கமல் தினம்! கமல் முகினை நேரடியாகவே வார்ன் செய்தார்; கூடவே அபிராமி யையும்! இடையில் வந்த கஸ்தூரியின் கணிப்புகள், முன் முடிவுகள் ஆகியவை குறித்துக் கேட்டார் கமல். உள்ளே நடந்ததை விரிவாகப் பார்க்கலாம்!

அபிராமி

அமைச்சர் – தளபதி – ஒற்றன்

சாண்டி உள்ளே இருப்பது அதிகாலைப் பாடல் நடனத்தை இன்னும் சுவாரஸ்யமாக்குகிறது என்பேன். அவர் இன்று ’எங்க வீட்டுக் குத்துவிளக்கே’ பாடலுக்கு ஆன் ஸ்பாட்டில் நடனமமைக்க ஓரிருவர் தவிர பிற எல்லாரும் ஆடியது கண்கொள்ளாக் காட்சி.

கஸ்தூரி புதிதாக உள்ளே வந்ததைக் குறிப்பிட்டு அரசியல் பஞ்ச் அடித்தார் ஆண்டவர் கமல். பிக் பாஸ் வீடாக்கட்டும், அரசியலாகட்டும் புதியவர்கள் வரத்தான் செய்வார்கள். முதலில் இருந்தவர்கள் செய்த தவறுகளும், அதற்கு மக்களின் ரெஸ்பான்ஸ் என்னவென்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்” என்று சொல்லிவிட்டு “நான் அகத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்” என்று அடித்த பஞ்ச்சுக்கு, இடைவெளி விடாமலே கைதட்டல்கள் பறந்தன.

ஷெரின் | சாண்டி

 

சாண்டியின் ராஜ்ஜியத்தில் கவின் அமைச்சர், தர்ஷன் தளபதி, முகின் ஒற்றன் என்று அழைத்துப் பேசிக்கொண்டிருந்தது செம ஜாலி கேலியாக இருண்டது. அது முடிந்து இன்னொரு விளம்பரதாரர் நிகழ்ச்சி. மாடலிங் வாக். தர்ஷன் – ஷெரின், சாக்சி – சாண்டி, கவின் – லாஸ்லியா, முகின் – அபிராமி, சேரன் – மதுமிதா என்று ஜோடிகளாகச் சென்று கலக்கினர். அதிலும் தர்ஷன் அதர்வாவுக்குத் தம்பி போலவே இருந்தார். டாப்லெஸ்ஸாக தர்ஷன் நடந்த நடைக்கும் போஸுக்கும் நேற்று அவருக்கு ரசிகர் / ரசிகை படை இருமடங்காக ஆகிருக்கும். ஆண்களில் தர்ஷனையும் பெண்களில் சாக்‌ஷியையும் சிறந்தவர்களாகத் தேர்வு செய்தார் கஸ்தூரி.

சாண்டியை அழைத்த பிக்பாஸ், சாக்‌ஷி, அபிராமி, லாஸ்லியா மூவரும் வெளியேறுவதற்கான பாட்டைத் தயார் செய்யச் சொன்னார். “அப்ப மூணு பேர்ல ஒருத்தங்க போய்டுவாங்கள்ல?” என்று கேட்ட சாண்டியிடம் “நீங்க போலாம் சிஷ்யா” என்றார் பிக் பாஸ்.

சாக்‌ஷிதான் ஷெரினைப் பற்றி புகார் செய்வார் என்று எதிர்பார்த்து எழுதியிருந்தேன். ஆனால் ட்விஸ்டாக ஷெரின், சாக்‌ஷியைப் பற்றி சேரன், மதுமிதாவிடம் புகார் செய்து கொண்டிருந்தார். அது நியாயமான புகாரும் கூட. உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தன்னை சாக்‌ஷி கண்டுகொள்ளவில்லை என்பதுதான் அவரது கவலை. “ஆறேழு வாரமா அவளுக்கு எல்லாமுமா இருக்கேன். எனக்கு ஒண்ணுன்னு வந்தப்ப கண்டுக்க மாட்டீங்கறா. நான் அவகிட்ட இருந்து வேணும்னே விலகறேன். அதையும் ஏன்னு வந்து கேட்க மாட்டீங்கறா” என்றார் ஷெரின். சாக்‌ஷி போற நேரத்துல நீயும் ஏன்மா அவங்களை சங்கடப்படுத்தி அனுப்பறீங்க!

கஸ்தூரி டபுள் ஆக்டிங்குகள்!

இடைவேளைக்குப் பின் வந்த கமல் கஸ்தூரியை வரவேற்க, அவர் சாமர்த்தியமாக நம்மையும் குழப்புவது போல “வெளில இருந்து பார்க்கறது வேற. உள்ள வேற மாதிரி இருக்கு சார்” என்றார். கமல் “அப்ப சுவாரஸ்யம் காத்திருக்கா?” என்று கேட்டார்.

கஸ்தூரி

லட்சுமியக்கா டிவியை பாஸ் செய்துவிட்டு என் வீட்டுக்கு வந்தார். “ஏங்கண்ணு.. கஸ்தூரி வெளில டெய்லியும் பார்த்துட்டு உள்ள வந்திருக்கு. உள்ள போய்ட்டு, வெளில பாக்கறது அப்படியே தலைகீழா இருக்குனு சொல்லுது. அப்படின்னா, நமக்கு டிவில காட்றதெல்லாம் பம்மாத்தா?

“பம்மாத்துன்னா?”

“அதான்.. மீரா அடிக்கடி சொல்லுமே”

“போர்ட்ரே…”

“ஆங். அதான். தப்பா போர்ட்ரே பண்றாங்களா… ?”

”தெர்ல லட்சுமிக்கா.. ஆனா கஸ்தூரி சொல்றத அப்டியே எடுத்துக்கிட்டா நீங்க சொன்னது சரிதான். ஆனா சமைக்கத் தெரியும்னு சொல்லிட்டு, பொங்கல்ல கடலப்பருப்பப் போடற கஸ்தூரியையும் நம்ப முடியாது. நம்மளைக் குழப்பறதுக்குனே அந்தம்மா அப்டிச் சொல்லிருக்கலாம்” என்றேன்.

”அதுஞ்சரிதாம்ப்பா” என்று சொல்லிவிட்டு மீண்டும் ஹாட்ஸ்டார் பார்க்கப் போனார் லட்சுமியக்கா.

கமல் கஸ்தூரியிடம் பேசுவது கேட்டபோது ஏற்கெனவே கூப்பிட்டுப் பேசியிருக்கிறார்கள் என்று தெரிந்தது. “ஒவ்வொருத்தருக்கும் ஒரு பட்டப்பேர் சொல்லுங்க” என்று கமல் சொன்னபோது “அத நீங்களே வந்து கேட்பீங்கனு எதிர்பார்க்கல சார்” என்றார் கஸ்தூரி. அப்ப யாரோ ரெடி பண்ணச் சொல்லிருக்காங்க. அப்டித்தானே?

சரி இனி கஸ்தூரி வைத்த பட்டப்பெயர்கள்.

மதுமிதா – தமிழ்ப்பொண்ணு
அபிராமி, சாக்சி, ஷெரின் – லூஸுப்பொண்ணு 1,2,3
சேரன் – Care-ன்
லாஸ்லியா – தங்கச்சிலை
முகின் – மொக்க ஜோக் முகின்
சாண்டி – கவின்: 5,6,7,8. (ஆமா அப்டின்னா என்ன?)

ஷெரின்

தர்ஷன் பெயரைச் சொன்னபோது ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் அரங்கம்தாண்டி கேட்டது. ஆனால் அவருக்கு கஸ்தூரி பட்டப்பெயர் எதையும் குறிப்பிடவில்லை. “அவர் சட்டை போட்டாலும் சட்டை போடாவிட்டாலும் சட்டை செய்ய வெளியில் ஒரு ரசிகர் படை இருக்கு” என்று நீள நீளமாகப் பேச கமலே ஒருகணம், “ஷரவணா… நீ என்ன எனக்கு முன்னாடி போற?” என்று விவேக் தனுஷைப் பார்ப்பது போல ஒரு லுக்கு விட்டார். அடுத்த எபிசோட் இறுதியிலும் ஹீரோவாக தர்ஷன் – ஷெரின், ஜீரோவாக கவின், ஸ்டிராங் போட்டியாளராக சாண்டியைத் தேர்வு செய்தார் கஸ்தூரி, அப்போதும்”குத்துவிளக்குகிட்ட இருந்து.. குத்துடான்ஸ் மாஸ்டருக்கு குத்துச்சண்டை கிளவுஸ்” என்று மொக்கை போட்டு, கமலுக்கு டஃப் ஃபைட் கொடுத்தார்.

வார்னிங் டூ அபிராமி

முகின் கட்டிலை உடைத்தது குறித்து உரையாடல் ஓடியது. அபிராமி மிக ஓபனாக “ஐ லவ் ஹிம்” என்று அறிவித்தார். சேரன் அதுகுறித்து சொல்லும்போது “அவர் இப்போது அப்படிச் சொன்னது ஷாக்காக இருந்தது” என்றார். ”உங்களுக்குப் பிடிச்ச ஒருத்தரோட வெற்றிக்கு நீஙக் தடையா இருக்கக்கூடாது” என்று கமல் கேட்டுக்கொண்டார். அபிராமி “ஓகே சார்” என்று சொல்ல “அப்ப விலகி இருக்கணும்” என்று சட்டென்று சொல்லி ஷாக் கொடுத்தார். அபிராமி உடைந்துபோய் “சரி” என்றார். அதன்பிறகு ஏதோ பேசிக்கொண்டிருக்கும்போதும் அழுதார் அபிராமி. “எல்லாரும் சொல்ட்டாங்க. நானும் சொல்றேன். அழறத நிப்பாட்டுங்க. ஸ்விம்மிங் பூலை காலி பண்ணிட்டோம். உங்க கண்ணீர்த் தொட்டியைக் காலி பண்ண முடியல” என்றார் கமல்.

அபிராமி | லாஸ்லியா

அடுத்ததாக ஹவுஸ்மேட்ஸ் தாங்கள் ஏஞ்சல் என்று நினைக்கும் நபருக்கு ஏஞ்சல் கிரீடமும், சாத்தான் என நினைக்கும் நபருக்கு டெவில் கிரீடமும் சூட்ட வேண்டும் என்றொரு விஷயத்தைச் சொன்னார் கமல். ஷெரின் 3 ஏஞ்சல் கிரீடங்களைச் சம்பாதித்தார், சாக்‌ஷி, கவின், கஸ்தூரி, அபிராமி என்று சில இரண்டு டெவில் கிரீடங்களை ஹவுஸ்மேட்ஸால் பெற்றனர்.

கேப்டன்ஷிப் போட்டியில் சேரன் வெற்றிபெறுவார் என்று எதிர்பெற்றதாகச் சொன்னார். அதில் தோற்றது கொஞ்சம் ஏமாற்றம்தான் என்றார். சாண்டி, செந்தமிழில் பேசுவதைப் பாராட்டினார்.

சரவணன் போன அடுத்தநாள் “உங்களுக்கு சனிக்கிழமை உண்மை தெரியவரும்” என்றாரே பிக் பாஸ்? அது என்ன ஆச்சு? நாளைக்குத்தான் சொல்வீங்களா? நாளை வெளியேறப்போகிறவர் சாக்‌ஷி என்றொரு பட்சி சேதி சொல்லிப் பறந்ததே அது உண்மையா?

யாருமே எவிக்டட் இல்லை. நம்ம போட்ட ஓட்டையெல்லாம் பெரிய முதலாளி ‘நிராகரிபாப்பு’ செஞ்சுட்டாராமே சாரோ என்று கட்டுரை முடிக்கும் தருவாயில் வந்து சொன்னார் லட்சுமியக்கா. அழுகையும் டிஅர்பியும் ரெட்டைக் குதிரை பூட்டப்பட்ட வண்டி என்பதால், அதை இழக்க யாருக்குத்தான் யோசனை வரும்.

கமல்

இன்னும் பல கேள்விகளுக்கு நாளை விடை கிடைக்கும் என்று நம்புவோம்!

Bigg Boss Trivia

இங்கே சரவணன் எப்போதோ பஸ்சில் உரசிய சம்பவத்தைச் சொல்லி தனக்குத் தானே ஆப்பு வைத்துக்கொண்டார். ஆஸ்திரேலிய பிக்பிரதர் சீசன் 6ல் இரண்டு போட்டியாளர்கள் பெண் போட்டியாளர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதற்காக வெளியேற்றப்பட்டனர்.
Turkey slap incident (அப்டினா என்னானு நீங்களே தேடித் தெரிஞ்சுக்கங்க!) என்று அழைக்கப்படும் அந்த நிகழ்வு பிக் பிரதர் வரலாற்றிலேயே மோசமான பாலின அத்துமீறலாகப் பார்க்கப்படுகிறது.