கவினைக் கஸ்தூரி கேள்விகளால் துளைத்தது, பொங்கல் செய்யும் போட்டி, Truth or Dare என்று வெள்ளிக்கிழமை எபிசோட் கலந்து கட்டிய கூட்டாஞ்சோறாக இருந்தது. சேரனின் ஒன் லைன் அட்வைஸ், அவருக்கு லைக்ஸை அள்ளித்தந்தது, சனிக்கிழமை கமல் டே. அதில் அவர் சரவணன் வெளியேற்றப்பட்ட நிகழ்வு பற்றி என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலாக நாம் எல்லாருமே இருக்கிறோம். அதற்கு முன்,, இன்றைய எபிசோட்..

கஸ்தூரி | சாண்டி

வில்லுப்பாட்டுக்காரி!

கஸ்தூரி காலை விடியலை பிக்பாஸ் வீட்டில் எதிர்கொள்ளும், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முதல் நாள். காலை ஆக்டிவிட்டியில் முகினின் ராப்-தான் இதுவரை பரவாயில்லை ரகமாக இருந்தது. இன்று கஸ்தூரியின் வில்லுப்பாட்டு அதை விஞ்சி நின்றது.

பிக்பாஸ் வீட்டைப் பற்றி வில்லுப்பாட்டில் சுவாரஸ்யமாக அதே சமயம் அர்த்தமுள்ளதாகப் பாடினார். சமூக ஊடக வெளியில் அப்டேட்டாக / ஆக்டிவாக இருப்பதால் மனுஷி ஆல்டைம் அப்டேட்தான். விஷயங்களை நச்சென்றும் நறுக்கென்றும் பாடி பின்னி எடுத்தார்.

+ கவினுக்கு பேருல வின் இருந்தாலும் மனசு முழுக்க லாஸைத்தான் விரும்புது.
+ பிக்பாஸ் வீட்டுக்கு வந்த நாளிலிருந்து ஜாங்கிரி மதுமிதா ஆனாங்க ஆங்கிரி மதுமிதா
+ ஷெரினும் சாக்‌ஷியும் சப்டைட்டில் கேஸ்
+ அபிராமி அந்த நாள் முதல் இந்தநாள் வரை அழுகையை விடவில்லை…
+ வனிதா வனிதானு ஒருத்தங்க. அவங்க இருந்தாங்க சிவகாமியா. அவங்க சொல்றதுதான் கட்டளை. அந்தக் கட்டளையே சாசனம்.
+ நந்தவனத்திலோர் சாண்டி… என்று டைமிங் ரைமிங்கில் பாடி அசத்தினார் கஸ்தூரி.

அதன்பிறகும் கவினை விடவில்லை. “நீங்க நாலு பொண்ணுக பின்னாடி சுத்தினதை காமெடினு பண்ணினீங்க. இதே ஒரு லேடி 4 பசங்க பின்னாடி ஜொள்ளடிச்சுட்டு இருந்தாங்கன்னா அது காமெடியா இருக்குமா? இத காமெடியா பார்ப்பாங்கனு நீங்க நெனைச்சதே எனக்குப் பிடிக்கல” என்று அவரிடமே சொன்னார். கஸ்தூரி இதைக் கவினிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போது கவினுக்கு மனரீதியான சப்போர்ட்டாக “இல்லல்ல… அப்டிப் போகும்னு அவன் நினைக்கல…ஆமாமா..” என்று பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருந்த சேரன், ’பாய்ஸ்’ மங்களம் விவேக்கை நினைவுபடுத்தினார்.

கவின் சாண்டி

லக்சுரி பட்ஜெட் டாஸ்கில் ஹவுஸ்மேட்ஸ் ஆங்கிலத்தில் பேசுவதால் (வேற யாரு.. சாக்‌ஷிதான்) 250 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு 1750 மதிப்பெண்களுக்கு பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்தார் பெரிய முதலாளி. பஸ்ஸர் ஒலிப்பதற்குள் பொருட்களைத் தேர்வு செய்யவேண்டும் என்ற இந்த ஐடியா யார் மூளையில் உதித்ததென்று தெரியவில்லை. மிகச்சிறப்பு! மளிகைக்கடை, துணிக்கடைகளில் இதை நடைமுறைப்படுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

 

பச்சைத்தமிழன்.. சிகப்புத்தமிழன்.. நீலத்தமிழச்சி

 

தலைவரைத் தேர்வு செய்யும் நேரம். ஒரு பெரிய கான்வாஸ் போர்டில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் மூவரும் வண்ணங்களை நிரப்ப வேண்டும். யார் வண்ணம் அதிகமாக இருக்கிறதோ அவர் வின்னர். லாஸ்லியாவுக்கு நீலம், சேரனுக்கு சிவப்பு, சாண்டிக்கு பச்சை என்று கொடுக்கப்பட்டது. சாண்டி இரண்டு கைகளில் பிரஷ் கொண்டு அடித்தார். இதில் பிக்பாஸ் ‘பெய்ண்ட் பிரஷால் அடித்து மட்டுமே வண்ணத்தை நிரப்ப வேண்டும்’ என்று சொல்லியிருக்க வேண்டும். எல்லாரும் கடைசியில் பெய்ண்ட் டப்பாவை அப்படியே ஊற்றி கவர் செய்ததெல்லாம் Foul Play வாக இருந்தது. சாண்டி, கவின் கூட்டணிக்கு ஆரம்பத்திலிருந்தே சேரன் என்றால் பாகற்காய்தான். அதுவும் கவின் “மேல இருந்து சிவப்புக் கலர்ல ஊத்து” என்று சொன்னதெல்லாம் வன்ம ஊக்குவிப்பு!

கடைசியில் சாண்டிதான் ஜெயித்தார். கஸ்தூரி அந்தத் தீர்ப்பைச் சொல்லிவிட்டு பிறகு சேரனிடம் தனியாக மன்னிப்புக் கேட்டார். “விடுங்க. 7 வாரத்துல 5 வாட்டி நாமினேட் பண்ணிருக்காங்க. காரணமே இல்லாம இந்த வாரமும் பண்ணுவாங்க.. பார்த்துக்கலாம்” என்றார் சேரன்.

சாண்டி

சாண்டியை பிக்பாஸ் தலைவராக அறிவித்து குளிர்பானப் பெட்டியின் சாவியைக் கொடுத்ததும் “நான் இந்த வாரத் தலைவன் அல்ல மன்னர்” என்று அறிவித்துக்கொண்டார். ”அமரேந்திர சாண்டியாக நான்…” என்று ஆரம்பித்து கவினை அமைச்சரென்று அழைத்தார். அதன்பிறகு சில நிமிடங்கள் அவரை ஹவுஸ்மேட்ஸ் பில்லோவால் அடிக்க ரணகள மொமண்ட்ஸாக இருந்தது. கவின் வெள்ளைக்கொடி காட்டி சமாதானம் சொன்னபிறகே அந்த காமெடி விளையாட்டு நின்றது.

பொங்கலோ பொங்கல்!

கஸ்தூரி அவரது பெர்சனல் பக்கங்களை மதுமிதாவிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். கஸ்தூரியின் மகள், அமெரிக்காவில் மருத்துவமனையில் ஒரு சிகிச்சைக்காக மூன்றரை வருடங்கள் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த மூன்றரை வருடங்கள் கஸ்தூரி உணவும் உறக்கமும் கொஞ்சமும் இல்லாமல் இருந்தார் என்றும் சொன்னார். கஸ்தூரி இதைச் சொல்லச் சொல்ல மதுமிதா அழுதுகொண்டே இருந்தார்.

அடுத்து ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சி. இரண்டு அணிகளாகப் பிரிந்து பொங்கல் செய்தார்கள். மதுமிதா நடுவர். கஸ்தூரி & குழுவும், தர்ஷன் & குழுவும் மோதிக்கொண்டனர். கஸ்தூரி முதலில் சமைக்க, வெளியில் அமர்ந்திருந்த தர்ஷன் டீமுக்கு மதுமிதா, அடுத்து சமைப்பதற்கான டிப்ஸ்களை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தார். ஒரு நடுவராக அவர் நடுநிலைமை தவறித்தான் நடந்துகொண்டார். அதன்பிறகு சேரனுக்கும் மதுமிதாவுக்கும் அது சம்பந்தமான உரையாடல் நடந்தது. சேரன், “ஒரு நடுவரா நீங்க சொல்லிக்கொடுத்தது தப்பு. அப்படினா, பொங்கல்ல கஸ்தூரி கடலைப்பருப்பு போட்டப்பவே நீ அதைத் தடுத்திருக்கணும்” என்று சொன்னார். மதுமிதா “நான் லிவிங் ஏரியாவுல இந்தப் போட்டி ஆரம்பிக்கறதுக்கு முன்னாடிதான் சொல்லிக்கொடுத்திட்டிருந்தேன்” என்று அப்பட்டமாகப் பொய் சொன்னார். ஆனால் உள்ளே கஸ்தூரி டீம் சமைத்துக்கொண்டிருக்கும்போதுதான் மதுமிதா, தர்ஷன் டீமுக்கு சமையல் டிப்ஸ் கொடுத்தார் என்பதுதான் உண்மை. கமல் குறும்படம் போடறாரோ இல்லையோ… சாமி கண்ணக் குத்தும்மா!

கஸ்தூரி | மதுமிதா

சேரனின் 9 கட்டளைகள்

’உண்மையைச் சொல்லு.. இல்ல சொன்னதச் செய்’ என்றொரு டாஸ்க். பாட்டிலை நடுவில் வைத்து சுத்தவிட்டு, அதன் வாய்ப்பகுதி யாரை நோக்கி இருக்கிறதோ. அவரிடம், – அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பவர் – கேள்வி கேட்கலாம்.

கஸ்தூரி கவினிடம் “இங்க நீங்க நடந்துட்ட விதம் வெளில எப்படி ரியாக்ட் ஆகிருக்கும்னு நினைக்கறீங்க?” என்று கேட்டார். “நடந்த விதம், நடந்துகிட்டிருக்கற விதம்னு ரெண்டு இருக்கு. நடக்கப்போறது என்னனு யாருக்கும் தெரியாது. மொதல்ல பண்ணின தப்பெல்லாம் கரெக்ட் பண்ணிட்டேன்னு நெனைக்கறேன்” என்றார் கவின்.

அபிராமிக்கு தர்ஷன் கேட்டது சென்சிபிள் மற்றும் கிரியேட்டிவான கேள்வி. “இதான் பிக் பாஸ் வீட்ல லாஸ்ட் நாள். இனிமே நீ முகினைப் பார்க்க மாட்டன்னா, அவன்கிட்ட என்ன பேசுவனு பேசிக்காட்டு” என்றார் தர்ஷன்.

அபிராமி பேசப்பேச, பிக் பாஸ் கேமரா அவர் அழுவார் என்று எதிர்பார்த்து அவர் முகத்தை ஃபோகஸ் செய்தார். அபிராமி “வெளில போனாலும் ஐ லவ் யூ. ஐ மிஸ் யூ” என்று முகினுக்கு முத்தங்களை வாரி வழங்கினார்.

மதுமிதா எல்லாப் பெண்களையும் கட்டியணைத்து முத்தங்களைப் பரிமாறினார். அடுத்து சேரன். அவருக்கு லாஸ்லியா வைத்த கோரிக்கை: எல்லாரிடமும் சொல்ல நினைப்பதை ஒரு வரியில் சொல்வது. “நான் சொல்றேன். யாரும் தப்பா நினைக்காதீங்க” என்று ஆரம்பித்த சேரன்.. யார் யாரிடம் என்னென்ன சொன்னார்?

தர்ஷன்

அபிராமி, அம்மாகிட்ட உண்மையா இருக்கணும்!

லாஸ்லியா, யாரையும் காயப்படுத்தாமப் பேசக்கத்துக்கணும்!

சாண்டி மாஸ்டர், எல்லாரையும் கிண்டல் பண்றதக் கொஞ்சம் கொறச்சுக்கலாம்.

கவின், எல்லாரையும் லவ் பண்றதக் கொறச்சுட்டு ஒரே ஒருத்தியை லவ் பண்ணா ஜெயிக்கலாம். (உடனே சாண்டி, “இந்த வீட்ல இல்ல. வெளில என்றது டைமிங் ரைமிங்!)

முகின், வாழ்க்கைல யாருக்குமே பொய்யான வாக்குறுதியைக் கொடுத்துராத. பி கேர்ஃபுல்.

தர்ஷன், உன் நேர்மைல இருந்து விலகறதுக்கு நிறைய பிரச்னைகள் வரும். இங்கயும் சரி, சமூகத்துலயும் சரி. அப்பவும் நீ விலகாம இருக்கணும்.

சாக்‌ஷி, ஒருத்தர் மேல நம்பிக்கை வெச்சுட்டா, அவங்க தப்பு பண்ணினாலும் அவங்ககூடவே பயணிச்சு அதைச் சரிபண்ணனுமே ஒழிய, அவங்ககிட்ட இருந்து விலகி வெளில வந்துரக்கூடாது.

ஷெரின், உங்கிட்ட எல்லாமே பாஸிடிவ்தான். உண்மையா சொல்லணும்னா, நீ இப்படியே இருக்கணும்.

மதுமிதா, உன்னளவுல நீ உன் வாழ்க்கைக்கு, சமூகத்துக்கு உண்மையா இருக்கற மாதிரி அடுத்தவங்களை அவங்க வாழ்க்கைக்கு, அவங்களுக்கு உண்மையா இருக்க விட்டுடு.

கஸ்தூரி | மதுமிதா

கடைசி கேள்வியாக கவின், கஸ்தூரியிடம் “உள்ள வர்றப்ப யார்கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்னு நெனைச்சுட்டு வந்தீங்க?” என்று கேட்டார். “அபிராமிகிட்ட. என்ன பேசினாலும் பார்த்துப் பேசணும்னு நினைச்சேன். அவங்கள அழவைச்சுடக்கூடாதுன்னுதான்” என்றார் கஸ்தூரி. கடைசியாக தர்ஷனிடம் கஸ்தூரி பேசிக்கொண்டிருந்தார். தர்ஷனின் கேம் ப்ளான் பற்றிக்கேட்டபோது சாண்டி குறுக்கிட்டு, “நான் சொல்றேன். அவன்தான் எங்க எல்லாருக்குமே டஃப் போட்டியாளர். கடைசிவரை வந்து வின்னர் ஆகற சான்ஸ் அவனுக்கு நிறையவே இருக்கு” என்றார்.

நெசந்தான்!

Bigg Boss Trivia

கஸ்தூரி வைல்டு கார்டு எண்ட்ரி அல்லவா?.  அதாவது அல்ரெடி ஹவுஸ் மேட்ஸ் உள்ளே விளையாடிக்கொண்டிருக்கும்போது, வெளியில் இருந்து வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் ஒருவர் உள்ளே நுழைவார். அல்லது, உள்ளே இருப்பவர் வெளியேறுவார். பின்னர் வெளியேறியவர், சீக்ரெட் ரூமில் சில நாட்கள் இருந்துவிட்டு மீண்டும் உள்ளே வருவார். சீக்ரெட் ரூமின் பயன்பாடு இங்கே விளையாட்டின் இடையில் நடக்கும்..

சில நாடுகளில், இந்த பிக் பிரதர் நிகழ்ச்சியில் முதல்நாளிலேயே சீக்ரெட் ரூம் பயன்படுத்தப்படும். எல்லாரையும் உள்ளே அனுப்பி, கடைசியில் ஒருவரை மட்டும் நேரடியாக சீக்ரெட் ரூமுக்குள் அனுப்புவார் பிக் பாஸ்.

அவர் சீக்ரெட் ரூமிலிருந்து தினமும் மற்ற ஹவுஸ்மேட்ஸின் நடவடிக்கைகளைக் கண்காணித்து, 10-15 நாட்களுக்குப் பிறகு ஒன்றும் தெரியாததுபோல உள்ளே நுழைவார்.