செய்தி வாசிப்பாளர், சின்னதிரை நடிகை, அரசியல்வாதி எனப் பன்முகம் கொண்டவர் ஃபாத்திமா பாபு. பிக்பாஸ் சீசன் 3-யின் முதல் போட்டியாளரே இவர்தான். ஃபாத்திமாவின் வருகை கடந்த சீசனின் ஆனந்த் வைத்தியநாதனை நினைவுபடுத்துவது போல் இருந்தாலும், அனந்து சேனலால் வற்புறுத்தி அழைத்து வரப்பட்டவர். ஆனால் ஃபாத்திமாவோ தன் விருப்பத்தின் பேரிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரியாகியிருக்கிறார். இருந்தாலும், ‘விஜய் தொலைக்காட்சியின் நேரடி போட்டியாளரான ஜீ தமிழ் சேனலின் பிரைம் டைம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் எப்படி பிக் பாஸில்?’ என்ற கேள்வி தொடர் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

எப்படி இரு சேனல் சம்மதத்துடன் ஃபாத்திமா பாபு பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார் என்பது குறித்து இரண்டு சேனல் தரப்புகளிலும் அவரைப் பற்றி அறிந்தவர்களிடமும் விசாரித்தோம்.

ஃபாத்திமா பாபு

“ ‘பிக் பாஸ்’ கான்செஃப்ட் பற்றி ஃபாத்திமாவுக்கு நல்லாவே தெரியும். ‘தமிழ்ச் சூழல்ல இந்த நிகழ்ச்சிக்கு எப்படி வரவேற்பு கிடைக்குது’னு பார்க்க முதல் சீசனை மிஸ் பண்ணாமப் பார்த்தாங்க. மக்களிடம் பிக் பாஸுக்குக் கிடைத்த வரவேற்பு, போட்டியாளர்களுக்கு அந்த நிகழ்ச்சி தந்த புகழ், இந்த இரண்டையும்விட, வெளியுலக தொடர்பு இல்லாம வாழ்றதை ஒரு டார்கெட்டா எடுத்துப் பண்ணலாம்னு நினைத்தாங்க.. அதுக்காக இரண்டாவது சீசன்லயே கலந்துக்கணும்னு நினைச்சவங்களக்கு சிலபல கமிட்மென்ட்களால அப்பக் கலந்துக்க முடியலை. மூனாவது சீசன்ல அந்த ஆசை நிறைவேறியிருக்கு’ என்கிறார்கள் அவரைப் பற்றி அறிந்தவர்கள்.

‘ ‘யாரடி நீ மோகினி’ தொடரில் சமீப நாட்களாகவே ஃபாத்திமாவுக்கான காட்சிகளே இல்லை! ஆரம்பத்தில் இந்த தொடரில் வெயிட்டான வில்லி கதாபாத்திரத்தில்தான் அறிமுகமானார். தொடரும் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. ஆனால், சில மாதங்களுக்கு முன் தொடரில் சில மாற்றங்கள். தயாரிப்பாளரும் மாறினார். புது தயாரிப்பாளருக்கும் அவருக்கும் மனவருத்தம் ஏற்பட்டது’ என்றுகூடச் சொல்கிறார்கள்.

“ ‘அவர் சீனியர். அவருக்குச் சம்பளம் தர்ற அளவுக்கு என்கிட்ட பட்ஜெட்இல்லை’னு தயாரிப்பாளர் சொன்னார். அதனாலேயே கொஞ்ச நாளா அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளே இல்லாம இருந்தது. தவிர ஒரு சேஃப்ட்டிக்கு மலையில இருந்து உருண்டு விழுந்து காணாமப் போயிட்டதா காட்டினாங்க. ஆனா, ‘தயாரிப்பாளர் சொன்னதில் ஃபாத்திமா மேடத்துக்கு கோபம். அதனால்தான் அவர்கள் ஷூட்டிங்கக்க வரலை’னு கூடப் பேசினாங்க. இடையில என்ன நடந்ததோ, திடீர்னு ஒருநாள் மறுபடி ரீ என்ட்ரி ஆனாங்க. ஆனாலும் எப்பயாவதுதான் படப்பிடிப்பு வந்து போய்விட்டு இருந்தாங்க. அவங்க கதாபாத்திரம் முடிஞ்சிடுச்சா அல்லது மறுபடியும் வருமானு எங்க யாருக்கும் தெரியாது’ என்கிறார் உடன் நடிக்கும் நடிகை ஒருவர்.

ஆனால் வேறு சிலரோ, ‘யாரடி நீ மோகினி’வில் அவருக்கான காட்சிகள் இல்லாத அதிருப்திதான் ‘பிக் பாஸ்’ வாய்ப்பை பயன்படுத்திக்கிட்டாங்க. அதனால் மறுபடியும் அவர்கள் இந்த சீரியலுக்குள் வருவார்களா என்பது சந்தேகமே’ என்கிறார்கள்.

‘ஃபாத்திமாவுக்குக் காட்சிகள் தரலைங்கிறது உண்மையா’ என்று ‘யாரடி நீ மோகினி’ இயக்குநர் ப்ரியனிடமே கேட்டோம்.

“ஃபாத்திமா மேடம் ‘பிக் பாஸ்ல கலந்துக்கணும்னு ஆசைப்பட்டாங்க. அந்த சேனலும் அவர் வரவேண்டும்னு விரும்பியிருக்கு. அதனால் அந்த வீட்டுக்கு போயிருக்காங்க. அங்க, நடிச்சிட்டு இருக்கிற இந்த தொடர் குறித்து கேட்டிருக்காங்க. அதனால எங்ககிட்ட வந்து தன் பிக் பாஸ் ஆசையைச் சொல்லி ரெக்வெஸ்ட் பண்ணிக் கேட்டாங்க. சீரியல்ல கதைப்படி அவர்கள் ட்ராக் இப்ப இல்லை. அதனால் எங்க சேனல் சைடுல இருந்தும் ‘போய்விட்டு வரட்டும்’னு அனுமதிச்சிட்டாங்க.
fathima babu

அவர்கள் எத்தனை நாள் அந்த வீட்டுக்குள் இருப்பாங்களோ இருந்துட்டு வந்தபிறகு மறுபடியும் எங்க சீரியல்ல அவங்க நிச்சயம் வருவாங்க. ‘நான் ஆசைப்பட்டுத்தான் இந்த ஷோவுக்கு வருகிறேன். ஆனாலும், ஷோ முடிஞ்சு வெளியேறிட்டா, நான் நடிச்சிட்டு இருந்த சீரியல்லயும் தொடர்வேன். அதுக்கு நீங்க சம்மதிக்கணும்’னு அங்கயும் சம்மதம் வாங்கிட்டுதான் உள்ளே போயிருக்காங்க’ என்கிறார் ப்ரியன்.

கடந்தாண்டு பிக் பாஸ் ஷோ ஒளிபரப்பான நேரத்தில், பார்வையாளர்கள் அந்த சேனல் பக்கம் தாவிவிடக் கூடாது என்பதற்காக மற்ற சேனல்கள் வெள்ளிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வந்த தங்கள் சீரியல்களை சனி ஞாயிற்றுக் கிழமைகளுக்கும் ஒளிபரப்பை நீட்டிப்பு செய்தன. அப்படி நீட்டிக்கப்பட்ட தொடர்களில் ‘யாரடி நீ மோகினியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.