இன்னும் நாலே நாட்கள்; நாலே ஆட்கள். நேற்றைய எபிசோடை இரவு 10.30 வரை மட்டும் காட்டிவிட்டு பிக்பாஸ் குட் நைட் சொன்னார் அல்லவா? அதற்குப் பிறகு டான்ஸ் நடைபெற்றிருக்கிறது. கார்டன் ஏரியாவில் போடப்பட்ட மேடையில் சாண்டி முகின் உட்பட எல்லாருமே ஆடினார்கள். சேரன் ரசித்துப் பார்த்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவரும் வந்து ரெண்டு ஸ்டெப் போட்டார். சாண்டிக்கு கவினும் இல்லை, தர்ஷனும் இல்லை என்பதால் இருக்கும் ஒரே நண்பன் என்று முகினுடன் சேர்ந்து குத்தாட்டம் ஆடினார். வனிதா, ஷெரினுடனான மனஸ்தாபம் காரணமாக கொஞ்சம் மூட் அவுட்டாக அமர்ந்திருந்தார். சாண்டி அவரையும் கைபிடித்துக் கூட்டிவந்து மேடையேற்றி ஆடவைத்தார்.

Housemates

இன்றைய எபிசோடுக்குப் போகும் முன், நால்வர் வரிசையில் இன்று ஷெரினைப் பற்றிப் பார்ப்போம்.

தி ஏஞ்சல்

இந்த சீசனில் உள்ளே போன 16 பேர்களில் அதிக பரிச்சயமும், மக்கள் அபிமானமும் உடையவராக (பங்கேற்பாளர்கள் லிஸ்ட்டை முதலில் பார்த்த கணத்தில்) இவர் இருந்தார். ‘அழகிய அசுரா’ எஃபெக்ட். ஆனால் விளையாட்டு (அல்லது ஷோ) ஆரம்பித்த சில நாட்களில் இவர் கண்டுகொள்ளப்படாமல் ஆகிவிட்டார். முழு கன்ட்ரோலும் பெண்கள் சைடில் வனிதா கையில் இருந்தது. வீட்டுக்கே நாந்தான் அதிபதி என்று அவர் கன்டென்ட் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆண்கள் சைடில் பார்வையாளர்களின் கவனம் சாண்டி மீது இருந்தது. அது கன்ட்ரோலினால் அல்ல, காமெடியினால்!

வனிதாவின் கைப்பாவையாகத்தான் ஷெரின் இருந்தார். அப்போதே என்றேனும் ஒருநாள் இந்த நட்பு உடையும் என்று தோன்றியது. காரணம் வனிதாவின் குணம். அவருக்கு அவரைத் தவிர உலகில் எதுவும் முக்கியமில்லை. ஷெரின் சாக்‌ஷியுடனான தன் நட்பை ஆழமாக நம்பினார். லாஸ்லியா – ஷெரினுக்கு நடந்த ஒரு முட்டல் – மோதல்தான் ஷெரினின் ஆரம்ப கால நெகட்டிவ் தருணங்கள். ஆனால் அப்போதும் தனியே புலம்புவதும், தன் எண்ணத்தை யாரிடமாவது சொல்வதுமாக இருந்தாரே ஒழிய சம்பந்தப்பட்டவரிடம் அதீத சண்டைக்குப் போகவில்லை.

தர்ஷன் – ஷெரின் தருணங்கள்தான் கொஞ்சம் கொஞ்சமாக அவரது ஏஞ்சல் ஸ்தானத்தை உயர்த்தியது. ‘மோகமுள்’ என்று தி.ஜானகிராமன் எழுதிய காலத்துக்கு முன்பிருந்தே இருப்பவைதான் இத்தகைய க்ரஷ்கள். இவற்றை கலாசார முகமூடி போட்டுப் பார்த்து அலறத் தேவையில்லை.

தர்ஷனுக்காக, சப்பாத்தி சுடுவதில் ஆரம்பித்து தர்ஷனுக்கு கடிதம் எழுதுவது வரை வளர்ந்த அந்த உறவு தர்ஷன் வீட்டை விட்டு வெளியேறிப் போன அன்று அழுது அரற்றிய வரை தொடர்ந்தது. கடைசியில் தர்ஷன் போனபின்னும் அவருக்காக கடிதம் எழுதி அனுப்பினார். நேற்று வனிதா இவரது உறவின் காரணமாகவே தர்ஷன் வெளியேறினார் என்று சொன்னபோதும் கலங்கி அழுதார்.

முந்தைய சீசன்களின் ஒப்பீட்டில் முதல் சீசன் நமீதா, இரண்டாம் சீசன் மும்தாஜ் இடத்தில்தான் ஷெரின் வரவழைக்கப்பட்டார். ஆனால் அவர்களைவிட பற்பல மடங்கு சிறப்பாக இந்த சீசனில் ஷெரின் விளையாடியிருக்கிறார். ஜெயித்தாலும் தோற்றாலும் கிரீடம் சூட்டப்படவேண்டிய ஏஞ்சலாகவே அவர் இருக்கிறார்!

Housemates

காதுல கேட்டு பதிலச் சொல்லு

102-ம் நாள். இன்னும் 4 நாள்தான். நேற்று லீவு போட்ட டான்ஸரில் ஒருத்தர் இன்று வந்துவிட எட்டு பேர் வெளியிலிருந்து வந்து வீட்டினரோடு ஆலுமா டோலுமாவுக்கு ஆடினார்கள்.

சேரன், ஷெரின் இருவருக்குமிடையே நாமினேஷன் குறித்த பேச்சு ஓடியது. சாக்‌ஷி, ‘சேரன் அண்ணா ஷெரினை நாமினேட் பண்ணவே இல்லை” என்றார். அப்டியா என்று ஷெரின் ஆச்சர்யப்பட்டார். ஷெரின் இறுதிச்சுற்றுக்குப் போகவேண்டும் என்றுதான் முதலிலிருந்தே எண்ணியதாக சேரன் குறிப்பிட்டார்.

மதியம் ‘எங்கேயோ கேட்ட குரல்’ என்கிற டாஸ்க் கொடுத்தார் பெரிய முதலாளி.  வீட்டில் இந்த நூறு நாட்களில் அவ்வப்போது நடந்த நிகழ்வுகள் ஆடியோ க்ளிப்புகளாகப் போடப்பட, அதை வைத்துக்கொண்டு அந்த உரையாடல் எப்போது / எங்கே நடந்தது, எதைப் பற்றி நடந்தது. யார் யார் அதில் சம்பந்தப்பட்டார்கள் என்பதைச் சொல்ல வேண்டும் என்பது டாஸ்க். ஷெரின், சாண்டி, முகின், லாஸ்லியா நால்வருக்கும்தான் போட்டி.

ஒவ்வொரு காட்சியின் ஒலிச்சித்திரமும் ஒலிபரப்பப்பட, அது எப்போது எங்கே யார் யார் இருக்க நடந்தது என்று கொடுக்கப்பட்ட பேப்பரில் எழுதினார்கள். 12 ஆடியோ க்ளிப்கள் போடப்பட்டன. முகின் 2 மதிப்பெண்களும் லாஸ்லியா 3 மதிப்பெண்களும் சாண்டி நான்கு மதிப்பெண்களும் பெற ஷெரின் அதிகமாக 5 சரியான விடையைச் சொல்லி முதலிடம் பெற்றார்.

Losliya

‘அடுத்து அறிந்தும் அறியாமல் தெரிந்தும் தெரியாமலும்’ என்றொரு டாஸ்க். முதல் பஸ்ஸருக்கும் அடுத்த பஸ்ஸருக்கும் இடையே என்ன நடந்தாலும் வீட்டினரின் கண்களுக்குத் தெரியாது; செவிகளுக்குக் கேட்காது என்கிறபடி நடந்துகொள்ள வேண்டும் என்றார் பிக்பாஸ். மாலை 5 மணிக்கு தொகுப்பாளர்கள் பிரியங்கா, மாகாபா, தாடி பாலாஜி, ரியோ, ரக்‌ஷன் ஆகியோர் உள்ளே வந்தனர். சாண்டி எற்கெனவே பல நிகழ்ச்சிகளுக்கு கொரியோகிராஃபராக இருந்திருக்கிறார் என்பதால் எல்லாருக்கும் அவ்வளவு பழக்கம் என்பது தெரிந்தது. சூப்பர் சிங்கர் டீம் என்றாலும் சரி, தொகுப்பாளர்கள் என்றாலும் சரி சாண்டி என்றால் அவ்வளவு நெருக்கம் காட்டுகிறார்கள்.

“சீசன் ஒண்ணு ரெண்டைவிட செம்மயா போய்ட்டிருக்கு” என்று சாண்டியிடம் சொல்லிக் கொண்டிருக்க பஸ்ஸர் ஒலித்தது. அவ்வளவுதான் சாண்டி, முகின், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் சுதாரித்துக் கொண்டு விலகினர். இப்போது யார் என்ன சொன்னாலும் அதைக் கேட்டும் கேட்காமலும் இவர்கள் நடந்துகொள்ள வேண்டும்.

சாண்டியிடம் “லாலா இருக்காள்ல அண்ணா…” என்று பிரியங்கா எதோ பேசினார்.  ஷெரினிடம் பிரியங்கா “சத்யமா சொல்றேன்… இங்க வந்திருக்க எல்லாரும் உங்க பெரிய ஃபேன். மாகாபா உங்களுக்காகத்தான் வந்தான் ஷெரின். நீங்க ரொம்ப அழகு” என்று சொன்னார்.

Housemates

சாண்டியிடம் தாடி பாலாஜி, “நீ ஒரு டான்ஸர்.. நான் ஒரு டான்ஸர். பேசு. இன்ஸல்ட் பண்ணாத” என்று சொல்ல, ரியோ “இப்ப நீ டான்ஸையே இன்ஸல்ட் பண்ற” என்று டைமிங் பஞ்ச் அடித்தார்.

எல்லாரும் லாஸ்ஸியாவை அட்டாக் செய்தனர். சாண்டி முகின் ஷெரின் எல்லாரும் பாத்ரூம் ஏரியாவுக்கும் வர கிட்டத்தட்ட ‘சண்டே மார்னிங்’ உழவர் சந்தை ரேஞ்சுக்கு களேபரப் பேச்சுகள் அங்கே அரங்கேறின. டாஸ்க்கை மீறி அல்லது மறந்து, எல்லாருமே சிரிப்பை அடக்க மாட்டாமல் அவ்வப்போது சிரித்துக்கொண்டே இருந்தனர்.

பிரியங்கா உட்கார்ந்த ஒரு சோஃபா உடைந்தது. “உடைக்கறதெல்லாம் முகின் வேல’ என்று பாலாஜி கிண்டலடித்தார். அதைவிட உச்சபட்சமாக பிக்பாஸ் “பிரியங்கா… செலவில்லாமல் டிஸ்மாண்டில் பண்ண உதவினதுக்கு நன்றி” என்றார்.

Housemates

லிவிங் ஏரியாவில் அனைவரையும் அமரவைத்து, அக்டோபர் 12 முதல் ஒளிபரப்பாகும் ‘தி வால்’ நிகழ்ச்சியைப் பற்றிய புரமோ காணொளி ஒளிபரப்பப்பட்டது. அதன் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பிரியங்கா, மாகாபா இருவரும் அதைப் பற்றிப் பேசி விளக்கினர். அதற்குப் பிறகு ஃபைனலிஸ்ட் நால்வரும் ‘பிக்பாஸில் போட்டியிட்டு வெற்றியடைவது எப்படி?” என்று பேசினார்கள்.

முகின் “இந்த வீட்ல இருக்கறப்ப சண்டை போடணும்னு இல்லை. சண்டை போடாம இருக்கணும்னும் இல்லை. இந்த ஷோ, லுக் பொறுத்து நடக்கலை, நம்ம ஆட்டிட்யூட் பொறுத்துதான் நடக்குது” என்றார். சாண்டி “உள்ள நிறைய சண்டை நடக்கும். நம்ம அடிவாங்கினாலும் அதைக் காட்டிக்காமல் போய்டணும். ஹேய் நம்மள கலாய்ச்சுட்டானு சண்டை போடப் போனீங்கன்னா… ’ஹே கெளம்பு’னு அனுப்பிடுவாங்க. நாமளும் ஸ்கோர் பண்றோம்னு எல்லா சண்டைலயும் கலந்துக்கக்கூடாது” என்றார். அவர் அப்படிச் சொல்லும்போது கேமரா வனிதாவைக் காட்டியது. 🙂

ஷெரின் பேசும்போது ரியோ, ரக்‌ஷன், மாகாபா ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ ரேஞ்சுக்கு கைதட்டினார்கள். “டாஸ்க் மட்டும் சீரியஸா எடுத்துட்டு விளையாடுங்க” என்றார். அபிராமி, சாக்‌ஷியும் கருத்து சொன்னார்கள். அடுத்து வனிதா வந்தார். “ஜெயிக்கறதுன்னா காசை ஜெயிக்கறது மட்டும் அல்ல. மக்கள் மனசை ஜெயிக்கறது. நாம நம்மளா இருக்கணும். நடிக்கக்கூடாது. அப்பதான் மக்கள் மனசை ஜெயிக்கணும். ஒரு வாரம் இருந்துட்டு ஹீரோவா வெளில போலாம். 15 வாரம் இருந்துட்டு ஜீரோவாவும் வெளில போலாம்.” என்றார்.

இந்தக்கா மக்கள்ல நாலு பேர் வந்து செல்ஃபி எடுக்கறதை வெச்சு என்னமோ இந்தக்காக்கு செம ரெஸ்பான்ஸ்னு நெனைச்சிருப்பாங்க போல. இவங்க சொல்ற கூற்றுப்படி தர்ஷன் போனவாரம் போனப்ப ஹீரோவாத்தானே போனாரு? அதுக்கு ஏன் ஷெரினைக் குத்தம் சொல்லி ஒரண்டை இழுத்தாங்களாம்?

Sherin

விளம்பரதாரர்கள் அனைவரின் சார்பாகவும் கன்னாபின்னா என்று கிஃப்ட் பாக்ஸ்கள் வந்தன. ‘ஐ  ஃபேனு ஃபேனு… ஐ பீரோலு பீரோலு.. ” என்று வடிவேலு கணக்காக கிஃப்டைப் பிரித்து மேய்ந்தனர்.

மூழ்காத ஷிப்பே…

அதன்பிறகு நட்புத்தருணங்கள் திரையிடப்பட்டன. சாக்‌ஷி ஷெரின் அபி காட்சிகளுக்குப் பிறகு தர்ஷன், முகின் குறித்த நட்புக் காட்சிகளுக்கு முகினோடு சேர்ந்து எனக்கும் கண்ணு வேர்த்தது. தர்ஷன் ஷெரின் மொமன்ட்ஸுக்குப் பிறகு கவின், லாஸ்லியா மொமன்ட்ஸ் திரையிடப்பட்டன. தர்ஷன் முகின் ஃப்ரெண்ட்ஷிப்புக்கு அடுத்து கவின் -சாண்டி ஃப்ரெண்ட்ஷிப்புக்கு உணர்ச்சிவசப்பட்டேன். அழுத்திச் சொல்லலாம்.. நட்பில் ஆண்கள் என்றும் பெஸ்ட்.  வாழ்வின் சூழலும் நம் சமூக அமைப்பும் இரு பெண்களை இத்தனை நட்பாக நீண்டநாள் பயணிக்க அனுமதிப்பதில்லை. ஒப்பீட்டளவில் சொல்கிறேன்.

முகின் தர்ஷன், சாண்டி இருவருடையுமான நட்புத் தருணங்களைப் பகிர்ந்து கொண்டார். ஷெரின், வனிதாவைச் சொன்னது ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் வனிதா “சரி.. அப்றம்?” என்கிற ரேஞ்சில் அமர்ந்திருந்தார். ஆனால், ஷெரின் ஆரம்பத்தில் வனிதா தன்னிடம் எப்படி நடந்துகொண்டார் என்பது தொடங்கி அவரின் டிரான்ஸ்ஃபர்மேஷன் வரை அத்தனையையும் பகிர்ந்துகொண்டார். நேற்று முன்தினம் நடந்த சண்டைக்குப் பிறகும் கூட, வனிதாவை ஷெரின் இந்த அளவுக்கு நேசிப்பது ஆச்சர்யமே! அதுவும் துளிகூட வருத்தமின்றி அத்தனை வாஞ்சையோடு வனிதாவைப் பார்த்து பேசினார். வனிதாவை வீட்டில் ரொம்பவே மிஸ் பண்ணோம் என்றும் சொன்னார். அவ்ளோ நல்லவங்களா ஷெரின் நீங்க?!

அபிராமி லாஸ்ஸியாவுடனான தன் நட்பைப் பற்றிச் சொல்லும்போது கலங்கி அழுதார். பிறகு சாண்டி – கவினின் நட்பைப் பார்த்துப் பொறாமைப்பட்டதாகச் சொன்னார். சாண்டிய அவ்ளோ பிடிக்கும் என்றார்.

Sherin and Vanitha

லாஸ்லியா முகின், தர்ஷன், சேரன் கவின் நால்வரையும் குறிப்பிட்டார். சாண்டி, கோப்பையை வாங்கும் எண்ணம் தனக்கில்லை, ஆனால் எல்லாரையும் மகிழ்ச்சியாக வைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்ததாகச் சொன்னார். கவினைப் பற்றி ரொம்பநேரம் சொன்னார். அடுத்தடுத்த தம்பிகளாக தர்ஷன், முகின் இருவரையும் குறிப்பிட்டார். முகின் ஜெயிக்க வேண்டும் என்றார்.

Bigg Boss Trivia

பிக்பிரதர் பிரிட்டிஷ் சீசனொன்றில் ஆரம்ப நாளில் 10 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர். ஒன்று, இரண்டு, மூன்று என்று ஐந்தைத் தாண்டும்போது ஆச்சர்யமும் அதிர்ச்சியும் இருந்தன அவர்களுக்கு. சென்ற ஐவரும் பெண்கள். பிறகு ஒவ்வொருவராய் வர… 10 பேருமே பெண்கள். என்னடா இது என்று மூன்று நாட்களைக் கழித்த பின், மூன்றாம் நாள் முடிவில் ஒரு போட்டியாளர் வருகிறார். அவர் ஆண். அதன்பின் பத்தாம் நாள் இரண்டு ஆண்கள் வருகிறார்கள். இப்படியே தொடர ஆண் பெண் என 23 பேர் பங்கேற்றனர்.

3-ம் நாள் நுழைந்து 10-ம் நாள் வரை இருந்த அந்த முதல் ஆணின் மனநிலையை எண்ணிப் பார்க்கிறேன்!