பிக்பாஸ் வீட்டுக்குள்ளே ‘எல்லாந்தெரிஞ்ச ஏகாம்பரம்’ வனிதா பஞ்சாயத்துக்களை செய்துகொண்டிருக்க, நேற்று வெளியேயும் அவர்தான் டாபிக். ஆனால், பிரச்னைகளை சரி செய்ய வேண்டிய கேப்டனான மோகன் வைத்யா என்னென்ன செய்தார் தெரியுமா ?

வனிதா

தெலங்கானாவைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருக்கும் வனிதாவுக்கும் திருமணமாகி, விவாகரத்தும் ஆகிவிட்டது. அவர்களுக்குப் பிறந்த குழந்தை ஜெனிதாவை, வனிதா கடத்தி வந்துவிட்டார் என்று ஆனந்தராஜ் புகார் அளித்திருக்கிறார். பிப்ரவரி மாதத்தில் அளித்த புகாருக்காக விசாரணைக்கும் கைது நடவடிக்கைக்கும் தெலங்கானா போலீஸ் வந்திருக்கிறது.

ஏற்கெனவே பல ஊர் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் போலீஸ் போட்டியாளர்களை விசாரிக்கச் சென்ற சம்பவங்களெல்லாம் நடந்துள்ளது. முதல் சீசனில் ஓவியா தற்கொலை என்று போலீஸ் விசாரிக்கச் சென்றது என்ற செய்தியெல்லாம் வந்தது.

இந்த சீசனில் ஆரம்பத்திலியே இப்படி…!

சரி.. இன்றைய நிகழ்ச்சிக்குப் போவோம்.

பற்றவைத்த சாக்‌ஷி.. பற்றிக்கொண்ட வீடு!

வெளியே போலீஸால் விசாரிக்கப்பட்ட வனிதா, பிக்பாஸ் வீட்டில் முகினை விசாரித்துக்கொண்டிருந்தார். இந்தப் பிரச்னைக்கு மூல காரணமே சாக்‌ஷிதான். அரைகுறையாக கடந்து செல்லும்போது பேசியதைக் கேட்டுவிட்டு வந்து பற்றவைத்தது அவர்தான்.

சாக்ஷி

அவர் சொன்னதை, முகின் மறுத்தார். ‘உன்கிட்ட ‘அபிராமிகிட்ட பேசாதன்னு மீரா சொன்னா’ என்று முகினை வனிதாவும், சாக்‌ஷியும் குழப்பினர். வனிதா ஒருபடி எக்ஸ்ட்ரா ஸ்மார்ட்டாக ‘குறும்படம் போட்டுப் பார்த்துடுவோம்’ என்றார். சனிக்கிழமை கமல் சரியாக இவரது டயலாக்கைப் போட்டு, ‘குறும்படம் போட்டுப் பார்க்கலாமா?’ என்று கேட்பார். போடுவார்கள். அதில் சாக்‌ஷி அந்த டயலாக்கின்போது கடந்து போனதைக் காட்டி சாக்‌ஷியின் மூக்கறுப்பார்கள். வனிதாவும் ‘சாக்‌ஷி மேலதான் தப்பு; ஸாரி மீரா. ஸாரி முகின்’ என்பார். மீரா அழுவார்.

இவர்கள் குழப்பியதும் ‘இரு நான் நேரடியாகவே கேட்கறேன்’ என்று மீராவிடம் கேட்டார். ‘நான் அப்படி எதும் சொல்லலயே’ என்பதோடு மீரா நிறுத்தியிருக்கலாம். அதைவிடுத்து ‘அவங்க சொல்றாங்கனு எங்கிட்ட எப்படி நீ கேட்கலாம். இம்மெச்சூர்ட்! Grow Up.. Grow Up’ என்று கத்தினார் மீரா. பதிலுக்கு முகினும் கத்தினார்.

மீரா மிதுன்

 

தூபம் ஸ்பெஷலிஸ்ட் வனிதா !

சேரன் முகினை அழைத்து “இந்த வீட்ல பேச மட்டும்தான் உரிமை. கத்த, திட்ட, அடிக்கன்னெல்லாம் போகக்கூடாது” என்று சொன்னார். சுற்றி நின்றுகொண்டிருந்த பலரின் மனதில், வனிதாவுக்கான  ‘இது நமக்கான மெசேஜ்’ என்று புரிந்தது. சும்மா விடுவாரா அவர்?

“அவனை கொஞ்ச நேரம் சும்மா விடுங்க” என்று சேரன் சொன்னார். கேட்டால்தானே? நான் அவன் பெஸ்ட் ஃப்ரெண்ட் அண்ணா.. நான் போவேன்” என்று முகின் பின்னால் போனார். கூடவே ஷெரின், வனிதா, ரேஷ்மா என்று மொத்தக்குழுவும் போய் அவரை மூளைச்சலவை செய்தார்கள்.

“சத்தம்போடக்கூடாதுனு சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. நானும் பொம்பளதான். நீ மீராகிட்ட சத்தமா பேசினது தப்பே இல்லை” என்று தூபம் போட்டார் வனிதா.

வனிதா

இந்த எல்லா பிரச்னைகளிலும் சாக்‌ஷியை யாருமே கேள்வி கேட்கவில்லை. எல்லா சீசன்களிலும் இப்படித்தான்.

“சாக்‌ஷி.. அங்க பேசினத இங்க வந்து ஏன் சொல்ற?” என்று வனிதா / அபிராமியோ

“சாக்‌ஷி… இங்க பேசினத அங்க போய் ஏன் சொல்ற?” என்று மீரா / முகினோ கேட்கவில்லை. அதுசரி.. கேட்டா நமக்கேது கன்டென்ட்!

சீசன் 3ன் சகுனி வனிதா “நீயும் அபிராமியும் ‘அப்படித்தான் நாங்க ஃப்ரெண்ட்ஸா இருப்போம். சுத்துவோம். சண்ட வந்தா சண்ட போட்டுக்குவோம்;னு எல்லார்ட்டய்யும் போய் சொல்லணும். பின்னாடி பேசறது, ஒருத்தருக்கொருத்தருக்கர் மூட்டி விடறதெல்லாம் எங்களுக்குப் பிடிக்காது” என்றார். அய்யோடா… வேதம் சாத்தான் ஓதுது!

மோகன் வைத்யா

சகுனிக் கூட்டணி

மதுமிதாவோடு லாஸ்லியாவையும் சும்மா விடக்கூடாது என்றார் வனிதா. “என் செல்ஃப் எஸ்டீமை ஹர்ட் பண்ற மாதிரி பேசினா செருப்பு பிஞ்சுடும்” என்றார் மீரா.

இந்த அட்வைஸ் கூத்தெல்லாம் நடக்கும்போது மோகன்வைத்யாவும் அவர்களுடனேயேதான் இருந்தார். நேற்றைக்கு மீராவை மகளே என்று முத்தமிட்டதற்காகவாவது “ஏன் இப்டிலாம் பேசிக்கறீங்க” என்று கேட்டிருக்கலாம். அல்லது இந்த வார கேப்டன் என்ற முறையிலாவது கேட்டிருக்கலாம். ஆனால் அவர், ஹவுஸ்மேட்ஸ் தோளில் தொங்கும் மைக் பை போல செட் ப்ராப்பர்ட்டியாகத்தான் இருந்தார். ‘ இங்க என்ன பிரச்னை நடந்துக்கிட்டு இருக்கு யார்றா இவர் வந்ததுல இருந்து மிக்சர் தின்னுக்கிட்டு” என கவுண்டமணி சொல்வாரே . அதற்கு அப்படியே செட் ஆனார் மோகன் வைத்யா. ‘ தூக்கி அடிச்சுடுவேன் பார்த்துக்க ‘ கேப்டன், கூல் கேப்டன் என சந்தித்த ஊரில் இது என்னடா ‘மிக்சர்’ கேப்டன் .

இதற்கு நடுவே இன்னொரு விஷயமும் நடந்தது. ஷெரின், சாக்‌ஷி, வனிதா – மூவரின் பார்வையும் லாஸ்லியா பக்கம் போனது. லாஸ்லியா, மதுமிதா, மீரா மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். வனிதா “என்னது லாஸ் அவங்ககிட்ட ஏதோ பேசிட்டிருக்கா?” என்று கேட்டார்.

“உங்களுக்குத் தெரியாதா.. அவ அவங்க சைடு போய் மூணுநாளாச்சு” – இது சாக்‌ஷி.

வனிதா: “வ்வாட்ட்ட்! அப்படியா?”

sakshi agarwal

சாக்‌ஷி:”அது சரி. நெஜம்மா நீங்க கவனிக்கலயா?”

அதற்கு வனிதா “நோ..ய்யா. ஐ டோண்ட் கேர். நான் அதையெல்லாம் கவனிக்கவே மாட்டேன். நான் உண்டு என் வேலையுண்டுனுதானே இருக்கேன்” என்று சொன்னதைக் கேட்டதும் நெஞ்சைப் பிடித்துக்கொண்டேன். இப்படி ஒரு குலக்கொழுந்தை, குத்துவிளக்கை, மங்கையர்க்கரசியை, மாதர்குல மாணிக்கத்தை தப்பா பேசறீங்களேய்யா!

’என் வேலையுண்டுனு இருப்பேன்’ என்று சொன்ன அவர் வேலை என்னவென்று மூன்று மணிநேரம் யோசித்தும் எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை. அவர் முகத்தைச் சுற்றி ஃபேஷியல் மாஸ்க் ஒன்று போட்டுக்கொள்வாரே.. அதைத்தவிர வீட்டு வேலை செய்ததாகவோ, உருப்படியாக பேசுவதையோ கேட்டதில்லை. ஒருவேளை இப்படிப் புறம்பேசுவதும், சண்டை மூட்டிவிடுவதையும்தான் ‘என் வேலை’ என்று சொல்கிறாரோ என்னமோ.. இருக்கலாம்!

வனிதா

வலையில் விழுந்த முகின்

இந்த சகுனிக் கூட்டணி சொன்னதைக் கேட்டு முகின் அபிராமியுடன் கூட்டத்தை கூட்டினார். “எங்க ரெண்டு பேருக்குள்ளயும் ஒண்ணும் இல்ல. வி ஆர் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். அது யாருக்காச்சும் பொறுக்கலைன்னா கண்ண மூடிக்கங்க” என்று அபிராமி ஓவர் ஆக்டிங்கில் கத்தினார்.

அபிராமி அருகே வந்து நின்ற சாக்‌ஷி “மீராட்ட பேசக்கூடாதுனு நாங்க சொல்லிருக்கோமா?” என்று ஒவ்வொருவராகக் கேட்டார். அவர் நாங்க என்றதும் ஷெரினும் அவர் அருகே போய் நின்றார். யாருமே இல்லை என்று சொல்ல தட்ஸிட் என்றார்.

மதுமிதா “எல்லார்ட்டயும் ஏன் கேட்கற. யார் சொன்னாங்களோ அவங்களை மட்டும் கேட்கலாமே” என்றார். இதற்குத்தான் காத்திருந்தோம் என்பதுபோல சகுனிக்கூட்டணி மதுமிதா மேல் பாய்ந்தது,

முகின்

”முகின்கிட்ட பார்த்து இருந்துக்கோ.. உன் பேர் கெடுது’னு நீ சொன்னத நானே கேட்டிருக்கேன் என்றார் ஷெரின். வனிதாவும் ஆமாம் போட்டார். “அவன் என் தம்பி மாதிரி. அப்ப பார்த்து இருனு அட்வைஸ் பண்ணிருப்பேன். அதுக்கென்ன இப்ப?” என்றார் மதுமிதா. கார்னர் பண்றீங்களா என்று மதுமிதா கேட்டதற்கு ’கார்னர் கார்னர் பாரிஸ் கார்னர்’ என்று ஒரு கேவலமான உடல்மொழியைக் காட்டிச் சொன்னார் வனிதா.

அட்டென்ஷன் கமல்!

ஷெரின் ஏதோ சொல்ல வர, மதுமிதா இடைமறித்தார். “நடுவுல பேசக்கூடாதுனு உங்க வீட்ல கத்துத்தரலியா?”என்று கேட்டார் ஷெரின். “இல்ல. நீ கத்துக்குடு” என்று திருப்பிக் கொடுத்தார் மதுமிதா. கொஞ்ச நேரம் அந்தச் சண்டை ஓடியது. வனிதா “விடு விடு.. அவ நம்ம லெவலுக்குக் கீழ’ என்றொரு முத்தை உதிர்த்தார்.

வனிதா போன்ற அதிகார போதை கொண்டவர்கள் சட்டென்று எடுக்கும் ஆயுதம் அதுதான். லெவல்! சாதி, அந்தஸ்து, பணம், படிப்பு என்று ஏதாவதொரு வகையில் ‘லெவலை’ ஒப்பிடுவார்கள். கமல் இதைத் தட்டிக்கேட்பாரா என்று தட்டிக்கழிப்பாரா என்று தெரியவில்லை. இந்த லெவலைச் சொல்லும்போது தலையில் விரலை வைத்தார் வனிதா. “நான் அவ அறிவு எங்க லெவல்ல இல்லைனு சொன்னேன்’ என்று வனிதா அப்போது சமாளிக்கலாம். இது அதுல்ல என எனக்கு  காயத்ரி ரகுராமின் ‘ சேரி பிஹேவியர் ‘ வாசகம் நினைவுக்கு வந்தது.

ஷெரின்

இந்த லெவல் டயலாக்கை வனிதா சொன்னதும் ஷெரினும் “நீங்க அன்னைக்கே சொன்னீங்க” என்றார் ஷெரின். என் கணிப்பு சரியென்றால் “நான் விஜய்க்கு ஜோடியா நடிச்சவ.. நீ தனுஷ்க்கு ஜோடியா நடிச்சவ. நம்ம லெவல் முன்னாடி மதுமிதால்லாம் யாரு?” என்று வனிதா பேசியிருக்கக்கூடும்!

மறுபடியும், இந்தச் சண்டையின்போது மோகன்வைத்யா சோஃபாவில் அமர்ந்துகொண்டுதான் இருந்தார். வெளியே மைக் பையாக இருந்தவர், இங்கே நாற்காலி, சோஃபோக்களில் தானும் ஒன்று என்பது போல அமர்ந்திருந்தார்.

மோகன் வைத்யா

டைனிங் டேபிளில் லாஸ்லியா சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது இந்தச் சண்டையெல்லாம் நடந்தது. செந்தில் ஒரு படத்தில் பதனி விற்பாரல்லவா அதுபோல, “எல்லாம் இவ்ளோ சண்டை போட்டுட்டிருக்கோம். இவ எதுலயுமே மாட்டிக்க மாட்டீங்கறாளே’ என்று நினைத்த அபிராமி லாஸ்லியாவிடம் பாசத்தூண்டிலைப் போட்டார். “நீ தப்பா நினைக்காத.. இதைப் பேசித்தீக்கணும் அதான்” என்று தேனொழுகப் பேசினார். வனிதா ‘அவகிட்ட என்ன பேச்சு. அவளை விடு. நாம என்ன பிக்னிக்கா வந்திருக்கோம்.. பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருக்கோம். எல்லாம் நடக்கும் இங்க’ என்று ஏதோ சொல்ல லாஸ்லியா கொஞ்சம் கோபமாகவே எழுந்து போனார். ”இவ எதுக்கு இப்ப ஓவரா ரியாக்ட் பண்றா?” என்றார் வனிதா.

கவின் என்ன பாஸ் இதெல்லாம்

ஆண்களில் கவின்தான் டகால்டி என்று நேற்றும் சொன்னேன்னல்லா.. பார்ட்டி இன்று அதை மீண்டும் நிரூபித்தது! லாஸ்லியா கோபமாக வெளியே போக “பேசிட்டிருங்க..” என்று சகுனிக்கூட்டணியை விட்டு நகர்ந்தது. செகப்புக்காய் பின்னாடியே வெள்ளைக்காய் போகுது என்பதுபோலவே போனார்.

கவின்

பாத்ரூமுக்குள் ‘லாஸ்லியா போக, ‘இரு மச்சான் இரு மச்சான்’ என்று போய்க் கதவைத் தட்டினார் கவின். ‘அட சல்லிப்பயலே’ என்று பக்கத்துவீட்டு லட்சுமியக்கா கத்தியது என் காதில் விழுந்தது. தர்ஷனும் அங்கே வந்தார்.

பாத்ரூமுக்குள்ளிருந்து “ஓம்.. ஓம்..” என்று இலங்கைத் தமிழில் பேசிய லாஸ்லியா தொடர்ந்து “நான் ஓகே கவின்.” என்றார் “நீ ரிலாக்ஸ் பண்ணிட்டு வா. நான் வெள்ல நிக்கறேன்” என்றார் கவின். “அப்பறம்? உள்ள வேற போவியா நீ?” என்று பக்கத்துவீட்டு லட்சுமியக்கா இப்போதும் கத்தியது எனக்குக் கேட்டது.

வீட்டுக்குள் வசூல்ராஜாவில் ‘சப்ஜெக்டை’ உயிர்ப்பிக்க கமல் முயல்வது போல “என்ன நடக்குது கேப்டன்.. கேப்டன்… கேப்டன்” என்று ஞாபகப்படுத்தினார் ஃபாத்திமா பாபு. மதுமிதா இடைமறிக்க “இல்ல நான் கேப்டன்கிட்ட கேக்கறேன்” என்றார் ஃபாத்திமா. சப்ஜெக்ட் கண் சிமிட்டியது போல ‘அதான் எனக்கும் புரியல’ என்று ஒற்றை வரியை உதிர்த்தார் மோகன் வைத்யா. ”ஏஸ் எ கேப்டன் உங்களுக்குத்தான் தெரியணும் கேப்டன்” என்று வார்த்தைக்கு வார்த்தை கேப்டன் போட்டு அவருக்கு உணர்த்தினார் ஃபாத்திமா. வெல்டன் ஃபாத்திமா!

வெளியே வனிதா ஃபாத்திமா மீதும் குற்றப்பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்தார். இன்னும் வனிதா குற்றப்பத்திரிகை வாசிக்காத ஒரே நபர் கமல் தான். அதுவும் விரைவில் நடந்துவிடும் போலிருக்கிறது.

வெல்டன் லாஸ்லியா!

லாஸ்லியாவை, சகுனிக்கூட்டணி தவிர எல்லாருமாகச் சென்று சமாதானப்படுத்தினார்கள். பாய்ஸில் கவின் போல கேர்ள்ஸில் ரேஷ்மா போல. லாஸ்லியாவை இவர்கள் சமாதானப்படுத்தும்போது உடனிருந்தார்.

ரேஷ்மா

சேரன், மதுமிதாவிடம் ‘போய்த் தூங்கு.. இப்போதைக்கு அமைதியா இருங்க. இதைப் பத்தி எதும் பேசாதீங்க” என்றார். ஒருவகையில் அவர் முதலிலேயே சொன்னார். அப்போது “முகின் என் ஃப்ரெண்டு.. நான் பேசுவேன்” என்று அபிராமி போய்ப் பேச அப்படியே கூட்டணியே போய்ப் பேசி இந்த அளவுக்கு வந்திருக்கிறது. லாஸ்லியாவிடம் தர்ஷன் “இன்னும் சண்டை வரும். பழகிக்கோ” என்றார்.

மோகன்வைத்யா அபிராமி, ஷெரினிடம் “இதோட விடுங்க. இதப்பத்தி பேசாதீங்க” என்றார். சரி என்றார்கள் அவர்கள். அபிராமி லாஸ்லியாவை கைக்குள் போட்டுக்கொள்ள திட்டம் போட்டார்.

சரவணன் “இவங்க கூட இருந்தா மென்டல் டிஸார்டர் ஆகிடுவேன். என்னை கழட்டி விடுங்க பிக்பாஸ்’ என்று கெஞ்சிக்கொண்டிருந்தார்.

மோகன் வைத்யா

இப்போதுவரை லாஸ்லியாதான் இந்த சீசனின் செல்லக்குட்டி என்பதை இன்றும் நிரூபித்தார். அபிராமி, சாக்‌ஷி, ஷெரின் ஆகியோர் அழைத்துப் பேச, மிகவும் முதிர்ந்த பேச்சை வெளிப்படுத்தினார்.

”எனக்கு எல்லாரையும் பிடிக்கும். ஆரையும் பிடிக்காது என்றில்லே. நான் ஆர்கிட்டயும் எந்த விஷயமும் கதைக்கிறேனில்லே. ஆராச்சும் தனியா இருந்தா எனக்கு ஹர்ட் ஆவும். அவ்ள்தான். அதுனால ஆரும் தனியா இருந்தா நான் போய்ப் பேசுவென். நீங்க மூணு பேரும் எனக்குப் பிடிக்கும் .நான் ஒங்களவிட சின்னவதான். ஆனா ஒண்ணு.. நீங்க சின்ன விஷயம் நடந்தாலும் அந்த விஷயத்தை முடிக்க மாட்டீங்கறீங்க. கத்தி பெரிசு பண்றீங்க. உங்க மூணு பேருக்கும் யார்கூடாச்சும் பிரச்னைன்னா அந்த நபரைக் கூப்டு நீங்க மூணு பேர்மட்டும் பேசுங்கோ” என்றார் லாஸ்லியா.

“அடச்சிறுக்கிகளா.. வனிதாதான் சிண்டு முடிஞ்சு சிண்டு முடிஞ்சு எல்லா பிரச்னையைவும் பெரிசு பண்றாங்க” என்பதுதான் அவர் மறைமுகமாகச் சொன்னது!

மீராவிடம் முகின் ஸாரி சொன்னார். மதுமிதா அவர்மீது குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டதில் தாங்க முடியாமல் “நான் யாரும் யார்ட்டயும் பேசக்கூடாதுனு சொன்னதில்லை பிக்பாஸ். என் மேல தப்பில்லைனு நீதான் ப்ரூஃப் பண்ணணும்” என்று கேமரா முன் கெஞ்சிக்கொண்டிருந்தார்.

எடுப்பார் கைப்பிள்ளை எடப்பாடி மோகன்

10ம் நாள் காலை பாடலுடன் விடிந்தது. ’எங்காளப்பா நீ எங்காளப்பா.. இங்க எல்லாருமே இனி உங்காளப்பா” வரிகளை லாஸ்லியாவை ஃபோகஸ் செய்து எதுவோ சொல்ல வந்தார் பிக்பாஸ். “காதலில் சொதப்புவது எப்படி?’ என்று கவின் ஹவுஸ்மேட்ஸுக்குச் சொல்ல வேண்டும் என்று ஆக்டிவிட்டி கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் சக்ஸஸ் டிப்ஸ் போல எதோ கொடுத்துக்கொண்டிருந்தார். நேற்று மதுமிதா பேசும்போது “பிக்பாஸ் இதச் சொல்லலையே” என்று குறுக்கிட்ட வனிதா, இன்றைக்கு எதும் சொல்லாமல் ஹிஹிஹிஹி என்று சிரித்துக்கொண்டிருந்தார்.

கிச்சன் ஏரியாவில் கிழே க்ளீனாக இல்லை என்று வனிதா, கேப்டன் மோகன் வைத்யாவிடம் புகார் செய்தார். இருவருமாக சேரனிடம் சென்று சொல்ல சேரன், “காலைலதானே நானும் ஷெரினும் க்ளீன் பண்ணினோம்’ என்று வந்து பார்த்தார். பூண்டு உரித்த தோல் கீழே சிதறியிருந்தது. “சரி. க்ளீன் பண்ணித் தரேன். இனிமே உரிக்கறவங்க டேபிள்ல வெச்சு உரிச்சு, குப்பைத்தொட்டில போடணும்” என்றார். பிறகு மோகன் வைத்யாவை தனியே அழைத்து “நீங்கதான் கேப்டன். உங்களுக்கு எதும் சொல்லணும்னா நீங்க சொல்லுங்க. எதுக்கு ரெண்டு கேப்டன்?” என்று மிகச் சரியாகக் கேட்டார்.

மோகன் வைத்யா

”என்னடா.. விடிஞ்சிருச்சே… சேரனை டென்ஷன் பண்லாம்னா அவரு டென்ஷன் ஆகமாட்டீங்கறாரே” என்று நினைத்தாரோ என்னமோ, வனிதா ஷெரினிடம் போனார். “நீயும் சேரனுமே எல்லாம் பண்ண முடியாது. ஃபாத்திமாக்காவும் மோகன் வைத்யா சாரும் ஒரே டீம்ல இருக்கறது தப்பு. ஒருத்தர என் டீம்க்கு எடுத்துக்கறேன். நீ வந்து சொல்லு” என்று ஷெரினை சேரனிடம் அழைத்து வந்தார்.

சேரனிடம் வந்து நின்று – ஷெரினைப் பேசவிடாமல் “ஷெரினும் நீங்களுமே எல்லாம் பண்ண முடியாது. நான் மோகன் வைத்யா சாரை எடுத்துட்டு வேற ஒரு ஆளை என் டீம்ல இருந்து தரேன்” என்றார் வனிதா. மோகன்வைத்யாவும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாக மாறி ஆட்ட… நேற்றைய எபிசோடுக்கு எண்ட் கார்டு போட்டார் பிக்பாஸ்.

Big Boss Tirivia

ஹலோ ஸாரோ,

பிக்பாஸ் வீட்டுக்குள் போலீஸெல்லாம் போகிறதே?
– ஜார்ஜ்

போலீஸ் பிக்பாஸ் வீட்டுக்குள் விசாரணைக்குப் போவதெல்லாம் நிகழ்ச்சி வரலாற்றில் சர்வ சாதாரணம் ஜார்ஜ்! கைது நடவடிக்கையெல்லாம்கூட நடந்திருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்தமாக நிகழ்ச்சி கேன்சல் ஆவது இரண்டே முறைதான் நடந்திருக்கிறது.

ஒன்று: பஹ்ரைனில் ஷூட் செய்யப்பட்ட பிக்பிரதர் அரேபியா. பெண்களைக் கண்காணிக்க கேமரா’வுமன்கள்’ ஐந்து வேளை தொழுகை என்று அந்த நாட்டிற்காக பல மாற்றங்களுடன் வடிவமைக்கட்டாலும் பொதுமக்கள் மற்றும் மீடியாக்களிலிருந்து பலத்த எதிர்ப்பு வரவே 11 நாட்களில் நிகழ்ச்சி மூட்டை கட்டப்பட்டது!

இன்னொன்று, செர்பியா நாட்டின் பிக்பாஸ் சீசன் 2. எவிக்ட் ஆகி வெளியே போன மூன்று ஹவுஸ்மேட்ஸ் ஒன்றாகச் சென்ற கார், விபத்துக்குள்ளாகி மூவரும் இறந்துவிட, மனிதாபிமான அடிப்படையில் ஷோவை கேன்சல் செய்தார்கள். விபத்து நடந்த சில மணிநேரங்களில் பிக்பாஸ் ஷோ நிறுத்தப்பட்டது. பரிசுப்பணத்தை பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த ஏழு பேருக்குப் பிரித்துக்கொடுத்தார்கள். வருமானத்தின் ஒருபகுதி போக்குவரத்து விழிப்புணர்வுக்காக வழங்கப்பட்டது.