*200 கோடி… 20 கோடி… 7 கோடி… 5 கோடி… அடேங்கப்பா சீசன் 3-ன் அசத்தல் இறுதி நாள்!

இன்றே கடைசி!

105 நாட்களாகத் தொடர்ந்து கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 3-ன் இறுதி நாள் இன்று. யார் வின்னர்.. யார் ரன்னர் என்பதெல்லாம் ஏற்கெனவே கசிந்துவிட்டாலும் கடைசி நாள் நிகழ்வில் நடக்கும் காட்சிகளுக்காக பிக் பாஸ் பார்வையாளர்கள் தொலைக்காட்சி முன் காத்திருந்தார்கள். ஐந்து மணிநேர ஒளிபரப்பின் சுருக்கம் இங்கே.. உங்களுக்காக!

Bigg Boss Finale

பெற்றதும் கற்றதும்!

வெள்ளை கோட், கறுப்பு பேண்ட் காஸ்ட்யூமில் வந்தார் கமல். வணக்கம் சொல்லும் முன், அரங்கினர் ‘லவ் யூ’ சொல்ல “ஐ டூ லவ் யூ சொன்னார்.

“வெளியேற்றுப் படலங்கள் நடக்கும்போதெல்லாம் மாற்றுக்கருத்துகள் பலவாறாக வருகின்றன. அதன் உச்சம் இன்று. மாற்றுக் கருத்துகளுக்குக் காரணம், மச்சி, மாமன் நட்பு என்று உள்ளே இருப்பவர்களை நாம் உறவாக வைத்திருக்கும்போது அவர்கள் வெளியேறும்போது (பேசும்போது ‘என்ன மாமூ’ என்று கூப்பிடும் ஆளாக சரவணனைக் குறிப்பிட்டார்!) வரும் ஏமாற்றமே காரணம். சில விஷயங்களுக்கு கோபப்பட்ட சிறு கூட்டத்தில் நானும் இருக்கிறேன்” என்று அறிமுக உரை கொடுத்தார்.

இந்நிகழ்ச்சியில் பெற்றதும் கற்றதும் என்ன என்று சில பார்வையாளர்கள் பகிர்ந்து கொண்டனர்.

Bigg Boss Finale

“என் குடும்பத்துல என் ஹீரோ யார்னு தெரிஞ்சது. என் கணவருக்கு கடல்ல வேலை. 4 மாசம் வரமாட்டார். என் குழந்தைய வீடியோ காட்னாலும் சரியா பாக்க மாட்டார். சாண்டி மாஸ்டர் குழந்தையை வீடியோ கால்ல பார்த்தப்ப குடும்பத்த பிரிஞ்சிருக்கறது எவ்ளோ கஷ்டம்னு புரிஞ்சது. கணவரோட வலி தெரிஞ்சது. அவர் ஒரு ஹீரோதான்னு புரிஞ்சுட்டேன்.” என்றார் ஒரு பார்வையாளர்.

அடுத்த பார்வையாளரும் சாண்டியின் குடும்ப அட்டாச்மெண்ட்டைக் குறிப்பிட்டு அதைப் பார்த்து தானும் குடும்பத்தோடு மேலும் நெருக்கமாகி அவர்களுக்காக நேரம் ஒதுக்குவதாகத் தெரிவித்தார். இன்னொரு சின்னப்பெண், தனது அப்பா காலை நேரமாக வேலைக்குப் போய், இரவு லேட்டாக வருவார் என்றும் அவருக்குத் தங்கள் மீது பாசமில்லை என்று நினைத்ததாகவும் இந்நிகழ்ச்சியில் லாஸ்லியாவின் அப்பா வந்த எபிசோடைப் பார்த்து தனது அப்பாவைப் புரிந்து கொண்டதாகவும் சொன்னார். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண், இரவு 9.30 ஆனால் எல்லாரும் ஹாலுக்கு வந்து நிகழ்ச்சியைப் பார்ப்பதாகவும் அதன்பிறகு குடும்பத்தாருடன் நேரடியாக நிறைய பேசுவதாகவும் சொன்னார்.

Bigg Boss Finale

இன்னொரு பார்வையாளர் தான் கலாய்ப்பதில் மன்னனாக இருப்பதாகவும், சாண்டி கலாய்த்து மோகன் வைத்யா வருந்தியதைப் பார்த்ததும் பிறரின் மனமுணர்ந்து கலாய்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டதாகவும் சொன்னார்.

கண்மணி அன்போடு கமல் நானெழுதும்…

அடுத்து கமல் இந்த வாட்டி அகம் டிவி வழியே வேண்டாம்.. நான் நேராவே அகத்துக்குள் போறேன்’ என்றார். ஷெரின், லாஸ்லியா, முகின், சாண்டி நால்வரும் டிவி முன் காத்திருக்க வீட்டுக்குள் சத்தமில்லாமல் வந்தார் கமல். நால்வரும் ஓடிப்போய் வரவேற்றனர்.

நால்வரும் அவர்கள் வீடியோ கான்ஃப்ரன்ஸிங் பேசிய அனுபவத்தைப் பகிருந்து கொண்டனர். நால்வருக்கும் கடிதம் எழுதிக் கொண்டுவந்திருந்தார் கமல்.

சாண்டிக்கு…

உள்ள போறப்ப மாஸ்டர் சாண்டி.. – இப்ப
நீட்டா போய்ட்டப்பா அதயும் தாண்டி!
நூத்தஞ்சு நாளா நீ கத்துண்டது லாம்
உன்னும் நல்லவனா உன்னை மாத்திடும்ப்பா .
சென்ன நாயக்கர் பட்ணம் இல்ல. இந்த
செந்தமிழ்நாடே இத்த நம்புதுப்பா.

என்று சில வரிகள்.

Bigg Boss Finale

லாஸ்லியாவுக்கு…

நண்பர்கள் கொஞ்சலாய்க் குறைத்த பெயர் கொண்ட லியா
வெளியுகம் வியக்குதுன்னை விளங்க லியா
பெருகிவரும் ஆதரவும் புரிய லியா
புகழ்மழையில் நனைந்திட நீ துடிக்க லியா
சிகரம் தொட நீ ரெடியா லாஸ்லியா?

ஷெரினுக்கு

Blinded or Blindfolded you never loss kindness or your self
What you lost are few pounds you brought in to this house.

…என்று நான்கு வரிகள்.

முகினுக்கு

’பாட்டுக்குப் பாட்டெடுத்து நீ பாடுவதைக் கேட்டிடவே
உன் நாட்டிலும் ஆளிருக்கு
என் நாட்டிலுமே ஆளிருக்கு’

என்று ஆரம்பித்து பாட்டாவே பாடினார்.

கமல் சில பல பழைய கதைகளையும் புதிய நகைச்சுவைகளும் உதிர்த்தார். சாண்டி “உங்களுக்கு ஒரு பாட்டுக்கு கொரியோகிராஃப் பண்ணணும்” என்ற தன் ஆசையை நேரடியாகவே சொல்லி “பண்லாம் பண்லாம்” என்று கமல் வாயால் உறுதிமொழி வாங்கிக் கொண்டார்.

Bigg Boss Finale

நால்வருக்கும் தனித்தனி காணொளிகள் காட்டப்பட்டன. முகினுக்கு மலேசிய நண்பர்கள் வாழ்த்து, முகின் பாடிய ஒரு பாடலின் காணொளி. ஷெரினுக்கு அவரின் ஏகர் நாய்க்குட்டியைக் (சைனீஸ் Shih Tzu வகை) காட்டினார்கள். அடுத்து லாஸ்லியாவைப் பார்த்து ரகசியமாய் அடுத்து உங்களுக்கு எனும்விதமாய் கமல் புருவமுயர்த்த, லாஸ்லியாவும் அதே போலப் பண்ணினார். ரொம்பத்தான்மா. ஆனால் அடுத்து சாண்டிக்கு அவரது டான்ஸ் ஸ்கூல் காட்டப்பட்டது. லாஸ்லியாவுக்கு அவரது திரிகோணமலை வீடும், அங்கிருப்பவர்களின் வாழ்த்தையும் காட்டினார்கள்.

கமல் நான் மேடைக்குப் போகவா என்று கேட்க ’நானும் வரேன்” என்றார் சாண்டி. கமல் அருகில் உட்கார்ந்திருப்பது போதும் என்றார். “சாண்டி அப்டிலாம் முடியாது, கமல் வெளில வாங்க” என்றார் பிக் பாஸ். “சொன்னேன்ல… அவரு ஆள் ஒரு மாதிரி. ஸ்டிரிக்டு. நான் மேடைக்குப் போறேன்” என்றார். ”கூட்டிட்டுப் போங்க என்னை” என்றார் சாண்டி. கொஞ்சம் ஓவராப் பண்றாரே என்று தோன்றியது.

பயணத்தில் இணைந்த மற்ற பங்கேற்பாளர்கள்

இந்த சீசனின் மற்ற போட்டியாளர்களை மேடைக்கு அழைத்தார். மதுமிதாவும் சரவணனும் மட்டும் வரவில்லை அல்லது அழைக்கப்படவில்லை. தர்ஷனுக்கு அதிக ஆரவாரம் ஒலித்தது.

கவின் லாஸ்லியா ஜெயிச்சா பெருமை என்றார். ரேஷ்மா முகினைச் சொன்னார். வனிதா – லாஸ்லியா, அபிராமி – முகின், சேரன் – முகின், மோகன் வைத்யா – முகின், சாக்‌ஷி – முகின், ஃபாத்திமா – சாண்டி, மீரா மிதுன் – சாண்டி, கஸ்தூரி – முகின் & ஷெரின் என்று சொன்னார்கள். தர்ஷன் – எல்லாரும் முகினைச் சொல்றதால நான் சாண்டியச் சொல்றேன் என்றார்.

Bigg Boss Finale

சென்ற சீசனின் வெற்றியாளர் ரித்விகா பிக் பாஸ் வின்னர் டிராஃபியோடு வந்தார். அதோடு பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றார். சாண்டி எல்லாருக்கும் டீ போட்டுக் கொடுத்தார். 50 லட்சம் ஜெயித்தால் என்ன ப்ளான் என்று கேட்டார் ரித்விகா. முகினும் லாஸ்லியாவும், இன்னும் ப்ளான் பண்ணவில்லை என்றனர். ஷெரின் ‘எனக்குத் தெரியாது, அம்மாவிடம் கொடுப்பேன்” என்றார். சாண்டி ‘கொஞ்சம் எடுத்து சில நல்ல காரியங்களுக்கு யூஸ் பண்ணிக்குவேன். பாக்கிய பொண்டாட்டிகிட்ட குடுத்துருவேன்” என்றார். சாண்டி டிரம்ஸ் வாசிக்க முகின் பாட.. லாஸ்லியா, ரித்விகா, ஷெரின் ஆடினர்.

கமல் டிவி வழியே வந்து ஷெரின் பெயர் எழுதப்பட்ட கார்டைக் காட்டி “ரித்விகா, ஷெரினைக் கூட்டிட்டு மேடைக்கு வாங்க” என்றார். நால்வரில் குறைந்த ஓட்டுகள் வாங்கிய ஷெரின், வெளியேறி மேடைக்கு வந்தார். “ஃபைனல்ஸுக்கு வந்ததே போதும். ஐ அம் ஹாப்பி” என்றார் ஷெரின். “ ‘என் மனித்த்தை நான் இழக்கமாட்டேன்’ என்று சொன்னீர்கள். அதன்படி நடந்து கொண்டீர்கள். அதற்குப் பாராட்டுகள்” என்றார் கமல்.

Bigg Boss Finale

சாண்டி ஒவ்வொரு நாளும் வீட்டை மகிழ்விக்க எதாவது செய்து கொண்டே இருந்தார் என்றும். அவர் ஜெயிக்க வாய்ப்பிருப்பதாகவும் சொன்னார் ஷெரின். அவர் கணிப்பில் அடுத்த இடம் முகின், மூன்றாமிடம் லாஸ்லியாவுக்கு.

தர்ஷனுக்கு அடித்த ஜாக்பாட்

கஸ்தூரியின் நடனம் ஒளிபரப்பட்டது. சில விருதுகளின் பரிசளிப்பு விழா மேடையில் நிகழ்ந்தது. ‘கேம் சேஞ்சர்’ விருது கவினுக்கு வழங்கப்பட்டது. ‘5 லட்சத்தை எடுத்துக் கொண்டு வராமல் இருந்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கலாம்” என்றார் கமல். கவினுக்குக் கிடைத்த கைத்தட்டலை சேரன் ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

Guts and Grit (வீரமும் மன உறுதியும்) விருது வனிதாவுக்கு. ”என் டார்கெட் கமல்சார்தான்” என்றார் வனிதா. ”இன்று என் பிறந்தநாள்” என்று சொன்ன அவர், கமலுடன் அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டார்.

Bigg Boss Finale

Most Disciplined விருது சேரனுக்கு. Best Buddy விருது ஷெரினுக்கு. “இந்த விருதை யாருக்குக் கொடுக்கலாம் என்பதில் உங்களுக்கும் அபிராமிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது” என்று கமல் சொன்னதும் ஷெரின் அந்த விருதை அபிராமியை அழைத்து – அவருடன் பகிர்ந்துகொண்டார். ”இதனாலதான் இவங்க பெஸ்ட்” என்று கமல் டைமிங்காகச் சொன்னார்.

அடுத்த பரிசு “எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவருக்கு: என்று கமல் சொன்னதுமே மொத்த கூட்டமும் தர்ஷன் தர்ஷன் என்று கூவினர். All Rounder விருது தர்ஷனுக்கு. “நான் வெளியேறியதற்கு பலர் கலங்கினார்கள். அதைவிட வேறொன்றும் எனக்குக் கிடைக்காது” என்ற தர்ஷனிடம் “கிடைக்குமே” என்று இன்னொரு சர்ப்ரைஸ் கொடுத்தார் கமல்.

கமலின் ராஜ் கமல் ஃப்லிம் இண்டர்நேஷனலில் ஒரு டேலன்டாக கையொப்பமிட்டுவிட்டீர்கள் என்று தர்ஷன் சட்டையில் பேட்ஜ் ஒட்டினார். (கிழிச்ச ஸ்டிக்கரை மேடையிலேயே கீழ போட்டுட்டீங்களே கமல் சார்… நீங்க ஸ்வச் பாரத் தூதர் அல்லவா!? பாக்கெட்ல போடுவீங்கனு எதிர்பார்த்தேன்!)

Bigg Boss Finale

அதாவது தர்ஷனை மெருகேற்றி ராஜ்கமல் நிறுவனம் சார்பாக படம் தயாரித்து ஹீரோவாக்கும் வேலையை கமல் செய்வார். தர்ஷனும் அவர் குடும்பமும் பெருமகிழ்ச்சியில் அந்தத் தருணத்தைக் கொண்டாடினார்கள்.

”என் சந்தோஷத்தை என் அம்மாவோட கண்ணீரே சொல்லிடுச்சு” என்றார் தர்ஷன். தர்ஷனின் அம்மா “எவிக்ட் ஆனப்ப எமோஷனலா இருந்தது. ஆனா மக்கள் அவனுக்குக் காட்டின ஆதரவும் அன்பும் இதைவிட வேற என்ன வேணும்னு நினைக்க வெச்சிடுச்சு” என்றார்.

“எங்க அம்மா கஷ்டத்துல அழுது பார்த்திருக்கேன். மகிழ்ச்சில அழுது இப்பதான் பார்க்கறேன். ஆசை, பேராசையைத் தாண்டி இது நான் நினைச்சுக்கூட பாக்காதது. என்ன சொல்றதுனு தெரியல” என்றார் தர்ஷன். “என்கிட்ட நிறைய திட்டு வாங்க வேண்டிருக்கும். இந்த 100 நாளைவிட கடினமாக பாதை அது” என்றார் கமல். “இதைத் தவற விட்டுட்டேன். அதை விடமாட்டேன்” என்று உறுதி சொன்னார் தர்ஷன்.

Bigg Boss Finale

ராஜேஷ் வைத்யாவின் வீணை இசை ஒளிபரப்பட்டது. கமல் ‘நினைவோ ஒரு பறவை’ பாடலை ராஜேஷ் வைத்யாவின் வீணையோடு சேர்ந்து பாடினார். சீசன் 3 பற்றி ஒரு காமெடி நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிரண்டு ஒன்லைனர்கள் தவிர்த்து சற்று டொங்கலான ஸ்கிரிப்ட்தான். வழக்கமாக டான்ஸில் சாண்டி 100 நாள் நடந்ததை தன் குழுவோடு ஆடிக்காட்டுவார். அதை மிஸ் செய்கிறோம். (முதல் சீசனின் ‘அஞ்சு செகண்ட் முன்னாடி.. அஞ்சு செகண்ட் முன்னாடி’ ஞாபகமிருக்கா?)

அடுத்து சாக்‌ஷியின் நடனம். முகினுக்கு ஒரு ரசிகை வாழ்த்துச் சொன்னார். சாண்டிக்காக ஒரு ரசிகர் வந்திருந்து பேசினார். லாஸ்லியாவுக்கு ஒரு தம்பி வாழ்த்து சொன்னார்.

வா சுருதி போலாம்!

லாஸ்லியா, சாண்டி, முகின் மூவர் உள்ளே. இதில் ஒருவரை வெளியே கொண்டு வரவேண்டும். அதற்காக சர்ப்ரைஸாக ஸ்ருதிஹாசன் வந்தார். அவர் வீட்டுக்குள் போய் சிலபலவற்றைப் பகிர்ந்து கொண்டார். சாண்டி டிரம்ஸ் வாசிக்க, பாடினார். “இந்த வீடு நல்லாருக்கு. ஆனா 100 + நாட்கள் இருக்கறது ரொம்ப கஷ்டம். இந்த சீசனின் பெஸ்டாக உள்ளே உருவான நட்புகள்’ என்றார் ஸ்ருதி.

Bigg Boss Finale

ஸ்ருதி கொண்டு வந்திருந்த கார்டில் லாஸ்லியா பெயர் இருந்தது. ““வா சுருதி போலாம்’னு டயலாக்லாம் வெச்சிருந்தேனே” என்றார் சாண்டி. பிக் பாஸ் ஆல் த பெஸ்ட் சொல்ல்ல லாஸ்லியா ஸ்ருதியுடன் வெளியே மேடைக்குச் சென்றார்.

லாஸ்லியா போனதும் சாண்டியைத் துரத்தினார் முகின். “எனக்குத் தெரியும் நீ என்ன சொல்லப்போறன்னு.. நீ சொன்னது கரெக்ட்தான் விடு” என்றார் சாண்டி.

“நம்ம ரெண்டு பேர்ல ஒருத்தர்தான் வின்னர் என்று முகின் சொல்லியிருக்கக்கூடும். சாண்டி மறுத்து “நீ அல்லது லாஸ்லியா” என்றிருப்பார் என்பதை யூகிக்க முடிந்தது.

லாஸ்லியா நன்றி உரை ஆற்றினார். லாஸ்லியாவின் அம்மா தன் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டார். கமல் “உங்க அம்மாக்கும் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறீர்கள்” என்று சொல்ல “அதெல்லாம் சொல்ல முடியாது. அவங்க வேற.. அந்த வார்த்தை அம்மாக்கும் அப்பாக்கும் சொல்ல முடியாது” என்றார் லாஸ்லியா.

Bigg Boss Finale

வீட்டுக்குள் கடைசி காட்சிகள்

பிக் பாஸ் அவரது கடைசி ஸ்பீச்சை சாண்டி முகினுக்கு வழங்கினார். இன்றோடு இந்தக் குரல் உங்களிடமிருந்து விடைபெறுகிறது என்றார். சாண்டியிடம் ‘சிஷ்யா ஐ வில் மிஸ் யூ. நான் மட்டும் இல்ல. கோடிக்கணக்கான மக்களும் உங்களை மிஸ் பண்ணுவாங்க” என்றார். முகினிடம் “ஐயா முகினு… அன்பு என்னைக்குமே அனாதை இல்லை. நீங்க வெளில போன உடனே உங்க அன்புக்காக இந்த உலகமே காத்திட்டிருக்கு” என்று சொல்லி விடைபெற்றார். சாண்டியும் முகினும் எமோஷனலாகி அழுதார்கள். பிறகு இருவருமே பாடிக்கொண்டும் பேசிக் கொண்டும் வீட்டின் சந்து பொந்து இண்டு இடுக்குகளில்லாம் நடந்தனர். இதுக்கப்பறம் இங்க உட்கார முடியாது. இங்கதான் படுத்திருப்பேன் என்றெல்லாம் வீட்டை முழுமையாக அளந்து அலசினர். ரெட் கேட், பாத் ரூம், நீச்சல் குளம், சோஃபா என்று ஒரு மினி டூரே நடத்தினார்கள்.

மேடையில் வனிதாவின் நடன நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு சாண்டியையும் முகினையுமே வீட்டின் பவர் ஸ்விட்சை ஆஃப் செய்து விளக்குகளையெல்லாம் அணைத்துவிட்டு வரச்சொன்னார் கமல். இவர்கள் வெளியே வந்ததும் சாரட் வண்டி ஒன்று காத்திருக்க கமலோடு அதில் அமர்ந்து உலா வந்தார்கள். ’ராஜா கைய வெச்சா’ பாடல் இலிக்க அதற்கு ஆடிக்கொண்டே வந்தார்கள்.

Bigg Boss Finale

மேடைக்கு வந்ததும் ஆடணும் போல இருக்கு என்று சொல்ல முகின் வாயாலேயே வெறித்தனம் பாடலைப் பாடினார். சாண்டி ஆடினார். “நீங்க உள்ள போனப்பறம் ரிலீஸான பாட்டாச்சே?” என்று கேட்டார் கமல். “ஒருக்கா போட்டாங்க. அதுக்கப்பறம் பிடிச்சு மறுக்கா போடச் சொன்னோம்” என்றார் முகின்.

விஜய் டிவியின் ஜெனரல் மேனேஜர் கிருஷ்ணன் குட்டி வந்து இந்த சீசனின் பெருவாரியான வெற்றியைப் பகிர்ந்து கொண்டார். மொத்தமாக 200 கோடி ஓட்டுகள் பதிவானதாகச் சொன்னார். ஃபைனலுக்குக் கிடைத்த ஓட்டுகள் 20 கோடி 53 லட்சத்துக்கு மேல், இதுதான் உலகத்தின் எந்த சீசனிலும் பதிவாக அதிகபட்ச ஓட்டுகள் என்றார்.

கவினின் மெடலை சாண்டி இடுப்பில் மாட்டியிருந்தார். லைட்டை அணைத்து ‘த வின்னர் ஈஸ்…” என்று கொஞ்சம் நாடகங்கள் ந்டத்தினார் கமல். வேண்டுமென்றே ஃபோகல் லைட்டை சாண்டிக்குக் காட்டினார்கள். கூச்சம் சாண்டி சாண்டி என்று கத்த “ஃபோகஸ் லைட் காட்டினா வின்னர்னு யார்னு சொன்னது?” என்று சொல்லி இருவரின் கையையும் பிடித்து முகினின் கையை உயர்த்தி வின்னராக அறிவித்தார்.

Bigg Boss Finale

அங்கே நிகழ்ச்சி லைவாக இருந்தவர்களுக்கு அந்த ஹைப் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் நமக்கு நேற்றே சேதி கசிந்துவிட்டதால் “யப்ப்பா முடிங்கப்பா” என்று இருந்தது.

முகின் வின்னராக அறிவிக்கப்பட்டதும் சாண்டி அவரைத் தூக்கிக் கொண்டாடினார். ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் மேடைக்கு வந்து வாழ்த்தினார்கள். முகினின் அம்மா அத்தனை மகிழ்ச்சியாகக் காணப்பட்டார். அபிராமியும் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். சாண்டியின் கைகளில் லாலா இருக்க, ‘சாண்டிக்கு கிஃப்ட் அவர்கிட்ட இருக்கு” என்று முகினுக்கு டிராஃபியைக் கொடுத்தார் கமல். சாண்டி குழந்தையை கொஞ்சம் வெச்சுக்கங்க’ என்று கமலிடம் சொல்லி, தன் ரன்னர் அப் விருதை மனைவிக்கு சமர்ப்பித்தார்.

Bigg Boss Finale

கவினின் பேட்ஜை எடுத்துவந்த சாண்டி கமல் கையால் அதை கவின் கழுத்தில் போடவைத்தார். கவின் அதை சாண்டியுடன் பகிர்ந்து கொண்டார். முகின் தர்ஷனை அழைத்து பக்கத்தில் வைத்துக் கொண்டு பேசினார். லாஸ்லியாவையும் அவர்கள் அழைக்க போதும்ப்பா முடியல மோடில் ‘நான் கூப்டறேன்” என்று கமல் சொல்லி முகினுக்கு 50 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

ஃபைனல் வாரத்தில் முகினுக்கு 7.64 கோடி வாக்குகள், சாண்டிக்கு 5.83 கோடி வாக்குகள் அளிக்கப்பட்டதாக கமல் தெரிவித்தார். முகின் குடும்பம் மேடையேறி நன்றி சொன்னார்கள். முகினுக்கு ஒரு அரும்படம் என்று அவரது பிக் பாஸ் பயணத்தை ஒளிபரப்பினார்கள்.

சாண்டிக்கு மட்டும் ஏன் குறும்படம் போடவில்லை பிக் பாஸ்?

எல்லாருக்கும் ந்ன்றி. தமிழுக்கும் ந்ன்றி என்று சொன்ன கமல் “மீண்டும் வருவேன்” என்று சொல்லிவிடைபெற..நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது!

மீண்டும் வருவேன்னா… அப்ப அடுத்த சீசனும் கமல்தானா!

Bigg Boss Finale

ஹாய்….

‘எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று பிக் பாஸ்தான் சொல்வாரா? நாங்க சொல்ல மாட்டோமா? இந்த சீசனில் பிக் பாஸ் குறித்த என் கட்டுரையில் இது கடைசி அல்ல. நாளைக்கு ஒன்று வரும். அதுதான் கடைசி. சிலர் சரவணன் விஷயத்தில் நடந்தது என்ன, மதுமிதா விஷயத்தில் நடந்தது என்ன என்று கமெண்டுகளில் கேட்டிருந்தார்கள். லட்சுமியக்காவுக்கு வந்த சில தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். தவிர வேறு எதுவும் கேட்க இருந்தால் அதையும் இந்தப் பதிவில் கமெண்ட் இட்டுக் கேளுங்கள்.

இன்னொரு வேண்டுகோள் உண்டு உங்களுக்கு. இந்த timepassonline தளத்தில் வேறு என்னென்ன செய்திகள், எந்த வடிவில் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும் சொல்லுங்கள். பேசுவோம்!

Bigg Boss Trivia

பிக் பிரதர் சீசன் ஒன்றில் விதிகளை மீறியும், சக போட்டியாளரை அவமானகரமாகப் பேசியதாலும் ஒரு போட்டியாளரை வெளியேற்றினார் பிக் பிரதர். அந்த ஆள் கொஞ்சம் முசுடு. “அப்டி என்ன பேசினேன்.. என்ன பண்ணினேன். ஐ வாண்ட் குறும்படம்” என்று அவர் பிடிவாதம் பிடித்தார். குறும்படம்லாம் முடியாது கம்னு வா’ என்று பிக் பிரதர் ஆணையிட்டு வெளியே அனுப்பினார்.

வெளியில் வந்த அவர் கன்னா பின்னாவென்று பிக் பிர்தரையும் சேனலையும் திட்டி பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்தார். மீடியாக்கள் சேனலை நெருக்கி காரணம் சொல்லுங்க என்றது.சேனல் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. “அவருக்கு ஒரு குடும்பமும் டீனேஜில் உள்ள மகனும் மகளும் இருக்கிறார்கள். ஏதோ கோபத்தில் உள்ளே இருக்கும் சூழலில் அவர் அப்படி நடந்து கொண்டார் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். விதிகளின் படி கடுமையாக அவர் உபயோகித்த மிரட்டல் தொனிகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதால் வெளியே அனுப்பிவிட்டோம். இப்போது அவர் கேட்கிறார், மீடியா கேட்கிறது என்பதற்காக அந்த க்ளிப்பிங்கை வெளியிட்டால் அது அவர் குடும்பத்தை பாதிக்கும். அவரது மகனும் மகளுமே மனரீதியான பாதிப்பை உணர வாய்ப்புண்டு. அந்த சங்கடத்தை அவர்களுக்குக் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. நடந்து கொண்ட அவருக்கு என்னவென்று தெரியும். மீண்டும் அவர் உறுதியாகக் கேட்பாரேயானால் ஏதேனும் நீதிபதி அல்லது வழக்கறிஞர் முன் ரகசியமாக போட்டுக்காட்டுகிறோம். அவரது நன்மைக்கே இதைச் சொல்கிறோம்” என்றது.

அதன்பின் பார்ட்டி.. கப் சிப்!