யார் சொன்னாலும் ஒப்புக்கொள்ளாத வனிதாவின் வாதங்களும் கமலின் கிடுக்கிப்பிடிகளுமாய்க் கழிந்தது இன்றைய எபிசோட்.

அட்டாக் வனிதா 1.0

துள்ளலான நடையோடு வந்தார் கமல். இஸ்ரோவைப் பாராட்டி எபிசோடை ஆரம்பித்தார். லட்சம் மைல்கள் தாண்டி, ரெண்டு கிலோ மீட்டர் மிஸ் பண்ணிட்டோம். அவ்ளோதான் என்றார். “இந்த மேடையில் சிவன் குழுவினருக்கு அதைச் சொன்னால் கேட்கும் என்று நம்புகிறோம். விரைவில் அந்த இரண்டு கிலோ மீட்டர்களை டெக்னிகலாகவும், எமோஷனலாகவும் தொடுவீர்கள் என்று நம்புகிறோம்” என்றார் கமல்.

Bigg Boss Sept 7

வெல்டன். ஒருவகையில் இந்த பிக் பாஸ் ஷோவும் டெக்னலாஜிகல் மற்றும் எமோஷனல் இரண்டுக்குமான இரண்டு கிலோ மீட்டர் இடைவெளியில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது என நினைக்கிறேன் / நம்புகிறேன்.

பிக் பாஸுக்கு வந்தார் கமல். “எப்படி வேணா ஜெயிக்கலாம் என்ற ஆரோக்கியமில்லாத நிலைக்கு வந்துட்டாங்களோன்னு நினைக்கத் தோணுது. அதை அவங்களுக்கு எடுத்துச் சொல்லணும்’ என்றார்.

வனிதாவைக் கிண்டலடித்தார். “தலைவின்னா எல்லாம் அவரைக் கேட்டுத்தான் பண்ணணும்னு நினைச்சுட்டாங்க. நல்ல வேளை பாத்ரூம் வாசல்ல அவங்களை நிறுத்தல. இல்லன்னா குனிஞ்சு (ஆய் போகக்கூட) அவங்களக் கெஞ்ச வேண்டிருக்கும்” என்றார்.

வனிதா உட்புகுந்ததில் கமலுக்கும் விருப்பமில்லை என்று நெருங்கிய வட்டாரங்கள் மூலம் எனக்குத் தெரிந்த விஷயம், இதன்மூலம் உண்மையானது. “மொத சீஸன் காயத்ரி கேங் பண்ணினதுதான் அட்டூழியம்னு நெனைச்சேன். அதை தனி ஆளா வனிதா பண்ணிட்டிருக்காங்க” என்றாராம் கமல். செவி வழிச் செய்திதான். அவரும் மறுக்கலாம். நானும் பின் வாங்கலாம்! 🙂

Bigg Boss Sept 7

ஸ்பான்சர் மொமண்டுகள். ஒவ்வொருவரும் அவருக்குப் பிடித்த இடத்தில் அவர்களைப் பற்றி வீடியோவாக ஸ்பான்சர் அனுப்பிய மொபைலில் படம் பிடித்து அனுப்ப வேண்டிய டாஸ்க். முகின் 21K வசனத்திலும், கவின் 2K கிட்ஸ் வசனத்திலும் சாண்டி & லாஸ்லியா 90ஸ் கிட் வசனத்திலும், சேரன் 80ஸ் கிட் வசனத்திலும், வனிதா அய்ய்யயோ 70ஸ் கிட் வசனத்திலும் பேசினர். தர்ஷன் இதிலும் எந்த ERAவிலும் இல்லாமல் தனித்துத் தெரிந்தார்.

அகத்துக்குள் புகுந்தார் கமல். கெஸ்ட்டாக வந்தவர்களை கெட் அவுட் என்றார் கமல். சாக்‌ஷி, மோகன் வைத்யா, அபிராமி மூவரும் வெளியே செல்ல, ஓப்பன் நாமினேஷன் பற்றிக் கேட்டார். சாண்டி கவினை நாமினேஷைன் செய்துவிட்டு அழுதது ஏன் எனக் கேட்டார். “அவனை அஞ்சு வருஷமா தெரியும். இங்க வந்து இன்னும் நெருக்கமாய்ட்டான். லாஸ்லியாவால ஆன எமோஷன்ல அவன் அவனாவே இல்லை. அது நான் எதிர்பார்க்கல” என்று தொடர்ந்தார். கமல் அடுத்து வனிதாவை டார்கெட் செய்தார்.

“சாண்டி அழுதப்ப நீங்க எமோஷனலுக்கு எடமில்லன்னு சொன்னீங்க. ஆனா ஷெரின் அழுதப்ப, சாக்‌ஷிகிட்ட அழட்டும் விடுன்னீங்க. அந்தக் கண்ணீருக்கு தடங்கலும் இந்தக் கண்ணீருக்கு அனுமதியும் ஏன்?” என்று கேட்டார். சபாஷ் நாயக்கரே… இப்பதான் நீங்க நாயகன்!

Bigg Boss Sept 7

ஒளிபரப்பே தப்பு… போட்டுத்தாக்கு வனிதா!

வனிதா அதைப் பற்றி விளக்கும்போது பிக் பாஸ் குழுவையே குற்றம் சாட்டினார். “நீங்க அவங்களுக்கு நேரம் கொடுங்கனு சொல்றீங்க. ஆனா நீங்க உங்க உணர்ச்சிகளை உடனே உடனே காட்டிடறீங்க” எனும்போது “அவ்ளோதான் காட்றாங்க சார்” என்றார் வனிதா. கமல் டெக்னீஷியன்களின் சிரமம் குறித்துச் சொன்னார். “டெக்னீஷியன் 20 நிமிஷம் அழறாளே. ‘எவ்ளோ காட்டுவாங்க’னு யோசிச்சுட்டே எடிட் பண்ணுவாங்க” என்றார். அரங்கினரின் கரகோஷம் அடங்க நேரமெடுத்தது. “இப்ப நான் சொன்னது சரின்றீங்களா.. தப்புன்றீங்ளா” என்று கமலே சிரித்து கன்ஃப்யூஸ் ஆனார். எப்படி விட்டுக்கொடுப்பார் வனிதா? “நானும் டெக்னீஷியன்தான் சார்” என்று சொல்ல, மீண்டும் கைதட்டிக் கத்தினார்கள் அவர்கள். அந்தக் கைதட்டலுக்கு ‘யாரையும் விட்டு வைக்கலயே தாயி நீயி!’ என்று பொருள்.

வனிதா ஒளிபரப்பைக் குறை சொல்ல கமல் ஓர் அட்டகாச உதாரணத்தைச் சொன்னார். “கிரிக்கெட் மேட்ச்ல காட்ற ஹைலைட்ஸ்னால ஸ்கோர் மாறாது. மேட்சு முடிவும் மாறாது” என்றார். தர்ஷன் கைகொட்டிச் சிரிக்க, வனிதாவின் முகம் மாறியது. ஆனாலும் வனிதா ‘அது சார்… இது சார்… அப்படி சார்… இப்படி சார்’ என்று உரையாடலைத் தொடர்ந்தார்.

Bigg Boss Sept 7

ஒண்ணு… ரெண்டு… மூணு!

பிறகும் விடவில்லை வனிதா. “மூணு கேள்விகள் இருக்கு சார்” என்றார். “எப்ப இல்ல உங்களுக்கு? கேள்வியின் நாயகி அல்லவா நீங்க!” என்ற கமல் அனுமதித்தார். வனிதா கேட்க ஆரம்பித்தார்.

“வெளில நடக்கறத உள்ள சொல்லி நாமினேஷன் பண்ணக்கூடாதுனு நான் சொன்னேன். அத நீங்க விமர்சிச்சீங்க. உதாரணத்துக்கு வெளில எனக்கு 3 குழந்தைகள் இருக்குனு சொல்றத வெச்சு நாமினேஷன் பண்ணக்கூடாதில்லயா” என்றார்.

கமல் பதிலடியாக “அது அவங்க கருத்து. உங்களுக்கு வருத்தம் இருக்குனு கருத்து மாறது. ஆறடி ஆறு அங்குலம் இருக்கறவனுக்கு கமலும் வனிதாவும் குள்ளம்தான். அது Point of View” என்றார். “நீங்க இருக்கற ரூலையே கலைக்கறீங்க. அடிக்கடி மைக்கை கழட்டறீங்க!” என்று கலாய்த்தார்.

அடுத்து ”நாங்க ஒரு சட்டகத்துல பார்க்கறோம்னு நீங்க சொன்னது என்னனு புரியல” என்றார் வனிதா.

Bigg Boss Sept 7

”மக்கள் 24 மணிநேரத்தைப் பார்க்க முடியாது. ஆபீஸ் போய்ட்டு வந்து ஒரு மணிநேரம், ஒண்ணரை மணிநேரம்தான் பார்ப்பாங்க. அதுதான் முடியும்கறாங்க. அது உங்களுக்குப் புரியலையா?” என்று கேட்டார் கமல். “புரியல!” என்று வனிதா நீட்டி முழக்கிச் சொன்னார். “அவங்கவங்க அவங்கவங்க விளையாட்டை விளையாட்டை வெளையாடறாங்க. நீங்க உங்க கேமை விளையாடுங்க” என்றார்.

“என் கேம் என்ன சார்?” என வனிதா கேட்க, ”வெளில வாங்க … புரிஞ்சுடும்” என்றார். பிறகு மூன்றாவது கேள்வி என்ன எனக் கேட்டார்.

மூன்றாவது கேள்வி அல்ல. வனிதா தனக்கான மைலேஜாக நினைக்கும் ஒரு விஷயத்தைச் சொன்னார். “தர்ஷன் இன்னொருத்தர் சிம்பதில ஜெயிக்கத் தேவையில்லைனு சொன்னதைக் குறிப்பிட்டீங்க… அத நான்தான் 50வது நாள்ல உள்ள வந்தப்ப மொதல்ல சொன்னேன். அப்ப சிம்பிளா ரிப்ளை சொன்னாப்ல. அப்பறமா 25 நாள் கழிச்சுதான் அவர் அதை உணர்ந்தார். அதைக் குறிப்பிட விரும்பறேன்.”

Bigg Boss Sept 7

கமல் தர்ஷனைப் பேசச்சொன்னார். “யாரும் விட்டுக்கொடுத்து வெற்றி எனக்கு வேண்டாம்னு ஷெரின்கிட்ட நான் ஏற்கெனவே பேசிருக்கேன்” என்றார். கமல் ”தர்ஷன் வயசு என்ன… வனிதா நீங்க நான் நாம எல்லாரும் சொல்லி அவர் இதை சொல்லிருக்கலாம், இது யார் சொல்லி அவர் முடிவெடுத்தார்னு நாம உரிமை கொண்டாட வேண்டிய அவசியமில்லை” என்றார் ஜென்டிலாக. பிறகு “என்னோட ஒரு ஒப்பினியன்…. யோசிச்சுச் சொல்லுங்க “எனச் சொல்ல…. வனிதா “சொல்லுங்க சார்” என்றார்.

”அவ்ளோதான் ஒப்பினியன்” என்றார். யப்பா கமல் மாம்ஸு நீ வெளில இருக்கறதால தப்புச்ச. உள்ள ஹவுஸ்மேட்ல ஒரு ஆளா இருந்திருந்தா வனிதா தொவச்சுத் தொங்கப் போட்ரும்யா!

அடுத்து ஷெரினைப் பேச அழைத்தார் “ஏன் எமோஷனல் ப்ரேக் டவுன் ஆனீங்க?” என்று கேட்டார்.

”எதுவுமே இல்லாத விஷயத்தை வனிதா பெரிதாக்குவதாக தான் ஃபீல் செய்வதாகச் சொன்னார் ஷெரின். வனிதாவோ “இல்லை இவங்களுக்குள் ஏதோ இருக்கு” என்றார். கமல் சாக்‌ஷியை மேடைக்கு அழைத்தார். ”வனிதாகிட்ட தர்ஷன் – ஷெரின் உறவு க்யூட்டா இருக்குனு சொல்லிட்டு ஷெரின்கிட்ட என்ன சொன்னீங்க?” என்று மடக்கினார். ஷெரினிடம் “அது தப்பா காட்றாங்க, மக்கள் தப்பா பாக்கறாங்க” என்று சொல்லியிருந்தார் சாக்‌ஷி. ஆனால் மேடையில் அதை மறந்து தர்ஷன் கேர்ள் ஃப்ரெண்ட் என்கிட்ட பொலம்பினாங்க, அதான் சொன்னேன்” என்றார்.

Bigg Boss Sept 7

வனிதா உள்ளே “நீங்களோ மக்களோ எல்லாத்தையும் பாக்கல. இவ (ஷெரின்) என்கிட்ட புலம்பினா. அவன்னால (தர்ஷன்) டிஸ்டர்ப் ஆகறேன்னா” என்று அடுக்கினார். ஷெரின் இடைமறித்து “போதும் போதும் நீ ரொம்ப எல்லை மீர்ற” என்றார். தர்ஷன் புகுந்து “எனக்கோ ஷெரினுக்கோ தப்பா தெரியல. நாங்க ஃபீல் பண்ல. நீங்க என்ன, எதுக்கு ஃபில் பண்றீங்க?” என்று கேட்டார், ”உங்களுக்கு என்ன பிரச்னை” என்று கேட்டதற்கு ஆடியன்ஸ் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

கமல் சற்று காட்டமாக “உங்க கேமை நீங்க விளையாடுங்க” என்று சொல்ல ஷெரின் என்கிட்ட புலம்பிருக்கா சார் என்றார் வனிதா. ”அடிப்பாவி, ஒருத்தங்க பெர்சனலா புலம்பறதை மைலேஜுக்காக சொல்லிக் காட்டற காட்டேரி” என்று லட்சுமியக்கா கத்தலாகச் சொன்னார்.

அடுத்தது சாக்‌ஷி “நாய்கள்” என்று சொன்னதைக் கேட்டார். ஆனால் என்ன தயக்கமோ சாக்‌ஷிக்கு ஆதரவாகத்தான் பேசினார். “நான் தப்பா நினைக்கல. மக்கள்ல சிலர் தப்பா நினைச்சுட்டாங்க” என்றார். அடப்பாவி! சாக்‌ஷி க்ளியராக மக்களைத்தானே சொன்னார். உலக நாயகனுக்கு யார் குறும்படம் காட்டறது!

Bigg Boss Sept 7

சாக்‌ஷி ஆஸ்கர் லெவல் நடிப்பை வழங்கி மேடையிலிருந்து இறங்கினார்.

ஆஃபீஸ்களில் மீட்டிங் முடிந்தபிறகு, உயர் அதிகாரிகள் வெளியேறிய பின்பு, ஸ்டாஃப்ஸ் பேசிக்கொள்வதுதான் உண்மையான மீட்டிங்! அந்த மாதிரி கமல் பேசிவிட்டுப் போனபிறகு அகம் டிவி ஆஃப் ஆனபின், வனிதா ஆரம்பித்தார்.

“இல்ல, உங்க ரெண்டு பேருக்கும் ஒண்ணு கேட்கறேன்” என்று தொடங்க “ஆஹா சனியன் சைக்கிள்ல வருது” என்றுணந்த ஷெரின் “நான் பேச விரும்பல வனிதா. போதும்!” என்று அங்கிருந்து விலகிச் சென்றார். தர்ஷன் “கமல் சாருக்குத் தோணாத, இந்த ஹவுஸ் மேட்ஸுக்குத் தோணாத ஒரு விஷயம் உங்களுக்கு எப்படித் தோணலாம். கமல் சார் மக்களோட பிரதிநிதி. அவரே யோசிக்காததை எல்லாம் நீங்க ஏன் யோசிக்கறீங்க” என்று கேட்டார்.

“அதை எல்லாம் விடு. உன் மனசாட்சிக்குத் தெரியணும்ல” என்றார் வனிதா. கவின் தர்ஷனுக்காகப் பேசும்போதும் “நீ கம்னு இரு” என்றார். “நீங்கள்லாம் மக்கள் கைதட்டலுக்காகத்தான் நடிக்கறீங்க!” என்றார். “நீங்க வெளில போய்ட்டு வந்து மக்கள் பல்ஸ் வெச்சுப் பேசலாம். நாங்க அந்த மாதிரி யோசிக்ககூடாதா” என்று கேட்டார் கவின். வழக்கமாக சமையலறைக்கருகில் இந்த மாதிரி விவாதங்கள் நடக்கும்போது காய்கறி வெட்டும் சேரன், இப்போது வேறு வழியில்லாமல் சோபாவைத் தடவிக்கொண்டிருந்தார்.

Bigg Boss Sept 7

ஷெரின் “ஏன் என்னைப் பத்தி பேசறாங்க” என்று கேட்க, சேரன் “அது உங்க பெர்சனல். கமலும் சொல்லிட்டார். விடு” என்றார். வனிதா கவின், லாஸ்லியாவிடம் “உங்க ரிலேஷன்ஷிப்ப விட அவ, அவ ரிலேஷன்ஷிப்னால பாதிக்கப்பட்டிருக்கா” என்று ஆரம்பித்து பத்து வாரமா ஷெரின் நாமினேஷன்ல வர்ல என்பதைக் குறிப்பிட்டுப் பேசினார். வனிதா பேசினதையெலாம் “குப்பை’ என்று தூக்கிப்போடலாம். அதை எழுதவே கீ போர்டு கூசும். நட்பு, உறவு எதையும் வனிதா பார்ப்பதில்லை. ஷெரின் பெர்சனலாகப் பேசியதையெல்லாம் கவின், சாண்டி உள்ளிட்ட கேங்கிடம் பகிர்ந்து கொண்டார். கவின் “நானும் சாண்டிகிட்ட நிறைய பேசிருக்கேன். அவரு அதை வெளில சொல்லலயே” என்று சொன்ன பிறகும் அவர் நிறுத்தாமல் பேசினார்.

ஷெரின் எதிரி எனும்போது வனிதா பச்சோந்தியாக “லாஸ்லியா உண்மையா இருப்பா. அவ ஆட்டிட்ட்யூட் காட்றதுகூட பிடிக்கலைன்னாலும் அதுல உண்மை இருக்கும்” என்று புளுகு மூட்டையை அடுக்கினார். ஷெரின் மீது குற்றச்சாட்டுகளாய்ச் சொன்னார்.

Bigg Boss Sept 7

வனிதா சொல்வதை யாராவது மறுத்தால் “உங்களுக்குப் புரியுதா இல்லையா?” என்றோ “நான் சொல்றது உங்களுப் புரியல” என்றோ சொல்வார். இன்றைக்கு ஒரு புது ஐட்டத்தை எறிந்தார். “வயசுன்னு ஒண்ணு இருக்கு. உங்களுக்கெல்லாம் அது இல்ல” என்றார்.

யம்மா.. ஆத்தாடி மகமாயி.. முடியல தாயி!

பிறகு கமல் அபிராமியையும் மோகனையும் மேடைக்கு அழைத்து வீட்டினர் பற்றிப் பேசச்சொன்னார். அபிராமி சொன்னது ஜென்யூனாக இருந்தது. மோகன் வைத்யா வலிந்து வனிதாவைப் பாராட்டிவிட்டு கொசு அடித்துக் கொண்டிருந்த ஆடியன்ஸை “வனிதாக்கு கைதட்டுங்கப்பா” என்று கேட்டு வாங்கினார். ஸ்ஸை!

எவிக்‌ஷன்லாம் நாளைக்கு என்று குட்பை சொன்னார் கமல். சேரன் வாக் அவுட் என்றும், அவருக்கு சீக்ரெட் ரூம் கொடுக்கப்பட அதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார் என்றும் ’நம்பலாமா வேண்டாமா’ வட்டாரம் தெரிவித்தது!

Bigg Boss Sept 7

Bigg Boss Trivia

”இவங்க என்ன புருஷன் பொண்டாட்டி மாதிரி அடிச்சுக்கறாங்க?” இது பல பிக் பாஸ் நாடு / சீஸன் / எபிசோடுகளுக்கு வரும் விமர்சனம். இதை ’அடடடா நல்ல ஐடியாவா இருக்கே’ என்று இந்திய அளவில் செயல்படுத்தியது மனவாடுகள்தான். பிக் பாஸ் தெலுங்கில் இப்போது நடந்து கொண்டிருக்கும் சீஸனில் பங்கேற்பாளர்களாக இருக்கும் வருண் சந்தேஷ், விதிகா இருவரும் புருஷன் பொஞ்சாதி. தினமும் “அவ என்னை எப்படி அப்படிப் பேசலாம், அத நீ எப்படி பார்த்துட்டிருந்த” சண்டைகளோடு களைகட்டிக்கொண்டிருக்கிறது தெலுங்கு பிக் பாஸ். வீக்எண்ட் எபிசோடில் நாகார்ஜுனா இவர்கள் பஞ்சாயத்துக்கே 10 நிமிஷம் தனியாக ஒதுக்குகிறாராம்.

ஐ ஜாலி.. ஜாலி!