெக்னீஷியன்கள் வரை அனைவரையும் பாராட்டினார்.

Bigg Boss Oct 5

வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைக் காண வீட்டின் கதவு திறந்தார். “உள்ளார எப்போதும் உல்லாலா உல்லாலா” என்று ஆரம்பித்து ஆட்டம் போட்டாரக்ள் டான்ஸர்கள். ஒரே உடையில் யூனிஃபார்மாக வந்து கொண்டிருந்த அவர்கள் இன்று ஆளுக்கொரு நிறம்/டிசைன் உடையில் வந்தார்கள். ஃபைனலிஸ்ட் என்பதால் கொஞ்சம் கன்ஃப்யூஸ் பண்ணுவோமே என்று “ஆளப்போறான் தமிழன்” பாடலையும் ஒளிபரப்பினர்.

நால்வருக்கும் டிஷர்ட் வழங்கப்பட்டது. அதை அணிந்து கொள்ள வேண்டும். பிறகு அந்த டிஷர்ட்டில் ஒருவருக்கொருவர் வாழ்த்து, அன்புச் செய்திகளை எழுதிப் பகிர்ந்து கொண்டனர்.

இறுதிவாரத்தில் நான்கு ஃபைனலிஸ்டுகளும் பிக் பாஸுடன் பேச அனுமதி கொடுக்கப்பட்டது. அதன் தொகுப்பை ஒளிபரப்பினார்கள்.

Bigg Boss Oct 5

சாண்டி:

“ஹேப்பியா இருந்தது. ஜாலியா இருந்தது. போகப்போறோம்னு நினைச்சா கொஞ்சம் கஷ்டமா இருக்கு. நாமினேஷன்தான் இந்த வீட்ல நான் வருத்தப்படற விஷயம். அப்பறம் மூஞ்சிக்கு நேரா ஒருத்தரை `நீ இது பண்ணினது எனக்குப் பிடிக்கல’னு சொல்லி நாமினேட் பண்றது வருத்தமா இருந்துச்சு”

பிக் பாஸ்: “ஒரு நிகழ்வை மாத்தக்கூடிய சக்தி இருந்தா எதை மாத்துவீங்க?”

“கவின் ஆரம்பத்துல இருந்த மாதிரி ஜாலியாவே இருக்க வெச்சிருப்பேன். கடைசி வரை இருந்து இப்பவும் என்கூட இருந்திருப்பான்.” (’லாஸ்லியாவ லவ் பண்ண விட்டிருக்க மாட்டேன்’ங்கறார்.)

Bigg Boss Oct 5

பிடித்த இடமாக ரெட் டோர் ஏரியாவைக் குறிப்பிட்டார். “வரவேற்கிறதும் அதான்.. வழியன்னுப்பறதும் அதான்.” என்றார். மக்களுக்கு “ரொம்ப ரொம்ப நன்றி. எப்டி என்னை ஃபைனல் வரைக் கொண்டு வந்தீங்கனு தெர்ல. நன்றி. ஹேப்பியா இருங்க. ஃபன் பண்ணுங்க. ஜாலியா இருங்க” என்றார்.

லாஸ்லியா:

“இந்த வீட்டுக்கு உயிர் இருக்கு. அதை நான் நிறைய டைம் ஃபீல் பண்ணிருக்கேன். ரெண்டு நாள்ல போறோம். உங்களையும் வீட்டையும் மிஸ் பண்ணுவோம். இந்த வீடு எனக்கு ரொம்பப் பிடிக்கும்.”

பிக் பாஸ்: “இந்த வீட்ல எதையாவது ஒண்ணை செஞ்சு முடிக்கத் தவறிட்டோம்னு தோணிருக்கா?”

“யார்கூடயும் பெர்சனலா கனெக்ட் ஆகக்கூடாதுனு நெனைச்சேன். அப்டி கனெக்ட் ஆனா அவங்க பண்ற தப்பும் சரியா தோணும். அதன் காரணமாக நான் சில சமயம் தப்பாகூட பேசிருக்கேன். அதைப் பண்ணிடக்கூடாதுனு நெனைப்பேன். ஆனா பண்ணிருக்கேன்.”

Bigg Boss Oct 5

“பிக் பாஸ் அனுபவத்தை ஒருவரில சொல்லச் சொன்னா?”

“வார்த்தையால சொல்ல முடியாது. அனுபவிக்கணும். இங்க வாழ்ந்து அனுபவிக்கணும். முகம் தெரியாத எனக்கு இவ்வளவு அன்பு கொடுத்திருக்கீங்க. ரொம்ப மகிழ்ச்சி. ரொம்ப நன்றி.”

முகின்

”சண்டைலாம் நடக்கறப்ப போய்டலாம்டானு தோணும். ஆனா கடைசி நாள்கள் வரவர, இந்த வீட்ல இருந்து போகப்போறேமேனு தோணுது. என்னை அந்நியனா பார்த்துடுவாங்கனு நெனைச்சிருக்கேன். ஆனா அவங்கள்ல ஒருத்தனாதான் பார்த்தாங்க. கட்டிலை உடைச்சது, நாற்காலியத் தூக்கினதுனு நான் கோவப்பட்ட தருணங்கள் தவறுனு வருத்தப்படறேன். வாழ்க்கைல நாம கோவப்பட்டா அதோட ரியாக்‌ஷன் முழுமையா நமக்குத் தெரியாது. இங்க பதிவு பண்ணி நமக்கு அதைக் காட்டறாங்க. அதுனால அதைத் திருத்திக்க வாய்ப்பு கிடைக்குது.

Bigg Boss Oct 5

பிக் பாஸ் வீட்டுக்கு ஒட்டுமொத்தமா நன்றி. ’நீ போ, நாங்க இருக்கோம்’னு அனுப்ச்சு வெச்ச மலேசிய மக்களுக்கு நன்றி. என்னை ஏத்துக்கிட்ட தமிழ் மக்களுக்கு ந்னறி.”

ஷெரின்

”வீட்டை விட்டுப் போறது ரொம்ப வருத்தம்தான். என்னோட பொறுமை அதிகரிச்சிருக்கு. மீண்டும் மொதல்ல இருந்து விளையாட வாய்ப்பு கெடைச்சா, இன்னைக்கு இருக்கற ஷெரினா முதல் நாளிலிருந்து இருப்பேன் மக்கள் என்னை நம்பி இவ்ளோ தூரம் கூட்டிட்டு வந்திருக்கீங்க. நடுவுல எனக்கு உங்க ஆதரவு இருக்கான்னு சந்தேகப்பட்டிருக்கேன். அதுக்கு ஸாரி.

நடுவுல நான் திரைத்துறைல இருந்து விலகி இருந்தேன். இந்த வீட்ல ஒருநாள் கிடைச்ச உங்க கைதட்டல் ஓசை எனக்கு இசையா இருந்தது. அந்த சத்தத்தை அவ்ளோ மிஸ் பண்ணினேன். இறுதிப்போட்டிக்கு வருவேன்னு நினைக்கல. என் தப்பைலாம் மன்னிச்சு இவ்ளோ தூரம் கூட்டிட்டு வந்திருக்கீங்க. வெளில வந்தும் உங்ககூட நிறைய பேசுவேன்.”

Bigg Boss Oct 5

நால்வரையும் பியூட்டி பார்லரில் இருந்து வந்து அழகுபடுத்தினர். ஃபோட்டோ செஷன் நடந்தது.

எதிர்பாராதது என்ன கிடைத்தது?

கமல் அகம் டிவி வழியே வந்தார். ”இன்னும் ஒருநாள். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பேன் அடிக்கடி. அப்படி நீங்கள் எதிர்பாராத எது உங்களுக்குக் கிடைத்தது?” என்று கேட்டார்.

முகின்: Self Discovery. நாம, “இதுதான் நான்’னு நினைச்சிருப்போம். அது இல்ல் நீ- அப்டினு சொல்லிக்குடுத்தது இந்த வீடு. பொறுமையைக் கத்துகிட்டேன். முன்கோபமும், அவசரத்தன்மையையும் இழக்கணும்னு நினைக்கறேன்.”

ஷெரின்: “நான் எதிர்பார்க்காத ஒண்ணு, நான் இவ்ளோ அழுவேன்னு நானே எதிர்பார்க்கல. போட்டுக் காட்டினப்ப இவ்ளோ அழுதிருக்கேனான்னு தோணிச்சு. நேரத்துல எழுந்திருக்கறது நல்ல பழக்கம். அது இங்க வந்து பழகிருக்கேன். வெளில ஒருவேலையும் செய்ய மாட்டேன். இங்க நிறைய வேலை செஞ்சேன். அதுனால கிடைக்கற மகிழ்ச்சியை அனுபவிச்சேன். கோபத்தையும், எதிர்பார்ப்பையும் விடணும்னு நெனைக்கறேன்.”

Bigg Boss Oct 5

லாஸ்லியா: “யார்னே தெரியாத 16 பேர்கூட நான் கனெக்ட் ஆனது ஆச்சர்யம். அறிமுகமில்லாதவங்ககிட்ட நாம பழகி கனெக்ட் ஆகலாம்றது நான் எதிர்பார்க்காதது. நான் ஃபைனல்ஸ் வருவேன்றதுகூட நான் எதிர்பார்க்கல. யோசிக்காம கோபத்துல பேசிடுவேன். அந்த விஷயத்தை மாத்தணும்னு நினைக்கறேன். இங்க இருந்து கத்துகிட்டது, நான் முன்னிலைல இருக்கணும்னு நினைக்காம, மத்தவங்களுக்கும் சப்போர்ட் பண்றது.”

சாண்டி: குடும்பத்தோட நேரம் செலவழிக்கணும்கறதக் கத்துகிட்டேன்.வெளில போனா குடும்பத்தைத் தாங்குவேன். அப்பறம் நான் இவ்ளோ எமோஷனால அழுமூஞ்சி கேரக்டர்னு இங்க வந்துதான் தெரிஞ்சது. எனக்கும் கவினுக்கும் நடந்த இடைவெளிய எதிர்பார்க்கல.

சாண்டி ப்யூட்டிஷியன்ஸ் வந்து செய்த விஷயங்களைக் கிண்டலாகக் குறிப்பிட்டார். ”பெடிகிரினு காலைக் கழுவிட்டு சட்னு வராம ஒன்னரை மணிநேரம் பண்ணினாங்க. ப்யூட்டி பார்லர் போனா ஒருநாள் பண்ணுவாங்க போல” என்றார்.

Bigg Boss Oct 5

லாஸ்லியாவிடம் 104 நாட்களை செய்தியாக வாசிக்கச் சொன்னார் கமல். அவரும் “வணக்கம். பிக் பாஸ் செய்திகளுக்காக லாஸ்லியா மரியநேசன்” என்று ஆரம்பித்து வாசித்தார்.

சாண்டி அவராக ஒரு நிகழ்ச்சி நடத்தினார். வீட்டில் இவர்கள் இல்லாமல் வேறு சிலர் வின்னரானால் என்ன பேசுவார்கள் என்று நடித்துக் காட்டினார்.

சேரனாக நடித்தார். “இவங்ககூட எப்டி போட்டிபோடப்போறேன்னு நினைச்சேன். அமைதியா இருந்தேன். அல்வா மாதிரி ஒரு சண்டை நடந்துச்சு. அந்த சண்டை முடிஞ்சதும் ஒவ்வொருத்தர்கிட்டயும் தனித்தனியா பேசினேன். பெரிய சண்டை ஒண்ணு நடந்தப்ப வெண்டக்கா நறுக்கிட்டிருந்தேன். லாஸ்லியாவுக்கும் எனக்குமான பாசம் வீட்டைப் போலவே வெளிலயும் தொடரும்.”

Bigg Boss Oct 5

அடுத்து வனிதா வேடம்: வனிதாவாக மாறியதும் சாண்டி, கப்பைபப் பிடுங்கிக் கொண்டார். எல்லாரும் சிரிக்க “யூ ஷட் அப். எனக்குக் கத்திப் பேசவே தெரியாது. வர்றப்பவே என் நெத்தில டைட்டில் வின்னர்னு எழுதிருந்தது. நான் எவ்ளோ பொறுமையானவள்னு என் மனசாட்சிக்குத் தெரியும். பக்கத்துவீட்டு சேச்சிக்குத் தெரியும். எதிர்வீட்டு ஆச்சிக்குத் தெரியும். அங்க உட்கார்ந்திட்டிருக்கற சாக்‌ஷிக்கும் தெரியும். சண்டைனு நான் யார்ட்டயும் போட்டதில்லை. நான் ஒரு சமாதானப் புறா. சமாதானப் புறான்னா வனிதா. வனிதான்னா.. வனி -தா. இந்தக் கப்பை எனக்குத்-தா. அதான் அப்டி பேர் வெச்சிருக்காங்க. நான் ஒரு அயர்ன் லேடி. போல்டு லேடி. மறுபடி வீட்டுக்கு வந்தேன். வந்து அங்கங்க கொளுத்திப்போட்டேன் அதான் கப் என்னைச் சுத்திச் சுத்தி வந்திருக்கு.”

அடுத்து மோகன் வைத்யாவாக நடித்துக் காட்டினார். “கப்பை வாங்கியதும் அழுது கீழே விழுந்து உருண்டு கும்பிட்டார். பிறகு மீராவாகப் பேசினார். “இந்த கப் ஒண்ணும் பெரிசில்ல. எல்லாருக்கும் சிக்ஸ் சென்ஸ் இருக்கு. எனக்கு 14 சென்ஸ் இருக்கு. அதான் ஜெயிச்சிருக்கேன்.”

கமல் சாண்டியைப் பாராட்டினார். “ஏன் அடக்கி வாசிக்கறீங்க? தமாஷ்தானே?” என்றார்.

Bigg Boss Oct 5

ஷெரினுக்கு ஒரு புகைப்பட கொலாஜைக் காட்டினார். இடது பக்கம் ஆரம்ப நாட்களில் இருந்த குண்டு ஷெரினும், வலது பக்கம் ஸ்லிம்மான ஷெரினுமாக அந்த ஃபோட்டோ இருந்தது.

”இவ்ளோ உங்களை மக்கள் கவனிக்கறாங்க. நீங்க நிறைய க்ளிப்பிங்ஸ் போட்டப்ப இந்த மாற்றத்தை கவனிச்சிருக்கேன்.” என்றார் ஷெரின். முகின் அரங்கிலிருப்பவர்கள் கேட்டதற்கிணங்க ‘சத்தியமா நான் சொல்லுறேண்டி” பாடலைப் பாடினார்.

வழக்கமா இன்னைக்கே ஒருத்தரை மேடைக்குக் கூப்டு வெளில அனுப்பணும். ஆனா இன்னைக்கு அது வேணாம்னு தோணுது. இன்னும் ஒருநாள்தானே. இப்டியே ஜாலியா இருங்க” என்று விடைபெற்றார் கமல்.

இன்று ஃபைனல்!

அரங்கில் அனைவரும் கைதட்ட முகினுக்கு வெற்றி மகுடம் சூடப்பட்டது. சாண்டிக்கு இரண்டாமிடம்.. அதாம்ப்பா ரன்னர். லாஸ்லியா மூன்றாமிடம்.

Bigg Boss Oct 5

இதுதான் லட்சுமியக்காவுக்கு வந்த தகவல். ‘தர்ஷன் முகின் ரெண்டு பேர்ல ஒருத்தன் ஜெயிக்கணும்” என்று சொன்ன சாண்டியின் வாக்கை ஜெயிக்க வைத்ததே சாண்டிக்கும் வெற்றிதான்!

Bigg Boss Trivia

UK சீசன் ஒன்றில் எவிக்ட் ஆன போட்டியாளருக்கு 24 மணி நேர ஸ்பெஷல் சீக்ரெட் ரூம் கொடுக்கப்பட்டது. அதென்ன ஸ்பெஷல் சீக்ரெட் ரூம்?

வழக்கமாக சீக்ரெட் ரூமில் ஒரு தொலைக்காட்சி வைக்கப்பட்டு, வீட்டினுள் நடப்பவை ஒளிபரப்பப்படும் அல்லவா? இதில் நான்கைந்து தொலைக்காட்சிகள் இருக்கும். அதைவிட முக்கியம் ஒரு அட்வைஸர் குரல் அவ்வப்போது ஒலிக்கும். அந்த அட்வைஸர் “இப்போ மூணாவது டிவிய மட்டும் சவுண்ட் வெச்சுப் பார். பாக்கி இருக்கறதை விட்டுரு. இதுல இவங்க உன்னைப் பத்திப் பேசறாங்க பாரு. கேட்டுட்டியா. ஆனா இவங்க மோசமில்ல. அன்னைக்கு இவனுக்கும் உனக்கும் சண்டை நடந்தப்ப என்ன ஆச்சுன்னா” என்று அந்தப் போட்டியாளர் உள்ளே இருந்தபோது நடந்து கொண்ட விதம், எதனால் எவிக்ட் ஆனார், இனி மீண்டும் உள்ளே போய் என்னென்ன தவறுகளை செய்யக்கூடாது என்றெல்லாம் அட்வைஸ் செய்வார். அதைக் கேட்டு விளையாடி ஜெயிக்கவேண்டியது அவரின் சாமர்த்தியம்!