வீட்டுக்குள் சென்ற உறவுகள் அரங்கில் அமர்ந்திருக்க, கமல் இரு தரப்பிலும் பேசியதுதான் இன்றைக்கு ஒளிபரப்பானது. சொல்ல வேண்டியதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் அவர் சொல்லிவிட்டு இரு தரப்பையும் அழகாக பேலன்ஸ் செய்தார்.

ரகசிய அறையும் பகிரங்க அறையும்

பார்வையாளர்களோடு அமர்ந்திருந்தார் கமல். இந்தப் பக்கம் லாஸ்லியா அம்மா; அந்தப் பக்கம் ஷெரினின் அம்மா. “பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருக்கற போட்டியாளர்களுக்கு புகழும் விமர்சனமும் வெறுப்பும் அன்பும் உடனுக்குடன் போய்ச்சேராது; புரியாது. அதை அன்றாடம் அனுபவிப்பவர்கள் அவர்கள் குடும்பத்தார்கள். அவர்கள் இங்கே வந்திருக்கார்கள்” என்று பேசி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.

Bigg Boss Sept 14

பேனர் வைத்ததால் உயிரிழந்த சுபஸ்ரீ நிகழ்வைக் குறிப்பிட்டுக் கண்டித்தார். தன்னுடைய ரசிகர்கள் அப்படி பேனர் வைப்பதை ஒருபோதும் அனுமதித்ததில்லை என்றார். பிறகு நேராக வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைப் பார்க்கப் பணித்தார்.

மகள் லாலாவையும் மனைவி சில்வியாவையும் வழியனுப்பினார் சாண்டி. முழுக்க கண்ணீரோடுதான் இருந்தார். “இன்னும் மூணு வாரம்தான் சாண்டி” என்று ஹவுஸ் மேட்ஸ் தேற்றினர்.

பிக் பாஸ் வீட்டுக்குள் 83ம் நாள் விடிந்தது. மெய்ன் ஸ்பான்சரான ஃப்ரூட்டியின் ஒரு பெட் பாட்டிலை அறிமுகப்படுத்தினார்கள். ஸொமேட்டோ சார்பாக ஒரு டாஸ்க் என்று ஆரம்ப நிமிடங்கள் எல்லாம் “இதெல்ல்லாம் நடத்த காசு வோணும்ல?” என்ற மொமண்டுகளாக இருந்தன.

Bigg Boss Sept 14

அகம் டிவியை ஆன் செய்தார்கள். வீட்டுக்குள் விஜயம் செய்த, வீட்டில் இருப்பவர்களின் உறவினர்கள் அரங்கில் இருப்பதைக் குறிப்பிட்டார் கமல். “சேரனுக்கு ரகசிய அறையும் கவினுக்கு பகிரங்கமாக ஒரு அறையும் கிடைத்தன” என்று சிலேடையில் பேசினார். சேரனை, ரகசிய அறை அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளச் சொன்னார்.

“அது ஒரு புது விளையாட்டா இருந்தது. உள்ளிருந்து பார்க்கறப்ப அவங்க வியூகம் அழகா இருந்தது. லாஸ்லியாவோட ஏக்கம் பிடிச்சிருந்தது. தனியா உட்கார்ந்து யார்ட்டயும் சொல்ல முடியாம இருந்ததைப் பார்த்தேன். வனிதாவோட அழுகை பிடிச்சிருந்தது. வேறு ஒரு முகம் அவங்களுக்கு இருந்ததைப் பார்த்தேன்.”

கமல் இடைமறித்தார். “ஆமா.. வனிதாக்கு என்னென்னமோ பட்டப்பேர்லாம் வெச்சிருந்தாங்க. திடீர்னு அம்மான்னு ஒரு பொசிஷன் வந்துருச்சு.”

சேரன் தொடர்ந்தார்: “ஷெரினோட நட்பு பிடிச்சது. உள்ளிருந்து பார்க்கறப்ப சாண்டி ஒரு இன்னொசண்டான நல்ல மனுஷனா தெரிஞ்சார். தர்ஷன், முகின் நல்லா விளையாடறாங்க. கவின் நல்ல பையன். சில விஷயங்கள் அவருக்குப் புரியவைக்கறதுக்காக நான் சிலது பண்ணினேன். அவ்ளோதான்.”

”புரிஞ்சுதா கவின்?” எனக் கேட்டார் கமல். கன்னத்தைத் தடவிக்கொண்டே புரிஞ்சது என்றார் கவின். “அந்த ’அறை’யில் இருந்து புரிஞ்சதக் கேட்கல. சேரன் ரகசிய அறையில் இருந்து கேட்டது புரிஞ்சதா?”

Bigg Boss Sept 14

“லெட்டர் மட்டும் வந்தப்ப குழப்பமா இருந்தது. அப்பறம் சேரன் அண்ணா உள்ள வந்ததும் சிலது பேசினார். முழுசா புரிஞ்சது” என்றார் கவின்.

”உள்ள வந்த ஹவுஸ்மேட்ஸ் எல்லாம் கேம் விளையாடுங்க கேம் விளையாடுங்கன்னாங்க. எல்லாரும் விளையாடிட்டுத்தான் இருக்காங்க. முந்தைய சீசனுக்கு பெட்டர்தான். வெளில இருந்து வந்தவங்க பொதுவா சொன்ன இன்னொரு விஷயம் ‘யாரையும் நம்பாதே’ங்கறது” தொடர்ந்து சேரன் ரகசிய அறைக்கும் போனதையும் அவர் திரும்ப வீட்டுக்கு வந்ததையும் வீட்டினர் எப்படிப் பார்த்தார்கள் என்று கருத்து கேட்டார் கமல்.

லாஸ்லியா அவர் போனது, தனக்கு பதிலாக என்பதால் குற்றவுணர்ச்சியில் இருந்ததாகவும் அவர் திரும்பி வந்ததும் ஃப்ரீ ஆனார் என்பதையும் சொன்னார். இப்படி ஒவ்வொருவரும் அவர்களது கருத்தைச் சொன்னார்கள்.

புரிஞ்சதா லாஸ்லியா?

முகின் வந்த விருந்தினர்களுக்கெல்லாம் அவரது கைவண்ணத்தில் செய்த கலைப் பொருட்களைக் கொடுத்ததைப் பாராட்டினார். லாஸ்லியாவின் அப்பா, மகளைப் பார்க்க பத்து வருடங்களுக்குப் பின் வந்தாலும், மகளைவிட சேரனை கட்டியணைத்து மகிழ்ந்ததைக் குறிப்பிட்டார்.

லாஸ்வியாவின் உணர்வுகளைக் கேட்டார். “அம்மா வருவாங்கன்னே எதிர்பார்க்கல. அப்படி இருக்கறப்ப அப்பா வருவார்னு சத்தியமா எதிர்பார்க்கல. அவர் வந்தப்ப கொஞ்சம் மோசமான நிலைமைல இருந்தது. நான் என் கண்ல இருக்கற மரக்கட்டையப் பார்க்காம மத்தவங்க கண்ல இருக்கற தூசியைப் பார்த்துட்டிருந்தேன். அது எவ்ளோ தப்புனு அவங்க வந்து புரியவைச்சாங்க!”

Bigg Boss Sept 14

”உங்க குடும்பம் எவ்ளோ கஷ்டத்துல இருந்து மீண்டு வந்த குடும்பம்னு தெரியும். உங்க குடும்பம் ஒரு நடுத்தரக் குடும்பம். உங்கப்பாக்கு எல்லாத்தயும் விட பக்கத்து வீட்டுக்காரங்க என்ன சொல்லுவாங்கன்ற பதற்றம் அதிகமா இருந்தது. அதை நீங்களும் புரிஞ்சுட்டிருப்பீங்கனு நெனைக்கறேன்” என்றார் கமல்.

“நல்லாவே புரிஞ்சது சார்” என்றார் லாஸ்லியா. அடுத்து கவினிடம் வந்தார்.”கவின் லாஸ்லியா அப்பா வந்தப்ப ரொம்ப பதட்டமா இருந்தீங்க. அழுதீங்க. ஆனா எனக்கு ரொம்பப் பிடிச்சது லாஸ்லியாவோட அப்பா உங்களை டிரீட் பண்ணின விதம். அவருடைய பதற்றத்தை உங்க மேல காட்டவே இல்லை. உங்க மேல கோபப்படவே இல்லை. அதனால்தான் அவரை ஜென்டில்மேன்ங்கறேன்” என்றார். அப்போது லாஸ்லியாவின் அம்மா தன் கணவரைப் பார்த்த பார்வையை, மரியநேசன் தன் வாழ்நாளுக்கான விருதாக வைத்துக்கொள்ளலாம்.

Bigg Boss Sept 14

நண்பேண்டா!

“மகள்ட்ட காட்டின அதே கோபத்த உங்ககிட்டயும் காட்டிருக்கலாம். காட்டிருந்தா என்னனு நீங்களும் கேட்டிருக்க முடியாது. காட்டல அவரு. நான் அந்த இடத்துல இருந்திருந்தா என்ன செஞ்சிருப்பேனோ அதைவிட சிறப்பாவே அவர் இதைக் கையாண்டார். நீங்க மன அழுத்ததுக்கு ஆளாக வேண்டியதில்லை. அவர் சொன்ன மாதிரி நீங்க உங்க கேமை விளையாடுங்க.”

தொடர்ந்து பேசினார். “கவின், நீங்க இவ்ளோ மன அழுத்ததுல இருந்தப்ப சாண்டி ஜோக் அடிச்சது உங்களுக்குப் பிடிக்கல. எனக்கு சாண்டிகிட்ட என்ன பிடிச்சதுன்னா, திட்ட வாங்கிட்டு பாத்ரூம் போய்த் தனியா அழுதுட்டு கண்ணத் தொடச்சுட்டு வெளியே வந்து, நீங்க தனியா இருக்கீங்கனு உங்களுக்கு சமாதானம் சொன்னார். அதுதான் நல்ல ஒரு நட்பு. இதுல இருந்து ஜென்டில்மென் உள்ளயும் இருக்காங்க, வெளிலயும் இருக்காங்கனு புரியுது!”

லாஸ்லியா அவரது புரிதல் என்ன என்பது பற்றிப் பேசினார். “உள்ள வர்றப்ப எனக்கு யாரையும் தெரியாது. அம்மாவும் அதக் குறிப்பிட்டாங்க. இனி இருக்கற வரை அப்பா அம்மா பெயரை எவ்ளோ உயர்த்த முடியுமோ அதப் பண்ணுவேன். ஒழுங்கா கேம் விளையாடுவேன்” என்றார் லாஸ்லியா.

Bigg Boss Sept 14

”உள்ள இருக்கறப்ப கேம் கேம்னு சொல்றீங்களே.. அது வெளில வந்ததும் ‘வாழ்க்கை’னு மாறிடும் என்ற கமல், வனிதா, அன்னையாக இருந்த தருணங்கள் அவரது இமேஜை ஒட்டுமொத்தமாக மாற்றியது என்றார்.

சேரன், லாஸ்லியாவின் தங்கைகள் இருவரும் தன்னிடம் ஓடி வந்து அப்பா என்று அழைத்ததையும், லாஸ்லியா அப்பா வாஞ்சையாகத் தனக்குக் கொடுத்த முத்தத்தையும் வெகுமதியாக நினைப்பதாகச் சொன்னார். ஒரு மணிநேர ஒளிபரப்பை வைத்துக்கொண்டு அவர்கள் அப்படி நடந்து கொண்ட விதம், தான் சரியாகத்தான் இருந்திருக்கோம் என்பதையும் இன்னும் தனக்கான பொறுப்பையும் உணர்த்தியதைக் குறிப்பிட்டார்.

பேசிக்கொண்டே இருந்த கமல் “லாஸ்லியா கால் மேல கால் போட்டிருக்கீங்களா?” என்றார். அப்படித்தான் அமர்ந்திருந்தார் லாஸ்லியா. “அப்பா ஸாரிப்பா” என்றபடி காலைக் கீழிறக்க ‘நான் மாடர்ன் அப்பா. அப்படி கால் மேல கால் போட்டுக்கங்க. உங்களுக்கு எது வசதியோ அப்படி உட்காருங்க. மரியாதை மனசுல இருக்கணும். இங்க என்னை நீங்க மரியாதைக் குறைவா பேசினதே இல்ல. அப்படியே இருங்க” என்று சொன்னார்.

Bigg Boss Sept 14

எல்லாம் சரியாத்தான் இருக்கு!

இடைவேளைக்குப் பிறகு லாஸ்லியாவின் குடும்பத்தாரிடம் பேசினார். ”10 வருடங்களுக்குப் பிறகு பார்த்தப்ப ‘எப்டி இருக்க’னு கேட்காம ‘என்ன பண்ணிட்டிருக்க உள்ள’னு கேட்டீங்க. லாஸ்லியா அம்மா சரியா அவங்களை ஹேண்டில் பண்ணாங்க. இப்ப லாஸ்லியா சார்பா உங்ககிட்ட சிலது பேசணும். பக்கத்துவீடு, சமுதாயம் இவர்களைப் பற்றியெல்லாமான உங்கள் கவலை ஓரளவுக்கு சரி. ஆனால், அவர்கள் அசம்பாவிதமாக எதுவும் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அப்படி ஏதும் நடக்கவில்லை. உங்கள் வளர்ப்பு சரியாகத்தான் இருக்கிறது. அதற்கு லாஸ்லியா நடந்துகொண்ட விதமே சாட்சி. இனி வெளில வந்ததும் லாஸ்லியா எந்தப் பாதைல போகணும்னு நீங்க முடிவு பண்ணனும்” என்றார். “அது அவ விருப்பம்!” என மரியநேசன் சொல்ல “அதான். அப்படி ஒரு அப்பா நினைச்சதாலதான் நான் இங்க, இந்த மேடைல இருக்கேன்” என்றார்.

அடுத்து கவின் நண்பர் பிரதீப்பிடம் பேசினார். “அறைஞ்சுட்டீங்க. அது உண்மையான கோபமா?”

“ஆமா சார். அவன் தனிப்பட்டு ஜெயிக்கணும்னு நினைக்கல. இத்தனை ஃபாலோயர்ஸை சம்பாதிச்சிருக்கான். அதுக்கு அவன் நியாயம் சேர்க்கணும்னு தோணிச்சு. அதான் பேசிடணும்னு எல்லாம் பேசிட்டேன். அப்படியும் அவன் புரிஞ்சுட்ட மாதிரி தெரியல. அதான் அந்த அறை அவசியமா இருந்தது” என்றார் பிரதீப்.

Bigg Boss Sept 14

“கவின் சம்பாதிச்ச புகழுக்கு நிகரானது உங்க நட்பு” என்று பாராட்டினார். பிறகு தர்ஷனின் அம்மாவிடம் பேசினார். “தர்ஷன் என்ன நினைச்சுட்டு வந்தாரோ அது நிறைவேறணும்” என அவர் சொன்னதை “நிறைவேறும்-னு சொல்லுங்க. நீங்களே சொல்லலைன்னா எப்டி?” என திருத்தினார்.

சாண்டி தன் குழந்தை தன்னிடம் அடையாளம் கண்டு ஓடி வரவில்லை என்று குறைபட்டுக் கொண்டதைப் பேசினார். “அவர் உள்ள போறப்பவே அதைச் சொல்லி புலம்பினார். அம்பதாவது நாள்ல அவர் அழுததும் நாங்களும் பயந்துட்ட்டோம். உள்ள போனதும் லாலா கரெக்டா அவர்கிட்ட போய்ட்டா. ஆனாலும் அவருக்கு ஏதோ குறை” என்று சாண்டியின் மனைவி சொல்ல “சாண்டி குழந்தையைத் தாண்டி, சாண்டியை இப்ப பல குழந்தைகளுக்குத் தெரியும். வெளில வந்ததும் சொல்லுங்க” என்றார் கமல்.

சேரன் மகளிடம் பேசும்போது அவர் “எனக்கு பத்து பதினஞ்சு கஸின் இருக்காங்க. லாஸ்லியா எனக்கு 16வது கஸின்” என்றார். “ஆனா உள்ள சேரனுக்கு வேறொரு அட்வைஸ் பண்ணினீங்களே?” என கமல் கேட்டதும் ‘பத்தவெச்சுட்டியே பரட்ட’ என்று கைதட்டினர் பார்வையாளர்கள்.

Bigg Boss Sept 14

“அது முழுக்க பொசஸிவ்நஸ்லதான் சார்” என்றார் சேரன் மகள். ஷெரினின் அம்மா, ஷெரின் தோழி இருவரிடமும் பேசினார். பிறகு வீட்டுக்குள் டிவி வழியே தோன்றினார்.

சேரன் தன் மனைவியும், மூத்த மகளும் வராதது வருத்தம் என்றார். அவரை விட எனக்கு ஷாக்காக இருந்தது. வந்தது அவரது மனைவி என்றுதான் நினைத்திருந்தேன். யோவ் பிக்பாஸு… சொல்ல மாட்டியாய்யா? எடிட் பண்ணினவங்களுக்கும் தெரியல போல. ஒரு இடத்துலயும் அதைப் பதிவு பண்ணலியேய்யா!

தர்ஷனுக்கு அவர் அப்பா வருவார் என்று எதிர்பார்த்ததைச் சொன்னார். வனிதா முழுக்க உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். “என் பையனுக்காக பலரையும் நான் பகைச்சுக்கிட்டேன். அவன் என்கிட்ட திரும்ப வருவான்னு ரொம்ப வருஷமான எதிர்பாப்பு. லாஸ்லியாகிட்ட அவ அப்பா வருவாங்கனு சொன்னேன். ஷெரின், முகின்லாம் வந்து என் மகன் ஸ்ரீஹரி வருவான்னு சொன்னாங்க” என்றார்.

Bigg Boss Sept 14

முகின் தன் அப்பா, தம்பி வந்திருக்கலாம்னு தோணுது என்றார் கண்ணீரோடு. சாண்டி “என் மச்சினிச்சி வந்திருக்கலாம்” என்றார். ‘சிரிக்காதீங்கப்பா. அவ நல்லா டான்ஸ் ஆடுவா. எல்லாருமா டான்ஸ் ஆடலாம்னு நினைச்சிருந்தேன். லாலா வந்ததுல என் பொண்டாட்டியக் கூட கவனிக்கல நான்” என்றார்.

Bigg Boss Trivia

அமெரிக்க பிக் பாஸில் ஒரு சீசனில் வைத்திருந்த சீக்ரெட் மேட்டர். வரும் போட்டியாளர்கள் எல்லாருக்குமே ஒரு ஜோடி இருந்தனர். ஜோடி என்றால் ஆண் – பெண் மட்டும் அல்ல. ஏதோ ஒரு வகையில் இருவரும் போட்டிக்கு வரும்போதே தொடர்பில் இருப்பவர்களாக இருந்தனர். ஒரே ஆஃபீஸில் பணி புரிந்த இருவர், அண்ணன் – தங்கை, பாய் ஃப்ரெண்ட் – கேர்ள் ஃப்ரெண்ட், அக்கா தங்கை, பக்கத்துப் பக்கத்து வீட்டுக்கார்கள் இப்படி. மொத்தம் 7 இணைகள் போட்டியிட்டனர். 14 பேர்.

இது எதற்கு தெரியுமா? நாமினேஷன், எவிக்‌ஷன் என்று எல்லாம் தாண்டி ஃபைனலுக்கு வரும் இருவருமே ஜோடியாக இருந்தால், ஜெயிப்பவருக்கு ஒரு ஜாக்பாட் பரிசு உண்டு. உதாரணத்துக்கு சேரன், வனிதா இருவரும் நிஜ அண்ணன் தங்கையாக இருக்கும்பட்சத்தில் அப்படியாக அல்லது ‘கொலீக்ஸ்’ என வரலாம். உள்ளே வந்து, பல எவிக்‌ஷனுக்குப் பிறகு (எவிக்‌ஷன், நாமினேஷன் எல்லாமே தனித்தனியாகத்தான்.) பல நாமினேஷன்களுக்குப் பிறகு ஃபைனலுக்கு சேரன், வனிதா இருவருமே போனார்கள் என்றால். அதில் யார் வின்னர் ஆனாலும் அவருக்கு ஒரு ஜாக்பாட் பரிசு கிடைக்கும்.

அந்தப் பரிசு எவ்வளவு தெரியுமா? ஏழு கோடி!