ஹாய்… இது ஸாரோ. நேற்று காலை நான் சொன்னது போல, நேற்றிரவு பெரும்பாலோர் வீடுகளில் துப்புச்சிக்கு துப்புச்சிக்கு சத்தம்தான். சிலபல மனதைப் பிழியும் சம்பவங்களால் சோர்ந்து போயிருக்கிறவர்களுக்கு சர்வரோகநிவாரணியாக இல்லாவிட்டாலும் கொஞ்ச நேர ரிலாக்ஸேஷனாக அமைந்திருக்கறது பிக்பாஸ் சீசன் 3.

‘யார் யார் சிவம்’ என்ற பின்னணிப் பாடல் ஒலிக்க, கமலஹாசனின் ஆர்வாழ்பேட்டை வீட்டில் தொடங்கியது சீசன் 3ன் அறிமுக எபிசோட்.  ‘துவக்கம்… நான் சந்தித்துக்கொண்டே இருக்கும் துவக்கங்கள்… ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்’ என்று கமலின் கணீர்க் குரலில் ஆரம்பமான அறிமுக ஸ்கிரிப்ட் அவரது 112 வயது வீட்டை அறை அறைகளாக அலசிச் சென்றது.  இரண்டு முறை, கைகோத்திருக்கும்  கட்சி சிம்பல் காட்டப்பட்டது. வார் ரூம் என்றழைக்கப்படும் அவரது கட்சி அறை காட்டப்பட்டது; படுத்து புத்தகம் படித்துக்கொண்டிருந்த வேளையில் ‘பாலசந்தர்னு டைரக்டர் இருக்காரே.. அவர் பார்க்கணும்கறார்’ என்று தட்டப்பட்ட ஜன்னல்.. – ஆம் கதவல்ல.. ஜன்னல் – காட்டப்பட்டது. கமல் ஐந்து வயதாக இருக்கும்போது அரையடியில் நடப்பட்டு இன்று விருட்சமாக வளர்ந்திருக்கும் மரம் காட்டப்பட்டது.

தொடர்ந்து அவர் வெளியே வர இப்போது பின்னணியில் ‘உன்னைப்போல் ஒருவன்’ ஒலிக்க ஆளுயர மாலை, ரோஜாப்பூங்கொத்து, ஆரத்தி, வீரவாள், காலில் விழும் தொண்டர் என முழுக்க முழுக்க அரசியல்வாதி அவதாரம் எடுத்த கமல் அவர் வீட்டிலிருந்து புறப்பட்டு பிக்பாஸ் அரங்கம் வந்தார்.

அங்கே ஹேராமின், ‘ராம் ராம்’ பாடலின் இசையொலிக்க ராம்ப்பில் நடக்கிறார்.  ‘அரசியல்வாதி ஆனபிறகும் ஏன் செய்யறேன்னு கேள்வி கேட்காதீங்க. வயத்தெரிச்சல் படுங்க’ என்று ஓபனாக உடைத்தவர் பிக்பாஸ் வீட்டுக்குள் நம்மை அழைத்துச்சென்றார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததும் இருந்த ரோலிங் வீல் கேமராவுக்கு சக்கரவர்த்தி என்று பேரிட்டு சக்கி’ என்றழைத்தார். (அதையே கடைசியில் சக்ரி என்று அழைத்தார். சக்ரியா, சக்கியா என்று போகப்போக ஃபிக்ஸ் ஆகிவிடும்!)

நீச்சல் குளத்தில் கல்லெறிந்து பார்த்து ‘சொன்னத செஞ்சாங்களானு பார்த்தேன். ஊரே தண்ணி இல்லாம தவிக்குது. இவங்களுக்கு ஜலக்கிரீடையானு கோபம் வரும். பணக்காரங்களுக்கும் வரும்’ என்று- ‘இது நாஞ்சொன்ன ஐடியா’ என்பது போல – சொன்னது சற்று செயற்கையாகப்பட்டது. ஆனாலும் குட். அதேபோலவே உள்ளே சென்று படுக்கை விரிப்பை சரிசெய்துகொண்டிருந்த இருவரிடம் இந்தியில் பேசிவிட்டு ‘தமிழா… பரவால்ல.. நம்ம ஊர் ஆட்களுக்கு வேலை குடுத்திருக்காங்க’ என்று புளகாங்கிதப்பட்டார். ’ஏன் இப்டி தாக்கறே.. தாக்கறே’ என்று கேட்காதீங்க. சிலதைலாம் சொல்ல வேண்டியதா இருக்கு’ என்றவர் சொன்னது சிலர் கைதட்டலுக்கு எடுபடலாம்.

பிக்பாஸ் வீட்டில் கலையலங்காரத்தில்.. முன்பைவிடநிறைய மாற்றங்கள். பிக்பாஸ் மலையாளம் வீட்டில் சுவர் முழுக்க ஓவியங்கள்தான் பிரதிபலிக்கும். அதைப்போன்றே சீசன் 3 வீட்டிலும் கலையம்சம் நிறைந்திருந்திருந்தது. கழிவறை ஓவியத்தில், பக்கெட் / குடங்களுடன் ஆண் பெண். ஹாலில் விருமாண்டி கமல். ராவணன் என்று ரசிக்கும் இண்டீரியர்ஸ். ஆனால், சுற்றிப் பார்க்க ஓகே. 100 நாள்கள் தொடர்ச்சியாக அங்கே இருப்பவர்களுக்கு என்ன மாதிரியான உணர்வைத் தரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அங்கே இருந்த ஜெயிலில் இந்த வருடம் கூடுதலாக பாத்ரூம். நல்லது! சென்ற சீசன் போட்டியாளர்களில் யாரிடையவாவது ‘எக்ஸிட் ரிப்போர்ட்’ கைங்கரியமாக இருக்கலாம். ‘ஜெயில்ல சூப்பர் மார்க்கெட் இருக்கா? இல்லையா.. ஓ.. நிஜ ஜெயிலா?’ என்று சசிகலா பேரைச் சொல்லாமல் கமென்ட் அடித்தார் கமல்.

சமையலறையில் கேஸ் மீட்டர் / வாட்டர் மீட்டர் என்றெல்லாம் பார்க்கும்போது இந்த முறை கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆகத்தான் இருப்பார்கள் போல எனத் தோன்றியது!

கன்ஃபெஷன் ரூமில் போய் உட்கார்ந்துகொண்டு முதல் போட்டியாளரை அழைத்தார் கமல்.

ஃபாத்திமா பாபு. தழையத் தழைய பட்டுப்புடவையும், 100% மேக்கப்புடனும் உள்ளே வந்தபிறகு அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கமல் ‘ஃபேஸ்புக்கு முன்னாடி எங்களுக்கு பரிச்சயமான FB நீங்கதான்!’ என்று கமல் சொன்னார். அவர் கொடுத்தது சர்ப்ரைஸா என்று தெரியவில்லை.

அடுத்ததாக இலங்கை செய்தி அறிவிப்பாளர் லாஸ்லியா. ஸ்கிரிப்டின்படி, ‘தெனாலில இலங்கைத் தமிழ் கதைப்பீயளே.. அதேபோல கதையுங்களேன்’ என்று அவர் கேட்டதும் இலங்கைத் தமிழில் தமிழக / இந்திய அரசியலை ஒரு கைபிடித்தார். தெனாலியில் பயம். இதில் கோபம். ‘நல்லா இருந்த நாட்டை இப்படி ஆக்கிப்புட்டாங்களேனு கோபம் வருமெனக்கு. மாற்றம் வரவேண்டும் என்றால் மய்யப்புள்ளி கோபம்தான்’ என்று பிரசாரத்தைத் தொடங்கினார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் போன லாஸ்லியாவிடம் ; சுருக்கமா எப்படிக் கூப்டறது?’ என்று அதிமுக்கியமான கேள்வியை எழுப்பினார் ஃபாத்திமா பாபு. அந்தப் பேரென்ன ‘அங்கயற்கண்ணி திருபுர சுந்தரி’யா இன்னும் சுருக்க? அதுவே நாலெழுத்துதானே இருக்கு? என்றது என் மைண்ட்வாய்ஸ். லாஸ். ம்ஹும் வேணாம்… நல்லால்ல.. லாஸ்லி ஓகே’ என்று அவர்கள் ஃபிக்ஸ் ஆனார்கள்.

அடுத்ததாக சாக்‌ஷி அகர்வால். காலாவில் ரஜினி மருமகள். அவர் உள்ளே சென்று வீட்டைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிரும்போது சீனியராக ஃபாத்திமா, லாஸ்லியாவுடம் நியூஸ் வாசிக்கச் சொல்லிக் கேட்டார். அவர் வாசித்ததும், தனக்கே கேட்காதவண்ணம் கைதட்டினார்.

அடுத்த போட்டியாளர் ஒரு டான்ஸ் பர்ஃபார்மென்ஸோடு வருகிறார் என்ற கமல், வெளியே மழை பொழிவதைக் குறிப்பிட்டார். “வெளியதாங்க மழை. உள்ள மழை டான்ஸ் எல்லாம் இருக்காது. குடும்பத்துடன் பார்க்கவேண்டிய அற்புதமான நிகழ்ச்சி” என்று எக்ஸ்ட்ரா பிட் போட்டார். “தெரிஞ்சுதான் பேசறீங்களா… இல்ல ரெண்டு சீசனா என்னென்ன வார்த்தைகள் உள்ள பேசப்பட்டுச்சு.. என்னென்ன விஷயங்கள் நடந்துச்சு.. என்னென்ன மாதிரி டிரஸ்லாம் போட்டுருப்பாங்கன்னெல்லாம் தெரிஞ்சும் மழை டான்ஸுக்கு இந்த டயலாக் தேவையா ஆண்டவரே” என்று நான் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.

அடுத்த போட்டியாளராக உள்ளே சென்றவர் ‘தேனடை’ மதுமிதா. சென்ற சீசன் பொன்னம்பலம் ’ஜெய் ஸ்ரீராம்’ சொல்லிக்கொண்டே வந்தது போல ‘ஓம் நமசிவாய.. சனீஸ்வர மந்திரம்’ என்று ஸ்லோகங்களெல்லாம் சொல்லிக்கொண்டே வந்தார்.

கொஞ்சம் ஹாய் பாய் என ஆர்ட்டிஃபீஷியலாக இருந்த வீடு, `சரவணன் மீனாட்சி’ கவின் வந்தபிறகு ஜாலியானது. உள்ளே போய் கைகொடுத்து நல்லா இருக்கீங்களா என்று கேட்டவர்களிடம் “ஆரம்பத்துல எல்லாம் நல்லாதான் இருப்போம்.. போகப் போகத்தானே தெரியும்” என்றார். ஃபாத்திமா பாபு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும், “நீங்கள்லாம் இன்ட்ரோ பண்ணிக்கலாமா.. எங்க அம்மா உங்க நியூஸப் பாத்திருக்காங்க.. நான் பாத்திருக்கேன்” என்றார். “இவன் கலாய்க்கறானா சீரியஸா சொல்றானா: என்று ஃபாத்திமா யோசிக்கும் முன் அந்த இடம் விட்டு நகர்ந்தார்.

அடுத்ததாக அபிராமி. நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருக்கிறார்.. டிவி ஆங்கர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று பன்முகம் கொண்டவர்.

பிறகு வந்தவர் ‘செவ்வாழை’ சரவணன். கஞ்சா கருப்பு அவருடன் உள்ளே வந்து சும்மா வந்தேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார். சரவணனை மேடையில் அறிமுகப்படுத்தும்போது கீழே சரவணின் மகனையும் அவ்வப்போது காட்டினார்கள். ‘யார் அது?’ என்று கேட்டார் கமல். “என் பையன்” என்றார் சரவணன். அடுத்து ”ஓ தாராளமா”னு என்று சொல்ல வந்த கமல் டக்கென்று நிறுத்திக்கொண்டார். சரவணன் “உங்ககூட பையன் ஒரு போட்டோ எடுக்கணும்” என்றார். ஸ்கிரிப்ட் ஓகே.. எக்ஸிக்யூஷன்ல கோட்டை விடறீங்களே!

நெக்ஸ்ட்.. வனிதா விஜயகுமார். ‘இருக்கு.. உள்ள என்டர்டெய்ன்மென்ட்  இருக்கு!’ என்று நினைக்க வைத்த போட்டியாளர். வெளியே ஆங்கிலத்திலேயே பேசியவர். உள்ளே வந்ததும் நன்றாகவே தமிழ் பேசினார். இங்கேயும் ஒரு சொதப்பல் நடந்தது. வனிதாவிடம் ஃபாத்திமா “உங்க பேர் பாத்தவுடனே நினைச்சேன்.. அப்பாடான்னு” என்றார். அப்ப யார் வராங்கனு தெரியாம உள்ள இருக்கற போட்டியாளர்கள் வாவ் சொல்றதெல்லாம் நடிப்பா கோப்ப்பால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்..

அடுத்து இயக்குநர் சேரன். கமலைவிட அதிகமாகப் பேசிக்கொண்டே இருந்தார். அதன்பிறகு தன் டிரேட் மார்க் பாடலான’அழகிய அசுரா’ ஒலிக்க அதற்கு நடனமாடி களமிறங்கினார் ஷெரின் ஷ்ரிங்கார். உள்ளே போனதுமே “கொஞ்சம் குண்டாயிட்டீங்களோ?” என்று கேட்ட சரவணனிடம் “பாடி மேல கமென்ட் பண்ணிட்டாங்க” என்று சொல்லி ஆரம்பித்துவைத்தார்.

60 வயது மோகன் வைத்யா அடுத்த கட்டப் போட்டியாளராக வந்தார். காது கேளாத, வாய் பேசமுடியாத மகன் மேடைக்கு வந்து அவரை வாழ்த்தி அனுப்பியதும் கொஞ்சம் நமக்கும் மனதைப் பிசைந்தது உண்மை.

அடுத்து இலங்கை மாடல் தர்ஷன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலேஷிய பாடகர் முகின் ராவ், நடிகை ரேஷ்மா ஆகியோர் ஒவ்வொருவராக உள்ளே சென்றனர்.

முந்தைய இரண்டு சீசன்களையும் தன் பாடலில் கலாய்த்த சாண்டி இந்த வருடத்தில் என்னென்ன செய்யப்போகிறார் என்று பார்க்க ஆவலாக உள்ளது. ‘வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா கேரக்டரில் நடித்த ரேஷ்மா, அந்த அடையாளத்தை (புஷ்பா புருஷன்,,) சொல்லாமல் தவிர்த்தார். எப்படியும் வீட்டுக்குள் அந்தப் பேச்சு வரத்தானே போகிறது!

முதல்நாள் அறிமுகங்களும் லாலாலா-க்களுமாகப் போனது. ஃபாத்திமா பாபு ‘உங்க பேரைப் பார்த்ததும்’ என்று வனிதாவிடம் சொன்னதும், தர்ஷன் முகினிடம் ‘உங்க ஷார்ட் ஃபிலிம் பார்த்தேன்’ என்று சொன்னதும் யார் யார் போறாங்க என்று சக போட்டியாளர்களிடம் சொல்லிவிடுவார்கள் என்று தெரியப்படுத்தியது. இதனால் மற்றவர்கள் ‘ஆஆஆஆ.. நீங்களா!’ என்பது நடிப்பு என அப்பட்டமாகத் தெரிந்தது.

கமல் நிறைய இடங்களில் பழைய ஜோக் தங்கதுரைக்கு டஃப் ஃபைட் கொடுத்தார். அரசியல் ரீதியாக நேரடியான சில கமென்ட்கள் முதல்நாளிலேயே பறந்திருக்கிறது. உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் எல்லாருமே கிட்டத்தட்ட பழைய போட்டியாளர் யாரையோ ஞாபகப்படுத்தினர். அனந்த் வைத்யநாதன் – மோகன் வைத்யா / டேனி – சாண்டி / கவின் – ஹரீஷ் கல்யாண் / மும்தாஜ் – வனிதா / என்று போட்டியாளர்கள் செலக்‌ஷனில் ஒரு பேட்டர்ன் இருப்பது புரிகிறது. ஆனால், முந்தைய சீசனைப் போல் யார் யாருக்கு இணக்கமாவார்கள் என்பதைக் கணிக்கவே முடியாது!

இரண்டாம் நாள் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்.

Bigg Boss Trivia:

வெளிநாடுகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் வீட்டுக்கு வெளியே ரசிகர்கள் ராட்சத பேனர்களை வெட்டவெளியில் உயரத்தில் பறக்க விடுவது, கூடடமாகப் போய் தூரத்தில் இருந்து தங்கள் ஃபேவரைட் போட்டியாளர்கள் பெயரைக் கத்தி தங்கள் ஆர்வத்தைப் வெளிப்படுத்துவது என்று நடப்பதெல்லாம் சாதாரணம்.