ஒரு வழியாக நல்லபடியாக முடிவுற்றது பிக் பாஸ் சீசன் 3. யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நிகழ்ச்சி ஹிட்தான். ‘பிக் பாஸ்லாம் எவன் பார்க்கறான்’ என்று பார்க்காதவர்கள் உட்பட பேசி, பிக் பாஸ் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டதுதான். காரணம் நமக்கு அடிப்படையிலேயே இருக்கும் ‘அடுத்த வீட்ல என்ன நடக்குது’, ‘அடுத்தவன் குடும்பத்துல என்ன நடக்குது’ என்பதைக் கேட்கும் மனோபாவம். சிலர் அதிலிருந்து கற்றுக்கொள்ள கேட்கலாம். சிலர் புரணி பேசக் கேட்கலாம்.

இந்த நிகழ்ச்சிக்கு என்றில்லை, எந்த நிகழ்ச்சிக்கும் அடிக்ட் ஆகி ரொம்பவும் அதைப் பற்றிப் பேசி மாயவேண்டியதில்லை. பாட்டு, காமெடி என்று எல்லா நிகழ்ச்சிகளிலும் உணர்ச்சித்தூவல்கள் இருக்கின்றனதான். அதை உணர்ச்சி ஊழல் என்றே குறிப்பிட்டிருக்கிறேன். அவற்றை நாம் எந்த அளவில் எடுத்துக்கொள்கிறோம் என்பதில்தான் சூட்சுமம் இருக்கிறது.

வில்லனால்தான் ஹீரோ ஜெயிக்கிறான் என்பார்கள். அப்படி இதில் வனிதா. அவரது நிஜ குணமே அப்படி பட் பட்டென்று பேசும் குணம் என்பதால் அது வீட்டிலும் எதிரொலித்து அவருக்கு செய்கூலி அதிகரித்து வீட்டில் பல சேதாரங்களை விளைவித்தன.

Bigg Boss

ஒரு நிகழ்ச்சியை அப்படியே எழுதும்போது எனக்குத் தோன்றியதையும் எழுதினேன். அனுமதித்த டைம் பாஸ் தளத்துக்கு நன்றி. சில வாசகர்கள் கமெண்டில் “நீங்க கவின் ஆர்மியா.. லாஸ்லியா ஆர்மியா.. வனிதாவத் திட்டாதீங்க” என்றெல்லாம் கோபப்படுகின்றனர். ‘கொஞ்சம் நடுநிலையாக எழுதுங்க ஸாரோ’ என்றும் ஒருவர் சொல்லியிருந்தார். இன்னொருவர் “உன் கருத்தை யாரு கேட்டா? என்ன நடந்துச்சோ அதை எழுது” என்றிருந்தார்.

எதற்கும் நம் கருத்து என்ற ஒன்றில்லாமல் அணுக முடியாது. இயந்திரங்களும், பொருட்களும்தான் உள்ளதை உள்ளபடி காட்டும். ஒரு கண்ணாடியில் ஒரு காரைக் காண்பித்தால், அந்தக் கண்ணாடி அப்படியே பிரதிபலிக்கும். மனிதனிடம் காண்பித்து “எதையும் நினைக்காமப் பார்த்ததச் சொல்லு” என்று சொல்ல முடியாது. என்னிடம் என் தோழி ஒரு டிரஸ்ஸைக் காண்பித்தால் “என்னடி கேவலமான கலர் இது” என்றோ “நல்லாருக்குடி டிசைன்” என்றோ அதற்கான என்னுடைய கமெண்டோடுதான் என் பார்வையும் இருக்கும். நாம் எல்லாருமே அப்படித்தானே?

அதேபோல நடுநிலை என்பது ஒரு மாயை. வெறும் பிம்பம்தான் அது. ஒரு விஷயம் நடக்கும்போது இரு பக்க உரையாடல்களை வைத்து / நமக்குக் காண்பிக்கப்படும் காட்சிகளைப் பார்த்து எனக்குத் தோன்றும் கருத்துகளை எழுதுகிறேன். 106 நாட்களிலும் கவினை, சாண்டியை, லாஸ்லியாவை என்று யாரையும் விட்டுவைத்ததில்லை. கமெண்ட் அடித்துக் கண்டிக்கவும் செய்திருக்கிறேன். நமக்குக் காண்பிக்கப்படும் காட்சிகளின் அடிப்படையில், வனிதா மட்டும் ஓவராக கத்துபவராகக் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ”இல்லை, அவர் ரொம்ப நல்லவர் தெரியுமா?” என்று எப்படி எழுத முடியும். அதே போல கவின் லாஸ்லியா மனதைக் கரைக்கிறார் என்பது உண்மைதான். அதற்கு திட்ட வேண்டியது லாஸ்லியாவைத்தான். கவின் இந்த மாதிரி ஸ்வீட் நத்திங்ஸ் பேசி மயக்கும் ஆணின் பிரதிநிதி, லாஸ்லியா இதை நம்பி ஏமாறும் பெண்ணின் பிரதிநிதி என்றுகூடத்தான் எழுதியிருக்கிறேன்.

Losliya and Kavin

இனி சில ஷேரிங்ஸ்…

லட்சுமியக்காவிடம் ஒரு பிரச்னை என்னவென்றால் என்னிடம் பேசுவதுபோல அவராக யாரிடமும் உரிமையாகப் பேசமாட்டார். அவர்களாக அழைத்துப் பேசினால்தான் உண்டு. சில விஷயங்களை பிக் பாஸிடமே கேட்கச் சொல்லியும் மறுத்தவர், பிறகு பேசினார். மதுமிதா விஷயத்தில் நடந்ததை அவரிடம் கேட்டேன்.

”அன்னைக்கு ஹலோ ஆப்-க்காக ஒவ்வொருத்தங்களையும் பேசச் சொன்னாங்கள்ல.. அப்ப காவேரி தண்ணிய கர்நாடகா விடலை’ங்கறதை வெச்சு ஒரு வரி சொல்லிருக்காங்க. நெஜம்மாவே ரொம்ப கடுமையாலாம் சொல்லல. ஆனாலும் அது வேண்டாமேனு சிலர் சொல்லிருக்காங்க. இன, மத, மொழி பிரச்னைகளைலாம் பொதுவா இந்த மாதிரி நிகழ்ச்சிகள்ல அனுமதிகக்றதும் இல்ல. இப்ப உள்ளேயே நான் பி.ஜே,பி, நான் காங்கிரஸ்னு சண்டை போட்டுக்க முடியுமா? முடியாதுதானே.

அப்போதைக்கு முடிஞ்ச இந்த பிரச்னை.. அப்பறமா பெரிசாகிடுச்சு. மதுமிதா பேசறத நீ கேட்டிருக்கில்ல ஸாரோ? கத்திக் கத்தி பேசி சண்டை போடறது, கிண்டலா அவங்களைப் பேசறதுனு ரொம்ப ஓவரா போகவும் பிக் பாஸ் தலையிட்டு.. ‘கம்னு போய்ப் படுங்க. கண்டெண்ட் தர்றதா நெனைச்சு ஓவராப் போறீங்க. நீங்க பேசறது எதையும் ஒரு நொடிகூட ஒளிபரப்ப மாட்டோம்’னிருக்கார்.

மதுமிதா

அவரு சொன்னது இந்தப் பிரச்னைய முடிங்கடா அப்டிங்கற பொருள்ல. ஆனா மதுமிதாவுக்கு எதிர்கோஷ்டி இதான் சாக்குன்னு ‘அவரே நீ பண்றதெல்லாம் சரியில்லைனு சொல்ட்டாரு. ஒளிபரப்ப மாட்டேன்னுட்டார்’னெல்லாம் ஏத்திவிட மதுமிதா கடுப்பாகி கையக் கிழிச்சிக்கிட்டாங்க. பிக் பாஸ் விதிகளின்படி இது உச்சபட்ச குற்றம். சம்பளத்தைக் கூட மறுக்கலாம். அதுனால வெளில அனுப்பிட்டாங்க. சம்பளத்தத் தரோம்.. கம்னு இருப்போம்’னும் சொல்ட்டாங்க.

ஆனாலும் மதுமிதாவுக்கு மனசு ஆறல. என்னை தப்பா காமிச்சுட்டாங்கனு வெளில புலம்பிட்டே இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். அதான் வர்லியாம்.”

“சரி.. சரவணன்?”

“சரவணன் ‘சின்ன வயசுல பஸ்ல பொண்ணுகளை உரசிருக்கேன்’னு சொன்னார்ல? அதான் பிரச்னை ஆச்சுனு உனக்குத் தெரியும்தானே ஸாரோ?”

”அது தெரியும். அதை ஏன் ரெண்டு வாரம் கழிச்சு அனுப்பிச்சாங்க?”

“இவங்க ஒளிபரப்பற எபிசோட்லாம் எண்டமோல் நிறுவனத்துக்கு அனுப்புவாங்க. மொழிபெயர்த்து, சப்டைட்டிலோட. அப்டி அந்த எபிசோட் பார்த்தவங்களுக்கு பயங்கர அதிர்ச்சி. ஏன்னா பொண்ணுகளை அவங்க அனுமதியில்லாம உரசினேன்னு சரவணன் சொன்னதெல்லாம் மிகப்பெரிய குற்றமா பாக்கணும். அத அப்டித்தான் அங்க பார்க்கறாங்க. அதை ஒளிபரப்பி சிரிச்சுட்டிருந்தீங்களா?’ அப்டினு அங்க இருந்து நாலஞ்சு பேர் சேன்லுக்கே கெள்ம்பி வந்து ‘உடனே அவரைக் கூப்டு மன்னிப்பு கேட்கச் சொல்லி வெளில அனுப்புங்க. இல்லைன்னா எல்லாம் கேன்சல்’னு சொல்லிட்டாங்க. அதான் அவர அனுப்பினாங்க. அவருக்கு இந்த காண்ட்ராக்ட் கேன்சல் ஆனதால எதுக்கும் வர்ல.”

நன்றி சொன்னேன் லட்சுமியக்காக்கு. இனி சிலரின் கேள்விகளுக்கு பதில்கள்..

அருண்: கவினுக்கு ஏன் அவ்வளவு ஓட்டு?

கவின்

கவின் ஒன்றும் மோசமானவரில்லை. ஆரம்பத்தில் அவர் தன் சீரியலில் வருவது போல நால்வரிடம் Flirt செய்தார். இதை அவரே சொன்னார். சாக்‌ஷிக்கு அவர் செய்தது கொஞ்சம் ஏமாற்றம்தான். ஆனால் சாக்‌ஷியும் ‘வெளில போனா அவன் யார்னே கண்டுக்க மாட்டேன்’ டைப்பில் ஒரு டயலாக் சொல்லியிருந்தார். இந்தத் தருணத்தில் லாஸ்லியாவின் குணம் அவருக்குப் பிடித்துப் போக அந்தப் பக்கம் சாய்ந்துவிட்டார். இதுல என்ன இருக்கு’ என்று நினைக்கிற ஒரு பெரிய கும்பல் அவருக்கு ஓட்டுப் போட்டிருக்கிறது. ‘இதெல்லாம் தப்பு’ என்று நினைக்கிறவர்கள் என்ன செய்ய வேண்டும்? கவினை வெளியேற்ற நினைத்து வேறு யாருக்காவது அதிக ஓட்டுகளைக் கொடுத்திருக்க வேண்டும். நம் நாட்டில் ‘இந்த அரசியல்வாதிக வேஸ்ட்’ என்று சொல்பவர்கள் தேர்தலன்று வீட்டியில் டிவி பார்த்துக் கொண்டிருப்பார்களே.. அதே கதைதான்.கவினைத் திட்டிய யாருமே அவருக்கு எதிராக ஓட்டு போடவில்லை. ஓட்டுப் போடாமல் இருப்பது கவினை வெளியேற்றும் என்று நினைத்தார்கள். தவறு. கவின் வெளியேற வேண்டுமென்றால் மற்றவர்களுக்கு ஓட்டு அதிகமாக விழ வேண்டும் அல்லவா? யாருக்குமே ஓட்டு போடாவிட்டால் கவின் வெளியேறுவாரா என்ன!

பார்வதி: இவங்க வாங்கிட்டுப் போற காசுக்கு வரி உண்டா?

நிச்சயம் உண்டு. வரியைக் கழித்துவிட்டுத்தான் பரிசுப் பணத்தைக் கொடுப்பார்கள். 31.2 சதவிகிதம் வரி.

சாயி: வார இறுதி எபிசோடுக்கு பார்வையாளராகப் போக என்ன வழி?

சேனலில் தெரிந்தவர்கள் மூலம் முயற்சிப்பதுதான் வழி. பொதுவாக எல்லோரையும் அனுமதிப்பதில்லை. செய்தி வெளியில் கசிந்துவிடும் என்பதால்.

அருண்: தர்ஷன் ஏன் வெளியில் வந்தார்?

இதுவும் அன்றைக்குச் சொன்னதுதான். ஓட்டு எண்ணிக்கையில் தர்ஷன் கீழே வந்துவிட்டார். அவன் ஜெயிச்சிருவான்’ என்றே பலரும் நினைத்து ‘அவருக்கு நம் ஆதரவு தேவையில்லை.. எல்லோரும்தான் தர்ஷனை ஆதரிக்கிறார்களே’ என்று நினைத்துவிட்டார்கள். எல்லோருமே அப்படி நினைத்தது அவரது வாக்கு எண்ணிக்கையைக் குறைத்துவிட்டது!

அபி: அடுத்த சீசன்ல வெளி ஆட்கள் உள்ளே போக வாய்ப்பு இருக்குமா?

கேள்வி புரியல அபி. எல்லா சீசன்லயும் வெளி ஆட்கள்தானே வீட்டுக்குள்ள போறாங்க? 🙂 பொதுமக்களை தேர்வு செஞ்சு போட்டியாளரா அனுப்புவீங்களானு கேட்கறீங்களா? லட்சுமியக்காவுக்கு வந்த தகவல் படி, இப்போதைக்கு அந்த ப்ளான் இல்லை. இந்த சீசன்ல லாஸ்லியா, முகின், தர்ஷன் மாதிரி கொஞ்சமாவது அவங்க வட்டத்துல தெரிஞ்ச புதிய ஆட்களைவிடலாம். டிஆர்பி முக்கியம்ங்கறதால நிச்சயமா செலிபிரிட்டிகள்தான் இருப்பாங்க.

இந்த டைம்பாஸ் தளத்துல என்ன எழுதலாம்னு கேட்டதுக்கு எதாவது அடிக்கடி எழுதுங்கன்னிருக்கீங்க. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் திரைமறைவு விஷயங்கள் இருந்தா எழுதச் சொல்லிருக்கீங்க. டைம் பாஸ்தானே பேரு.. டைம் பாஸாகற மாதிரி எதுனாலும் எழுதுங்கன்னிருக்கீங்க. முதல் நாள் முதல் பார்வைனு சினிமா விமர்சனம் போல எழுதச் சொல்லிருக்கீங்க. நான் இல்லாம என் நண்பர்களும் இருக்காங்க. எல்லாருமா எதாவது எழுதிட்டே இருப்போம். மேலும் எதாவது குறிப்பிட்டு வேணும்னா கமெண்ட்ல கேளுங்க. இல்லன்னா நாட்டு நிகழ்வுகள், சினிமா, அரசியல், சீரியல், ரியாலிட்டி ஷோனு எதுல என்ன கேட்கணும்னாலும் கேளுங்க. வாரம் ஒருக்கா கேள்வி பதில் மாதிரி கூட பேசிக்கலாம்.

எங்க போகப்போறோம். உலகம் ரொம்பச் சின்னது. அடிக்கடி பார்ப்போம்.

லவ் யூ ஆல்.