இன்றைக்கு ஹைலைட்ஸ் என்று எதுவுமே இல்லை என்பதுதான் ஹைலைட்! வனிதா, ஜூலி என்று யாரும் கண்டெண்ட் எல்லாம் குடுக்க முடியாது. டாஸ்குகள் அந்த மாதிரி இருக்க வேண்டும் அல்லது உள்ளே சில பல சம்பவங்கள் அந்த மாதிரி நிகழ வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் ஏனாதானோ நாட்கள் தானாக அமையும். சாண்டி டூ ஷெரின் உள்ளே இருப்பவர்களின் ப்ளஸ், மைனஸை இன்று  ஊறப்போட்டு அலசிக் காயப்போடுவோம்.

வனிதா | கஸ்தூரி

 

உன்னை விடமாட்டேன்..

அதிகாலைப் பாடலெல்லாம் ஒலித்தபின் மிருகங்களைப் போல மிமிக்ரி செய்யும் ஆக்டிவிட்டி. அதில் சேரன் நாய் மாதிரிக் கத்தினார். அதில் நல்ல மிமிக்ரி தன்மை ஒளிந்திருந்தது.

அதெல்லாம் முடிந்தபின், கஸ்தூரி வனிதாவிடம் மீண்டும் நேற்றைய வாத்து மேட்டரின் விளக்கத்தை அளிக்க முற்பட்டார். “இல்ல… நீங்க பாடி இமேஜ் பத்தி ரொம்ப கவலப்படறீங்க. உங்களுக்கு 3 குழந்தைகள் இல்லின்னாலும் நீங்க அழகாத்தான் இருக்கீங்க. அதுனால அப்படிலாம் நீங்க கவலப்படவேண்டியதே இல்லை..நீங்க பெர்சனலா எடுத்துக்குட்டீங்க.. நான் என்ன சொல்றேன்னா….” என்று வனிதாவை விடாமல் வம்புக்கு இழுத்துக்கொண்டிருந்தார்.

If you are bad, I am your Dadஆன வனிதாவோ “உன்கிட்ட எவன் எனக்கு அப்படி ஒரு தாட் இருக்குனு சொன்னான்? நான் உங்ககிட்ட கைடன்ஸ் கேட்டனா? நான் அதை பெர்சனலா எடுத்துக்கவே இல்லை..” என்று வாதிட்டார்.

கஸ்தூரி ஒரு அரைவேக்காடு என்பது ஒருபுறமிருக்கட்டும், அதற்காக வனிதா சொல்வதெல்லாம் ஏற்கமுடியாது. அவர் பெர்சனலாகத்தான் எடுத்துக்கொண்டார் என்பது ஊரே அறியும். ரெண்டு பேரும் அடிச்சுக்குங்க. யார் பொழச்சுக் கெடக்கறீங்களோ.. அவங்கள அப்பறம் பாத்துக்கலாம் என்பது போல மற்ற அனைவரும் இவர்கள் இருவரின் சண்டையை கையாள்கிறார்கள் பிக் பாஸ் வீட்டில்.

கூல் ஸ்கூல்

பள்ளிக்கூட டாஸ்க் தொடர்ந்தது. சாண்டி, ஸ்கூல் குழந்தையா.. தெய்வத்திருமகள் விக்ரமா என்ற குழப்பம் வருமளவுக்கு கொஞ்சம் ஓவர் ஆக்டிங் போலத்தான் இருக்கிறது. ஆனாலும் ஆப்பிள் இல்லா ஊருக்கு மோட்டோராலாதான் மொபைல் ஃபோன் என்பது போல அவர் நடிப்பு எடுபட்டுக்கொண்டிருக்கிறது.

Tongue Twisters (நா நெகிழ் வாக்கியம்) கொடுத்துப் பேசச்சொன்னார் ஹெட்மாஸ்டர் சேரன். பாடல் எழுதிப் பாடச்சொன்னார். எல்லாருமாய் மிகவும் கூலாக ‘முஸ்தபா முஸ்தபா’வை ரீமிக்ஸ் ஆக்கி பிக் பாஸ் ஸ்கூலுக்கு ஏற்பப் பாடினர். அதற்கு எசப்பாட்டு பாடுகிறேன் என்று கஸ்தூரி சின்னதாக ஒரு கொடுமையை அரங்கேற்றினார். பின், டாஸ்க் ஓவர் என்று அறிவித்துவிட்டார் பிக் பாஸ்.

அதற்குப் பிறகு ஹவுஸ் மேட்ஸ் தங்கள் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள் பற்றிப் பகிர்ந்து கொண்டனர். இறுதியாக கவின், லாஸ்லியாவை கேட்டருகே வைத்து கடலை போட ஆரம்பித்தார். சேரன் கவினின் இந்தப் போக்கு குறித்த அதிருப்தியை தர்ஷனிடம் பகிர்ந்து கொண்டார். தர்ஷனும் ‘எனக்கு என்ன சொல்றதுனு தெரியல’ என்றார்.

இந்த நாளில் நடந்தது இவ்வளவுதான். நாம் பொதுவாக இன்றைக்கு உள்ளிருக்கும் ஹவுஸ்மேட்ஸின் நிலைமையை / போக்கை சுருக்கமாக அலசுவோம்.

சாண்டி

சாண்டி

ஆரம்ப நாள்தொட்டு இன்றுவரை ஜாலியே தன் கொள்கை என்று போய்க்கொண்டிருக்கிறார். ஆனால் சில சமயம் இவரின் கேலி சம்பந்தப்பட்டவரை காயப்படுத்துகிறது. கவினின் இணைபிரியா நண்பனாக இருக்கிறார். நண்பனைத் தாண்டி கவினுக்கு கிட்டத்தட்ட ஆசான் போலவும் நடந்து கொள்கிறார். ஆனால் சாண்டியும் கவினின் அன்புக்கு ஆட்பட்ட சிலபல விஷயங்களைக் கண்டுகொள்வதில்லை. கவினை ஆரம்பத்தில் கண்டிக்காதவர், சரவணன் கண்டிக்க ஆரம்பித்தபிறகுதான் இவரும் கண்டித்திருக்கிறார். எப்போதும் பாத்ரூம் பக்கம் இருந்து பாடிக்கொண்டிருப்பதை பலரும் விரும்பவில்லை. அதைக் கண்டித்தபிறகு நிறுத்தியிருக்கிறார்.

தர்ஷனுக்கு ஷெரின், முகினுக்கு அபிராமி, கவினுக்குக் கேட்கவே வேண்டாம்… இப்படிக் கணக்குப் போட்டால் (சொல்லப்போனால் சேரனுக்குக்கூட லாஸ்லியா என்ற மகள்) பெண் நட்போ, உறவோ வீட்டுக்குள் ஏற்படுத்திக்கொள்ளாமல் இருக்கிறார் சாண்டி. ஒருவகையில் அது பெஸ்டும்கூட எனச் சொல்லலாம்.

ப்ளஸ்: டோண்ட் கேர் மனோபாவம் / காமெடி
மைனஸ்: எல்லை மீறும் கிண்டல்

கவின்

கவின்

இப்போது உள்ளிருக்கும் ஹவுஸ்மேட்ஸில் விவரமான கை – கவின். ஆரம்பத்தில் ஒரு கேம் ப்ளான் இருந்தது. அதுதான் நாலு பேரை ரூட்டு விடும் செயலாக சொதப்பியது. பிறகு சாண்டி, சரவணனிடம் ஒட்டிக்கொண்டார். கிட்டத்தட்ட பாய்ஸ் கேங்கை ஆட்டுவிக்கும் சூத்திரதாரி இவர்தான். பாடல் புனைவதில் கெட்டிக்காரராக இருக்கிறார். இவருக்கு ஒன்று பிடிக்கவில்லை என்றால் சாண்டி உள்ளிட்ட தன் நெருக்கமானவர்களுக்கும் பிடிக்கக்கூடாது என்று நினைத்து அதற்கேற்ப ஆட்டுவிக்கிறார். சாக்‌ஷி, லாஸ்லியா என்று இருவருக்குமே பொய்யான நம்பிக்கையைக் கொடுக்கிறார். எப்படி ரியாக்ட் செய்தால் லாஸ்லியா அதற்கு உருகுவார் என்று தெரிந்து காய் நகர்த்துகிறார்.

ப்ளஸ்: சாண்டியின் நட்பு
மைனஸ்: மற்ற எல்லாமே

லாஸ்லியா

லாஸ்லியா

ஆண்களில் கவின் போல பெண்களில் லாஸ்லியா. விவரம்! கவின் தான் பாய்ஸ் கேங்கின் மெய்ன் ஆள் என்று கணித்து அதனால்தான் லாஸ்லியா கவின் பின்னால் திரிகிறார் என்றுகூட எனக்குத் தோன்றும். என்ன காரணம் தெரியுமா?

கவினை கன்வின்ஸ் செய்தால் கவின் – சாண்டி – முகின் – தர்ஷன் என்று நால்வர் தன்னை நாமினேஷன் செய்வதில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். அந்த வீட்டில் இப்போதிருக்கும் ஹவுஸ்மேட்ஸின் எண்ணிக்கைக்கு நால்வரின் ஓட்டு என்பது பெரிய விஷயம்.

சேரப்பாவுடனான உறவை இரண்டுங்கெட்டானாகக் கையாள்கிறார். சிலவேளைகளில் அப்பாவுக்கு உருகுவதும் சில வேளைகளில் கவின் சொல்பேச்சு கேட்டு அவரைக் காயப்படுத்துவதுமாக இருக்கிறார்.

ப்ளஸ்: நம்ம வீட்டுப் பொண்ணு இமேஜ்
மைனஸ்: கவின்

முகின்

முகின்

முகின் ஒரு தனிக்காட்டு ராஜாவாகத்தான் இருந்தார். அபிராமியின் நட்பில் இவர் கொஞ்சம் தடுமாறினார். இவரின் உணர்ச்சிகளை அசைத்துப் பார்த்தது அந்த உறவுமுறை. அது நட்புக்கு காதலுக்கும் இடையில் ஊசலாடியபடியேதான் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அபிராமி போனதால் கொஞ்சம் அதை மறந்து சுதந்திரமாய்த் திரிகிறார். சட்டென்று எதையும் பாடலாக்குகிறார். சண்டைகளின்போது மிகவும் தணிந்த குரலில் பேசுவது இவருக்கு நற்பெயரை ஏற்படுத்துகிறது. அதே சமயம் கோபம் வந்தால் கை பேசுவது களங்கத்தையும் தந்திருக்கிறது.

ப்ளஸ்: முடிந்தவரை பேலன்ஸாக இருக்க முற்படுவது
மைனஸ்: கோபம்

தர்ஷன்

தர்ஷன்

பலராலும் வின்னராகக் கணிக்கப்பட்ட நபர். டாஸ்குகளில் புகுந்து விளையாடி கவனிக்க வைக்கிறார். இதுவரை பெரிதாக தன் உணர்ச்சியை வெளிக்காட்டவில்லை. வனிதாவிடம் கோபப்பட்ட அன்றுதான் ‘சப்ஜெக்ட் பேசுமா’ என்றே கவனிக்கப்பட்டார். பிறகு பாய்ஸ் க்ளப்பில் சேர்ந்து கொஞ்சம் பேசத்தொடங்கிவிட்டார். மதுமிதா உடனான பாய்ஸின் பல பஞ்சாயத்துகளில் இவர் குரல் ஒலித்திருக்கிறது.

ஷெரினுடனான இவரது மெல்லிய லவ்வாங்கி எபிசோட் இதுவரை விரசமில்லாமல் ரசிக்கற மாதிரிதான் போய்க்கொண்டிருக்கிறது. இனியும் அப்படித்தான் போகுமென்று எதிர்பார்ப்போம்.

ப்ளஸ்: முழுக்க பிக் பாஸ் விளையாட்டின் தன்மையை உள்வாங்கி நடந்து கொண்டிருப்பது
மைனஸ்: பாய்ஸ் க்ளப்

ஷெரின்

ஷெரின்

ஆரம்பத்தில் பெரிதாகக் கவராதவர் போகப்போக கவனம் ஈர்க்கிறார். சாக்‌ஷி, அபிராமி என்று நட்புக்காக சில நேரங்களில் குரல் கொடுக்கிறார். மதுமிதா எழுப்பிய தமிழச்சி பிரச்னையைத் தவிர, இதுவரை பெரிதாக எந்த சர்ச்சையையும் தானாகக் கொண்டுவரவில்லை.

கம்பி மேல் நடக்கிற மாதிரியான தர்ஷனுக்கும் இவருக்குமான அந்த உறவை கொஞ்சம் முதிர்ச்சியாகவே கையாள்கிறார் என்பேன்.

ப்ளஸ்: அந்தந்த நேரத்து நியாயங்களைப் புரிந்து நடப்பது.
மைனஸ்: எதிலும் பெரிதாகக் கலந்து கொள்ளாமல் இருப்பது

சேரன்

‘இவர் இந்த வீட்டிலா.. ஐயோ பாவம்’ என்ற விமர்சனங்களைத் தாண்டி 60 நாட்களைத் தொட்டுவிட்டார். குட். மிகவும் மரியாதையான மனிதராகத் தன்னைக் காட்டிக்கொள்வதன்மூலம் யார் பக்கமும் நட்பாகப் பழக முடியாமல் இருக்கிறார். முக்கியமான நேரங்களில் பேச வேண்டிய பெரிய மனுஷன் இடத்தில் இருந்தும் பேசாமல் இருப்பதும், அதே சமயம் அந்த பிரச்னை முடிந்தபிறகு அதை ஆங்காங்கே அமர்ந்து தனித்தனி ஆட்களுடன் பேசுவதும் இவரது வயசுக்கு சரியானதாக இல்லை. அந்த விதத்தில் அப்போதைக்கப்போதே கேள்வி கேட்ட சரவணன் பரவாயில்லை என்று தோன்றும், ஆனால் எல்லாரும் ஒரே போல இருக்கவேண்டியதில்லைதான்..

லாஸ்லியாவுடனான அப்பா – மகள் உறவு ஒரு கட்டத்தில் இந்த விளையாட்டின் தன்மையை மீறி செயற்கையாகவும் இருக்கிறது. அதற்கு இவரை மட்டும் குறை சொல்லியும் பயனில்லை. லாஸ்லியாவும் இவரை ஏற்கெனவே மேலே சொன்னது போல – இரட்டை நிலையில் கையாள்வதால் – இவருக்கு பல நேரங்களில் நான் இதைக் கண்டிப்பதா, கண்டுகொள்ளாமல் இருப்பதா என்ற குழப்பம் நேர்கிறது.

டாஸ்குகள், வீட்டு வேலைகள் என்று எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுச் செய்தாலும் சாண்டி – கவினுக்கு (என்ன காரணமோ.. சரவணன் ஆரம்பத்தில் இவர்கள் இருவருக்கும் போட்ட மந்திரமாக இருக்கலாம்) இவரைக் கண்டாலே ஆவதில்லை என்பதால் தலைமைப் போட்டிக்கே வரமுடியாமல் இருக்கிறார். (சென்ற வாரம் மட்டும் வந்தார்)

ப்ளஸ்: பெரிய மனுஷன் என்ற இமேஜ்
மைனஸ்: அந்த இமேஜுக்கு ஏற்ப நடப்பதில் சறுக்குவது.

 

கஸ்தூரி

கஸ்தூரி

வைல்டு கார்டு எண்ட்ரி. செயற்கைத்தனத்தின் உச்சமாக இருக்கிறார். எல்லாம் வெளியில் இருந்து பார்த்துவிட்டு வந்தேன் என்று சொல்லி மற்றவர்களை ஆட்டுவிக்க நினைத்தார். ஆனால் தான்தோன்றித்தனமாக, பிக் பாஸ் தன் இஷ்டப்படி வனிதாவை அனுப்பியதால் அவர் முன் பப்பு வேகாமல் தள்ளாடுகிறார். பல நேரங்களில் பொய் சொல்வது கண்கூடாகத் தெரிகிறது. உதாரணமாக நேற்று தூங்கிவிட்டதால் பிக் பாஸ் துப்பாக்கி முழக்கத்தை பிரயோகித்தார். உள்ளிருந்து சேரன் வந்து கேட்க, “ஆமா சார் தூங்கிட்டேன்” என்றால் தூக்கிலா போடப்போகிறார்கள். “பசங்களுக்கு அடுத்து என்ன சொல்லலாம்னு கண்ண மூடி யோசிச்சுட்டிருந்தேன்” என்று சொன்னார்.

லாஸ்லியா உட்பட பாய்ஸ் இவர்மீது அதிருப்தியைக் காட்டுகிறார்கள். சேரன் மட்டும் கொஞ்சம் அவ்வப்போது ஆறுதலாகப் பேசுகிறார். இந்த வாரமே இவர் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. ஓட்டுகள் பிரிந்தால் இவருக்கு பதில் சேரன் வெளியேறவும் வாய்ப்புண்டு.

ப்ளஸ்: கடல்லயே இல்லையாம்!
மைனஸ்: மேலே சொன்ன எல்லாமும்

 

வனிதா

 

இன்னொரு போட்டியாளராக பிக் பாஸ் அனுப்பியிருக்கும் வனிதாவை நான் போட்டியாளராகவே கருதவில்லை என்பதால் ‘சிம்ப்ளி வேஸ்ட். நோ கமெண்ட்ஸ்’ என்பதோடு முடிக்கிறேன். பிக் பாஸுடன் நெருக்கமாக இருப்பதைத் தவிர எந்த ப்ளஸ்ஸும் இவருக்கு இல்லை. சேனலை எதாவது ப்ளாக் மெய்ல் செய்து மிரட்டி உள்ளே மீண்டும் வந்தாரோ என்றுகூடத் தோன்றுகிறது.

இந்த லிஸ்டின் படி, இன்னமும் டாப் 4 லிஸ்டில் இருப்பவர்கள்: தர்ஷன், சாண்டி, முகின், லாஸ்லியா.

பார்க்கலாம்…ஆட்ட விதிகள் இவர்களை எப்படியெப்படி மாற்றும் என்று!

 

Bigg Boss Trivia

 

தண்ணிக்கஷ்டம் சாமி’ என்று பிக் பாஸின் இந்த சீசனில் நீச்சல் குளம் காலியாகவே இருக்கிறதல்லவா… இதெல்லாம் ஜுஜுபி. பிக் பிரதர் செர்பியன் சீசன் 3 நடந்தது, 2009. அப்போதுதான் 2008. ஆரம்பித்த பொருளாதார வீழ்ச்சி உலக அளவில் பேசப்பட்டுக்கொண்டிருந்த / பாதிக்கப்பட்டிருந்த கால கட்டம். எனவே அந்த சீசன் பிக் பாஸ் வீடு மிகவும் பொருளாதாரச் சிக்கலை பிரதிபலிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டது. சுவரெல்லாம் முற்றுப்பெறாமல் பைப்புகளும் ப்ளைவுட்டுகளும் இருந்தன. உடைந்த பாத் டப்புகள் வீட்டிற்குள்ளேயே இருக்க, படுக்கை பத்தாமல் அதை சிலர் உறங்கப் பயன்படுத்தினர். டாஸ்க் ஜெயித்தால்தான் பாத்ரூம் திறக்கப்படும். டாஸ்கில் ஜெயிக்காதவர்கள் வெட்டவெளியில் இருக்கும் ஷவரில்தான் குளிக்கவேண்டும் என்றெல்லாம் பாடாய்ப் படுத்தினார் பிக் பாஸ்.