இன்னும் இரண்டு நாட்களில் ஃபைனல். உச்ச நாட்களுக்கு வந்துவிட்டதால் எல்லாம் பேக் செய்துவைத்துவிட்டு அமைதியாக டாக்ஸிக்குக் காத்திருப்பது மாதிரி இருக்கிறது வீடு. வீட்டில் பெரிதாக ஆக்டிவிட்டி எதுவும் இல்லை.

Dont Worry… Be Sandy!

இறுதிச் சுற்றுக்கு வந்த போட்டியாளர்கள் எல்லாரையும் வரிசையாகப் பார்த்ததில் லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்… சாண்டி!

ஒவ்வொரு சீசனிலும் ஒரு பேட்டர்னில் ஆட்களைத் தேர்வு செய்வார்கள். நடிகர், நடிகை, தொலைக்காட்சி பிரபலம் என்று கலந்து கட்டிய லிஸ்ட்டாக அது இருக்கும். அந்த லிஸ்ட்டில் வெட்டியாக புரட்சிபேசும் ஆட்கள், கொஞ்சம் பிற்போற்கானவர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், டோண்ட் கேர் ரக ஆட்கள் என்று எல்லா குணாதிசயங்களும் கலந்திருக்கும். காமெடிக்காகவே சிலரைச் சேர்ப்பார்கள். ‘இவங்க இருந்தா ஷோ ஜாலியா இருக்கும்ப்பா’ என்று. ஆர்த்தி, தாடி பாலாஜி, டேனி எல்லாரும் அந்த வகைதான். அந்த வகையில் இந்த முறை சாண்டி போட்டியாளராகப் போய் செய்தது… ஒரு போட்டியாளர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான உச்சம்.

ஆரம்பத்தில் மட்டுமல்ல கடைசி வரையுமே பாபா மந்திரம்தான் சாண்டி. தாமரை இலை தண்ணீர் போல… ஒட்டி ஒட்டாமலிருந்தார். கவினுடன் மட்டும் நெருக்கம் காட்டினார். காரணம் இருவருக்கும் வெளியில் கொஞ்சம் இருந்த நட்பு. அது அழுத்தமாக வேரூன்றி கவின் வெளியேறிய அன்று கலங்கி அழுமளவு ஆழமாக மாறியது.

Sandy

சாண்டியைப் பற்றி என்னுடைய மைனஸ் பாய்ன்ட் ஒன்றுதான். ஆரம்பத்தில் சேரனை அவர் நடத்திய விதம். அதில் சரவணன், சாண்டியை இன்ஃப்ளூயன்ஸ் செய்துவிட்டார் என்பேன். மதுவுடன் நடந்த சண்டை இன்னொரு சாண்டி நெகடிவ் மொமன்ட். ஆனால் அதிலும் சண்டை நடந்த அன்றே ‘ஆத்தா மன்னிச்சுடு ஆத்தா’ என்று தன் ஸ்டைலிலேயே கிண்டலாகச் சொல்லி அந்தக் கசப்பை அன்றே தீர்த்தார். எதிலும் கலந்து கொள்வதில்லை என்றாலும் வனிதா நடந்துகொள்ளும் விதத்தில் இவருக்கு சங்கடம் உண்டு. அதை ஹவுஸ்மேட்ஸிடம் பேசியிருக்கிறார். கவினிடம் “ரொம்பப் பண்றடா நீ’ என்று கடிந்து கொண்டிருக்கிறார். மீராவின் செயல்களை அவரிடமே சொல்லியிருக்கிறார்.

டாஸ்க் கொடுக்கப்படாவிட்டாலும் இவராக எதையாவது செய்து சிரிக்கவைத்துக் கொண்டே இருக்கிறார். சட்டென்று உணர்ச்சி வசப்பட்டு அழுதுவிடுகிறார். வீட்டை ரொம்பவும் மிஸ் செய்வதை அவரது செய்கைகளிலிருந்தே காண முடிகிறது. பெண் போட்டியாளர்களிடம் மிக கவனமாக நடந்துகொள்கிறார். மொத்தத்தில் சாண்டி ஒரு ரியல் சர்ப்ரைஸ் பேக்கேஜ்!

இனி இன்றைய நிகழ்ச்சி

அதிகாலைப் பாடலுக்கு ஆட்டங்கள் முடிந்து முற்பகலில் மீண்டும் பாடல் ஒலித்தது. இந்த சீசனின் மற்ற போட்டியாளர்கள் (இப்பதான்மா ரெண்டு நாள் முந்தி வந்துட்டுப் போனீங்க!) மீண்டும் உள்ளே வந்தனர். கவின், தர்ஷன் தவிர எல்லாரும் வந்திருந்தார்கள். கவினையும் தர்ஷனையும் எதிர்பார்த்து சாண்டி, முகின் கேட் அருகிலேயே நின்றுகொண்டிருந்தார்கள். ஆனால் வந்தது அவர்களைத் தவிர மற்ற எல்லாரும்.

பரஸ்பர நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு விளம்பரதாரர் நிகழ்ச்சி. இறுதிச் சுற்றுக்கு வந்திருக்கும் நால்வரும் வீடியோ காலிங் மூலமாக வீட்டில் உள்ளவர்களுடன் பேசிக்கொள்ளலாம் என்றார் பிக்பாஸ். ‘மஜாக்கோ மால் டஜாக்கோ டால்’ என்று சாண்டி அதி உற்சாகமானார்.

Sherin

முதலில் ஷெரின் அவரது அம்மாவுடன் பேசினார். சேரன் தனக்கு வாங்கிக் கொடுத்த புடவையை அணிந்திருந்தார். தன் செல்லப்பிராணி ‘ஏகர்’ எப்படி இருக்கிறானென்று மிகவும் விசாரித்தார். ஏகரை ரொம்ப மிஸ் செய்வதை அவர் பேசியதிலிருந்து தெரிந்தது. குடும்ப உறுப்பினர்கள் வரும்போது ஏகரும் வருவான் என்று எதிர்பார்த்ததைச் சொன்னார். சேனலும் அதற்கு முயற்சி செய்ததாக அம்மா சொன்னார். பேசப் பேச அழுதார்.

ஃப்ரெண்டைப் போல…

மாலை, ஃப்ரெண்டைப் போல யாரு மச்சான் ஒலிக்க எல்லாருமே மகிழ்ச்சியாக கேட் அருகே சென்றாலும் சாண்டியும் முகினும் உச்சபட்ச மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கேட் அருகேயே நின்று கொண்டு கதவு திறந்ததும் சாண்டி அந்தப் பக்கம் போய் கவினைத் தூக்கினார். தர்ஷனை முகின் தூக்கினார். கன்னா பின்னாவென்று பொங்கி வழிந்தது நட்பு. கொஞ்ச நேரத்துக்கு ஃப்ரெண்ட்ஷிப் தவிர எதுவும் அங்கே வெளிப்படவில்லை.

Kavin and Housemates

கவின் வருகை இன்று இருக்கும் என்றே லாஸ்லியா கிளிப்பச்சை புடவையும் டார்க் பிங்க் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுமாய் ரொம்பவுமே அழகாக இருந்தார். 😍 கவினுடன் தனியாகப் பேசும்போது முகத்தில் அத்தனை காதல். கவின் ‘நாம மட்டும்தான்.. நாம மட்டும் உண்மையா இருந்திருக்கோம்” என்றார் லாஸ்லியாவிடம். அப்ப சாண்டி, கவின்? லவ்வு வந்தா ஃப்ரெண்ட்ஷிப்ப கட் பண்றீங்களேடாப்பா!

ஷெரின் தர்ஷன் இருவரும் தனியே அமர்ந்து பேசினர். தர்ஷன் “வனிதா சொல்றதைலாம் பத்திக் கவலைப்படாத. நான் வெளில போக யாரும் காரணமில்ல. நான் போக நான் மட்டுமே காரணம். யாரும் அல்ல. அதனால எதைப் பத்தியும் கவலப்பாடாம விளையாடு.” என்றார்.

Losliya and Kavin

முகின், அவர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கும் ‘எட்வின் அண்ணா’வோடு பேசினார். முகின் ஃபைனலிஸ்ட் ஆனதற்கு எட்வின் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருக்கிறார் என்பதை உணரமுடிந்தது. அவரும் ஃபைனலுக்கு வருவேன் என்றார்.

சாண்டி அவரது மகள், மனைவியுடன் பேசினார். லாலா என்று உருகி வழிந்தார். மனைவியிடம் ‘கொஞ்சம் கேமராவைத் தள்ளி வை. க்ளோஸப் வேணாம்மா. முகத்தை பக்கத்துல காட்டாத. பயமா இருக்கு” என்று கிண்டல் செய்தார். “நாங்க ரொம்ப Proud-ஆ இருக்கோம்” என்று அவர் மனைவி சொல்லவும் “பவுடர் போட்டுட்டிருக்கீங்களா?” என்றார்.

Sherin and dharshan

அழுவாச்சி காவியம்

லாஸ்லியா அவரது அப்பாவுடன் பேசினார். “யார் சொல்றதப் பத்தியும் கவலப்படாதீங்க. ஒங்களுக்கு என்னைப் பத்தி தெரியும்தானே. என்னை நம்புங்க. நான் வந்து பேசறேன்” என்று திரும்பத் திரும்ப சொன்னார். அவரது அப்பா “சரி.. ஒடம்பப் பார்த்துக்க” என்றார். இன்று அவர் வெளிநாட்டுக்குப் போவதாகச் சொன்னார். ஃபைனலிஸ்ட்டைப் பொறுத்தவரை, இப்போது வீடியோ கால் பேசிய மற்ற எல்லாரும் ஃபைனல்ஸுக்கு வருவார்கள். லாஸ்லியாவின் அப்பா தவிர. அதை நினைக்கும்போது எனக்குமே கொஞ்சம் வலிக்கத்தான் செய்தது!

வீடியோ கால் முடிந்ததும் சாண்டி அழுதது; லாஸ்லியா அழுதது இரண்டும் முடிந்ததும் அப்படியே அழுகையைத் தொடர்ந்தார் பிக்பாஸ். வீட்டில் இந்த 100 நாளில் நடந்த அழுவாச்சி காவியங்களை எடிட் செய்து ஒரே காணொளியாகப் போட்டார். ரொம்ப நேரம் அது ஓட எல்லாரும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அமர்ந்திருந்தனர். எல்லாரையும்விட அபிராமி ரொம்பவே உடைந்து உடைந்து அழுதார். 😑

யோகா வகுப்புகளில் இப்படியான உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் க்ளாஸ் இருக்கும். அது முடிந்ததும் இந்த உலகத்திலேயே அவர்கள்தான் திருந்திய ஜென்மங்கள் என வித்தியாசமாக உணர்வார்கள். யார் மீதும் பகை இருக்காது. மனம், மழை பெய்து முடித்த வானம் போல பளீர் என்று இருக்கும். இங்கேயும் அப்படி எல்லாரும் ஒருவருக்கொருவர் கட்டிக்கொண்டனர். தர்ஷன் வனிதாவிடம் வந்து ஸாரி சொன்னார். மோகன் வைத்யா அங்கேயும் இங்கேயும் பார்த்து எல்லாரும் பிஸியாக இருந்ததால் சேரனிடம் வந்து லவ் யூ சொன்னார். அப்படியே அடுத்து ஃபாத்திமாவிடமும் பேசினார்.

Losliya

பிக்பாஸ் ”உங்க எல்லாரையும் மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி. நீங்க எல்லாரும் கடைசி முறையா மெய்ன் டோர் வழியே வெளில வரலாம்” என்றார்.

(மிஸ்டர் அர்ஜூன்… ’எல்லோரும்’ என்பதுதான் சரி. செந்தமிழில் ‘எல்லோரும்’ என்றுதான் எழுதவேண்டும், பேச்சு வழக்கில் அது எல்லாரும் என்று எல்லோரும் பேச, எல்லாரும் ஆகிவிட்டது!)

எல்லோரும் கட்டிப்பிடித்து அழுதுகொண்டே பை பை சொல்லிக் கொண்டனர். முகினிடம் ‘விளையாட்டுதாண்டா முடியப்போகுது. வெளில வாங்க. பார்த்துக்கலாம்” என்றார் கவின். இத்தனை அன்பும் இத்தனை வாஞ்சையும் இத்தனை கருணையும் இத்தனை பரிவும் இத்தனை பாசமும் இத்தனை நட்பும் இத்தனை இத்தனையும் வாழ்நாளுக்கும் இவர்களுக்குள் தொடரவேண்டுமே என்று தோன்றியது.

நள்ளிரவு 12.30-க்கு லாஸ்லியா பிக்பாஸுக்கு நன்றி சொன்னதோடு இன்றைய எபிசோட் முடிந்தது. மொத்தத்தில் இந்த எபிசோடு மொத்தமாகவே ஓவர் எமோஷனலாக இருந்தது. குடும்பத்தினருடன் பேசிய ஹவுஸ்மேட்ஸ், பழைய நினைவுகளை குறும்படங்கள் மூலம் அசைபோட்ட சீனியர்ஸ், இறுதியாகப் பேசி தீர்த்த பொழுதுகள் என நட்பு, காதல், அன்பு என வெவ்வேறான உணர்வுகளைப் பிரதிபலித்தனர் போட்டியாளர்கள். தங்கள் நினைவுகளை அசைபோட்டு அனைவரும் அழுதது இறுதியை நெருங்கிவிட்டோம் என நமக்கும் உணர்த்தியது.

இருக்கும் நால்வரில் வாக்கு எண்ணிக்கையின்படி, கடைசி இடத்தில் இருக்கும் ஒருவரை இன்றைக்கு கமல் வெளியே அழைத்து மேடை வழியாக வெளியேற்றிவிடுவார். மற்ற மூவரையும் நாளை ஃபைனல் நிகழ்ச்சிக்கு வீட்டிலிருந்தே மேடைக்குக் கொண்டு வருவார்கள். மேடையில் வின்னர் அறிவிக்கப்படுவார். ஆக நம் இந்தப் பயணம் நாளை கடைசி!

Housemates

Bigg Boss Trivia

பிக்பாஸ் வரலாற்றில் தென்னாப்பிரிக்காவில் நடந்த சீசன் ஒன்றிலும் பிரேசிலில் நடந்த சீசன் ஒன்றிலும்தான் வல்லுறவு குற்றத்திற்காக ஹவுஸ்மேட்ஸ் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். தென்னாப்பிரிக்கா சீசனில் பெண் போட்டியாளருடன் ஆண் போட்டியாளர் தவறாக நடந்துகொண்டது கேமராவில் பதிவாகியிருந்தது. அடுத்தநாள் அந்த ஆண் போட்டியாளர், தான் அந்தப் பெண் போட்டியாளருடன் உறவில் இருந்ததாக எல்லாரிடமும் சொல்லிவந்திருக்கிறார். பெண் போட்டியாளருக்கும் இந்தச் செய்தி போக அவர் என் சம்மதமில்லாமல் அப்படி நடந்துகொண்டார் என்று சக ஹவுஸ் மேட்ஸிடம் சொல்லியிருக்கிறார். அந்நாட்டுச் சட்டப்படி உடனே அந்த ஆண் போட்டியாளர் வெளியேற்றப்பட்டார். அந்தப் பெண் பிறகு அவராக வெளியே போக விருப்பம் தெரிவித்து போனார்.

பிரேசிலில் ஒரு ஆண் போட்டியாளர், சக பெண் போட்டியாளரைத் தொடர்ந்து பின்தொடர்ந்து (வீட்டுக்குள்ளதான்!) உறவுக்கு அழைத்து டார்ச்சர் செய்வதாக பார்வையாளர்கள் கொந்தளிக்க… பிரேசில் போலீஸ் தலையிட்டு அந்த ஆண் போட்டியாளரை வெளியேற்றியது!