வெளியே சென்ற கவின் ஹவுஸ்மேட்சிடம் பேசியதுதான் இன்றைய ஹைலைட்!

பிக்பாஸ் புகைப்படம்!

சில வாரங்களாக நார்மலாகவும் கொஞ்சம் ஃபார்மலாகவும் வந்துகொண்டிருந்த கமல் இன்று ரொம்ப ஃபார்மலாக கோட் சூட்டுடன் வந்தார். வந்தவர் இன்று ஆரம்பித்தது, கவின் போனதற்கு லாஸ்லியா அழுததை ஒட்டி இருந்தது. ஆனால் அதைப் பற்றிச் சொல்லாமல் சொன்னார்.

Bigg Boss Sept 28

“சென்னைல இருந்து அயனாவரத்துக்குக் கட்டிக்குடுத்தாலும் போறப்ப ஓ ஓன்னு அழுவாங்க. 8-10 நாளுக்கொருக்கா போய் நேர்ல பாத்துக்கலாம்னாலும் அப்படி அழுவாங்க. என் அக்காக்கு கல்யாணமாகி போறப்ப நான் அப்படித்தான் அழுதேன்” என்றவர் சம்பந்தமில்லாமல் இறப்புக்கு விசாரிக்கப் போவதைப் பற்றிச் சொன்னார். “நான் இறப்பை விசாரிக்க லேட்டாகத்தான் போவேன். அந்த சோகத்தில் அழுந்தியிருப்பவர்களை அன்றே போய்ப் பார்க்கமாட்டேன்” என்றார். ஆடியன்ஸ் கைதட்டியது அதற்குத்தானா இல்லை எடிட்டிங் மாயாஜாலமா என்று தெரியவில்லை.

இரண்டு விளம்பரதாரர் நிகழ்ச்சிகள் நடந்தன. ஓரளவு அதை சுவாரஸ்யமான முறையில் பெர்ஃபார்ம் செய்தார்கள். “கழுதைக்கு வாக்கப்பட்டா பொதி சொமந்துதானே ஆவணும்ப்பா?” என்றார் பக்கத்தூட்டு லட்சுமியக்கா.

அவை முடிந்ததும் தர்ஷன், சாண்டி கேட்ட ‘சோறு சாமி சோறு’ வந்தன. ஷெரினுக்கு நல்ல முறையில் ஸ்பா நடந்தது. கடைசியாக ஸ்டோர் ரூமின் மணியடிக்க லாஸ்லியாவுக்கு பிக் பாஸ் கையெழுத்துப் போட்டு அவருடைய ஃபோட்டோவை கிஃப்ட் பேக்கில் அனுப்பினார்.

Bigg Boss Sept 28

“நான்தான் பாப்பேன். நான்தான் பாப்பேன்” கலவரங்களுக்குப் பின் ஓபன் செய்தார் லாஸ்லியா. இதயம் துடிக்க கண்கள் விரிய எல்லாரும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தனர். ஷெரின் லெட்டர் எழுதுவதையெல்லாம் 500X ஜூமில் பார்க்கும் கேமராக்கள் இதை க்ளோஸப்பில்கூட காட்டவில்லை. குத்துமதிப்பாகப் பார்த்ததில் பாகுபலியை கொல்லும் கட்டப்பா போஸ் போல ஏதோ ஒன்று தெரிந்தது. ‘உன்ன மளிகை சாமான் வாங்கிட்டு வரச்சொல்லிருக்காப்பா’ என்று வடிவேலு பிரசாந்தைப் பார்த்து கால்கொட்டிச் சிரிப்பாரே அதுபோல சிரிப்பு வந்தது.

மூன்று நாள்களுக்கு முன்புதான் இடையிடையே வரும் விளம்பரங்களை நக்கலடித்து எழுதியிருந்தேன். குருவி உட்காரப் பனம்பழம் விழுந்தமாதிரி நேற்றிலிருந்து சுடுநட்சத்திரத்தில் (அதாங்க.. ஹாட்ஸ்டார்) விளம்பரங்களில்லாமல் வருகிறது பிக்பாஸ்!

உற்சாக வாரம்!

மேடையில் வந்தார் கமல். அகம் டிவி வழியே அகத்துக்குள் வந்தார். ஐவரும் எழுந்து நிற்க சைகையில் ‘அந்தப் பக்கம் இருக்கும் ஆள் எங்கே?’ என்று கவினைக் கேட்டார். ”உங்களுக்குத் தெரியாததா சார்?” எனக்கேட்டார்கள்.

Bigg Boss Sept 28

பச்சைமிளகாய் கடிக்கச் சொன்ன நாமினேஷன் படலம் பற்றிக் கிண்டலாகக் கேட்டார். சாரம் – காரம் என்றொரு 2019ன் புதிய ஒரு வார்த்தை விளையாட்டுக் காமெடியைச் சொல்லி “ஏமாந்துட்டீங்களேப்பா” என்றார். லாஸ்லியா மிகவும் மனமுடைந்து போனது குறித்துக் கேட்டார். வீட்டினர்தான் தனக்கு மிகவும் ஆறுதலாக இருந்து தன்னை மீட்டெடுத்தார்கள் என்று நன்றி தெரிவித்தார். தர்ஷன் “வெளில போனா வருத்தப்படுவ” என்று சரியாகச் சொன்னதையும் ஷெரின் எப்போதும் தோள்கொடுத்து நின்றதையும் பாராட்டினார். முகினை சாண்டியை எல்லாரையும் பாராட்டினார். மூன்றாம் பிறையைக் கவிழ்த்துப் போட்டமாதிரி உதட்டை வைத்துக்கொண்டு லாஸ்லியாவும் அதை ஒப்புக்கொண்டார்.

பிறகு சீசன் 2 போட்டியாளர்கள் உள்ளே வந்ததைக் குறிப்பிட்டுப் பேசினார் கமல்.. அவர்கள் வந்தது பட விளம்பரத்திற்காக என்று தோன்றவில்லை. உங்களுக்காக உந்துதலாகவே அது இருந்தது. இதைப் பற்றிச் சொல்லிக்கொண்டே வந்தவர் “இதெல்லாம் நானாதான் சொல்றேனா.. இல்ல உங்களுக்கு அப்படித் தோணிச்சா?” என்று கேட்டார்.

எல்லாரும் ஆம் என்றனர். சாண்டி “நான் கொரியோகிராஃப் பண்ணின படம் வெளிவருது. அதுக்கு உள்ள டிரெய்லர் போட்டப்ப சந்தோஷமா இருந்துச்சு சார். வெளில போய் நிறைய படம் பண்லாம்னு தோணிச்சு” என்றார். “வாழ்த்துகள். ஆனா அதைத்தாண்டியும் வாய்ப்புகள் வரலாம். ஏன்னா நான் கொரியோகிராஃபரா இருந்து நடிகன் ஆனவன்” என்றார். சாண்டி மிகவும் அகமகிழ்ந்தார். “இதை நீங்க சொல்றப்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சார். ஜாலியா இருக்கு” என்றார்.

Bigg Boss Sept 28

”நேத்து திருவல்லிக்கேணில நாங்க ஷூட் பண்ணிட்டிருக்கறப்ப ‘சாண்டி எப்டி கீறாரு?’ என்று ஒரு குரல் வந்தது. அதெல்லாம் வெளில வந்து இருக்கு உங்களுக்கு” என்றார் கமல். முகினை, ஷெரினை, தர்ஷனை, லாஸ்லியாவை என்று எல்லாரையும் உற்சாகப்படுத்தினார். அவர்களுக்கு வெளியே ஒரு புத்துலகம் காத்திருப்பதாய்ச் சொன்னார். வையாபுரியும் கஞ்சா கருப்பும் கணேஷ் வெங்கட்ராமும் சக்தியும் இன்னபிற முந்தைய செலிபிரட்டிகளும் கைதட்டி இதை ரசித்திருப்பார்கள் என நம்புகிறேன். கிண்டலுக்காகச் சொன்னாலும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதும் அதைத் தக்கவைத்துக் கொள்வதும் அவரவர் திறமை.

கவின் உரைகள்!

ஏன் எதற்கு எப்படி என்பதையெல்லாம் சொல்ல கவினை மேடையேற்றினார் கமல்.

”ஏன் அப்டிப் பண்ணினீங்க?”

“தோணிச்சு. பண்ணிட்டேன் சார்.”

“சரிதான். தோணீனா பண்ணிடணும். ஏன்? நான் ஒண்ணு சொல்றேன். 5 லட்சம்னு சொல்லி யாரும் எழுந்திருக்கலைனா அஞ்சு ஏழரை ஆகும். ஏழரை பத்தாகும்.. ஆனா நீங்க டக்னு ரெடின்னுட்டீங்க. ஆக, நீங்க பணத்துக்காகப் பண்ல!”

”மொதல்யே யோசிச்சுட்டிருந்தேன்.”

“ஆமா. நீங்க அடிக்கடி சொல்லிட்டிருந்தீங்க. ‘இதெல்லாம் யோசிக்காம பண்றேன்னு நினைக்கறீங்களா.. அஞ்சு லட்சத்தப் பார்த்ததும் செய்றேன்னு நினைக்கறீங்களா?’னு கேட்டுட்டே இருந்திங்க.”

Bigg Boss Sept 28

”எல்லாரோட ஃபேமலி உள்ள வந்த சமயமே நான் போயிருக்கணும் சார். லாஸ்லியா எவ்ளோ ஒழுங்கா கேம் விளையாடிட்டிருந்தானு நான் பாத்திருக்கேன். அவ ஒழுங்கா ஃபோகஸ் பண்ணாததுக்கு நான்தான் காரணம்னு ஒரு குற்றவுணர்ச்சி என்னைத் துரத்திட்டே இருந்தது. அப்ப போனா ரொம்ப உடைஞ்சுருவான்னு போகல. எப்படி இருந்தாலும் இது தொடர்ந்துட்டே இருக்குனு தோணிச்சு….”

“லாஸ்லியாகூட “என்னை ஜெயிக்க வைக்கறதுக்காகப் போய்ட்டாரோ?”னு சொன்னார். அதுவா திட்டம்?”

சிரித்தார் கவின். “இல்ல சார். திட்டம்லாம் நிறைய பேசிட்டோம். இந்த திட்டம், ஸ்ட்ராடஜிலாம் கெட்ட வார்த்தை மாதிரியே ஆகிடுச்சு. உறவினர்கள்லாம் வந்த எபிசோட்லாம் முடிஞ்ச பிறகு வெள்ல போறதுக்கு வெய்ட் பண்ணிட்டிருந்தேன். இப்ப வாய்ப்பு வந்தது. வந்துட்டேன்..”

”வெளில வந்ததும் உங்களுக்கு இருக்கற ஆதரவ பார்த்தீங்கள்ல?”

“உள்ள இருக்கறப்பவே வாராவாரம் நான் தப்பிச்சத யோசிச்சிருக்கேன். நான் எல்லா உணர்வுகளையும் காட்டித்தான் நடிச்சேன். நேர்மையாதான் இருந்தேன். என் நேர்மைக்காக ஓட்டுப் போட்டவங்க.. நான் ஏன் வெளில வந்தேன்றதையும் புரிஞ்சுக்குவாங்கனு நம்பறேன்.”

கவினுக்காக ஒரு சந்தோஷக் குறும்படம் என்று படம் போட்டார் கமல். சாக்‌ஷி போர்ஷனுக்கெல்லாம் கவின் முகம் சுருங்கியது. லாஸ்லியா போர்ஷனுக்கு விழிகள் விரிந்தன.

“இவ்ளோ நடந்திருக்கா” என்றார் கவின்.

“இவ்வளவும் நடந்திருக்கு!”

“உங்க திட்டம் பாதில மாறிச்சா?”

Bigg Boss Sept 28

“ஆரம்பத்துல எல்லாரும் ஜெயிக்கணும்னுதான் வர்றாங்க. நான் ஒரு சீரிஸ் பண்ணிருந்தேன். அதுல என் கேரக்டர் ஊர்ல உள்ள பொண்ணுககிட்டலாம் ஜாலியா பேசி, சுத்திட்டிருக்கற மாதிரி கேரக்டர். அதுக்கு நல்ல ரீச் இருந்தது. அதுதான் என்னோட மொத அடையாளம். அது மக்களுக்கு பிடிச்சிருந்தது. கேனத்தனமா அதை அப்படியே பிரதிபலிச்சு நடந்துகிட்டேன். ஆனா அப்பறம்தான் தோணுச்சு.. அது சீரியல். இது ரியாலிட்டி ஷோ. இதை ரியல்னுதான் பார்ப்பாங்க. எங்கயோ தப்பாகுதுனு அப்பறமா மனசுல தோணினதை செஞ்சுட்டு நான் நானா இருந்தேன்”

”இதை நீங்க ஷோவுல சொல்லல?”
.
“சொன்னா அதை நியாயப்படுத்தற மாதிரி ஆகிடும். அப்பறமா என் கஷ்டத்தைவிட தர்ஷன், முகின்னு சிலரோட கஷ்டம் ரொம்ப பாதிச்சுது. சாண்டியண்ணனுக்கும் அதே எண்ணம் இருந்தது. அதுபடி விளையாடிட்டிருந்தோம். அப்பறமா பிக் பாஸ் கூப்டு தனியா விளையாடுங்கன்னு சொன்னப்பறம் கொஞ்சம் விளையாண்டு பார்த்தேன். அந்த ஃபினாலே டாஸ்க்ல கொஞ்சம் முயற்சி பண்ணினேன். அப்பதான் சாண்டியண்ணனைக் கோச்சுட்டேன். எனக்கும் ஷெரினுக்கும் மனஸ்தாபம் ஆச்சு…”

அப்போது கமல் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். தினமும் மாய்ந்து மாய்ந்து எழுதும் நான் அதைக் கவனிக்கத் தவறிவிட்டேன். ஸாரி!

Bigg Boss Sept 28

“இத்தனை வாரங்கள்ல நண்பர்களை நீங்க நாமினேட் பண்ணவேல்ல.”

அரங்கில் கைதட்டிப் பாராட்டினர்.

”அகம் டிவி வழியே உள்ள போலாமா?”

“போறோமா?”

”வேணாமா?”

”வெய்ட் பண்ணிட்டிருப்பாங்க சார். போலாம்..”

லாஸ் க-வின்!

கவினைக் கண்டதும் லாஸ்லியா உட்பட எல்லாரும் கத்தி வரவேற்றனர். ‘ஆளே தெர்லடா’ ஒல்லியாய்ட்ட கவின்’ ‘டேய் கவினு’ கூச்சல்களுக்கு இடையே “டேய் வெள்ல வந்தா சிலதெல்லாம் கேட்பேன் உன்ன” என்றார் சாண்டி.

கமல் உடனே “ஏன் வெள்ல வந்து? இங்கயே கேளுங்க” என்றார் கமல்.

“இல்லடா. (கமலிடம் அல்ல. கவினிடம்.) நீ போறப்ப ‘நான் உன்கிட்ட நல்லாப் பேசி எவ்ளோ நாளாச்சு’ன்னு கேட்ட ரொம்ப நாளாச்சுனு சொன்னேன். அப்ப நீயே புரிஞ்சுக்கன்னு சொன்ன. ஆனா எனக்குப் புரியலடா.”

Bigg Boss Sept 28

“ஒண்ணும் இல்லண்ணே. நாம ரெண்டு பேரும் சேர்ந்து போட்ட ப்ளானைத் தாண்டி உனக்கே தெரியாம ஒரு ப்ளானைப் போட்டேன். சிம்பிள்ணே”

“சார். நான் வெள்ல வந்து கேட்டுக்கறேன்.. இப்பக் கேட்டா கட்டுரை எழுதுவான்.”

”ஆமா. நான் சொல்லிட்டாலும் உனக்குப் புரிஞ்சிரும் பாரு. எல்லாம் நல்லபடியா முடிச்சுட்டு வாங்க. ஆல் குட். நான் ரிப்பனுக்கு இந்தப் பக்கம் நின்னுட்டு வாங்க வாங்கம்பேன். அடுத்தது…. ‘ஹாய் லியா’” என்றார்.

“எப்படி இருக்க? ஓகேவா?” – லாஸ்லியா

“ஆல் ஓகே. நீங்க எப்படி இருக்கீங்க?”

“நல்லாருக்கேன்.”

”நல்லாதான் இருக்கணும். நல்லா இருக்கணும். எப்பவும் நல்லா இருக்கணும்.”

”நீ எப்டி இருக்க? ”

“ஆல் குட்ரா. நல்லாருக்கேன்..”

”ப்ளான்லாம் சக்ஸஸா..?”

கவின் என்ன சொல்வதென்று யோசிக்க “அடி வெளுக்கப்போறேன் பாரு” என்றார் லாஸ்லியா.

Bigg Boss Sept 28

“ப்ளான் சக்ஸஸ் ஆக்றது உங்க கைலதான் இருக்கு. ஒருவாரம் நல்லபடியா முடிச்சுட்டு வாங்க.” என்று பேசிக்கொண்டிருந்தவரை இடைமறித்தார் கமல்.

“இல்ல…. நீங்கன்றீங்க.. டா-ங்கறீங்க… நீ-ங்கறீங்க. மறுபடி நீங்கன்றீங்க. எப்படி இது.. என்ன விகிதம்?”

”மாட்டிக்கொண்டாயடா” என்றார் சாண்டி.

” ‘டி’ மட்டும்தான் சொல்லல நீங்க. மச்சான்னுகூட கூப்டறீங்க. பால்வேற்றுமை இல்லாமப் பழகறது பிடிச்சிருக்கு ஆனா புரியல.

“இல்ல சார்.. வீட்லயும் பார்த்துட்டிருப்பாங்கள்ல சார்”

“ஆ… ஆ! அது” என்று ஆக்டிங் கொடுத்தார் கமல்.

லாஸ்லியாவிடம் “எல்லாத்துக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். அந்த அர்த்தத்தை அர்த்தமுள்ளதா மாத்திட்டு வாங்க” என்றவர், “சாப்டீங்களா எல்லாரும்” எனக் கேட்டார்.

சாண்டி பிரியாணி சமைத்ததைச் சொன்னதும் “நல்லவேளை வெளியே வந்துட்டேன்” என்றார்.

“எனக்கு ஒரே வருத்தம் என்னன்னா நானும் லாஸ்லியாவும் செஞ்ச உருளைக்கிழங்கை சாப்ட முடியல” என்று ஜாலிக்குச் சொல்லிவிட்டு லாஸ்லியாவிடம் “சந்தோஷமா ஜாலியா இருங்க. பட்டர்ஃப்ளை மாதிரி பறந்து வாங்க. வெளில ஐ அம் வெய்ட்டிங்” என்றார்.

சொல்லிமுடித்துவிட்டு கமலைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டார். கமல் கவினின் தோளணைத்து, தோழனாய் “நானென்ன அப்பாவா? இப்டி பயப்படறீங்க?” எனக் கேட்டார்.

மீண்டும் கொஞ்சநேரம் கவின் அட்வைஸ் செய்துவிட்டு லாஸ்லியாவிடம் ரொம்பநேரம் பை பை சொன்னார். “இது முடியாது.. போய்ட்டே இருக்கும்” என்று சொன்ன கமல் கட் செய்தார். கவினுக்கு ஐந்து லட்ச ரூபாய்க்கான செக் வழங்கப்பட்டது.

Bigg Boss Sept 28

கவின் விடைபெற்றார். இப்போது வெளியேறும் படலம். இன்றைக்கு ஒருவர் காப்பாற்றப்படுவார் என்றார் கமல். சிறிது நேர விளையாட்டுக்குப் பிறகு சாண்டி காப்பாற்றப்படுகிறார் என்றார். சாண்டி ஃபைனலிஸ்டுகளில் ஒருவர் என்றார். சாண்டி எல்லாருக்கும் நன்றி சொல்லி, “இதான் கண்ணம்மா ஆசைப்பட்டா. வந்துட்டேன்மா ஃபைனல்ஸ்ல!” என்று போய் உட்கார்ந்தார்.

தர்ஷன், லாஸ்லியா, ஷெரின் என்று மூவரில் ஒருவர் இன்று வெளியேற்றப்படுவார் என்றார்.

இன்று காலை லட்சுமியக்கா ஓடிவந்து “யாரு வெள்ல போய்ட்டாங்கனு தெரியுமா?” என்று கேட்டார்.

“யாரா இருக்கும். ஷெரின்தான்” என்றேன்.

“இல்ல தர்ஷன். வேணும்னா பாரு” என்று சொல்லிவிட்டுப் போனார்.

என்னது!

Bigg Boss Sept 28

Bigg Boss Trivia

பிக் பாஸைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் இந்தியாதான் கெத்து. எதில் தெரியுமா?

பிக் பிரதர் என்று வெளிநாடுகளில் அழைக்கப்படும் இந்நிகழ்ச்சி அமெரிக்காவில் ஆங்கிலத்திலும், ஸ்பானிஷ் பேசும் மக்களுக்காக ஸ்பானிஷிலும் என்று இரண்டு மொழிகளில் வருகிறது. அதாவது வெவ்வேறு போட்டியாளர்கள்; வெவ்வேறு நிகழ்ச்சிகள். சுருக்கமாகச் சொல்வதானால் ஒரே நாட்டில் இரண்டு மொழிகளில் வருகிறது. கனடாவில் ஃப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் வருகிறது.

இந்தியாவில்தான் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி, பெங்காலி என ஏழு மொழிகளில் வருகிறது. வெளிநாட்டினர் இதைப் பற்றி எழுதும்போது ‘ஒரே நாட்டில் இத்தனை மொழிகள். அத்தனை ஒற்றுமை’ என்று இதைப் பற்றி வியந்து வியந்து எழுதுகிறார்கள்.