+ ரேஷ்மா நேற்று வெளியேறிவிட்டார். அதற்கு முகின் குற்றவுணர்ச்சியில் அழுதுகொண்டே இருந்தார். இன்றைக்கும் தொடருமா அவர் அழுகை?

++ நாமினேஷன் நாள் இது. யார் யார் லிஸ்டில் வருகிறார்கள்?

++ பெரியதொரு முடிவை எடுத்து அதிரடி காட்டினார் பிக்பாஸ். அது என்ன?

 

வாங்க பார்க்கலாம்!

 

அது நம்மள நோக்கித்தான் வருது!

இன்னும் முகின் அழுதுகொண்டிருந்தார். ஷெரின், சாக்‌ஷி, அபிராமி அமர்ந்துகொண்டிருக்க முகினை அமைதிப் படுத்திக்கொண்டிருந்தனர் மூவரும். சட்டென்று சாக்‌ஷி “நான் முகின்கூட பேசறது உனக்கு பிடிக்கலையா?” என்று அபிராமியிடம் கேட்டார்

இது பிக்பாஸ் பற்ற்வைத்த திரிதான். நேற்று அபிராமியாக நடித்த சேரனிடம் “சாக்‌ஷி முகினுடன் பேசுவது உங்களுக்குப் பிடிக்கலியா அபிராமி?” என்று கேட்டார் கமல். அதற்கு அபிராமியாக நடித்த சேரன் “ஆமாம்.. கொஞ்சம் கஷ்டமா இருக்கு” என்று சொன்னார். அதைத்தொடர்ந்து எதும் விவாதமோ உரையாடலோ வீட்டுக்குள் ஓடியிருக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாகத்தான் அபிராமியை இப்படிக் கேட்கிறார் சாக்‌ஷி.

அபிராமி

சாக்‌ஷி அந்தத் தருணத்தில் அதைக் கேட்டிருக்கவேண்டியதில்லை. அதையே அபிராமியும் சொன்னார். “ரேஷ்மா போய்டுச்சு. அதுக்கு ஃபீல் பண்ணி அவன் அழறான். அத சமாதானப்படுத்தாம இப்ப இந்தக் கேள்வி முக்கியமா?” என்று அபிராமி கேட்க “அப்பறம் மறந்துடுவேன்” என்றார் சாக்‌ஷி. மறக்கற அளவு முக்கியமில்லாத விஷயத்தை ஏம்மா கேட்கற நீயி!

முதல் ஓரிரு நாட்களிலேயே ”எனக்கு கவினை சீரியல் டைம்ல இருந்தே பிடிக்கும். அவன் இருக்கறது தெரிஞ்சதும் குஷியாய்டுச்சு” என்று அபிராமி சொன்னது சாக்‌ஷி, ஷெரினிடம்தான். கவினைக் காலி செய்த சாக்‌ஷியின் பார்வை இப்போது அதே அபிராமியின் விருப்பப் பட்டியலில் இருக்கும் முகினின்மீது! நல்லா பண்றேம்மா நீயி!

 

ஓவர்டைம் சாக்‌ஷி!

 

சாக்‌ஷியின்மீது ஏகத்துக்குக் கடுப்பில் இருந்தார் அபிராமி. “உனக்கு எப்பவும் உன் பிரச்னைதானா?” என்று கேட்டு எழுந்துபோனார். சாக்‌ஷி பேசாமல் இருக்கும்போது கவின் லாஸ்லியாவுடன் சுற்ற, சாக்‌ஷி கடுப்பான வரலாறு, ரிப்பீட் ஆனது. “நானே எந்திரிச்சு வந்துட்டேன். அவன் சாக்‌ஷிகூட உக்காந்து பேசிட்டிருக்கான்” என்று வருத்தப்பட்டார் அபிராமி.

சாக்‌ஷி

 

முகின் அபிராமியை அழைத்து சமாதானப்படுத்த முயன்றார். அவருக்கு “இவ என்னாத்துக்கு அழறா இப்ப?” என்ற கேள்வி இருந்ததை அவர் உடல்மொழியே சொன்னது. அபிராமி நக்கலாக அழுதுகொண்டே “உனக்கும் உன் தோழிக்கும் இடையில எல்லாம் சரியாகிடுச்சா?” என்று கேட்க “வார்த்தைய விடாத. நீ என்னை ஹர்ட் பண்ற” என்றார் முகின். சாக்‌ஷி சேரனிடம் சொன்னது ‘ஒலக நடிப்புடா சாமி’ மொமண்ட். “நான் முகின்கிட்ட பேசறது அபிராமிக்கு கஷ்டமா இருக்காம்; பொசஸிவா இருக்காம். எனக்கு புரியல… வாட்!” என்றார். “ஏன் லாஸ்லியாகிட்ட கவின் பேசறதுக்கு இவளும் அதத்தானே சொன்னா? அப்பறம் என்ன புரியலாம் இவளுக்கு! எப்படி ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்குது பாரு கண்ணு” என்றார் பக்கத்தூட்டு லட்சுமியக்கா.

முகின் அபிராமியை சமாதானப்படுத்திப் பேசப்போனார். அபிராமி வெட்டிப் பேசியது பிடிக்காமல், சட்டென்று கோபத்தில் கட்டிலில் கையால் இரண்டு முறை குத்தினார். ’முகின் பளார்.. கட்டில் பணால்’ என்றானது. என்னப்பா கலையலங்காரம்… இப்படி இருக்கு செட் ப்ராப்பர்ட்டி!

முகின்

சிறிதுநேரத்தில் ஆண்கள் குழுவந்து முகினை அழைத்துச் சென்றது. பிறகு கொஞ்சநேரம் கழித்து முகின் அபிராமியை சமாதானப்படுத்தினார். முகின் ஒரு டெசிபல் கூட குரலை உயர்த்துவதில்லை. ரொம்பவுமே அமைதியாகத்தான் பேசுகிறார். ஆனால் அவர் கை கோபத்தை வெளிக்காட்டிவிடுகிறது.

“இனி இது ஒரு நாலுவாரம் ஓடும். நாமெல்லாம் ஏன்ணே இப்டி ஆய்ட்டோம்!” என்று கவின், சேரன், சரவணன், சாண்டி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

 

இவிங்க வேற

வெளியில் அமர்ந்து கொண்டிருந்த ஷெரின், தர்ஷனுக்கு தன் காபிக்கோப்பையை நீட்டுவதும் பின் மறுப்பதுமாக மினி ரொமான்ஸ் ஓடிக்கொண்டிருந்தது/ வீட்டு கண்ணாடி வழியே, “தம்பி கூடிய சீக்கிரம் மாட்டுவான்” என்று கமெண்டுடன் அதை எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தனர் சாண்டியும் கவினும். இவர்கள் கவனிப்பதைப் பார்த்தபின்னும் ஷெரின் வைத்த காபியை எடுத்துக்குடித்தார் தர்ஷன். “காபிய எடுத்துட்டாண்ணே.. வாடி வா.. எப்படியும் சங்கத்துல வந்து சேர்ந்துதானே ஆகணும்” என்றார் கவின். அதன்பின் சாக்‌ஷியும் அபிராமியும் கட்டியணைத்து ஸாரி கேட்டுக்கொண்டிருந்தன்ர். பின்னே.. நாமினேஷன் ஆச்சே இன்னைக்கு!

நாமினேஷனும் நாக் அவுட்டும்.

நாமினேஷன் நாள். கன்ஃபெஷன் அறைக்குள்தான் நடந்தது. அபிராமி, சாக்‌ஷி, சரவணன், லாஸ்லியா. ஆகிய நால்வரும் இந்த வாரம் வெளியேறவேண்டியவர்களாக அறிவிக்கப்பட்டனர். அதன்பிறகு ரொம்ப நாள் கழித்து ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஒன்றாக டைனிங் டேபிளில் அமர்ந்து உண்பதைக் காணமுடிந்தது. தர்ஷன், ஷெரின் ரொமான்ஸை கவினும் சாண்டியும் கிண்டல் செய்து பாடினார்கள்.

சித்தப்பாஆஆஆ

அதன்பிறகுதான் ஒரு நாக் அவுட் அதிர்ச்சி கொடுத்தார் பிக்பாஸ். சரவணனை கன்ஃபெஷன் ரூம் அழைத்து, பஸ்ஸில் பெண்களை உரசுவது பற்றி கமல் பேசும்போது சரவணன் கைதூக்கி ‘நானும் பண்ணிருக்கேன்’ என்றதைக் குறிப்பிட்டார் பிக்பாஸ். இந்நிகழ்ச்சி பெண்களை இழிவுபடுத்துவதை ஏற்காது என்று சொல்லி இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்குபெறும் தகுதியை சரவணன் இழந்துவிட்டார் என்று வெளியேறச் சொன்னார் பிக்பாஸ். யாரிடமும் சொல்லாமல் அந்த அறையிலிருந்தே இன்னொரு கதவு வழியாக வெளியே வந்தார் சரவணன். THIS IS BIG!

சரவணன்

சரவணனின் செய்கையை ஆதரிக்கவே முடியாது. ஆனால் அவர் மன்னிப்புக் கேட்டபிறகு, இரண்டு வாரங்கள் கழித்து அவரை அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? அப்படி என்ன நிர்ப்பந்தம் வந்திருக்கும்?

இனி கத்திமேல் நடப்பதுபோலத்தான். பெண்களை இழிவாகப் பேசும் எதையும் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிப் பார்ப்பார்கள் ரசிகர்கள். கமல் பாடு இன்னும் திண்டாட்டம்தான்.

எது எப்படியோ. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து சிலநாட்கள் விவாதங்கள் ஓடும். இனி அந்த தொலைக்காட்சியின் மற்ற அனைத்து நிகழ்வுகளும் எங்கெங்கே பெண்களை இழிவுபடுத்துகிறது என்பதைப் புட்டுப் புட்டு வைப்பார்கள் பார்வையாளர்கள்!

Bigg Boss Trivia

பல வெளிநாட்டு பிக் பிரதர் நிகழ்ச்சிகளில் எவிக்‌ஷன் எபிசோட், லைவாகத்தான் காட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.