ஷெரின் வனிதா மனவருத்தம் இன்னும் அழுத்தமானதும், விருது என்ற பெயரில் பிக் பாஸ் வீட்டுக்குள் சண்டை மூட்டி விட்டதும் இன்றைக்குப் பேசுபொருள்களாயின.

ஏறி இறங்கும் கிராஃப்

அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது பிக் பாஸ் வீடு. எவரது உணர்வுகளையும் மதிக்காமல் தன் உணர்வே முக்கியம், தான் சொல்வதே சரி என்று தன்னிச்சையாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கும் வனிதாவை பிக் பாஸ் கண்ட ரூல்ஸையும் காரணம் காட்டி அனுப்பியதும் அதற்காகத்தான். சாக்‌ஷி இருக்கும்போது ஒருமுறை வனிதாவைப் பற்றிப் புலம்பியிருக்கிறார். மோகன் வைத்யா, ஓடிப்பிடித்து ஸ்டிக்கர் அடித்த டாஸ்கில் வனிதாவால சங்கடத்துக்கு உள்ளாகியிருக்கிறார். அபிராமி கேட்கவே வேண்டாம், வனிதா அவரை படாத பாடு படுத்தியிருக்கிறார். வீட்டில் இருக்கும் எல்லாரும் அவரால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஷெரின் மட்டுமே அவரைக் கொஞ்சம் பொறுத்துப் போயிருக்கிறார். ‘நரி இடம் போனா என்ன வலம் போனா என்ன, மேல விழுந்து புடுங்காம இருந்தா சரி’ என்றொரு சொலவடை உண்டு. அதுபோல ஷெரின் இவரைக் கையாண்டு வந்தார்.

Bigg Boss Sept 6

தோழியாய் பல உணர்வுகளை அவரிடம் பகிர்ந்து வந்தார். அதைச் சொல்லிக்காட்டியே ஷெரினைக் கார்னர் செய்கிறார் வனிதா. மனித உணர்வுகளுக்கு அவரிடம் இடமே கிடையாது. அப்பாவுக்காக அழுததும்கூட அவருக்கு எவிக்‌ஷன் (அது ஃபேக் எவிக்‌ஷன் வாரம் என்று வீட்டினருக்குத் தெரியாது) இருந்த வாரம்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. எதாவது செய்து அந்த வாரம் மக்களிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று அத்தனை அடக்கமாக நடந்துகொண்டார். இந்த வாரம் தலைவி என்றதும் இறங்கி ஆடாத ஆட்டமெல்லாம் போடுகிறார்.

கூடவே சாக்‌ஷியின் தூண்டுதல் வேறு. அவருக்கு சாண்டி, கவின், லாஸ்லியா கூட்டணி சுத்தமாகப் பிடிக்கவில்லை. அது அவரது ஈகோவைத் தொட, பார்க்கப் பிடிக்காமல் என்னவேண்டுமென்றாலும் சொல்கிறார் / செய்கிறார். தர்ஷன் – ஷெரினைப் பற்றி மக்கள் தப்பாகப் பேசுகிறார்கள் என்று ஷெரினிடம் சொல்கிறார். சின்னக் குறும்பும் காதலும் இருந்தாலும் ஷெரினோ தர்ஷனோ எந்த நிலையிலும் (ஒளிபரப்பில் காட்டியவரை) எல்லை மீறவில்லை. அப்படி இருக்க வேண்டுமென்றே ஷெரினை, பாய்ஸ் கேங்கிலிருந்து பிரிக்க இப்படி ஓர் அஸ்திரத்தை எடுக்கிறார். இவர்தான் ஜெயிப்பார், அவர்தான் ஜெயிப்பார் என்றெல்லாம் நாம் போட்டுக்கொண்டிருந்த கணக்குகளையெல்லாம் தலைகீழாக்கிக் கொண்டிருக்கிறது இந்த வார எபிசோட். இதைத்தான் பிக் பாஸும் எதிர்பார்க்க்கிறார்!

தர்ஷன், முகின் இருவரும் ஏறக்குறைய அதே எதிர்பார்ப்பான இடங்களில்தான் இருக்கிறார்கள். கவின், லாஸ்லியாவின் கிராஃப் கொஞ்சம் கீழிறங்கியிருக்கும். சாண்டிக்குமே கூட. சேரன் வழவழாதான். ஷெரினின் க்ராஃப் மேலே ஏறியிருக்கும். வனிதாவை பிக் பாஸே ஜெயிக்க வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

Bigg Boss Sept 6

எம் மனசு ஆறலியே!

74ம் நாளின் பாக்கியிலிருந்து ஆரம்பித்தது இன்றைய ஒளிபரப்பு. தர்ஷன் ஷெரினிடம் வந்தமர்ந்து பேசினார். “வெளில என்ன பேசிக்கறாங்கன்னு நீயோ, வனிதாவோ கவலைப்படத் தேவையில்லை. அதை எதிர்கொள்ளப்போறது நான். உனக்கும் எனக்குமான உறவை அஃபேரா* என் கேர்ள் ஃப்ரெண்ட் வெளில நினைப்பான்னு கவலைப்படவேண்டியது நீங்க யாரும் இல்லை. நான் தான். அதை எப்படி டீல் பண்ணணும்னு எனக்குத் தெரியும். தவிர உன்னோட க்ளோஸ்னெஸ் என் விளையாட்டை, டாஸ்கை எந்த விதத்துலயும் பாதிக்கல. உனக்கு, நான் பாதிப்பா இருந்திருக்கேனா?” (*Affair – தொடர்பு. பல உரையாடல்களில் கள்ளக்காதல் என்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல்)

“இல்லை!” என்றார் ஷெரின்.

”அப்படி இருக்கறப்ப நீயா எதையோ போட்டு, அவங்க சொல்றதைலாம் வெச்சு குழப்பிட்டிருக்க.”

ஷெரின் மீண்டும் Affair என்ற சொற்பிரயோகத்தைக் குறித்து வருத்தப்பட்டு அழுதார். சாண்டியும் ஒருமுறை சொன்னதைக் குறிப்பிட்டார். வனிதாவும் தனக்கு ஒரு தோழி. ஒரு தோழி அப்படிச் சொல்வது வருத்தம் என்றார்.

“நீயும் க்ளியரா இருக்க. நானும் க்ளியரா இருக்கேன். உன் ஃப்ரெண்ட் சொல்றான்னா, அது ஏன் அவங்களைத்தான் நீ சந்தேகப்படணும். நீயோ வனிதாக்காவோ என் கேர்ள் ஃப்ரெண்டப் பத்தி பேச வேண்டிய தேவை இல்லை. எனக்கு அவமேல இருக்கற அக்கறை இந்த வீட்ல யாருக்கும் இருக்காது. அதை எப்படி எதிர்கொள்ளணும்னு எனக்குத்தான் தெரியும். அந்தக் கடமை எனக்கு மட்டும்தான் இருக்கு.”

Bigg Boss Sept 6

”அவ, I am having affair with youனு சொல்லல. We are having a affair with you அப்டினு சொல்றா. நம்ம ரெண்டு பேரையுமே சொல்றா.”

”அது எனக்குத் தெரியாது. அப்படின்னா நீ சிரிச்சுட்டுப் போயிருக்கணும். அப்படி அவங்க சொன்னா அது காமெடி” என்றார் தர்ஷன். ஷெரின் வாயைக் கோணலாக்க, அதுக்கேன் வாய் இப்படிப் போகுது?” என்று கேட்டார் தர்ஷன். அப்போது ஷெரின் சிரித்த சிரிப்பை, நல்ல நண்பன் ஒருவன்தான் தன் தோழிக்குப் பரிசளிக்க முடியும்.

தர்ஷனின் உரையாடலிலிருந்த முதிர்ச்சி பாராட்ட வைக்கிறது. வெல்டன் மேன்!

முக்கா செஞ்சுரி மக்கா!

பிக் பாஸ் வீட்டில் 75ம் நாள். முக்கால் செஞ்சுரி!

சாப்பிட்டபடியே அடுத்த விஷ ஊசி ஏற்றும் வேலையை மோகன் வைத்யா கையிலெடுத்தார். “வெளில போனாத்தான் தெரியுது. எல்லாருமே நடிக்கறாங்க. உதட்டளவுலதான் பேசறாங்க” என்றார். நானுமா டாடி என்று முகின் கேட்க, ஆமா என்றார்.

முகின் டென்ஷனாகி நகர, சாக்‌ஷி, ஷெரின், வனிதா அவரை சமாதானப்படுத்தினர். “நீ கொஞ்சம் உஷாரா இருக்கணும். அவ்ளோதான்” என்றார் வனிதா. மோகன் வைத்யா உடனே “உன்னச் சொல்லுவேனாடா.. நீ ஜெயிக்கணும்னுதாண்டா சொன்னேன்” என்றார். இதான் உலக நடிப்பு மோகன் ஐயா!

Bigg Boss Sept 6

பிறகு மோகன் வைத்யா, முகினை அமர வைத்துப் பேசினார். “நான் போனப்பறம் என்னை வெச்சு எல்லாரும் காமெடி பண்ணினாங்க. நீயும் அதக் கேட்கல. என் டவுசரைக் கிழிச்சு விளையாடினாங்க. நீயும் கேட்கல” என்று புலம்பிக்கொண்டிருந்தார். சிக்ஸ்டி ப்ளஸ் பரிதாபங்கள்!

லக்சுரி பட்ஜெட் டாஸ்கில் சிறந்த இருவரைக் கேட்டார் பிக் பாஸ். ஷெரின் நான் பண்ணினேன். தர்ஷனும் பண்ணினான் என்றார். வனிதா நைச்சியமாகப் பேசி தன்னையும், தர்ஷனையும் சொல்லச் சொன்னார். எல்லாவற்றிலும் சிறந்தவராக லாஸ்லியாவைத் தேர்வு செய்தனர்.

வனிதா, இந்த வாரமும் தலைவரானால் தான் எவிக்‌ஷனிலிருந்து தப்பிக்கலாம் என்று கணக்குப் போட்டுத்தான் இப்படி விளையாடுகிறார். மனுஷி, எத்தனை கவனமாக இந்த விளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கிறார்.

டீம் பி, அவர்கள் அணியில் ஒரு மோசமான பெர்ஃபார்மரைச் சொல்ல வேண்டும் என்றார் பிக் பாஸ். நாந்தான் மோசம், நாந்தான் மோசம் என்று சாண்டியும் கவினும் சண்டை போட்டு முடித்து கவினைத் தேர்வு செய்தனர். அவர் அடுத்தவார எவிக்‌ஷனுக்கு நேரடியாக நாமினேட் ஆனார். ”மொதல்ல இந்த வாரம் தாண்டறேனானு பார்ப்போம் பிக் பாஸ்” என்றார் கவின்.

ஷெரின், “நான் ஏன் பெஸ்ட் பெர்ஃபார்மர் இல்லை. நான் அதை ஒத்துக்க மாட்டேன்” என்றார் சாக்‌ஷியிடம். நான் இல்லைன்னா, தர்ஷன், சேரன் மட்டும்தான். வனிதா என்ன பெரிசா கிழிச்சுட்டாங்க. ஆனா நான் பேசாம இருந்ததுக்குக் காரணம் அவகூட சண்ட போடவேண்டாம்னுதான். போதும் அவகிட்ட சண்ட போட்டது” என்றார்.

Bigg Boss Sept 6

வெளியிலமார்ந்து பாய்ஸ் சிரித்துப் பேசி விளையாடிக்கொண்டிருக்க வனிதா வந்தார் “பாத்திரம் கழுவற டீம் யாரு. லஞ்ச் நடந்துட்டிருக்கு. வந்து என்ன ஏதுன்னு பாருங்க” என்றார். டிபிகல் மாமியார் / நாத்தனார் மெட்டீரியல்.

கவின் ”கழுவிட்டுத்தானே வந்தேன். ஒன்ன்ரை மணிநேரம் கழுவினேனே. அப்ப பாத்திரம் ஏதும் இல்லையே’ என்றார். வனிதா “அங்க பாத்திரத்தை ஒழிச்சு வைக்கவேண்டிய ஷெரின் & சேரன் வேலை. ஷெரின் இங்க இல்லை அவகிட்ட கேட்கறேன்” என்றார் வனிதா. கவினும் விவாதிக்க வனிதாவும் பதில் சொன்னார். “ஒண்ணுமே இல்லைன்னாலும் எதாச்சும் வேணுமானு நீ வந்து கேட்டிருக்கணும்னு சொல்றேன்” என்றார். “சும்மா வெளில நின்னு கூத்தடிக்காதீங்கடா. ராணியோட ஆணைக்குக் காத்திருக்கற அடிமையா முன்னாடி நின்னுட்டே இரு” என்பதுதான் அதன் பொருள்.

கவின் மீது பெரிய சண்டை போட்டிருக்கலாம் வனிதா. ஆனால் அதைவிட ஷெரின்மீது தாக்குவதற்கு இது ஒரு வாய்ப்பு என்பதால் கவினிடம் பெரிதாக சண்டை போடாமல் சேரனிடம் “அண்ணா அவன் கேட்கறது சரிதான். ஷெரின் வரட்டும். ஒரு கேப்டனா நான் கேட்கறேன். ஒரு கேப்டனா அவன் என்கிட்ட புகார் பண்றான். ஒரு கேப்டனா அதை நான் கேட்கறேன்” என்றார்.

Bigg Boss Sept 6

பிறகு ஷெரின் வர, லைட்டாக வனிதா அவரைச் சீண்டினார். ஷெரின் அதற்கு “நான் அப்பவே சமைக்க வந்தேன். நீதான் சமையல் ரெடின்னு சொன்ன. நான் போய்ட்டேன். அப்பறம் என்ன பண்ணச் சொல்ற?” என்றார். வனிதா “நீதான் குக்கிங் டீம்” என்றார். “ஆமா ஆனா நீ சமைச்சுட்டேன்னு சொன்னதால போய்ட்டேன். இப்ப எதுக்கு நான் வேலையே செய்யாத மாதிரி சொல்ற?” என்றார்.

வனிதா, சேரன், சாக்‌ஷி, மோகன் வைத்யாவிடம் ஷெரினைப் பற்றிக் குற்றப்பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்தார். ஷெரின் வெளியில் தர்ஷனிடம் “இன்னும் என்னைப் பத்திப் பேசறாளா அந்த லேடி” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

வருது வருது விருது விருது!

ஐயாயிரம் வாலா பத்தாது, பத்தாயிரம் வாலாவைப் பத்தவைப்போம் என்று முடிவெடுத்த பிக் பாஸ், வெளியிலிருந்து வந்த மோகன் வைத்யா, சாக்‌ஷி, அபிராமி ஆகியோர் ஹவுஸ் மேட்ஸுக்கு விருது வழங்க வேண்டும் என்றார்.

முதல் அவார்ட் பச்சோந்தி. வனிதாவை வெளியில் அனுப்பிவிட்டு மீண்டும் அவர் மீது பாசம் காட்டி உள்ளே அனுப்பிய பிக் பாஸுக்குத்தான் அந்த பச்சோந்தி அவார்ட் கொடுக்க வேண்டும். மோகன் வைத்யா, லாஸ்லியாவுக்குக் கொடுத்தார். லாஸ்லியா அதை மேடையிலேயே வீசி எறிந்துவிட்டு (வீசினது தப்பும்மா!) ‘எனக்கு இந்த அவார்ட் வேணாம். நீங்களே வெச்சுக்கோங்க’ என்று மீண்டும் இருக்கைக்கு வந்தார்.

Bigg Boss Sept 6

”இந்த மாதிரி திமிரா பண்ணக்கூடாது. இது பிக் பாஸோட ஆர்டர். அதை நீ உதாசீனப்படுத்தக்கூடாது. வேணாம்னா வெளில போய் எறிஞ்சுக்கோ. நீ என்னையும் பிக் பாசையும் அவமானப்படுத்தற” என்றார் மோகன் வைத்யா. ஒரு கட்டத்தில் சேரன் “அவளுக்குப் பிடிக்கலை. வேணாம்கறா. அது அவ இஷ்டம். நீங்க ஃபோர்ஸ் பண்ண வேண்டியதில்லை” என்றார். மோகன் க்ரூப்பின் குரல் கொஞ்சம் அடங்க, சாக்‌ஷி இப்போது கோபப்பட்டார்.

”எனக்கு மரியாதை இல்லாத இடத்துல நான் ஏன் இருக்கணும்? நான் ஏன் மேடைல ஜட்ஜ் பண்ணணும்” என்று போய் உட்கார்ந்து கொண்டார். அடுத்த அவார்டுக்குப் போலாம் என சேரன் சொல்ல, முடியாது சார் என்று மறுத்தனர் நீதிபதிகள் மோகனும் சாக்‌ஷியும். சண்டை வலுத்து சாக்‌ஷியும் லாஸ்லியாவும் கொஞ்சநேரம் சொற்களால் அடித்துக் கொண்டார்கள். ‘கைல குடுத்திருக்கலாம். அதென்ன தூக்கி எறியறது” என்று கேட்டார் மோகன், அது சரிதான்.

சேரன் உருப்படியான ஒரு வாதத்தை முன்வைத்தார். “நீங்க காரணம் சொல்லல. குடுத்துட்டு காரணம் சொல்றேன்னீங்க. காரணம் சொன்னாதானே வாங்கறதா வேணாமானு அவங்க முடிவு பண்ணுவாங்க. அது தப்பு. குடுத்துட்டு எதாவது சொல்வீங்களா?” என்றார். வனிதாவும் அதை வழிமொழிய மோகன், “வாம்மா சாக்‌ஷி, நாம பிக் பாஸுக்கு மரியாதை குடுப்போம். காரணம் சொல்லிட்டுக் குடுப்போம்” என்றார்.

Bigg Boss Sept 6

சாக்‌ஷி “அப்பா அப்பானு சேரனை சொல்லிட்டு பசங்ககூட சேர்ந்திருந்தப்ப அவங்க சேரனை கிண்டல் பண்ணினப்ப லாஸ்லியாவும் சேர்ந்துட்டாங்க” என்றார். இதை ஒத்துக்க மாட்டேன். விருது வேண்டாம் என்றார் லாஸ்லியா.அதற்கு கவினும் சப்போர்ட் செய்ய “நீ பேசாத கவின்” என்று சேரனும் வனிதாவும் சொன்னார்கள். அடுத்து இன்னொரு காரணமாக பின்னாடி பேசமாட்டேன்னு சொன்னாங்க லாஸ்லியா. ஆனா வெளில வீடியோல போய்ப் நிறைய பின்னாடி பேசினாங்க” என்றார்.

ஒரு கட்டத்தில் ”ஹல்லோ” என்று லாஸ்லியா கத்த ‘என்ன ஹலோ? மரியாதை இல்லாமப் பேசுவியா. அடுத்து வாடா போடாம்பியா?” என்று கேட்டார் மோகன். ”ஒவ்வொரு வருஷமும் இப்படி ஒரு அவார்டு குடுப்பாங்கதானே” என்றார் வனிதா.

வனிதாவுக்கு இந்த பச்சோந்தி விருது கொடுத்திருந்தால் அவர் என்ன செய்திருப்பார் என்பதை மட்டும் உங்கள் கற்பனைக்கே விடுகிறேன். இதைத்தான் ’வேதம் சாத்தான் ஓதுது’ என்றார் ஆண்டவர் ஒரு படத்தில்!

அடுத்து நரி அவார்டை சாண்டிக்குக் கொடுத்தார்கள். சாண்டி Thug Life ஸ்டேட்மெண்ட் ஒன்றைக் கொடுத்துவிட்டு “வி ஆர் பாய்ஸ் உ உ ஊஊ’ என்று எப்டி நரி ஊள வுட்டுச்சா என்று கேட்டுவிட்டு விருதோடு இறங்கினார். இது மொற! நீயும் இருக்கியே லாஸூ!

Bigg Boss Sept 6

அடுத்து மின்மினிப்பூச்சி. மின்மினிப்பூச்சி போல பிரகாசமானவர் என்று ஷெரினுக்கு விருது கொடுத்தார். அடுத்தது கொசு. கொசுவைப் போல இம்சை கொடுப்பவர் என்று வனிதாவுக்குக் கொடுத்தனர். ‘கிளி’ கிளியைப் போல அடுத்தவர் சொல்வதைக் கேட்பவர் என்று முகினுக்குக் கொடுத்தார். கழுகைப் போல் கூர்மையான நோக்கத்தைக் கொண்டவர் என்று தர்ஷனுக்குக் கொடுத்தார். தவளை போல் தன் வாயால் கெடுத்துக் கொள்பவர் கவின் என்று தவளை விருதைக் கொடுத்தனர். யானை விருதை சேரனுக்குக் கொடுத்தனர். இதுவரைக்கும் தன் போக்கில் ஸ்டிராங்காக இருப்பவர் என்று கொடுத்தார்கள். அடுத்தது Crooked Brain கோணலான குறுக்கு புத்தி கொண்டவர் எனும் விருதை வனிதாவுக்குக் கொடுத்தனர். அவர் சிரித்துக் கொண்டே வாங்க மறுத்துவிட்டார். ஆக்சுவலாக லாஸ்லியா போட்ட சண்டைதான், அவர் அமைதியாக மறுக்கக் காரணம். இல்லையென்றால் இவர் மகாப்பெரிய சண்டை போட்டுத்தான் இதை மறுத்திருப்பார்.

அடுத்து நாய் போல நன்றியுடைய நாய் விருது லாஸ்லியாவுக்குக் கொடுத்தார்கள். லாஸ்லியா மேடை வரை சென்று அதை வாங்கி அங்கேயே வைத்துவிட்டு வந்தார். “அதை வாங்காம இதைமட்டும் வாங்கினா தப்பு’ என்று விளக்கம் கொடுத்தார். பசுவைப் போல தாயுள்ளம்கொண்ட அவார்ட் வனிதாக்கு கொடுக்க அவர் ஹிஹிஹி என்று வந்து வாங்கிக் கொண்டார். அடுத்து அட்டை, அட்டையைப் போல அடுத்தவரைச் சார்ந்து வாழ்பவர்கள் விருதை எல்லாருக்கும் கொடுக்க, எல்லாருமாக வாங்கிக் கொண்டார்கள்.

Bigg Boss Sept 6

எல்லாம் முடிந்து லாஸ்லியா மோகனிடம் “நான் எல்லாரையும் சேர்ந்துதான் ஹலோன்னேன். நீங்க வாடா போடானுலாம் பேசினீங்க. அதுக்காக ஸாரி. ஸாரிக்கு இந்த வீட்ல மரியாதை இல்ல. இருந்தாலும் ஸாரி” என்றார்.

நாளைக்கு கமல் தினம். மக்களை நாய்கள் என்ற சாக்‌ஷியை என்ன சொல்லுவார் என்று எதிர்ப்பார்ப்போடு இருக்கிறேன். சாக்‌ஷி- தர்ஷன் உறவை என்ன சொல்லுவார் என்று பார்க்கப் போகிறேன். பார்த்துவிட்டுப் பகிர்கிறேன். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது… உங்கள் ஸாரோ!

Bigg Boss Sept 6

Bigg Boss Trivia

பிக் பிரதர் ஷோக்களில் ஹிட்டாகவே போய்க்கொண்டிருக்கிறவற்றில் பிக் பிரதர் பிரேசிலும் ஒன்று. 2002ல் ஆரம்பித்து இந்த வருடம் வரை 19 சீசன்களைத் தொட்டிருக்கிறது பிக் பிரதர் பிரேசில்.

இதில் 2005ல் நடைபெற்ற ஐந்தாவது சீசனில் ஜர்சலிசம் படித்த 31 வயதுக்காரரான ஜீன் வில்லீஸ் என்பவர் கலந்து கொண்டார். தன் பாலின ஈர்ப்பாளரான இவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவு பெருக, அந்த சீசனின் வெற்றியாளராகவும் ஆனார்.

அதுதான் இவர் வாழ்க்கையையே மாற்றிப்போட்டது. அதன்பிறகு அரசியலில் குதித்த இவர் வெற்றிகரமான அரசியல்வாதியாக வலம்வந்து கொண்டிருக்கிறார். பிக் பாஸ்லலாம் கலந்துகிட்டு லைஃப்ல முன்னேறினவங்க பெரிசா யாரும் இல்லை என்பவர்களுக்கு, அந்த ஷோவை ஆதரிப்பவர்கள் சொல்லும் உதாரண போட்டியாளர்களில் இவர் முக்கியமானவர்.