இந்த வாரம் லக்சுரி பட்ஜெட் டாஸ்க், ஃப்ரீஸ் டாஸ்க். வீட்டில் இருப்பவர்களின் உறவினர்கள் வருவார்கள் என்பதால் விஜய் டிவிக்கு கொண்டாட்டம்தான். தமிழில் எல்லா சீஸனுக்கும் ரீசனுக்குமான பாடல்களும் உண்டு என்பதால் “எடுத்து வைடா எல்லா சோகப்பாட்டு சிடீயையும்” என்றிருப்பார் ப்ரோக்ரம் ப்ரொட்யூசர். இன்றைக்கு முகின் ஃபேமலி வந்ததும், சேரன் உள்ளிருந்து கவினைக் கேள்வி கேட்டதும் மெய்ன் பிக்சராக இருந்தன.

சீரியஸ்லியா

79ம் நாளின் அதிகாலைப் பாடலுக்குக் கோடானு கோடி என்று குதித்து விளையாடி சோப்பு போடும் ஸ்டெப்ஸை ஆடிகொண்டிருந்தார்கள். சேரன் ரகசிய அறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

Bigg Boss Sept 10

குட்டிச்சுவர் பாய்ஸுடன் லாஸ்லியாவும் சிவப்பு கேட் குட்டிச்சுவரில் அமர்ந்து காபி சாப்பிட்டுக்கொண்டிருந்தார். நேற்றைக்கு கேப்டனாகி “எல்லாரும் எல்லா வேலையும் செய்ய வேண்டும்” என்று சொன்னாரல்லவா.. அதனால் “சிக்கிரம் காபி சாப்பிட்டுட்டு எழும்பி வாங்க” என்றார். வழக்கம்போல சாண்டி கலாய்க்க ஆரம்பித்தார்.

சிம்பு வாய்ஸில் அவர் லாஸ்லியாவிடம் “போன வாரம்லாம் இப்டி வர்லயே நீ? காபி சாப்டுட்டு சோம்பேறியா இங்கயேதானே உட்கார்ந்திருப்ப. இப்ப மட்டும் என்ன.. புரியல எனக்கு” என்று அவர் சொல்ல, லாஸ்லியா மறுத்தார். “ஹலோ என் வேலைய நான் சரியாத்தான் செஞ்சிருக்கேன்” என்றார். பிறகு சாண்டி வரவேண்டாம் என்று எழுந்து சென்றார். “இப்ப ஏன் உன் மூஞ்சி மாறுது?” என்று கேட்டார் சாண்டி.

“சீரியஸா எடுத்துக்குச்சா?” என்று சாண்டி கேட்க கவின் ஆமாம் என்றார். “நான் ஜாலியாத்தான் சொன்னேன்” என்றார் சாண்டி.

“நீ ஜாலியா சொல்றேன்னு ஹர்ட் பண்ணிவிட்டுடற. சீரியஸா கேம் விளையாடறப்ப ஜாலியா சொல்றேன்னு சொல்லி பேசிடற” என்றார் கவின்.

Bigg Boss Sept 10

அய்ய்யுய்யூயூ! இவ்ளோ நாள் எல்லாருமா மத்தவங்களுக்குப் பண்றப்ப இது தெரியலயா கவினு? இப்ப அதும் சாண்டி சிம்புவ இமிடேட் பண்ணிப் பேசினப்ப தெரியுதாக்கும்!

சாண்டி போய் ஸாரி கேட்டார். அவ்ளோவெல்லாம் ஒண்ணும் ஆகல என்றார் லாஸ்லி. தர்ஷனும் சாண்டியும் பெருக்கிக் கூட்டிவிட, வேலை முடிந்ததும் அதில் சாண்டி மட்டும் மீண்டும் குட்டிச்சுவர் வந்தார்.

கவின் உம்மென்றிருக்க என்ன ஏதென்று விசாரித்தார்கள். கவின் சாண்டியிடம் “நீ எதப் பேசினாலும் காதுல வாங்கிக்க மாட்டீங்கற. அவ கேப்டன் ஆகி மொத வாரத்துல இப்டி டக்னு சொன்னா அது தப்பு. தர்ஷன் விட்டுக்குடுத்திருக்கான்னு வேற அவ ஃபீல் பண்றா. இந்த நேரத்துல இப்படிப் பேசினா அவளுக்கு ரொம்ப ஹர்ட் ஆவும்” என்றார்.

நடுவில் சாண்டி ஏதோ சொல்ல வர “இதான் உன்கிட்ட. பேசவே விடமாட்ட. மத்தவங்ககிட்ட பேசற மாதிரி என்கிட்ட பேசக்கூடாது.” என்றார்.

அப்ப மத்தவங்ககிட்ட என்னவேணா பேசிக்கலாமாக்கும்?

Bigg Boss Sept 10

முகின் ஹேப்பி அண்ணாச்சி!

இந்த வார லக்சுரி பட்ஜெட் டாஸ்க். அறிவிப்பைப் படித்தார் கவின். “இந்த வாரம் முழுதும் பிக் பாஸ் ரிமோட் கண்ட்ரோலுக்கு வீடு வருகிறது. ரிமோட்டின் கண்ட்ரோல்கள் Freeze, Forward, Rewind, Slow Motion, Loop and Release” என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு ஆரம்பித்தபோதே வீட்டினர் கன்னாபின்னாவென்று கத்திக் கூச்சலிட்டனர். காரணம், இந்த ஃப்ரீஸ் டாஸ்கின்போதுதான் வீட்டினரின் உறவினர்கள் / நண்பர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வருவார்கள். அவர்களைப் பார்க்கப்போகிறோம் என்ற மகிழ்ச்சிதான் காரணம்.

அறிவிப்பு முடிந்ததும் ‘ஃப்ரீஸ்’ என்றார் பிக் பாஸ். பிறகு சாண்டியை மட்டும் ரிலீஸ் செய்தார். சாண்டி, உறைந்த நிலையிலிருந்த எல்லாரையும் அருகில் போய் கலாய்த்தார். சட்டென்று பிக் பாஸ், சாண்டியை ஃப்ரீஸ் செய்துவிட்டு, சாண்டியைத் தவிர மற்றவர்களை ரிலீஸ் செய்தார். இப்படி விளையாடி மகிழ்ந்தார் பிக் பாஸ்.

கொஞ்சநேரம் கழித்து மீண்டும் ஃப்ரீஸ் சொன்னார் பிக் பாஸ். ‘ஆராரிராரோ நானிங்குபாட…’ பாடலை சில நொடிகள் தொடர்ந்து ஒலிக்கவிட்டார். அது அம்மா பாட்டென்பதால் யாருடைய அம்மா என்று எல்லாரும் காத்திருக்க, முகினின் அம்மா வந்தார். முகின் அழுதுகொண்டே போய்க் கட்டியணைத்தார். ரிலீஸ் சொல்லாமலே எல்லாரும் அவர்களை நெருங்கி நின்றனர். எல்லாரையும் கட்டியணைத்து வாழ்த்தினார் முகினின் அம்மா. சேரன் உள்ளே தனியாக ஃபீலிங்ஸில் இருந்தார்.

Bigg Boss Sept 10

“ஆத்தாடா…” என்று முகின் அம்மாவைத் தூக்கிக் கொண்டு போய் அமரவைத்தார். “வேற யாரும் வரலியா” எனக்கேட்க “நான் வந்ததே எல்லாரும் வந்தமாதிரி” என்றார் அம்மா. வீட்டைச் சுற்றிக் காட்டினார் முகின். முகினும் அவர் அம்மாவும் கார்டன் ஏரியாவில் இருக்க, கன்ஃபெஷன் ரூம் வழியே முகினின் தங்கை ஜான் (ஜனனி) வந்தார். முகின் டபுள் குஷியாகி தங்கையைத் தாங்க ஆரம்பித்தார். அம்மா “தங்கச்சி வந்ததும் என்னை விட்டுட்ட?” எனக் கேட்க “உனக்கு சாண்டி இருக்கான்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

முகினிடம் அவர் தங்கை “நீ இங்க எதெல்லாம் உண்மைனு நினைக்கறயோ அதெல்லாம் உண்மை இல்ல” என்று ஒரு ஸ்டேட்மெண்ட் சொல்லிக் குழப்பினார். ”அம்மா நிர்மலா, தங்கை ஜனனி இருவரையும் இந்த வீட்டுக்கு வரவேற்கிறோம்” என்றார் பிக் பாஸ். பிறகு மூவரையும் தனியே விட்டுவிட்டு மற்றவர்கள் விலகினர்.

அம்மா அட்வைஸ்கள்

“வீட்ல கதவ உடைச்சிருக்க. இங்க வந்து கட்டிலை உடைச்சுட்ட?” என்று கேட்ட அம்மா, ”விட்டுராத… போராடி ஜெயிக்கணும்” என்றும் உபதேசம் செய்தார். “வந்தது நல்லதுதான். வீட்லன்னா கோபப்பட்டா உன்னை யாரும் கேட்க முடியாது. இங்க கேள்வி கேட்க நாலு பேர் இருக்காங்கள்ல?” என்றார் முகினின் தங்கை ஜனனி.

Bigg Boss Sept 10

மீண்டும் வெளியில் வந்து எல்லாருடனும் கலந்தமர்ந்தனர். முகின் வீட்டில் அவர் தங்கை நான்கு பூனைக்குட்டிகள் வளர்ப்பதைச் சொன்னார். “பூனைகளுக்குப் பேரு தர்ஷன், கவின், சாண்டி, முகின். அம்மா பேரு பிக் பாஸ்” என்றார்.

முகினின் அம்மாவுக்கு பேபி சாண்டியைப் பார்க்க வேண்டும் என்று ஆசைவர சாண்டி குழந்தை மாதிரி நடித்து உற்சாகப்படுத்தினார். சிறிது நேரத்தில் எல்லாரையும் ஃப்ரீஸ் செய்தார் பிக் பாஸ். பிறகு முகினின் அம்மாவையும் தங்கையும் வெளியில் வரச்சொன்னார். முகினின் அம்மா, முகினுக்கு அறிவுரைகள் சொல்லிக்கொண்டிருந்தார். சென்ற சீஸன்கள் போலெல்லாம் அல்லாமல் ஹவுஸ்மேட்ஸ் பிக் பாஸ் ஆணையெல்லாம் கேட்காமல் ரிலீஸ் ஆகி அவர்களை விடையனுப்பினர்.

அடுத்து ஒரு கேம். அதைப் பற்றி விரிவாகச் சொல்ல ஒன்றுமில்லை. விளையாட்டின் ஒரு பகுதியாக இரண்டு பேர் ஓடி மஞ்சள் சதுரமிட்ட ஒரு இடத்திலிருந்து ஒரு பந்தை எடுக்க வேண்டும். அதற்காக ஷெரினும் வனிதாவும் ஓடும்போது, ஷெரினை முக்கால் வழியிலேயே வனிதா நெட்டித்தள்ளி விட்டதை மட்டும் வனிதா ஆர்மியினர் ஹாட்ஸ்டாரில் பார்த்துக் கொள்ளுங்கள்.

Bigg Boss Sept 10

கேளு கேளு கேள்வி கேளு!

ரகசிய அறையில் இருக்கும் சேரன், வீட்டில் இருக்கும் மூன்று பேருக்கு மூன்று கேள்விகள் கேட்கலாம் என்று சொன்னார் பிக் பாஸ். வீட்டினருக்கு, வெளியிலிருந்து சேரன் கேள்வி கேட்பது போல பிக் பாஸ் சொன்னார். கேள்விகள் வந்தன. தர்ஷன் படித்தார்.

முதல் கேள்வி லாஸ்லியாவுக்கு.

“நான் இல்லாததை நீ உணர்ந்தாயா? எந்த நேரத்திலாவது ‘அவர் இருந்திருக்கலாம்’ என்று நினைத்தாயா.. அதை யாரிடமும் சொன்னாயா?”

லாஸ்லியா பதில்: “அவர் போனது எனக்குக் கஷ்டமா இருந்தது. நான்தான் போவேன்னு நினைச்சேன். அவர் போனதை ஒப்புக்க முடியல. அவர் இல்லாததை நான் உணர்ந்தேன். அதப்பத்தி ஷெரின், கவின்கிட்ட பேசிருக்கேன். நான் தூங்கறப்ப என் காலைப் பிடிச்சு விட்டிருக்காங்க. இந்த வீட்ல என் அப்பா இல்லைன்ன ஃபீலை அவர் வரவிடல. ஒரு கட்டத்துல ‘நீங்க என்கிட்ட நடிக்கறீங்களா?’னு கூட கேட்டிருக்கேன். எப்பாச்சும் கஷ்டப்படுத்திருந்தா ஸாரிப்பா. உடம்பப் பார்த்துக்கோங்க.”

Bigg Boss Sept 10

அடுத்த கேள்வி கவினுக்கு:

“வணக்கம் தம்பி. அவ்வளவு தூரம் பேசிவிட்டு வந்தேன். ‘இருவருமே விளையாட்டில் கவனம் செலுத்துகள். இருவரின் விருப்பங்களையும் வெளியில் வந்து பேசிக்கொள்ளலாம்’ என்று சொன்னேன். அப்படி இருந்தும் லாஸ்லியாவிடம் இங்கேயே முடிவைச் சொல்லச் சொல்வது நியாயமா, அதை வலியுறுத்தலாமா? செலிப்ரேட் பண்ணலாமா என்பதுவரை நீங்கள் நினைப்பது தவறாகத் தோன்றுகிறது. ஸ்டாப் பண்ணுவீங்களா?”

கவின் பதில்: “ஓகேண்ணே. புரியுது. இப்பக்கூட அதப்பத்திதான் பேசிட்டிருந்தோம். கேமுக்காக ஸ்டாப் பண்ணியாச்சு. ரெண்டு பேரோட ஃபீலிங்ஸும் உண்மையா இருக்கணும்னு மட்டும் பேசிட்டிருந்தோம். பார்த்துக்கலாம்; நான் பார்த்துக்கறேன்.”

Bigg Boss Sept 10

அடுத்த கேள்வி, வனிதாவுக்கு:

“தங்கையே, நான் வந்த அடுத்தநாள் அமைதியா தலைவர் போட்டிகூட வேணாம்னு இருந்த வனிதாவா இருப்பியா? அந்த வனிதா அழகா இருக்காங்க. அமைதியான வனிதாவா தொடர்வியா? அதிகம் பேசி தானும் குழம்பி மத்தவங்களையும் குழப்பற வனிதாவா இல்லாம உன்னோட நாமினேஷன் பார்த்துவிட்டுத்தான் இதைக் கேட்கிறேன்.”

பாசமலர் பேச வந்தார். ”இப்படித்தான் இந்த கேம் விளையாடணும்னு எனக்கு இப்பதாண்ணா தெரியுது. எது நடந்தாலும் உடனே சத்தமா பேசிடறேன். அது தப்புனு தெரியுது. இங்க நிறைய பேர் இங்க அமைதியா இருந்துட்டு அப்பறமா பேசறாங்க. புரிஞ்சுக்கிட்டேன். ஐ நோ வாட் யு ஆர் சேயிங்” என்றார்.

வனிதா சரியாகக் கணித்து “சேரன் அண்ணா சீக்ரெட் ரூம்ல இருக்காரா?” என்று கேட்டார்.

கவின் சாண்டியிடம் பேசிக்கொண்டிருந்தார். “நான் இங்க பேசறதத்தான் வெளில பேசப்போறேன். இதுல கேமுக்குள்ள கேக்கறேன். வெளில கேக்கறேன்னு ஏன் பிரிக்கணும்னு தெரியல” என்றார்.

Bigg Boss Sept 10

பிறகு லாஸ்லியாவிடம் வந்து குட்டையைக் குழப்பினார். “நீ நான் ரெண்டு பேரும் முடிவு பண்ண வேண்டியது. இதப் பத்தி கவலைப்பட வேண்டியது நாமதானே. ஏன் இதை இன்னொருத்தர் கேள்வி கேட்கறார்னு தெரியல” என்றார். இதை வளவளவென்று பேசினார். சேரன் உள்ளேயிருந்து பார்த்துக்கொண்டு “அந்தப் புள்ளைக்கு பைத்தியம் பிடிக்காம இருக்கணும். மக்கள் இத எப்படிப் புரிஞ்சுக்கறாங்கனு தெரியலயே” என்று புலம்பினார்.

திரும்ப வீட்டுக்குள்ளாற வரப்ப நீங்களே கேட்டுக்குங்க டைரக்டரே!

Bigg Boss Trivia

பிக் பிரதர் UK சீசன் ஒன்றில் வீட்டுக்குள் Davina McCaw என்ற பெயருள்ள இயந்திரக் கிளி ஒன்றை வடிவமைத்திருந்தார்கள். கொஞ்சம் பெரிய சைஸ் கிளி. “நீங்க சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைப்பா அது… எப்பாச்சும் பேசும்ப்பா…!” என்று ஆரம்பத்தில் பிக் பிரதர் அறிவித்திருந்தார். அது திடீரென்று பேசி கலவரப்படுத்தும். கிளி என்றால் பேசியதைத்தானே பேசும். இதும் அப்படித்தான். ஆனால், எப்போதோ நீங்கள் பேசியதை ரிப்பீட் செய்யும்.

உதாரணத்துக்கு கவினும் லாஸ்லியாவும் உட்கார்ந்து வனிதாவைப் பற்றி “என்ன இருந்தாலும் வனிதாக்கா பண்றதெல்லாம் ஓவர் அழிச்சாட்டியம். இஷ்டத்துக்கு ஆடறாங்க” என்று பேசுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். பேசி முடித்து இரவு எல்லாருமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அந்தக் கிளி கவின் சொன்னதை, கவின் குரலிலேயெ சொல்லிக்காட்டும்.

இப்படி எப்பவாவதுதான் பேசும். ஆனால் இது எப்ப எதைச் சொல்லும் என்று தெரியாமல் வீட்டினர் டரியலாகவே சுற்றிக்கொண்டிருப்பார்கள். ஜாலில்ல!