என் அண்ணன் சச்சின் ஃபேன். (நான், சச்சினும் பிடிக்கற தோனி ஃபேன்) என் சின்ன வயதில் இருவரும் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருப்போம். மேட்ச் ஓடிக்கொண்டிருக்கும்போது சச்சின் 90 ரன் அடித்தால் “ஸாரோ… இந்தாடி ரிமோட். நீயே பாரு. சச்சின் செஞ்சுரி போட்டப்பறம் கூப்டு” என்று உள்ளே போய்விடுவான். ”ஏண்டா” என்று கேட்டால் ”எனக்கு டென்ஷனாகும்டி. வேணாம்” என்பான். 90 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டினருக்கும் அப்படித்தானே இருக்கும்? எப்படியாவது இந்த இரண்டு வாரங்களைக் கடந்து வெற்றிக் கோட்டைத் தொட்டுவிட வேண்டும் என்று.

பிக்பாஸில் நான் எழுதுவதைப் படித்துவிட்டு “என்னடி.. டென்ஷனா இருக்குல்ல 90 நாளுக்குப்பறம்?” என்று கேட்டான். “நான் தோனி ஃபேன்டா. கடைசி பால்ல சிக்ஸ் அடிக்கற கூட்டம்” என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.

ஆனாலும் அப்படி சிக்ஸ் அடிப்பது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் இவர்களில் யார் என்ற ஐயமும் பதட்டமும் எனக்கும் இருக்கிறது!

ரிவர்ஸ் நாமினேஷன்

92-ம் நாள். ’டஸக்கு டஸக்’கோடு எல்லாரையும் எழுப்பினார் பிக்பாஸ். ‘மதியம் சமைக்க வேண்டாம். ஆச்சர்யம் காத்திருக்கிறது” என்று துண்டுச் சீட்டுக் கொடுத்தனுப்பினார் பிக்பாஸ். சோறு சோறு என்று மகிழ்நத வீட்டினர் துள்ளிக் குதித்துக் கொண்டாடினர். தர்ஷன் சாண்டி இருவரும் WWF சாம்பிள் ஒன்றை நடத்திக் குதூகலித்தார்கள்.

இந்த வாரம் நாமினேஷன் ரிவர்ஸில் நடந்தது. வழக்கமாக ‘இவர் வெளியேற வேண்டும்’ என்று நாமினேட் செய்வார்கள். இந்த வாரம் ‘இவர் காப்பாற்றப்பட வேண்டும்’ என்று சொல்லவேண்டியிருந்தது. அதை விளக்கினார் பிக்பாஸ்.

எல்லாரையும் அழைத்த பிக்பாஸ் நாமினேஷன் ப்ராசஸ் குறித்து அறிவித்தார். ”இது பிக்பாஸ் வீட்டின், இந்த சீசனின் இறுதி நாமினேஷன். நீங்கள் ஒவ்வொருவரும் நாமினேஷன் ப்ராசஸில் இருந்து ஒருவரைக் காப்பாற்றலாம். இறுதியில் காப்பாற்றப்படாத நபர்கள் நாமினேஷன் லிஸ்ட்டில் இருப்பார்கள். முகின் கோல்டன் டிக்கெட் பெற்றிருப்பதால் இறுதிவாரத்துக்கு அவர் நேரடியாக செல்கிறார்” என்றவர் ஒவ்வொருவராய் அழைத்தார்.

முதலில் லாஸ்லியா கன்ஃபெஷன் அறைக்குச் சென்றார். டேபிளில் கிண்ணம் முழுக்க பச்சை மிளகாய் வைக்கப்பட்டிருந்தது.

“யாரைக் காப்பாற்றப்போகிறீர்கள். என்ன காரணம்?”

”கவின். இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே நிறைய பிரச்னைகள். நிறைய அப் & டவுன்ஸ். மாறி மாறி மாறி மாறி… “ என்று அவர் ஸ்டைலில் வழக்கம்போல கையை ஆட்டிக்கொண்டே பேச, “லாஸ்லியா, இப்ப சொன்னத கைய ஆட்டாம திரும்பச் சொல்லுங்க. கேமராவால பதிவு செய்ய முடியல” என்றார் பிக்பாஸ்.

Losliya

வெட்கத்தோடு சிரித்தபடி திரும்பச் சொன்னார் லாஸ்லியா. “நீங்க அவரைக் காப்பாத்தணும்னா ஒரு பச்சைமிளகாயைச் சாப்பிடணும்” என்றார் பிக்பாஸ். லாஸ்லியா சிரித்துக் கொண்டே சின்ன மிளகாயைத் தேட, “லாஸ்லியா சீரியஸா இருங்க. இது நாமினேஷன் ப்ராசஸ்” என்றார். சிரிக்க வெச்சது நீங்கதானே பிக்பாஸ். நீங்களே சிரிக்க வெச்சுட்டு… நீங்களே அவரைக் குறையும் சொல்லுவீங்களா! என்ன இருந்தாலும் பிக்பாஸ் ஆண்தானே!

கொஞ்சமும் முகத்தில் எரிச்சல் காட்டாமல் சாப்பிட்டு முடித்தார் லாஸ்லியா. காதல் செய்யும், மாயம்தான் என்னே!

முகினுக்கு மூணு!

அடுத்து தர்ஷன். ஷெரினைக் காப்பாற்றுகிறேன் என்றார். அவருக்கும் பச்சை மிளகாய் டாஸ்க். முகத்தை அஷ்டகோணலாக்கிச் சாப்பிட்டார். “இன்னொருத்தரையும் காப்பாத்தலாம். அதுக்காக இன்னொரு பச்சைமிளகாயையும் சாப்டணும்” என்று பிக்பாஸ் சொல்லி முடிக்கும்முன், யாரைக் காப்பாற்றப் போகிறோம் என்று சொல்லாமலே கடகடவென்று இன்னொரு பச்சை மிளகாயைச் சாப்பிட்டார் தர்ஷன். பிறகு “சாண்டி” என்று பெயர் சொன்னார்.

கவின் “லாஸ்லியா” என்று சொல்லி மிளகாயை எடுத்துச் சாப்பிட்டார். இவரும் முகத்தில் எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை. லவ்வு மச்சி லவ்வு!

இரண்டு மிளகாய் சாப்பிட்ட தர்ஷன், காபி, மௌத் வாஷ் என்று படாத பாடு பட்டுக்கொண்டிருந்தார்.

சாண்டி “கவின்” என்று சொல்லி “பாவம்.. இந்த வீட்டை பொறுத்தவரைக்கும் அவனுக்கு கெட்ட பேர் கிடைச்சுருக்கு. அவன் அதைத் தாண்டி ஃபைனல்ஸ்ல வரும். அடிபட்டு வந்திருக்கான்” என்று சொல்லி கரக் முரக் கரக் முரக் என்று கடித்தார். நிஜமாகவே சாண்டியை நினைத்து கண்ணில் கொஞ்சம் வேர்த்தது. இவரை மாதிரி ஒரு நண்பன் வாய்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று தோன்றியது.

“வேற யாரையாவது காப்பாத்த விரும்பறீங்களா?” என்று பிக்பாஸ் கேட்க “லாஸ்..” என்று யோசிக்காமல் சொல்லிவிட்டு பச்சை மிளகாயைக் காட்டி “எகெய்ன்?” என்று கேட்டார்.

Sandy

“ய்யா!” என்றார் பிக்பாஸ் ஸ்டைலாக. “ய்யா? குருநாதா. அப்டியே ரஜினி வாய்ஸ் குருநாதா. எங்க தலைவர் வாய்ஸ்!” என்று சொன்னபடியே இன்னொரு பச்சை மிளகாயை எடுத்து அதே கரக் முரக் ஸ்டைலி கடித்தார்.

அடுத்தவர் ஷெரின். “தர்ஷன்தான். ஷோவைத் தவிர வேறெந்த சிந்தனையும் இல்லாமல் இருக்கறது அவன்தான்” என்று பச்சைமிளகாயைக் கடிக்க ஆரம்பித்தார். “வேற யாரையாவது?” என்று பிக்பாஸ் கேட்க “சாண்டி” என்று சொல்லி அடுத்த பச்சை மிளகாயை எடுத்தார். கண்கள் கலங்க இன்னொன்றையும் எடுத்துக் கடித்தார்.

முகின் தர்ஷனைக் காப்பாற்ற விரும்புவதாகச் சொன்னார் அதற்கு அவர் சொன்ன காரணம் க்யூட். “இந்த இடத்துல வெளில போக அவனை நிறைய வாட்டி நாமினேட் பண்ணிருக்கேன். கடுமையான போட்டியாளர்னு. ஆனா இப்ப நான் சேஃப். அவனும் என்கூட மேடைல நிக்கணும்னு ஆசைப்படறேன்” என்றார். பச்சை மிளகாயை அவர் சாப்பிட்ட பிறகு குறும்பு பிக்பாஸ், “தர்ஷனை நிறைய பேர் காப்பாத்திட்டாங்க. இன்னொரு பேர் சொல்லுங்க” என்றார்.

“சாண்டி. கள்ளங்கபடமில்லாதவர். மத்தவங்க முன்னுக்குப் போகணும்னு நிக்கற மனுஷன்” என்று சொல்லி அடுத்த மிளகாயை சாப்பிட்டார். “வேற யாரையாவது காப்பாத்தணுமா?” என்று கேட்டார் பிக்பாஸ். ‘ஷெரின்’ என்று சொல்லி மூன்றாவது மிளகாயைச் சாப்பிட்டார் முகின். ஒருத்தன் சிக்கினா இப்படியா மேன் வெளையாடுவ?

வெளியே ‘வெரி பேட் குருநாதா என்ன விளையாட்டு இது” என்று செல்லமாக பிக் பாஸைக் கடிந்து கொண்டார் சாண்டி.

க்ரூப்ல டூப்பு செஃப் சாண்டி!

நாமினேஷன் முடிவுகளை அறிவித்தார் பிக்பாஸ். செம மூடில் இருந்தார் போல.. “இந்த நாமினேஷன் ப்ராசஸின்போது நான் ஜாலியா இருந்தமாதிரி நீங்களும் ஜாலியா இருந்தீங்களா?” என்று கேட்டார்.

Housmates

வீட்டினர் சிரியோ சிரி என்று சிரித்து முடித்ததும் “யாரும் பச்சைமிளகாய் சாப்பிட்டிருக்க வேண்டியதில்லை. 14-வது வாரம் என்பதால் முகினைத் தவிர எல்லாரும் நாமினேஷன்ல இருக்கீங்க” என்றார். கவின் “சொன்னேனா.. சொன்னேனா..” என்றார்.

“இப்ப எல்லாரும் தண்ணி குடிச்சுட்டு ஸ்வீட் சாப்பிட்டுட்டு உங்க அன்றாட வேலைகளை கவனிங்க” என்றார் பெரிய முதலாளி.

என்ன விளையாட்டு இது.. குருநாதா… பிக்கி… என்ன இது… என்று ஆளாளுக்குக் கத்திக் கூச்சலிட்டு கலைந்தனர்.

13 வாரங்களின் முடிவைக் கொண்டாடுங்கள் என்று ஸ்பான்சர் அசைன்மெண்டாக தினமும் ஒரு உணவு வகையை சமைக்க வேண்டும் என்று ஐட்டங்களை அனுப்பினார் பிக்பாஸ். “இதென்ன குருநாதா பித்தலாட்டம்” என்றார் தர்ஷன். சாண்டிதான் செஃப் என்று டிரஸ் அனுப்பியிருந்தார் பிக்பாஸ்.

சாண்டி எல்லாரையும் கலாய்த்துக் கொண்டே இருந்தார். “டீத்தூள் கொட்டாமப் போடுங்க. கையக் கழுவினீங்களா.. இதை இங்க வை.. அதை அங்க வை” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்க தர்ஷன் “டே செஃப்.. ஸாரி.. செஃப் இங்க பாருங்க” என்று ஒரு ஐயத்தைக் கேட்டார்.

சரவணனுக்கும் மதுமிதாவுக்கும் சமையல் சம்மந்தமாக நடந்த சண்டை நினைவுக்கு வந்தது. இங்கே அந்த மாதிரி எந்தச் சண்டையும் நடக்கவில்லை. நட்புதான் காரணம் என்று லாலாலா பாடவேண்டியதில்லை. யாருக்காவது சமைக்கத் தெரிந்தால்தானே பிரச்னைகளெல்லாம். இங்கேதான் ஒருவருக்கும் சமைக்கத் தெரியாதே. அப்பறம் என்ன… எதையாவது செய்து சாப்பிட்டு வயிற்றை ரொப்பிக்கொள்ள வேண்டியதுதான்.

Housmates cooking

புலாவ் பழிவாங்கல்

’பேர் அப்பறம் வெச்சுக்கலாம்’ என்றொரு ஐட்டத்தைச் செய்து கொண்டிருந்தார்கள். செய்துவிட்டு “மொளகாய்த்தூள் வேண்டாமா…” “யப்பா. ஒரு பத்து முட்டை எடுத்து உடைச்சு அதுல ஊத்து” என்று சொல்லிக்கொண்டிருந்தார் செஃப் சாண்டி.

“செஃப்னு பாக்கறேன். இல்லைன்னா அடி வெளுத்துடுவேன்” என்றார் தர்ஷன். முகின் புலாவைக் கிளறிக்கொண்டிருந்தார். கவின் “என்னடா குழி தோண்டி உள்ள ஏதோ தேடிட்டிருக்க?” என்று கேட்டார். எல்லாம் செய்து முடித்தபிறகு, சாப்பாட்டுக்கு உப்பு என்கிற ஒரு சமாச்சாரம் தேவை என்பதை சரித்திரத்தில் முதன்முறையாக கவின் கண்டுபிடித்தார். கலர் வரவில்லை என்று மிளகாய்த் தூள் கொட்டினார்கள். இவர்கள் செய்த சாப்பாட்டை பார்டருக்கு அனுப்பினால் தீவிரவாதிகள் சாப்பிட்டு செத்துப் போவது உறுதி என்பது அந்த ஐட்டத்தைக் கண்ணால் பார்த்த எனக்கே தெரிந்தது. ஒரு கட்டத்தில் கேமராக்களே ‘ச்சை என்ன கருமம்டா இது’ என்று முகத்தைத் திருப்பிக் கொண்டன. ‘வேண்டா வெறுப்பாக புள்ள பெத்து காண்டாமிருகம்னு பேரு வச்சானாம்!’ என்று லட்சுமியக்கா அடிக்கடி சொல்வார். அதுபோல இவர் செய்த ஐட்டத்திற்கு புலாவ் என்று பெயர் வைத்தார்கள். செய்த சோதனைகள் பத்தாது என அதற்கு லெமன், மிளகாய் வைத்து அலங்காரம் வேறு செய்தார்கள். அதை பிக்பாஸுக்கு வேறு ஸ்டோர் ரூமில் வைத்து சர்ப்ரைஸ்ஸ்ஸ் என்றார்கள். பச்சை மிளகாய் டாஸ்க்கிற்கு ரிவென்ஜ் போல. நாளைக்கு பிக்பாஸ் குரல் வராது என்று நினைக்கிறேன். அப்போலோ அறிக்கைக்காக வெய்ட்டிங்.

Pulav

அந்த சமாச்சாரத்தை சமைத்தது எல்லாரும் என்றாலும் செஃப் என்பதால் சாண்டியின் இரு கரங்களையும் பின்புறமாகக் கட்டினார்கள். கை கால் எல்லாம் கட்டினார்கள், “எனக்கு என்ன ஆனாலும் பரவால்ல. நீங்க பட்டினியா இருக்கக்கூடாது” என்றார் சாண்டி. அவரை ஒரு நாற்காலில் அமர வைத்து காலையும் கட்டினார்கள். “இவன் வேற லெவல்ல சமைக்கறான். இவன் டேஸ்ட் உலகம் பூரா பரவுதுன்னு என்னை இப்டிக் கட்டிப் போடறீங்க” என்றார் சாண்டி. செஃப் தொப்பியை தர்ஷன் தட்டிவிட “ந்ந்ந்ந்நோஓஓஓஓ” என்று கத்தினார் சாண்டி. “ராணுவ வீரனுக்கு தொப்பி எப்படி முக்கியமோ அப்படி எனக்கு அது” என்று ப்ளீஸ் ப்ளீஸ் என்று நடித்தார். ஷெரின் பாவமே என்று தொப்பியை மாட்டிவிட்டார்.

கால் கட்டு கை கட்டு…!

மாலை 5.15. வீட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் நேரம். ’போட்டிக்கு முகின் ஒருவர். இன்னும் இருவரைத் தேர்ந்தெடுங்கள்’ என்றார் பிக்பாஸ். கவின், சாண்டி, முகின் மூவரும் தலைவர் போட்டிக்குத் தேர்வானார்கள். ப்ளாஸ்டிக் Wrap கொடுத்தார் பிக்பாஸ். தோள் பட்டையிலிருந்து அந்த ப்ளாஸ்டிக் Wrap-ஐ கட்டிக் கொள்ளவேண்டும். ஆக்டிவிட்டி ஏரியாவில் மஞ்சள் கோடு போடப்பட்ட இடத்திலிருந்து இன்னொரு பக்கம் சிவப்புக் கட்டம் போடப்பட்ட இடம் வரை வந்து, அந்த சிவப்புக் கட்டத்துக்குள் எழுந்து நிற்கவேண்டும் என்பது டாஸ்க்.

Biggboss 3 Task

மூவரும் கட்டப்பட்டனர். ம்யூச்சுவல் ஃபண்ட் காய்ன்கள் அடிப்படையில் முகினுக்கு ஒரு சின்ன சலுகை கொடுக்கப்பட்டு மற்ற இருவரைவிட முன்பே நகரத் தொடங்கலாம் என்றார் பிக்பாஸ். அதன்பிறகு அடுத்த பஸ்ஸருக்கு சாண்டியும் கவினும் நகர்ந்தனர். சிவப்புக் கட்டத்துக்குள் சீக்கிரமே சென்று சேர்ந்தவர்கள் எழுந்து நிற்க மிகுந்த சிரமப்பட்டார்கள். என்ன செய்தும் முடியவில்லை. சாண்டி டான்ஸ் மாஸ்டர் என்பதால் ஹிப் ஹாப் ஸ்டைலில் கால்களால் ஜம்ப் செய்ய முயன்றார். இரண்டு முறை முயன்று முடியாமல் முடங்கினார். ஒரு கட்டத்தில் சாண்டிக்கும் கவினுக்கும் கட்டு இளகி கை ஃப்ரீயாகிவிட்டது. இதற்கு மேல் போட்டிபோடுவது அறம் அல்ல என்பதால் இருவருமாக, முகின் எழுந்து நிற்க துணையாக / அணையாக உதவினர். முகின் கேப்டன் ஆனார்!

அடுத்து விரிவாக விளக்கத் தேவையில்லாத இன்னொரு ஸ்பான்சர்ஷிப் டாஸ்க். இரண்டு அணிகளாகப் பிரிந்து துணி துவைத்தனர். “இன்னும் ரெண்டு வாரம்தான் இருக்கு. ஃபைனல்ஸ் வேற கிராண்டா நடத்தணும். என்ன பண்ணிட்டிருக்கீங்க நீங்கள்லாம்?” என்று அட்வர்டைசிங் டீமுக்கு டோஸ் விழுந்திருக்கும் என்பதை உணரமுடிகிறது.

இன்னும் என்னெல்லாம் காத்திருக்கோ!

Housemates

Bigg Boss Trivia

கிரீஸில் வெளியான பிக்பிரதர் நான்காவது சீசனில் பிக்மதர் என்று ஒரு கான்செப்டைக் கொண்டு வந்தார்கள். அதாவது 9 போட்டியாளர்களும் தத்தமது அம்மாவோடு நிகழ்ச்சியில் பங்கெடுக்க வேண்டும் என்றார் பிக்பாஸ். போட்டியாளர் எவிக்ட் ஆகும் பட்சத்தில், அவரது அம்மாவும் வெளியே செல்வார். பரிசு, போட்டி, டாஸ்க், விதிகள் எல்லாமே 9 பேருக்குத்தான். போட்டியாளரின் அம்மா, ஆதரவுக்காகத்தான் இவர்களுடன் இருப்பார்.

எங்கேயும் எப்போதும் செல்லுபடியாகும் அம்மா செண்டிமெண்ட் என்று நம்பி இதைச் செய்தார்கள். பப்பு வேகவில்லை. ஆடியன்ஸ் எல்லாம் டிஸ்லைக் பட்டனை அழுத்த, மீண்டும் பழைய ஃபார்மெட்டுக்கே டிக் அடித்தனர் நிர்வாகத்தினர்.