கேப்டன்சி போட்டியில் வனிதா விட்டுக்கொடுத்தார். அது ஏன் என்பதைக் கீழே படித்துக்கொள்ளுங்கள். சேரன் இன்றைய நிகழ்வுகள் முழுவதையும் ரகசிய அறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எல்லாவற்றையும் கூலாகப் பார்த்துக் கொண்டிருந்தவர், ஒரு விஷயத்துக்கு மட்டும் கோபப்பட்டார். அதுவும் என்னவென்று படிக்கும்போது உங்களுக்குத் தெரியும்!

தப்பு பிக்பாஸ்… தப்பு!

“எனக்குப் புரியல. சீரியஸா புரியல. என்னய்யா நடக்குது. கம்பேரிசன்ல சேரன் அண்ணா ஏன் பின்னாடி போனாங்க” என்று வனிதா ஷெரினிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.

’கவின்தான் போயிருக்கணும்” என்றார் ஷெரின்.

Bigg Boss Sept 9

மீண்டும் தன் லவுட் ஸ்பீக்கரை ஆன் செய்தார் வனி. “இந்த வீட்ல கவின் என்ன பண்றான். சேரன் அண்ணா என்னென்ன பண்ணிட்டிருந்தாருனு தெரியும். மக்கள் கவின் இருக்கணும்னு நினைக்கறாங்கன்னா புரியலயே. அப்போ கேமரா முன்னாடி நடிச்சா மக்கள் ஓட்டுப் போடுவாங்களா?” என்றவர் கொஞ்ச நேரம் கழித்து பாசமலர் டிவிடியை ஆன் செய்தார். “அவர் எனக்கு அண்ணா மாதிரி, அப்பா மாதிரி… அவர் இருந்தப்ப எனக்கு சப்போர்ட்டா ஒருத்தர் இருக்கார்னு நம்பிக்கை இருந்தது. இப்ப தனிச்சு விடப்பட்ட மாதிரி இருக்கு” என்று கரகரத்தார்.

வனிதா எது செய்தாலும் எனக்கு அது நடிப்பாகத்தான் தெரிகிறது. உண்மை இருக்கலாம். வனிதாவுக்கான ரசிகர்கள் இதை நம்பலாம். ஆனால் அவரிடம் மனிதத்தன்மையோ சக மனிதரை மனிதராய்ப் பார்க்கும் குறைந்தபட்ச அறமோ அதிகமாகக் காணப்படவில்லை. இதுநாள் வரை அவர் செய்ததெல்லாம் அவர் நலன் சார்ந்தே இருக்கின்றன. ஒருவேளை அவர் சில விஷயங்களில் நல்லவராக இருந்தாலும் அதற்கான கிரெடிட் தனக்கேதான் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே இருக்கிறார். அதனால் ஐ அம் ஸாரி!

பாய்ஸ் கேங் அதே சிகப்புக் குட்டிச்சுவரில் சாக்‌ஷியை, சேரனை விமர்சித்துக் கொண்டிருந்தனர். ஷெரின், வெளியேற்றத்திலிருந்து காப்பாற்றப்பட்டதற்கு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

Bigg Boss Sept 9

போட்டிக்கான நேரம்

பிக் பாஸ் வீட்டில் 78ம் நாள். சேரன் எல்லாவற்றையும் ரகசிய அறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். தலைமைப் பதவிக்கு தான் போட்டியிடவில்லை என்று கேட்டுக்கொண்டார் வனிதா. ‘அப்டிலாம் முடியாது’ என்று முரண்டு பிடித்தார் பிக் பாஸ். “போட்டி போட்டுத்தான் ஆகணும்” என்றார்.

மூன்று வண்ண திரவம் ஊற்றப்பட்ட கண்ணாடிக் கிண்ணத்தை இரு கைகளிலும் பிடித்து கால்களை நாற்காலியில் உட்கார்ந்தது போன்ற பொசிஷனில் நிற்க வேண்டும். வனிதா ஒரே செகண்டில் “நான் விட்டுக்குடுக்கறேன்” என்று போட்டியிலிருந்து விலகினார். அடுத்த சில நொடிகளில் “கால் வலிக்குது” என்று தர்ஷனும் விலகினார். லாஸ்லியா ஜெயிக்க, அவர் தர்ஷனிடம் “இப்டி ஒரு வெற்றி எனக்கு வேண்டாம்” என்றார். ஷெரின் தர்ஷனிடம “நீ விட்டுக்குடுத்துதான் லாஸ்லியா ஜெயிக்கணுமா? நீ என்ன ப்ரூவ் பண்ண நினைக்கற? நீ பண்ணினது தப்பு” என்றார். தர்ஷன் இடத்தில் நான் இருந்திருந்தால் “அப்ப வனிதாக்கா எனக்குப் பண்ணினதும் தப்புதானே. அவங்க விட்டுக்குடுத்து நாங்க ஜெயிக்கணுமா?” என்று அங்கேயே சண்டை பிடித்திருப்பேன். தர்ஷன் அப்படிச் செய்யவில்லை. “கால்வலி. அதான் வந்துட்டேன்” என்றார்.

Bigg Boss Sept 9

சேரன் இதையெல்லாம் ’கரெக்ட் கரெக்ட்’ என்ற தலையாட்டலோடு பார்த்துக் கொண்டிருந்தார். மீண்டும் லாஸ்லியா வந்து “வனிதாக்கா விட்டுக்கொடுத்தா உனக்கு வேணாம். ஆனா நீ விட்டுக்குடுத்து நான் வாங்கிக்கணுமா?” என்று கேட்க தர்ஷன் “ச்சேச்சே.. கால் வலி. அதுனாலதான்” என்றார்.

லாஸ்லியா மீண்டும் வாதிட “உன்னால சிலதெல்லாம் பண்ண முடியாதுனு வீட்ல பேசிட்டிருக்காங்க. கேப்டன் ஆகி அதெல்லாம் பண்ணி விளையாட்ட கவனி” என்றார் தர்ஷன். “அவன் விட்டுக்கொடுக்கல அவன் முட்டில வலி. முட்டியோட ஃப்ரெண்ட் கப் சுத்தி பின்னாடி வந்துருச்சு” என்றார் சாண்டி.

வனிதாவின் கேம் ப்ளான்

மீண்டும் வனிதா ரசிகர்கள் கோபப்படுகிற ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். வனிதா விட்டுக்கொடுக்கவெல்லாம் இல்லை. இது இந்த வாரம், வனிதாவின் ஸ்ட்ராட்டஜி. விரிவாகச் சொல்கிறேன் பாருங்கள்.

Bigg Boss Sept 9

சென்ற வாரத்துக்கு முந்தைய வாரம் முழுவதும் அமைதியாகவேதான் நடந்துகொண்டார் வனிதா. அது எவிக்‌ஷன் வாரம். (பொய்யான எவிக்‌ஷன்தான்.) அதற்கடுத்து சென்ற வாரம் தலைவர் ஆனதும் ஆடாத ஆட்டம் ஆடினார். இந்த வாரம் தலைவரானால்தான் நாமினேஷனில் இருந்து தப்பிக்க முடியும். அதற்காகவே பெஸ்ட் பெர்ஃபார்மராக தன்னைத்தானே சொல்லிக்கொண்டார். அது பாதி கிணறு. இன்னொரு பாதி கிணறு தாண்டுவது தலைவருக்கான போட்டியில் ஜெயிப்பது.

ஆனால் அதற்கு முன்பாக தானே தன்னை பெஸ்ட் பெர்ஃபார்மர் என்று சொல்லிக்கொண்டது பற்றி கமல் கேட்டதும் சனி – ஞாயிறு எபிசோடில் ஆடியன்ஸ் அப்ளாஸும் அவருக்கு எதிராக மக்கள் மனநிலை இருக்கிறது என்பதை அறிந்து கொண்டார். ஷெரினுடன் தான் போட்ட சண்டைதான் அதற்கு முக்கியக் காரணம் என்பதையும் அவர் அறிவார்.

இவற்றிலிருந்து தப்பித்து மக்கள் ஓட்டை வாங்கவே இந்த நாடகமெல்லாம். அதனால்தான் “போறேன்” என்று சொல்லாமல் “எப்படியும் நாமினேட் பண்ணுவாங்க. மக்கள் என்னைப் புரிஞ்சுட்டு ஓட்டுப் போட்டா இருக்கேன். இல்லைன்னா போறேன்” என்கிறார். இல்லின்னா போய்த்தானே ஆகணும்!

Bigg Boss Sept 9

தலைவி பராக்

தலைவி ஆனார் லாஸ்லியா. லட்சம்கோடி பெறுமானமுள்ள கூல்டிரிங்ஸ் இருக்கும் கூலர் சாவி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அணிகளைப் பிரிக்கச் சொன்னார் பிக் பாஸ். “அணினு எதும் இல்லை. எல்லாரும் எல்லா வேலையும் செய்யணும். எல்லாருக்கும் எல்லாரும் ஹெல்ப் பண்ணணும்” என்று கடமையை சமமாக்கினார்.

தர்ஷன் தான் ஏன் அப்படிச் செய்தேன் என்று லாஸ்லியாவிடம் சொன்னார். “நான் இந்த வாரம் தப்பிச்சுருவேன்னு தோணிச்சு. இல்லைன்னா நான் தலைவர் ஆகிருப்பேன். வனிதாக்கா உன்னை சின்னப் பொண்ணு, சிலதெல்லாம் உன்னால முடியாதுன்னாங்க. அது இல்லைனு நிரூபிக்க உனக்கு ஒரு வாய்ப்பு. அத யூஸ் பண்ணிக்கோ அவ்ளவுதான். நான் விட்டுக்கொடுத்தேன்னு நினைச்சுட்டே இருக்காதே” என்றார்.

ஒரே நேஷன் இரண்டே நாமினேஷன்

எல்லாரும் நாமினேஷன் செய்யும் நாள் இது. இப்போது வீட்டில் ஏழே பேர்தான். ஆளுக்கு இரண்டு பேரை நாமினேட் செய்ய வேண்டும் என்பது சவாலான விஷயம்தான். லாஸ்லியா கேப்டனாக இருப்பதால் அவரை நாமினேட் செய்ய முடியாது. தன்னைத் தாங்களேவும் நாமினேட் செய்துகொள்ள முடியாது. ஆக, பாக்கி ஐந்து பேரில் இரண்டு பேரைச் சொல்ல வேண்டும் என்பதால் மிகவுமே சவால்தான்!

வனிதா: தர்ஷன் & ஷெரினைச் சொன்னார்.

தர்ஷன் – கமல் சொன்னா அவன் மைண்டுக்கு ஏறுது. சொல்புத்திதான். சுய புத்தி இல்லை. ஒரிஜினாலிடி அவன்கிட்ட கண்டிப்பா இல்லை.

ஷெரின் – ஃப்ரெண்ட்ஷிப்புக்கு அர்த்தம் தெரிஞ்சவங்களுக்கு நான் ஏன் சொல்றேன்னு தெரியும். அவ ஒவ்வொருக்காவும் ஒவ்வொரு விதமா நடந்துக்கறா.

Bigg Boss Sept 9

ஷெரின்: வனிதா & சாண்டியைச் சொன்னார்.

வனிதா – என்னோட, தர்ஷனோட உறவைக் கொச்சைப்படுத்திட்டாங்க.

சாண்டி – பாக்கி எல்லாரும் என்னை ஏதோ ஒரு விதத்துல எனக்கு ஆறுதலா இருந்திருக்காங்க. அதுனால சாண்டிய சொல்ல வேண்டியதா இருக்கு.

கவின்: வனிதா & ஷெரின்

வனிதா, கடைசி வாரம் முழுதும் அவர் செய்தவை காயப்படுத்தின. ஷெரின், சாக்‌ஷியிடம் பேசும்போது “தர்ஷன் தான் என்கிட்ட வந்து வந்து பேசறான்’னு சொன்னாங்க. அது நியாயமாப்படலை. அதுனால ஷெரினைச் சொல்றேன்.

தர்ஷன்: வனிதா & சாண்டி.

வனிதாக்காவைச் சொல்ல நிறைய காரணம் இருக்கு. அடுத்தவங்க விஷயத்துல மூக்கை நுழைச்சு நிறைய தப்பு பண்றாங்க.

அடுத்து சாண்டி. காரணம் அவர் கடுமையான போட்டியாளர்.

லாஸ்லியா: வனிதா & ஷெரின்.

வனிதாக்கா நடந்துக்கறது எல்லாரையும் காயப்படுத்துது. ஷெரின் பேசின ஒரு விஷயம் முன்னுக்குப் பின் முரணா இருக்கு.

சாண்டி: வனிதா மற்றும் ஷெரினைச் சொன்னார்.

வனிதாக்கு எல்லாரும் காரணம் சொல்லிருப்பாங்க. முக்கியமா யாரையும் பேசவே விடறதில்லை.

ஷெரின், எந்தக் காரணமும் இல்லை. கடுமையான போட்டியாளரா இருக்காங்க. அவ்வளவுதான்.

முகின்: வனிதா மற்றும் தர்ஷனைச் சொன்னார்.

வனிதாக்காவுக்கு பேச்சுவார்த்தையே இல்லை. எல்லாம் வாக்குவாதம்தான்.

அடுத்து தர்ஷன், தலைமைப் போட்டியப்ப டக்னு விட்டுக்குடுத்தது பிடிக்கல.

Bigg Boss Sept 9

கவின் மோசமான பெர்ஃபார்மர் என்பதால் ஏற்கெனவே நேரடியாக நாமினேட் செய்யப்பட்டிருந்தார். ஆக இந்த வாரம் கவின், வனிதா, ஷெரின், தர்ஷன், சாண்டி ஐவரும் நாமினேஷனில் இருக்கிறார்கள். லாஸ்லியாவும் முகினையும் தவிர எல்லாரும் பார்டரில்!

இதில் வனிதாதான் வேற லெவல். மொத்தம் ஆறு ஓட்டு வாங்கினார். நானும் ஏழு பேர் இருக்காங்களே… இன்னொரு ஆள் யார் வனிதாவை நாமினேட் செய்யாமல் விட்டது என்று ரொம்ப நேரம் யோசித்தேன். வேறு யாரும் இல்லை, வனிதாவேதான். தனக்குத் தானே நாமினேட் செய்துகொள்ள முடியாது அல்லவா!

ஜாலி விளையாட்டும் கிரில் சிக்கனும்

கவின் படக்கென்று ரிச் கை லுக்கில் கலக்கலாக இருந்தார். முகத்தில் வடிகிற பாலில் ஹவுஸ்மேட்ஸுக்கெல்லாம் ஒருவாரத்துக்கு காபி போடலாம் போல. ஹேய்ய்ய் டக்கால்டி!

அடுத்து கையில் பந்தோடு பாஸிங் விளையாட்டு. இசை நிற்கும்போது பந்து யார் கையில் இருக்கோ அவர்கள் ஒரு டாஸ்க் சீட்டு இருக்கும். அதைப் படித்து அதிலிருப்பதைச் செய்ய வேண்டும். கவின் தலையில் முட்டை உடைத்தல், முழு கிரில் சிக்கனை தர்ஷன் சாப்பிட்டது, கை முழுவதும் முகின் க்ளிப்பை மாட்டிக்கொண்டது, ஒரு லிட்டர் ஐஸ்கிரீமை லாஸ்லியா சாப்பிட்டது என்று ஜாலியும் கேலியுமாகப் போனது அந்த விளையாட்டு.

Bigg Boss Sept 9

78ம் நாள் இரவு 9.40க்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் பிக் பாஸ். “சாப்பிடாதீங்க… சர்ப்ரைஸ் ஒண்ணு இருக்கு” என்று அறிவித்தார். எல்லாரும் குதித்துக் கும்மாளமிட்டு சந்தோஷப்பட்டனர்.

கவின், லாஸ்லியாவுக்கு பிராக்கெட் போட்டார். ’சொல்லிறேன்… சொல்லிறேன்’ என்று ஏதோ கெஞ்சிக் கொண்டிருந்தார். லாஸ்லியா வீட்டுக்குள்ளே இதைப் பேசமாட்டேன் என்றார். ஆனால் லாஸ்லியா முகத்தில் கோடி சூர்யப் பிரகாச வெட்கம் இருந்தது. கவின் செய்வது சரியான சில்லறைத்தனம் என்று தோன்றியது. ஒழுங்காக லாஸ்லியாவை கேப்டன்சியையும் செய்ய விடாமல் அவர் மனதைக் கலைக்கும் செயல் இது.

ரகசிய அறையில் இருந்து சேரன் இதைக் கோபக்கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தார். ”வீட்டுக்குள்ள இதைப் பேசமாட்டோம்னு சொன்னாங்க. இப்ப கவின் இதைப் பேசறது, அவங்களைப் பேசவெச்சு ஆடியன்ஸ் ஓட்டு வாங்கறதுக்கு. ஆடியன்ஸ் இத கவனிக்கணும்” என்றார்.

Bigg Boss Sept 9

10.35க்கு கிரில் சிக்கன் அனுப்பினார் பிக் பாஸ். எல்லாரும் வாய் நிறைய புன்னகையோடு அதைச் சாப்பிட குட்நைட் சொன்னார் பிக் பாஸ்.

Bigg Boss Trivia

லண்டனில் டீன் பிக் பிரதர் எடிஷன் வந்திருக்கிறதென்பதை நேற்று இந்தப் பகுதியில் சொன்னேன். அது ஒரு சீஸனோடு நின்றது. ஆனால் ஃபிலிப்பைன்ஸ் பிக் பிரதரில் டீன் எடிஷன் ஹிட்டடித்தது. 2006ல் டீன் எடிஷன் ஆரம்பித்தது 14 முதல் 19 வரையிலான டீனேஜ் போட்டியாளர்கள் மட்டும் பங்கேற்றனர். 42 நாட்கள். பிறகு 2008ல் டீன் எடிஷன் ப்ளஸ் என்று அடுத்த சீசன் எடுத்தார்கள். அதை 77 நாட்கள் நீட்டித்து அதுவும் ஓரளவுக்கு பேசப்பட்டது. பிறகு டீன் க்ளாஷ், டீன் சீசன் 4 என்று இரண்டு வருடத்துக்கொருமுறை டீனேஜ் வெர்ஷனை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பசங்க பிக் பாஸூ!