மூன்றாவது சீசனின் 50 வது நாள். லாஸ்லியா ஆர்மி, கவின் ஆர்மி என்று இருவரின் ரசிகர்களுமே ‘இப்போதைக்கு உள்ள ரெண்டு பேரும் அண்டர்ஸ்டாண்டிங்ல இருக்காங்கப்பா’ என்பதால் யாரைப் பற்றி எழுதினாலும் இரண்டு பேரின் பெயரையும் போட்டுக் கொள்கிறார்கள். சேரன் வெளியில் செய்த சில நல்ல விஷயங்கள் பகிரப்பட்டு வருகின்றன. தர்ஷன், ஷெரின் இருவருக்கும் கணிசமான ரசிகக்கூட்டம். சாக்‌ஷி , அபிராமி அழுதே பேரைக் கெடுத்துக் கொண்டார்கள். சாண்டி ரசிகர்கள் #DontWorryBeSandy என்று ஹேஷ்டேகுடன் காமன் டிபி வைத்து இந்த 50வது நாளைக் கொண்டாடி, ரசிகர்படையில் டாப்பில் போய்க்கொண்டிருக்கிறார்கள். கஸ்தூரி கொஞ்சம் வாயாடி என்பதால் எவ்வளவு தூரம் நெருங்கி மக்களின் மனதைக் கவர்வார் என்பது தெரியவில்லை. ஆனால் எப்படி ஆகினும் மூன்றாவது சீசன் வெற்றிமுகம் நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறது எனலாம்.

சாக்‌ஷி ஷெரின்

அரை சத வாழ்த்துகள்

வெள்ளுடை வேந்தனாக வித்தியாசமான உடையலங்காரத்தில் உற்சாகமாக வந்த கமல். அதை உறுதிப்படுத்தினார். மூன்றாவது சீசன், மும்மடங்கு வெற்றியானதற்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

அகம் டிவி வழியே ஹவுஸ்மேட்ஸுக்கு அரை சதத்துக்கு வாழ்த்துகள் சொல்லிவிட்டு, இப்போது இருப்பவர்களில் யார் டாப் 3 இடங்களுக்கு வருவார்கள் என்று கணிக்கச் சொன்னார்.

ஹவுஸ்மேட்ஸின் கணிப்பு:

கவின்: தர்ஷன், லாஸ்லியா, சாண்டி
சாண்டி: தர்ஷன், மதுமிதா, லாஸ்லியா, சாண்டி
தர்ஷன்: மதுமிதா, சாண்டி, தர்ஷன்
முகின்: தர்ஷன், முகின், சாண்டி
சேரன்: சாண்டி, லாஸ்லியா, மதுமிதா
லாஸ்லியா: சாண்டி, தர்ஷன், கவின்
அபிராமி: தர்ஷன், முகின், ஷெரின்
சாக்‌ஷி: சாண்டி, தர்ஷன், மதுமிதா & ஷெரின்
ஷெரின்: தர்ஷன், சாண்டி, மதுமிதா
மதுமிதா: சேரன், தர்ஷன், சாண்டி.

இதில் மதுமிதா ஃபர்ஸ்ட் யாரென்று சொல்லவில்லை என்றார். சேரன் மூவரில் ஒருவராக வர ஆசைப்படுகிறேன் என்றும் சொன்னார். இவர்கள் கணிப்புப்படி தர்ஷன், சாண்டி, மதுமிதா என்ற வரிசையில் டாப் 3 இருந்தது. இந்த ஹவுஸ்மேட்ஸின் கணிப்பு நான்கு நாள் முன்பு நான் உங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு  ஒத்துப்போகிறதல்லவா?

கஸ்தூரி

கஸ்தூரியிடம் இந்தக் கணிப்பு பற்றிக் கேட்டார் கமல். கஸ்தூரியின் பேச்சு மிகவும் செயற்கை அசைவுகளோடு இருந்தது. என்னென்னமோ பேசினார். கன்ஃபெஷன் அறையில் நடந்த நாமினேஷன்களை வெளியிலிருந்து பார்த்துவிட்டு வந்ததால், அவற்றை சாக்‌ஷியிடம் பகிர்ந்து கொண்டிருப்பார் போல, அதைக் கமல் சுட்டிக்காட்ட மழுப்பலாக பதில் சொன்னார்.

கணிப்பில் டாப் 3 வந்த தர்ஷன், சாண்டி, மதுமிதாவுக்கு மெடல் கொடுத்தார் பெரிய மொதலாளி. “இது இறுதியில் எப்படி மாறும்னு சொல்ல முடியாது. ஆனா பாதி வரைக்கும் வந்ததுல டாப்3 ஆன உங்களுக்கு இந்த மெடல். இதை நீங்க வீட்டுக்கு எடுத்துட்டுப் போலாம்” என்றார் கமல்.

தர்ஷன், முகின், லாஸ்லியா ஆகியோர் உலகத்தமிழர்களாக இருந்து கலந்து கொள்வதில் உள்ள சிரமங்களைக் கேட்டார். “எங்க மூணு பேரையும் ஒரு ஊரே சேர்ந்து அனுப்பிருக்கு. எங்க வெற்றி எங்களுது மட்டும் அல்ல. ஒரு ஊரோடது. அந்தப் பொறுப்பு அதிகமாகவே இருக்கு” என்று சென்சிபிளாக பதில் சொன்னார் முகின்.

முஸ்தபா முஸ்தபா

பிக்பாஸ் வீட்டுக்குள் மலர்ந்த நட்பைப் பற்றிப் பேசினார் கமல். சாண்டி – கவின், தர்ஷன் – முகின் என்று வந்து கடைசியாக ஷெரின், சாக்‌ஷி, அபிராமி ஆகிய மூவர் நட்புக்கு வந்தார். லாஸ்லியா காப்பாற்றப்பட, அந்த மூவர் நட்பில் ஒருவர் வெளியேற வேண்டியிருக்கும் என்று சொல்லிவிட்டு, கவின் – சாண்டியிடம் வந்தார் கமல். ஏற்கெனவே பிக்பாஸ் கேட்டுக்கொண்டபடி சாக்‌ஷி, அபிராமி, லாஸ்லியா மூவருக்கும் ஃபேர்வெல் பாடலைத் தயார் செய்து வைத்திருந்தார்கள் இருவரும். அதைப் பாடிக்காட்டினார்கள். அதுவும் சாக்‌ஷி, அபிராமி, லாஸ்லியா என்ற வரிசையிலேயே பாடினார்கள். “எப்படி இந்த வரிசையை முடிவு பண்ணினீங்க” என்று ஆச்சர்யப்பட்டார் கமல்.

சாண்டி | கவின்

சாக்‌ஷியும் அபிராமியும் கிட்டத்தட்ட வெளியேறத் தயாராக இருந்தார்கள். அதிலும் சாக்‌ஷி தான் வெளியேறுவோம் என்று உறுதியாக இருந்தார். சாக்‌ஷிதான் வெளியேற்றப்பட்டார். இன்று கமல் ‘எலிமினேஷன்’ என்ற வார்த்தையைச் சொல்லும்போதெல்லாம் சாக்‌ஷியின் கையை இறுக்கப் பற்றிக்கொண்டிருந்தவர் ஷெரின். அவர்தான் அதிகம் உடைந்தார். ‘இந்தப் பொண்ணுக்குள்ள இவ்ளோ எமோஷனா?” என்று நினைக்க வைத்தார். எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு வெளியேறினார் சாக்‌ஷி. வரிசையாக சொல்லிக்கொண்டு வந்தவர் கவினைக் கட்டியணைத்து பை பை சொன்னதில் நிச்சயமாக ஒரு செயற்கைத்தனம் தெரிந்தது. கதவு திறக்கும் முன் “தர்ஷன், நான் ஷெரினை யூஸ் பண்ணிக்கல. உனக்கு க்ளியர் பண்றேன். நீ அப்படிச் சொன்னது எனக்கு கஷ்டமா இருந்தது” என்றார். கடைசி நேரத்தில் அபிராமி, சாக்‌ஷியே கடுப்பாகும் அளவுக்கு அழுதார்.

வெளியே வந்த சாக்‌ஷி, கமல் அருகில் நின்று கொண்டு ஹவுஸ்மேட்ஸ் எல்லாருக்கும் வாழ்த்து சொன்னார். கவின் ஓவர் ஆக்டிங்காக “ஸாரி மச்சான். அப்பாகிட்டயும் ஸாரி சொன்னேன்னு சொல்லிடு” என்றார். அரங்கத்தில் இருந்த சாக்‌ஷியின் அப்பா “எதுக்கு ஸாரி” என்று கேட்க “ஹர்ட் பண்ணிட்டேன். அதுக்கு” என்றார் கவின். “அது கேம்தானே.. நீங்க கேம்தானே விளையாடினீங்க” என்றார் சாக்‌ஷியின் அப்பா. அதற்கு சாக்‌ஷி உற்சாகக்கூச்சலிட்டார்.

சாக்‌ஷி

அதாவது சாக்‌ஷியை காதலிப்பது போல விளையாட்டுக்குத்தான் கவின் செய்தார். தான்தான் சீரியஸாக எடுத்துக்கொண்டதாக சாக்‌ஷி நினைக்கிறாராம். ம்கும்! இதுல பெருமை வேற!

”இந்த நிகழ்ச்சியிலிருந்து கற்றுக்கொண்டது என்ன?” என்று கமல் கேட்க “அதீத உணர்ச்சி தேவையில்லை என்பதைக் கற்றுக்கொண்டேன். பல சமயம் நியூட்ரலாக இருக்க வேண்டும்” என்றார் சாக்‌ஷி. உடனே கமல் “மையம்னு சொல்லுவாங்க அதை” என்று மைலேஜ் கூட்டிக்கொண்டார்.

சேரப்பா.. பாவம்ப்பா!

கமல் ‘பை பை’ சொன்னதும் சாக்‌ஷி போனபிறகு உள்ளே நடந்ததை ஒளிபரப்பினார்கள். கஸ்தூரிக்கு ஒருநாளுக்கு 1000 லெட்டர் வந்ததாம்; பலரும் அவரை பிக் பாஸ் வீட்டுக்குள் போகச் சொன்னார்களாம். ‘ஒரு கோடிப்பே.. ஆமாப்பே’ மொமண்டாக இருந்தது அது. எனக்குத் தெரிந்து ட்விட்டரில் கஸ்தூரி அக்காவை வெறித்தனமாக ஃபாலோ செய்யும் கன்யாகுமரி இசக்கியாகத்தான் இருக்கும் அந்த லெட்டரையெல்லாம் எழுதியது. மவனே…!

லாஸ்லியாவுக்கான பாடலைப் பாடும்போது “சேரப்பா அவரு பேசினா போருப்பா” என்று ஒரு வரி பாடினார்கள் சேரனும் கவினும். அதைப் பாடும்போதே எனக்கு “ஒருத்தரைப் பாராட்ட இன்னொருத்தரை ஏன் கீழ இழுக்கணும்” என்று தோன்றியது. சேரன் அதை சாண்டியிடமே சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டார். சாண்டி சேரனிடம் ஸாரி சொல்லிவிட்டு வந்து கவினிடம் தெரிவித்து “நீயும் ஸாரி சொல்லிடு” எனச் சொல்ல கவினும் போய் ஸாரி சொன்னார். “என்னை ஏன் இழுக்கணும் அதுல” என்று பொறுமையாகத்தான் கேட்டார் சேரன்.

சேரன்

கடைசியாக கவின் முகினைப் பற்றி லாஸ்லியாவிடம் பேசிக்கொண்டிருந்தார். “அபிராமி ஏன் முகின் பின்னாடி போய் முகின் பேரைக் கெடுக்குது? அவன் தனியா இருந்தாதானே அவனோட திறமை வெளில வரும். அதுக்கு அபிராமி விடமாட்டா போல” என்று சொன்னதெல்லாம் சாத்தான் வேதம் ஓதுவதைப் போலத்தான் இருந்தது. அதைச் சொல்ல கவினுக்கு கொஞ்சமும் தகுதியில்லை என்பது உண்மை.

 

என்ன ஆனார் சரவணன்?

 

சரி,, சரவணன் வெளியேறியதைப் பற்றி ஹவுஸ்மேட்ஸுக்குச் சொல்லியிருப்பார்கள்தானே? அன்றைக்கே பிக்பாஸ் ‘சனிக்கிழமை உங்களுக்கு அறிவிக்கப்படும்’ என்றாரே. அதை ஏன் ஒளிபரப்பவில்லை? அந்த நிகழ்வு பற்றி ஹவுஸ்மேட்ஸ் பேசிக்கொள்வதும் ஏன் மறைக்கப்படுகிறது?

 

நமது தளத்தின் வாசகி Niro (நிரோ-வா நீரோவா? வாசகியா வாசகனா?) ஒருவாரம் முன்பு ஒரு கேள்வி கேட்டிருந்தார்.
’ஸாரோ.. சரவணன் எவிக்‌ஷன் விஷயமாக உங்க கருத்து என்ன?” என்று கேட்டிருந்ந்தார்.

அதன்பிறகு குறைந்தது 15 முதல் 20 பேரிடம் இதுகுறித்துப் பேசினேன். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள். “அப்படி அனுப்பியிருக்கத் தேவையில்லை” என்பதே அவர்களின் கருத்தாக இருந்தது. அதற்கு அவர்கள் சொன்ன விளக்கம்:

சரவணன்

”நிறைய ஆண்கள் நிறைய தவறுகளை – அது தவறென்றே தெரியாமல் செய்கிறார்கள். இவரும் செய்திருக்கிறார்தான். ஆனால் அதை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டிருக்கிறார். அப்படியானால் தவறு செய்து விட்டு மன்னிப்புக் கேட்டால் சரியாயிற்றா என்றால், அது தவறின் தன்மையைப் பொறுத்தது. இதுவே சரவணன் மீது ஒரு பெண் ‘இவன் தான் என்னை அன்னைக்கு பஸ்ஸுல உரசியது’ என்று சொல்வாரேயானால், இந்த வெளியேற்றம் நிகழ்ந்தே இருக்க வேண்டும்.

அவரை உள்ளே இருக்கவைத்து இதைப் பற்றிப் பேசுவதன்மூலம், விவாதிப்பதன் மூலம், உள்ளேயே சரவணனைப் பற்றி ஒரு டிபேட் டாஸ்க் வைத்து என்று இன்னும் விழிப்புணர்வைக் கொண்டு வந்திருக்கலாம்.”

இது கொஞ்சம் பெரிய சப்ஜெக்ட். நோ மீன்ஸ் நோ-வுக்கே ’என்னது..’ என்று பொங்குகிற ஆண்கள் இன்றைக்கும் உண்டு. ஆனால் இப்படி வெளியேற்றிவிட்டு, அதைப் பற்றி கமுக்கமாகப் பேசாமல் இருப்பதுதான் நிறைய ஐயங்களை உண்டுபண்ணுகிறது!

இந்தக் கேள்வியைக் கேட்ட Niroதான் என்னையும் லட்சுமியக்காவையும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்ப ஆசைப்படுவதாகச் சொல்லியிருந்தார். சரியாப்போச்சு.. அப்பறம் யார் உங்களுக்கு அப்டேட்ஸ் எழுதுவதாம்!

அபிராமி லாஸ்லியா

நாளை நாமினேஷன். கண்டிப்பாக கவினும் சாண்டியும் – இவர்களுக்கு என்ன காண்டோ! – சேரனை நாமினேட் செய்வார்கள். ஷெரின் இன்றைக்கே ‘நான்லாம் நாமினேட்டே பண்ண மாட்டேன்’ என்று சொன்னார். அபிராமியை சிலர் நாமினேட் செய்யக்கூடும்.

சேரன்,  கவினையை ( சாண்டி கேப்டன் என்பதால் தப்பித்துவிடலாம்) நாமினேட் செய்வார். இப்ப வந்துட்டு ஜெயிக்கணுமாக்கும் என்ற கடுப்பில் கஸ்தூரியையும் நாமினேட் செய்ய வாய்ப்புண்டு. இனி நாமினேஷன் பிராசஸில் பலத்த குழப்பங்களும், சிக்கல்களும் வரும்.

போகப்போக விளையாட்டு ஸ்பீடெடுக்கும்! நாளை நாமினேஷன் பார்த்தால் ஓரளவு விளையாட்டின்போக்கு பிடிபடும்.

Bigg Boss Trivia

துருக்கி இஸ்தான்புல்லில் பிக் பிரதர் போட்டிக்கு ஆட்களைத் தேர்வு செய்ய நடந்த ஆடிஷனில் 9 பெண்கள் தேர்வாகினர். தேர்வான பிறகு, ’மொத்தமாக வெளியுலகத் தொடர்பு, குடும்பத்தோடு தொடர்பு கூடாது என்று வழக்கம்போலவே சொல்லப்பட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். உள்ளே போய் சிலநாட்கள் கழித்து இவர்களுக்கு ஐயம் வந்திருக்கிறது. வீட்டில் இருந்தது அந்த 9 பேர் மட்டுமே, 9 பேருமே பெண்கள் என்பதால் ஐயம் அதிகமாக அப்பறம்தான் தெரிந்திருக்கிறது, அது போலி பிக்பாஸ் வீடு. உள்ளே இவர்களின் அந்தரங்க நடவடிக்கைகள், உடைமாற்றுவது எல்லாவற்றையும் எடுத்து இணையத்தில் பரப்ப ஒரு கும்பல் அதைச் செய்திருக்கிறது. பிறகு போலீஸ் சென்று அவர்களை மீட்டிருக்கிறது.

ஒரு பெண்ணின் குடும்பத்தினர் போலீஸிடம் முறையிட்டதன்மூலம் தான் அந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. இன்னொரு ரிப்போர்ட் அந்தப் பெண்களில் ஒருவர் வெளியில் ராணுவம் ரோந்து சென்ற போது உரக்க அழுதார், அதனால்தான் இந்த விஷயம் வெளியே வந்தது என்றும் சொல்கிறது.

டேஞ்சரஸ்!