86-ம் நாள். Ticket To Finale டாஸ்குகளின் தொடர்ச்சி. இதில் ஒரு டாஸ்கில் கவின் ஆச்சர்யப்படுத்தி இரண்டாமிடம் பெற்றதுதான் இன்றைக்கு ஹைலைட்டாக அமைந்தது.

அண்டு த வின்னர் ஈஸ்…

ஷெரினை வம்பிழுத்துக்கொண்டிருந்தார் கவின். கொஞ்சம் தள்ளி அமர்ந்து சிரித்தபடி அதைப் பார்த்துக்கொண்டிருந்தார் லாஸ்லியா.

கார்டன் ஏரியாவில் ஒரு லீடர் போர்டு இருந்தது. போட்டியில் வெற்றிபெற்றால் யார் எப்படி எப்படி உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள் எனப் பேசுமாறு ஆக்டிவிட்டி கொடுத்தார் பிக் பாஸ். ஒவ்வொருவராகப் பேசினார்கள்.

Bigg Boss Sept 17

முகின் சொல்லிமுடித்தபிறகு கவின் பேச ஆரம்பிக்கும்போது ஷெரின் கலாய்த்தபடி அவரைத் தள்ளிவிட்டார். “இப்படித்தான்.. ஜெயிக்கணும்னு நாம நினைச்சாலும் யாராவது தள்ளிவிட்டுட்டே இருப்பாங்க.. அதை மீறி நாம ஜெயிக்கணும்” என்று பேச ஆரம்பித்தார். பதிலுக்கு ஷெரின் பேசும்போது “வாழ்க்கைல கவின் மாதிரி சின்னச் சின்ன இரிட்டேஷன்கள் வந்துட்டே இருக்கும். அதைத் தாண்டி…” என்று தன் பங்குக்குப் பேசினார். சாம்பிளுக்கு 1, 2, 3 என்று அடுக்கப்பட்ட பெயர்களில் கீழே இருந்த தன் பெயரை எடுத்து மேலே நம்பர் 1-ல் வைத்து “இப்பதான் நம்பர் 1… இப்பப் பேசறேன்…” என்று சொல்லிவிட்டுப் பேசினார் சேரன்.

மீண்டும் ஷெரினை வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தார் கவின். அவர் போகும் வழிகளில் நின்று இடைமறிப்பது, அவர் பேசும்போது கவுன்ட்டர் அடிப்பது என்று எதாவது செய்துகொண்டே இருந்தார். ஷெரின் பாத்ரூம் போகும்போது பின்னாலேயே சென்று தொந்தரவு செய்தார். “உள்ளயும் வருவியா?’ என ஷெரின் கேட்க, “எனக்கு டீசன்ஸி தெரியும்” என்றார்.

பிக் பாஸ் சும்மா இருக்காமல் இவர்களுக்குள் இந்த வம்புச்சண்டை நடக்கும்போதெல்லாம் லாஸ்லியாவின் ரியாக்‌ஷன்களைக் காட்டிக்கொண்டிருந்தார். லாஸ்லியா புதிரான ரியாக்‌ஷன்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது புன்னகையும். “நீ என்ன பண்ணினாலும் என்னை வெறுப்பேத்த முடியாது. ப்பே” என்றார் ஷெரின்.

Bigg Boss Sept 17

சிகப்பு கேட். தானோஸை கேனோஸ் எனவும் சூப்பர் மேனை சாண்டிமேனாகவும் மாற்றி ஒரு கற்பனைக் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தார் சாண்டி. சேரன், ஷெரின், முகின், தர்ஷன் நால்வரும் சிரித்துச் சிரித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

Ticket To Finaleவின் மூன்றாவது டாஸ்க். குழாய்களில் விதவிதமாக வண்ணங்கள். அதற்கருகில் ஒரு குறிப்பு. எதிரில் ஹவுஸ்மேட்ஸ் எல்லாரும் அமரவேண்டும். அவர்களுக்கு அருகில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு கண்ணாடிக் குழாய். அந்தக் குறிப்பில் எழுதியிருப்பது யாருக்குப் பொருந்துகிறதோ அவர் அருகில் இருக்கும் குழாயில், அந்த வண்ணத்தை ஊற்றவேண்டும். ஒருவர் இரண்டு பேரை அப்படி தேர்வு செய்து ஊற்றவேண்டும். யார் குழாயில் குறைவான வண்ணம் ஊற்றப்படுகிறதோ அவருக்கு 7 மதிப்பெண்கள்… அப்படியே குறைந்து அதிக வண்ணக்கலவையுள்ள குழாய் யாருக்கோ அவருக்கு ஒரு மதிப்பெண்.

சொல்ல, கொஞ்சம் குழப்பமாக இருக்கும். இது பார்க்க சுவாரஸ்யமான ஒன்றாக அமைந்திருந்தது. டாஸ்குக்கு டாஸ்கும் ஆச்சு… மூட்டிவிட்ட மாதிரியும் ஆச்சு என்று ஒரே கல்லுல இரண்டு மாங்காய் அடிக்கிறார் பிக் பாஸ்.

Bigg Boss Sept 17

இந்த செட்டபை யோசித்த டீமுக்கும். செட் செய்த ஆர்ட் டைரக்டருக்கும் ஸ்பெஷல் சல்யூட்.

இப்போது எழுதப்பட்ட குறிப்பில் வந்த வாசகங்களும், அவற்றுக்கு யார், யாருக்கு வண்ணம் ஊற்றினார்கள் என்பதையும் கீழே பார்க்கலாம்:-

சுயசிந்தனையும் தனித்தன்மையும் இல்லாமல் கூட்டத்தில் ஒளிந்து வாழ்பவர்கள்:

தர்ஷன் கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் ஊற்றினார்.
ஷெரின் கவினுக்கும் சாண்டிக்கும் ஊற்றினார்.

மக்களின் அனுதாப அலைக்காக நடிக்கும் பரிதாபங்கள்:

தர்ஷன் கவினுக்கும் சேரனுக்கும் ஊற்றினார்,
முகின் கவினுக்கும் சேரனுக்கும் ஊற்றினார்.
சேரன் கவினுக்கும் சாண்டிக்கும் ஊற்றினார்.

தன்னை இந்த வீட்டுக்குள் தொலைத்து தேடிக்கொண்டிருப்பவர்கள்:

தர்ஷன் கவினுக்கும், லாஸ்லியாவுக்கும் ஊற்றினார்.
சாண்டி கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் ஊற்றினார்.
சேரன் கவினுக்கும் முகினுக்கும் ஊற்றினார்.

Bigg Boss Sept 17

அடுத்தவர்கள் உணர்வுகளின்மேல் வெற்றிப்படகை ஓட்டுபவர்கள்:

தர்ஷன் சாண்டிக்கும் முகினுக்கும் ஊற்றினார்.
சாண்டி தர்ஷனுக்கும் முகினுக்கும் ஊற்றினார்.
சேரன், சாண்டிக்கும் கவினுக்கும் ஊற்றினார்.
லாஸ்லியா தர்ஷனுக்கும் சேரனுக்கும் ஊற்றினார்.

சிரிப்புக்கும் நட்புக்கும் பின்னால் தன்னலமும் தந்திரமும் கொண்டவர்கள்:

தர்ஷன் கவினுக்கும் சாண்டிக்கும் ஊற்றினார்.
ஷெரின் கவினுக்கும் சாண்டிக்கும் ஊற்றினார்.
கவின் சேரனுக்கும் ஷெரினுக்கும் ஊற்றினார்.

அதோடு முடிந்தது. எல்லாரூம் ஊற்றியதைக் காட்டவில்லை. போரடிக்கும் என்பதால் இருக்கும்.

Bigg Boss Sept 17

சேரன், ஷெரின் இருவரும் இன்னும் இருவாரங்களில் என்ன நடக்கும்… போட்டி எப்படிப் போகும்… என்னென்ன கேள்விகள்… பதில்கள் என்று உரையாடிக்கொண்டிருந்தனர். கவின் தாளம் போட, முகின் அருமையான ஒரு பாடலைப் பாடினார். ‘கண்டெண்ட் இல்ல சாமி… நீ பாடு’ என்று முழுப்பாடலையும் ஒளிபரப்பினார் பிக் பாஸ். அனைவரும் கைதட்டிப் பாராட்டினார்கள்.

Ticket To Finale மூன்றாம் டாஸ்கின் முடிவை அறிவித்தார். ஷெரின் முதலிடத்தில் ஏழு மதிப்பெண்களுடன் இருந்தார். அடுத்து முறையே சேரன், தர்ஷன் இருந்தனர். நான்கு மதிப்பெண்களில் லாஸ்லியா, முகின் இருவர் இருந்தனர். சாண்டி – இரண்டு மதிப்பெண்களுடனும், கவின் ஒரு மதிப்பெண்களுடனும் இருந்தனர்.

விதிகளின்படி, லாஸ்லியா, முகின் இருவரும் ஒரே மதிபெண்களுடன் இருப்பது ஒப்புக்கொள்ள முடியாது என்பதால் மற்ற ஹவுஸ்மேட்ஸ் இவர்களில் ஒருவரை நான்காமிடம் இன்னொருவரை ஐந்தாம் இடம் என்று தேர்வு செய்யச் சொன்னார்.

லாஸ்லியா விட்டுக்கொடுப்பது போல, ’முகின்’ என்றார். பிறரும் முகின் என்று சொல்ல, முகின் நான்காவது இடத்தையும், லாஸ்லியா ஐந்தாவது இடத்தையும் எடுத்துக்கொண்டார்கள்.

Bigg Boss Sept 17

பிக் பாஸ் ‘என்னப்பா… அடிச்சுக்கவே மாட்டீங்கறீங்க… உங்களை வெச்சு இன்னும் ரெண்டு வாரத்துக்கு கண்டெண்ட் எடுக்கணுமேய்யா!’ என்று நினைத்திருப்பார்.

மீண்டும் ஷெரினை சீண்டிக்கொண்டிருந்துவிட்டு, அவர் பாத்ரூமுக்குள் போனதும் லாஸ்லியாவிடம் வந்தார் கவின். மற்ற ஆண்கள் யாரும் அவர் கண்ணுக்குத் தெரியவில்லை, பாவம்!

விட்டுக்கொடுக்காத கவின்

Ticket To Finaleவின் நான்காம் டாஸ்கை அறிவித்தார் பிக் பாஸ். ஏழு தராசுகளில் ஒரு புறம் பெடலும், இன்னொரு புறம் வெயிட்டும் இருக்கும். அருகில் மரக்கட்டைகளும் இருக்கும். ஒரு பஸ்ஸர் ஒலித்தவுடன் காலை பெடலில் வைத்து பேலன்ஸ் செய்ய வேண்டும். பிறகு ஒவ்வொரு பஸ்ஸருக்கும் ஒவ்வொரு மரக்கட்டையை எடுத்து வைக்க வேண்டும். மிகக் கடினமான டாஸ்காக இருந்தது.

Bigg Boss Sept 17

தர்ஷனும், சேரனும் முதலிலேயே அவுட் ஆனது ஆச்சர்யம். ஷெரின் கொஞ்ச நேரம் தாக்குப் பிடித்து அவரும் அவுட் ஆனார். முகின், லாஸ்லியா, கவின் மூவரும் ஆளுக்கு மூன்று கட்டைகளை அடுக்கி, நான்காவதுற்குப் போனார்கள். நான்கைத் தாண்டி கடைசியாக இருந்த ஐந்தாவது கட்டையையும் எடுத்து வைத்தனர் முகினும் கவினும். லாஸ்லியா அந்தக் கட்டையை எடுக்க சிரமப்பட்டு எப்படியோ எடுத்து வைத்துவிட்டார். மூவருமே ரொம்ப நேரம் தாக்குப் பிடித்தார்கள். லாஸ்லியா ஆண்கள் இருவரையும்விட ஸ்டெடியாக, முகத்தில் வலியை பிரதிபலிக்காமல் இருந்தார். கவின் தளரும்போது ’விட்ராத கவின்’ என்று சொல்ல வேறு செய்தார். அதனால் கவனம் சிதறினாரோ என்னமோ, கட்டைகளை விட்டுவிட்டார். பிறரால் மதிப்பெண்கள் கிடைக்கும் டாஸ்குகளில் எல்லாம் மதிப்பெண்கள் பெற முடியாததாலோ என்னமோ கவின் இறுதிவரை போராடினார். கடைசியில் அவரும் பேலன்ஸ் செய்ய முடியாமல் விட்டார். எல்லாரும் சென்று கட்டியணைத்து கவினைப் பாராட்டும் வரை முகின் அசையாமலே இருந்தார். கடைசியாக பஸ்ஸர் ஒலித்தபோதுதான் காலை இறக்கினார் முகின்.

ஜெயித்த முகினைவிட கவினைத்தான் எல்லாரும் பாராட்டினார்கள். “மெரண்டுட்டேன் கவினைப் பார்த்து!” என்றார் சேரன். ’இன்னைக்குத்தான் விளையாடிருக்க’ என்றார்கள் எல்லாரும். முகின், கவின் கால்வலிக்கு ஸ்ப்ரே அடித்தார்.

Bigg Boss Sept 17

முகினை வாழ்த்தினார் பிக் பாஸ். முகின் 27 நிமிடங்கள் சமநிலைப்படுத்திக் கொண்டு நின்றதாகச் சொன்னபோது எனக்கே கால் வலித்தது. ஒற்றைக்காலில் இவ்வளவு நேரம் பேலன்ஸ் செய்ததெல்லாம் வாய்ப்பே இல்லை. வெல்டன் மேன். அதற்கடுத்து கவின் 26 நிமிடங்கள் 34 விநாடிகள். தரமான சம்பவம் கவின்! ஜஸ்ட் மிஸ்.

பின்னர், பிக் பாஸிடம் சொல்ல நினைக்கும் ஒரு விஷயத்தைச் சொல்லலாம் என்றார் பிக் பாஸ். அன்பின் அடையாளமாக கோபத்தின் வெளிப்பாடாக அல்லது ஆழமனதில் இருக்கும் விஷயமாக அது இருக்கலாம் என்றார்.

ஷெரின் தனியாகப் போய்ப் பேசினார். “நீங்க என் பேரைச் சொல்லணும்னு ஆசைப்பட்டேன். ஏழெட்டு நாளாச்சு நீங்க அதைச் சொல்ல. நான் போறதுக்கு முன்னாடி ‘ஷெரின் நீ அழகா இருக்க’னு சொல்லணும்’ என்று கோரிக்கை வைத்து சிலபல நன்றி தெரிவித்தார்.

Bigg Boss Sept 17

சேரன்: ”ஒரு குரலுக்கு 16 பேரைக் கட்டுப்பட வைக்கிறது, பயப்பட வைக்கிறது சாதாரணமில்லை. அந்தக் குரலை நான் சல்யூட் பண்றேன்.”

தர்ஷன்: “யார் எப்படி இருந்தாலும் ஒரே ஒரு குரல் ஆறுதலா இருந்தது. குருநாதா அது உங்க குரல்தான். சிலநாட்களுக்கு முன்னாடி நான் குழப்பமா இருந்தப்ப என்கிட்ட பேசினீங்க. ஒரே ஒரு ரெக்வெஸ்ட்: நைட்டுக்கு பரோட்டாவும் சிக்கனும் அனுப்புங்க பிக் பாஸ்.. ப்ளீஸ்!” (தர்ஷன் இதைச் சொன்னதற்கு, “ஏண்டா மனசுல இருந்து சொல்றான்னா… நீ வயித்துல இருந்து சொல்ற!” என்று கலாய்த்தார் முகின்)

சாண்டி: ஐ லவ் யூ சோமச் குருநாதா. உங்க மானசீக சிஷ்யனா ஏத்துக்கிட்டதுதான் சந்தோஷம். அதும் நீங்க கலாய்க்க ஆரம்பிச்சீங்கள்ல. அதான் பெஞ்ச் மார்க். லவ் யூ குருநாதா!

கவின்: தல… எத்தன வாட்டி லவ் யூ சொல்லிருப்பேன் தல. மறக்க முடியாத நாட்களையும் அனுபவத்தையும் கொடுத்திருக்கீங்க. தேங்க்யூ தல.

Bigg Boss Sept 17

முகின்: குருநாதா, வாத்தியாரே, பிக் பாஸ். இதே மாதிரி ஜாலியா பேசறீங்க. இன்னும் அன்பா ‘ஐயா… முகின்… எந்திரிய்யா’னு சொன்னா நல்லாருக்கும்.” (தர்ஷன்: அப்பறம்? வந்து வாய்ல ஊட்டிவிடச் சொல்லு)

லாஸ்லியா: ”உங்க வாய்ஸ் கேட்கறப்ப, யாரோ நம்பளைப் பார்த்துட்டே இருப்பாங்கனு தோணும். ஒருக்கா என் பேரை நீங்க சொன்னதும் அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு. யார்கூடயும் சொல்ல, பேச தயக்கம் இருக்கறப்ப நீங்க உள்ள கூப்பிட்டு பேசுவீங்க. எல்லாத்துக்கும் நன்றி.”

முடிந்ததும் ”பிக் பாஸ்… இப்ப நீங்க பேசுங்க பிக் பாஸ்” என்றார் தர்ஷன். “எல்லாரும் நல்லாப் பேசினீங்க. இப்ப சமைச்சு சாப்பிட்டுப் போய்த் தூங்குங்க” என்று சொல்ல எல்லாரும் ‘பிக் பாஸ்.. பரோட்டா வேணும்.. பரோட்டா வேணும்’ என்று கூடிக்கும்மாளமிட ஆரம்பித்தனர்.

Bigg Boss Sept 17

Bigg Boss Trivia

ரகசிய அறை கான்செப்டில் சில நாட்டு சீசன்களில் வேறு மாதிரியும் விளையாடுவார்கள். கனடா எபிசோட் ஒன்றில், எவிக்ட் செய்யப்பட்ட இரண்டு பேர், வாரத்துக்கு ஒருவர் என ரகசிய அறைக்குள் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் இருவரும் அங்கிருந்து வீட்டை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார்கள். மீண்டும் ஒருவாரம் கழித்து அகம் டிவி வழியே அவர்கள், மெய்ன் வீட்டுக்குள் இருப்பவர்களிடம் பேசினார்கள். நீண்ட நேரம் போனது விவாதம். எதற்கு விவாதம்..?

ரகசிய அறைக்குள் ரெண்டு பேர் சென்றார்கள் அல்லவா… அவர்களில் ஒருவர் மட்டும் மீண்டும் மெய்ன் வீட்டுக்கு வர அனுமதிக்கபடுவார். அந்த ஒருவர் யாரென்பதை மெய்ன் வீட்டுக்குள் இருப்பவர்கள்தான் முடிவு செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டார் பிக் பாஸ். அதற்குத்தான் விவாதம்!

மூட்டிவிட்டு வேடிக்கை பார்க்கறதே உனக்கு வேலையாப் போச்சு மேன்!