குடும்பத்தை, நண்பர்களைப் பிரிஞ்சு இருக்கறது.. வனிதா மாதிரி ஆட்களோட டார்ச்சரை எதிர்கொள்றதுன்றதெல்லாம் தாண்டி.. இப்படி மூணு மாசம் எந்த கமிட்மன்டும் இல்லாம்.. எந்திரிச்சமா, டான்ஸ் ஆடினமா… சாப்டமா.. இப்டி ஜாலி ஜாலியான டாஸ்குகளைச் செஞ்சமானு மூணு மாசம் ஓட்றது செம-தான் போங்க. சேரன், சரவணன் எல்லாம் இதைய எவ்வளவு ரசிச்சுப் பண்ணலாம். அதும் சம்பளத்தோட!

கொலைகாரி டாஸ்க் முடிந்து, இன்று நாட்டாமைக்கெல்லாம் நாட்டாமை அவதாரம் எடுத்தார் வனிதா. சித்தப்பு சரவணனோ சீன் சரவணனாகி எமோஷனைக் கூட்டிய நாள் இன்று!

வனிதா

கானாக்கூட்டணி!

’வர்றது தலைவரு பேட்ட பராக்!” என்று சூப்பர் ஸ்டார் பாடலுடன் ஆரம்பித்தது 18ம் நாள் காலை. சாண்டி ரஜினி ஸ்டெப்ஸில் நடந்து கொண்டே இருந்தார். மற்ற எல்லாரும் அவரவர் பாணியில் ஆடினர்.

கவினும், சாண்டியும் எல்லாரைப் பற்றியும் பாடல் பாடவேண்டும் என்று ஒரு மார்னிங் ஆக்டிவிடி கொடுத்தார் பிக்பாஸ். ஷெரினைப் பற்றி, லாஸ்லியா பற்றி என்று கானா ஸ்டைலில் கலக்கினர் கவின் – சாண்டி கூட்டணி.

‘அடியே லாஸ்லியா
என்னைப் பாத்தியா
கண்டுக்க மாட்றியே
உன் மனசு காஸ்ட்லியா?’ என்று ஏற்கெனவே ஒருமுறை பாத்ரூமில் வைத்து லாஸ்லியாவிடம் பாடிய பாடலை இங்கேயும் பாடினார் கவின். அந்தப் பாடலின்போதெல்லாம் சாக்‌ஷியையே க்ளோஸப்பில் காட்டினார் பிக்பாஸ். சாண்டி, தன்னைப் பற்றியே ஒரு கானாவையும் பாடினார்.

கன்ஃபெஷன் அறைக்குள், கவின், மீரா மற்றும் சாண்டி மூவரையும் அழைத்தார் பிக்பாஸ். கவின் – இன்ஸ்பெக்டர். மீரா – கான்ஸ்டபிள். இவர்கள் இருவரும் எல்லாரிடம் புலன் விசாரணை செய்து, கொலைகாரர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். ஆவிகளுடன் பேசும் சக்தி சாண்டிக்கு இருப்பதால், ஆவிகளை புலன் விசாரணை செய்யும்போது அவர் உதவுவார்.

கவின்

புலன் விசாரணை!

ஷெரினை விசாரிச்சப்போ மதுமிதாவைச் சொன்னாங்க. உள்ள பலரும் மதுமிதா, லாஸ்லியாவைத்தான் சொன்னார்கள். இன்வெஸ்டிகேஷன் அறை போல அமைக்கப்பட்டிருந்த கார் செட் அப்பில் விசாரணை நடந்தது. வெளியே சாண்டி, சாமியார் உடையில் ராத்திரி நேரத்து பூஜையில் என்று பாடிக்கொண்டிருந்தார். அபிராமி ‘என்னைப் பார்த்தா கொல செய்யறவ போலயா தெரியுது?’ என்று கேட்க, கவின், ‘உம் மூஞ்சப்பார்த்தா ஊர்ல இருக்கற எல்லா கேஸையும் வாங்கற மாதிரி தான் இருக்குது. அது வேற.. இதுக்கு பதிலச் சொல்லு’ என்றார். மனசுல டக்னு பட்டதச் சொல்லிருக்காப்ல பயபுள்ள!

லாஸ்லியாவுடன் ஒரே தட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் கவின். ’சாக்‌ஷி ஆவிய உள்ள போய்ப் பார்க்கச் சொல்லு’ என்று சேரன் கல்லறை செட்டப்பில் வந்து புலம்பினார். கவின் லாஸ்லியாவுடன் ‘என்ன ஈஷிண்டிருக்கோம்’ மோடில் ஒரே தட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அதை கதவருகே நின்று எரிக்கும் கண்களில் பார்த்துக்கொண்டிருந்தார் சாக்‌ஷி. பிறகு, விசாரிக்கிறேன் பேர்வழி என்று லாஸ்லியாவிடம் ஓவராகவே வழிந்தார் கவின்.

கொலைகாரி வனிதாவுக்கு அடுத்த டார்கெட்டைக் கொடுத்தார் பிக்பாஸ். போலீஸ் கவினின் துப்பாக்கியை எடுத்து ஒளித்துவைக்க வேண்டும். அதை அவர் கண்டுபிடிக்கக் கூடாது. இதான் கொலைக்கான டாஸ்க்.

வனிதா, பெரிய ஆளுதான். நேரடியாக கவினிடம் பேச்சுக்கொடுத்தபடி ’இதையெல்லாம் தூக்கிப் போடு’ என்று கேஷுவலாக துப்பாக்கியை எடுத்தார். கையில் வைத்து ஆட்டிக்கொண்டே பேச்சைத் தொடர்ந்தார். முகின் கேஷுவலாக அதை வாங்கிக் கொண்டு நடந்தார். பாத்ரூம் ஏரியாவில் சென்று அதை ஒளித்து வைத்தார்.

மீரா முகின் வனிதா கவின்

வாக் அவுட் சேரன்

ஆவிக்கான Satin உடையை அணிந்து கொண்டு, வெயிலில் இருப்பது குறித்து மோகன் வைத்யா அதிருப்தி தெரிவித்திருக்க வேண்டும். (அவர் முஞ்சியே சரியில்ல!) சேரன் வந்து ‘இது என்ன டாஸ்க். மார்க்ஸ் கெடைக்குமா கெடைக்கதா, எதுக்கு இப்படி கஷ்டப்படணும்?’ என்று ஆட்டையைக் கலைக்கப் பார்த்தார். வனிதாவும் சேர்ந்து கொண்டு ‘ஆமாம்’ போட்டதுதான் செம ஆக்டிங். கவின், ‘ரெண்டு நாள் பண்ணியாச்சு. ஒருநாள் அமைதியா இருங்க’ என்று கேட்டுக்கொண்டார். சாண்டியும் அதைச் சொன்னார். ஆனால் சேரன் “அப்ப நீ அமைதியா இருக்கணும். ஆவிகள் கஷ்டப்படுதுனு நீதான் புலம்பிட்டே இருக்க..” என்று கவினிடம் சொன்னார்.

உள்ளே சரவணன், ‘சேரன் செங்குட்டுவன் என்ன சொல்றாரு?’ என்று கேட்டார். வனிதா ‘அவருதான் ஆட்டையக் கலைக்கறாரு’ என்றார். மீராவும் எல்லா பிரச்னைக்கும் அவருதான் காரணம் என்று ஒத்து ஊதினார். ’யார் கேப்டனா இருந்தாலும், அவங்க எடப்பாடிதான்; மோடி இங்கே நான்தான்’ என்பதை மீண்டும் நிரூபித்தார் வனிதா.

வெளியே வந்து “நாம் எல்லாரும் பிக்பாஸ் கேம் ஷோ-க்கு இங்கே காண்ட்ராக்ட் சைன் பண்ணிட்டு வந்திருக்கோம். சம்பளம் பேசிருக்கோம். வெயில்ல இருக்கோம், கஷ்டப்படறோம்னு சொல்லத் தேவையில்ல. கேம் கண்டிநியூஸ்” என்றார்.

சேரன்

சேரன்… இது ரத்த பூமி

சேரன் முன்னப் பின்ன பிக்பாஸ் பார்த்திராதவர் போல கேமரா முன் புலம்பினார். “என்ன டாஸ்க், பாய்ண்ட்ஸ் என்னனு தெரியாம சும்மா மூணு நாள் என்னமோ நடக்கறதுக்கெல்லாம் நாங்க விளையாட முடியாது. அவங்களை வெயில்ல உட்கார வெச்சுட்டு நாங்க இப்படி இருக்கறது எங்களுக்கு கில்ட்டியா இருக்கு. டாஸ்க்ல இருந்து என்னை கழட்டி விட்ருங்க” என்று சொல்லிவிட்டு வீரதீர நடைபோட்டுப் போனார்.

’விளையாட முடியாதுன்னெல்லாம் யாரும் சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது’ என்றார் நாட்டாமை மகள். ‘நான் ஒரு முடிவு எடுத்தேன். அதை யாரும் விமர்சிக்க வேண்டாம். என்னை வார்ன் பண்ணினா நான் வார்னிங்கை ஏத்துக்கறேன்’ என்றார் சேரன்.

”எனக்குப் புரியல. மத்தவங்க கஷ்டப்பட்டத நான் வீணாக்கல. கிரிட்டிசைஸ் வேணாம் மீரா. உங்களுக்கு வேணா நீங்க வெளையாடிக்கங்க” என்றார் கூடவே.

மீராவுக்கும் சேரனுக்கும் நேரடியாக முட்டிக்கொண்டது.

டாஸ்க் – த எண்ட் கேம்

அடுத்த கொலை நடந்துவிட்டதை உறுதிசெய்தார் பிக்பாஸ். ’இன்ஸ்பெக்டர் கவின் கொலை செய்யப்பட்டுவிட்டார். கொலையாளிகள் கொடூரமானவர்கள் மட்டுமல்ல.. புத்திசாலிகளும் கூட. கவினை சகல மரியாதைகளோடு ஆவியுலகத்துக்கு அனுப்பி வையுங்கள்’ என்றார் பிக்பாஸ்.

ஹவுஸ்மேட்ஸ் அதிர்ச்சி அடைந்தாலும் ”தேங்க்யூ தல” என்று சமாளித்தார் கவின். ‘வாடி மவனே… இங்கதானே வர்ற.. வா… வா.. ’ என்று அப்போது சாக்‌ஷி கவினை பார்த்த ரியாக்‌ஷன்… Priceless Reaction!

சாண்டி கவின்

கவின் இறந்துவிட்டதால், மீரா பதவி உயர்வு பெற்று இன்ஸ்பெக்டர் ஆனார். உடனே மீரா “இதுவரைக்கும் நடந்த விசாரணைல முதுகுல ஏதோ சிம்பல் போட்டுதான் கொலை நடந்திருக்கறதா எங்களுக்கு டவுட். அதுனால யாரும் யாரையும் தொடாதீங்க” என்றார். வனிதாவும் முகினும் “அடி அறிவாளி!” என்பது போலப் பார்த்தனர்.

இன்ஸ்பெக்டர் மீரா

பிக்பாஸ் இன்ஸ்பெக்டர் மீராவை அழைத்து யார் மீது சந்தேகம் என்று கேட்க மீரா ‘லாஸ்லியா, மதுமிதா. சந்தேகமெல்லாம் இல்லை. அவர்கள்தான் குற்றவாளிகள்’ என்றார். உடனே பிக்பாஸ் வனிதாவிடம் “உங்களை வெளிப்படுத்திக்கொள்ளலாம்” என்று அவருக்குக் கொடுக்கப்பட்ட ஃபோனில் சொன்னார். வனிதா ஃபோனை எடுப்பதைப் பார்த்ததுமே எல்லாருக்கும் அதிர்ச்சி. வனிதா முகினை அருகில் அழைத்து “நாங்கதான் உங்களையெல்லாம் கொலை செய்தது” என்றார். அபிராமி, ’முகின்.. என்கிட்ட பேசாதடா” என்றார். சாக்‌ஷி “Why Me????” என்று அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.

மீண்டும் சொல்கிறேன். இதே வேறு யாராவது கொலையாளியாக இருந்திருந்தால், வனிதா இந்நேரம் கேமராவையெல்லாம் உடைத்துத் தள்ளுமளவு ருத்ரதாண்டவம் ஆடியிருப்பார்.

எல்லாக் கொலைகளுக்கும் எப்படி இன்ஸ்ட்ரக்‌ஷன் வந்து கொண்டிருந்தன, கொலை எப்படி நடந்தது என்பதை ப்ளாஸ்மா டிவியில் போட்டுக்காட்டினர். எல்லாரும் சிரிப்பும் கும்மாளமுமாய் அதைப் பார்த்தனர்.

ரேஷ்மா ஷெரின்

பெஸ்ட்டு.. வொர்ஸ்ட்டு.. அப்பீட்டு!

டாஸ்கின் இரண்டு சிறந்த போட்டியாளர்களாக, வனிதா – சாக்‌ஷி இருவரையையும் சொன்னார்கள். மோகன் ‘நானு?’ என்று சல்லித்தனமாக கவினிடம் கேட்டார். அதை சேரன் கவனித்தார். ‘வனிதா ஓகே. வயச வெச்சுப் பார்க்கறப்ப மோகன சார்தான் இன்னொருத்தர்’ என்றார். அதை எல்லாரும் போனாப்போகுது என்று வழிமொழிய அவர்கள் இருவரின் பெயரும் சொல்லப்பட்டது. டாஸ்க் உட்பட எல்லாவற்றிலும் சிறந்து விளங்கிய ஒருவராக சாக்‌ஷியைச் சொன்னார்கள். சாக்‌ஷி, வனிதா, மோகன் – மூவரும் அடுத்த வார தலைவர் பதவிப் போட்டியாளர்கள் என்று பிக்பாஸ் அறிவிக்க.. மூவருக்கும் 40 பற்களும் வெளியில் தெரிந்தது.

டாஸ்கில் முழுமனதோடு பங்கேற்றுக் கொள்ளாத இருவரை அபிராமி சொல்ல வேண்டும் என்றார் பிக்பாஸ். சேரன், சரவணன் இருவரையும் குறிப்பிட்டார்.

அபிராமி, சரவணன் பெயரை சரியாகத்தான் குறிப்பிட்டார் என்பேன் நான். ஆனால் சரவணன் “காரணம் சொல்லணும்” என்றார். ‘நீங்க டாஸ்க்ல இருந்த மாதிரியே இல்லை. எப்பவும்போலத்தான் இருந்தீங்க” என்றார் அபிராமி. அது உண்மையும்கூட.

இருவரும் அடுத்த அறிவிப்பு வரும்வரை ஜெயிலில் இருக்க வேண்டும் என்றார் பிக்பாஸ்.

கொலையாளி டாஸ்க் முடிஞ்சது. இனி சும்மா இருக்குமா சுகுமாரி? வனிதாதான். பஞ்சாயத்தை ஆரம்பித்தார். சரவணன், சேரன் சரியாகத்தான் செய்தனர்’ என்றார். நாட்டாமைத்தனத்தை ஆரம்பித்தார். அவர் கூப்பிட எல்லாரும் தலையாட்டிப் பொம்மையாக வந்து அமர்ந்தனர்.

சேரன் அபிராமி

 

வனிதா தி பவர் ஹோல்டர்

வனிதா எல்லாரிடமும் இது அது என்று பெரிய பஞ்சாயத்தை செய்து “என்னோட பொதுவான கருத்து என்னன்னா…” என்றார். அதெப்படி ‘உன்னோட கருத்து பொதுக்கருத்து?’ என்று அங்கே இருந்த எவரும் கேட்கவே இல்லை.

அபிராமி, ‘நான் சொன்னது சொல்ட்டேன். கம்னு இருங்க’ என்றும் ஒன்றுமே சொல்லவில்லை. சேரன் கைதிக்கான உடையணிந்து தயாராக இருந்தார். சரவணன் சுத்தமாக தயாராகவே இல்லை. அவருக்கு பதில் யார் போவது என்று விவாதம் நடந்தது. ஹவுஸ்மேட்ஸ் ஒன்றாக முடிவெடுக்க வேண்டும் என்றார் பிக்பாஸ். சாக்‌ஷி, ‘நான் போறேன்’ என்றார். வனிதா ‘நீ ஏன் போற?” என்று மறுத்தார்.

லாஸ்லியா ‘நான் போறேன்’ என்று ஆரம்பிக்க ஆங்காரி ஓங்காரியானார் வனிதா. அவரைப் பேசவே விடவில்லை. ‘நான் இத ஒத்துக்க மாட்டேன்’ என்று எழுந்தார். ‘நான் கதைக்கோணும்..’ என்று லாஸ்லியா சொன்னதை கேட்கவே இல்லை அவர். ‘உங்களை குழப்பி நானும் குழம்பிட்டிருந்ததால நான் போறேன்’ என்றார் லாஸ்லியா. “அப்டிலாம் உன்ன நல்லவளாக விடமாட்டோம்” என்று மாமியானார் வனிதா. “கேம கேமா டிரீட் பண்ணுங்க” என்று வேதம் வேறு ஓதினார். “அதை சரவணன்கிட்ட சொல்லவேண்டியாதானே நீ?” என்றார் பக்கத்து வீட்டு லட்சுமியக்கா.

லாஸ்லியா

கவின் ஆகட்டும், மோகன் வைத்யாவாகட்டும் யாருக்குமே வாயில்லையா.. மூளையில்லையா என்று தெரியவில்லை. யாருமே வனிதாவுக்கு எதிர்க்குரலே எழுப்பவில்லை. எழுந்த ஒரே ஒரு குரல் லாஸ்லியாவுடையது. அவரையும் கத்தி அடக்கி ஒடுக்கினார் நாட்டாமை மகள்.

லாஸ்லியா கவினிடம் பாத்ரூமில் வைத்து “நீ என்கிட்ட இனிமே கதைக்காத… ப்ப்ளீஸ்” என்றார். என்ன நடக்கிறது என்று எனக்கு குழப்பமானது. நிஜமாகவே கவின் மீது க்ரஷ்ஷா.. அல்லது வீணாக அவரையும் இவரையும் சேர்த்து யாரும் பேசுவதைத்தாங்காமல் லாஸ்லியா அதைச் சொல்கிறாரா என்று தெரியவில்லை.

உள்ளே சரவணன், ‘அபிராமி என்பேரைச் சொன்னப்ப யாரும் எனக்கு சப்போர்ட் பண்ல? போங்கப்பா போங்கப்பா.. அவ்ளதான்பா நீங்கள்லாம்…” என்று கத்திக்கொண்டிருந்தார். சாண்டி, தர்ஷன், முகின் எல்லாருக்கும் அட்வைஸ் பண்ணினதைச் சொல்லிக்கொண்டிருந்தார் சரவணன். அதென்ன பெரிசா? இன்வால்வ் ஆகி விளையாடாமால், எல்லாருக்கும் உட்கார்ந்து பேசி அட்வைஸ் பண்ணினேனே என்றால் என்ன அர்த்தம்? மற்றவர்களைவிட சரவணன் ஒன்றும் செய்யவில்லை என்பது நமக்குக் காண்பித்த ஃபுட்டேஜ்களைப் பொறுத்தவரை உண்மைதான்.

வீண் சீன் போடாதீங்க சித்தப்பு!

Bigg Boss Trivia

டியர் ஸாரோ,

‘காண்ட்ராக்ட் சைன் பண்ணி, ஆளாளுக்கு சம்பளம் பேசிட்டுதான் வந்திருக்கோம்’ என்று வனிதா இன்றைய எபிசோடில் சொன்னாரே.. கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்..”

லவ்விங்லி,
லாவண்யா
(லாஸ்லியா ஆர்மி – புதுக்கோட்டை)

சாக்ஷி ஷெரின்

டியர் லாவண்யா,

நிச்சயம் சம்பளம் உண்டு. அதுவும் வாராவாரக் கணக்கு. நாமினேட் ஆகி வெளியில் போக வேண்டியதென்றால் டென்ஷனாகிறார்களே.. அதற்கு இந்த பேமெண்ட் விஷயமும் முக்கியக் காரணம். ஒவ்வொருவரின் செலிப்ரட்டி ஸ்டேட்டஸ் பொறுத்து இந்தத் தொகை மாறும். கடைசி வரை இருந்து வின்னர், ரன்னர் ஆகிப் பெறும் தொகையெல்லாம் எக்ஸ்ட்ரா போனஸ்தான்!

அப்பறம், நல்லவேளை உங்கள் பெயர் வந்தனா இல்லை. இருந்திருந்தால் எந்த ஆர்மியில் இருந்திருப்பீர்களோ!

லவ்விங்
ஸாரோ.