நேற்று சரவணன் வெளியேற்றப்பட்டது குறித்து ஏகப்பட்ட யூகங்கள். கமல் ஏதோ பேசும்போது “கோர்த்துவுடறான்’ என்று சரவணன் கமெண்ட் அடித்ததுதான் அவர் வெளியேற்றப்படக் காரணம் என்று சிலர் எழுதியிருந்தார்கள். லட்சுமியக்காவிடம் கேட்டேன். “கண்ணு… அந்த பஸ் ஒரசினதச் சொன்னதுக்கு ரெண்டுவாரம் கழிச்சுதான் வெளில அனுப்ச்சாங்கன்றதெல்லாம் விடுங்க. சரவணன் நேத்து லாஸ்லியாவ நாமினேட்டுப் பன்ணினப்ப என்ன சொன்னாரு? “அவ ‘யாரும் என்கிட்டப் பேசக்கூடாது’னு சொல்லி என்னைலாம் அவமரியாதை பண்ணிட்டா”ன்னார்ல. அப்ப ஆம்பளைய அவமாரியாதை பண்ணிவங்க அந்த வீட்ல இருக்கத் தகுதியில்லனு அவரு நெனைக்கறப்ப… பொண்ணுகளை அவமரியாதை பண்ணுன அவரு மட்டும் அங்க இருக்கறது நாயமா சொல்லு?” என்று கேட்டார்.

சரவணனை அனுப்பியதற்கு எல்லாரும் ரியாக்‌ட் செய்ததுதான் இந்த 44ம் நாளில் நடந்தது. விரிவாகப் பார்க்கலாம்.

சரவணன்

சண்டைக்கோழி சாக்‌ஷி

 

கேப்டன் முகின், எல்லாரையும் அழைத்து நேற்று அணிகளுக்குள் வேலை செய்யும்போது எதுவும் பாய்ண்ட்ஸ் சொல்ல வேண்டியிருக்கிறதா என்று கேட்டு பேசவைத்தார். “இதுவரைக்கும் மற்ற கேப்டன்கள் இப்படிச் செய்தார்களா?” என்று எனக்குத் தோன்றியது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீரா மிதுன் அடிக்கடி சொன்ன, ‘போர்ட்ரே’ இதுதான். ஒருவேளை தினமும் மீட்டிங் போட்டு அவர்களும் கேட்டிருக்கலாம். அதில் எதுவும் முக்கியத்துவம் இல்லாமல், நமக்குக் காண்பிக்காமல் விட்டிருக்கலாம். 24 மணிநேரத்தில் மிக அதிகபட்சமாக 10 மணிநேரம் தூங்குகிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும் 14 மணிநேரத்தை ஒரு மணிநேரமாக, – மிக அபூர்வமாக 1.30 மணி நேரமாக – சுருங்கக் காட்டுவதில் உள்ள சிரமங்கள்தான் இவை.

அபிராமி சேஃப் கேம் விளையாடுவதுபோல மதுமிதா நினைத்திருக்கிறார் என்பதை வைத்து மதுமிதாவுக்கும் அபிராமிக்கும் பேச்சு ஆரம்பித்து, அது நீண்டு உரையாடலானது, உரையாடல் மாறி விவாதமாக மாறும் நிமிடத்தில் கேப்டன் முகின் வந்து ‘ரெண்டு பேரும் பேசி கிளியர் பண்ணிக்கோங்க. எல்லாம் உரையாடலா இருக்கட்டும். விவாதமா மாறவேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார். அந்தப் பேச்சு, அதன்பின் அபிராமிக்கும் முகினுக்கும் உரையாடலாகத் தொடர்ந்தது. அந்த உரையாடலின்போது அபிராமி “உனக்கு நான் பண்றதுதான் தப்பா தெரியும்” என்று குரல் கம்மச் சொன்னது, அந்த உரையாடலை விவாதமாக மாற்ற இருந்தது. அந்தத் தருணத்தில் முகின் “நான் உன்கிட்ட உரையாட வந்தேன். நீ விவாதமாக்காத” என்று சொல்லி மீண்டும் தணித்தார். ஆகவே அந்த உரையாடல் பேச்சாகக் குறைந்து,.. இருவரும் பேருக்கு அமைதியானார்கள். ப்ப்ப்பா! மண்டை காயுதா? உள்ள அப்படித்தான் போய்ட்டிருக்கு!

சாக்‌ஷி

 

சாண்டியும் கவினும் ஜாலியாக ‘அவ்வ அவ்வ.. மனசு துடிக்குது.. அவ்வ அவ்வ.. மனசு வலிக்குது… அவ்வ அவ்வ’ என்று பாடிக்கொண்டிருந்தார்கள். கடந்து போன சாக்‌ஷி நேராக Crying Zoneக்கு… ஸாரி. ஸ்மோக்கிங் Zoneக்குப் போய் அழுதார். ஷெரின் வந்து கேட்டதற்கு ‘நான் பண்றதல்லாம் எல்லாரும் யுக்தினு சொல்றாங்க. நீயும் நானும் உட்காந்திட்டிருக்கும்போது உன்னைத் தனியா கூப்டறாங்க. ஏன் தெரியுமா.. உன்னையும் என்னையும் பிரிக்க” என்று அழுதார். “அப்டிலாம் பண்ண முடியாது பேபி” என்று ஷெரின் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார்.

எனக்கென்னமோ சாக்‌ஷி, தானாக கற்பனை செய்துகொண்டு இப்படியெல்லாம் வருத்திக்கொள்கிறார் என்று தோன்றியது. அதுவே இவரால் பிறர் பாதிக்கப்படும்போது அல்லது வேறு யாரேனும் டாஸ்கிலோ, விவாதத்திலோ மனமுடைந்திருந்தால் இதே சாக்‌ஷிதான் “கேம்னா அப்படித்தான். எல்லாரையும் தடவிக்குடுத்து ஜாலியாவே இருப்பாங்களா என்ன.. இதையெல்லாம் தாங்கித்தான் ஆகணும்” என்று வியாக்யானம் பேசுவார் இதே சாக்‌ஷி!

 

பொறுக்குங்கப்பா.. பொறுக்குங்க!

 

’தன்கையே தனக்குதவி’ என்றொரு இடுபணி.. அதாங்க, தமிழ்ல சொல்லணும்னா ‘டாஸ்க்’. பிக்பாஸ் வீட்டுக்கு வெளியிலிருந்து காய்ன்களை எறிவார்கள். அதை ஹவுஸ்மேட்ஸ் பொறுக்கிக்கொள்ள வேண்டும். அதன் மதிப்புகள் புள்ளிகளாக அதில் எழுதப்பட்டிருக்கும். பொறுக்கி எடுத்து அதிக புள்ளிகள் வாங்கும் நபரை நாமினேட் செய்ய முடியாது என்றொரு ட்விஸ்டை வைத்தார் பெரிய மொதலாளி. ஃப்ரிஸ்பீ விளையாட்டில் பறக்கும் பெரிய சைஸ் தட்டுபோல ஒன்றில் 20, 50, 100 என்று புள்ளிகள் எழுதப்பட்டிருந்தது. வெளியில் மேலே நின்று கொண்டு இருவர் அவற்றைத் தூக்கி எறிய, இவர்கள் அந்த காய்ன்களை ஓடியோடிப் பொறுக்கினர். காய்ன்களை சேகரிக்க எந்த உத்தியை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், சேகரித்தபின் அவற்றைப் பாதுகாத்துக்கொள்வது உங்கள் பொறுப்பு என்றெல்லாம் பெரிய மொதலாளி கொடுத்த பில்டப், “நீங்கள்லாம் அடிச்சுக்கணும்” என்பதைச் சொல்லாமல் சொன்னது.

சரவணன் | சேரன் | சாண்டி

அதேபோலவே தூக்கி எறியும்போது அடித்துக்கொண்டதில் சாக்‌ஷிக்கும் தர்ஷனுக்கும் முதலில் முட்டிக்கொண்டது. ‘என் வழில வந்தா உதைச்சுடுவேன். ஐ மீன் இட்!” என்று சொன்ன சாக்‌ஷி, தர்ஷன் அதில் காயப்பட்டதை உணர்ந்ததும் “சும்மா சொன்னேண்டா.. நான் மீன் பண்ணிச் சொல்லல” என்று மாற்றிப்பேசி அவரை சமாதானப்படுத்தினார். அடுத்த ரவுண்டு பொறுக்கலில், “மூணு வாட்டி கவின் ஹிட் மி லைக் திஸ்” என்று கவினைப் புகார் செய்தார். என்னதாம்மா உன் பிரச்னை!

 

எவிக்‌ஷனைத் தாண்டிய எமோஷனல் மொமண்ட்ஸ்!

 

இரண்டு ரவுண்டு முடிந்தது. நம் வீட்டில் கரண்ட் போனால் முதல் வேலையாக வெளியில் சென்று பக்கத்து வீட்டு நிலவரம் தெரிந்து கொள்வோமில்லையா, அதேபோல ஆளாளுக்கு நீ எவ்ளோ நீ எவ்ளோ என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். முகின் 150, ஷெரின் 450, சேரன் 600, தர்ஷன் 810, சரவணன் 890, அபிராமி 400, முகின் 440, சாக்‌ஷி 360, லாஸ்லியா 450, மதுமிதா 490 என்று சொல்லப்பட சாண்டி 1060 பாய்ண்ட்ஸ் என்று எகிறி அடித்திருந்தார். அகம் டிவியில் சாண்டி, சரவணன், தர்ஷன் முதல் மூன்று இடங்களில் இருப்பதைக் காட்டி உள்ளே இருப்பவர்களை உசுப்பேற்றினார் பிக்பாஸ்.

சரவணன்

இந்த நேரத்தில்தான் நேற்று கடைசியாகக் காண்பித்த `சித்தப்பு’ சரவணன் வெளியேற்றப்பட்ட சம்பவம் நடந்தது. அவர் வெளியேறி முடிந்ததும் அனைவரையும் லிவிங் ஏரியாவுக்கு அழைத்தார் பிக்பாஸ். சாண்டி முழுக்கவே ரெஸ்ட்லெஸாக இருந்தார். “ஏதோ தப்பா தெரியுது” என்று கவினிடம் சொன்னார். சேரன் “சரவணன் உள்ள இருக்காரு… வரணும்” என்று சொல்ல சாண்டி “இல்ல.. அவரு வரமாட்டாரு.. ஏதோ தப்பா தெரியுது” என்று சரியாக கணித்துச்சொன்னார். யாருமே எதிர்பார்க்காத சம்பவமான சரவணன் வெளியேற்றப்பட்ட விஷயம் ஹவுஸ்மேட்ஸுக்குத் தெரியப்படுத்தப்பட்டது. கவின் அழ, சாண்டி கதறியழுதார். பில்லோவை எடுத்தெறிந்து கோபத்தை வெளிப்படுத்தினார். மதுமிதா யாருக்கோ என்னமோ ஆகிவிட்டது என்பதுபோல காரணம் சொல்லுங்க என்று அழுதார். ’குழந்தைக்கு எதும் ஆகிருக்குமோனு பயமா இருக்குடா’ என்றார் சாண்டி.

சேரனும் முகினும் கேமராவிடம் சென்று காரணம் கேட்டனர். கபடியில் `ஏறவிடு ஏறவிடு’ என்று எதிராளியை ஆடவிடுவார்கள். அப்படி ‘ஆஹா.. கண்டெண்ட் தேறுது.. இன்னும் அழவிடு அழவிடு’ எண்று கொஞ்சநேரம் விட்டார் பிக்பாஸ். அதன்மூலம், If you are bad I am your Dad என்று நிரூபித்தார் அவர். ‘நீங்கள்லாம் டாஸ்க்ல மட்டும்தாண்டா சில்றத்தனம் காட்டுவீங்க.. நான் ஷோவுலயே அப்டித்தாண்டா” என்றார் பிக்பாஸ். குழந்தைக்கோ, சரவணன் மனைவிக்கோ ஏதாவது ஆகியிருக்கும் என்று எல்லாருமே பதற்றத்தில் இருக்க சில நிமிடங்கள் விட்டு, அழைத்து “போங்க போங்க.. யாருக்கும் ஒண்ணுமில்ல. நல்லாதான் இருக்காங்க. ஏன் போனார்னு சனிக்கிழமை தெரியும்” என்று அறிவித்தார் பெரியமொதலாளி!

மதுமிதா

 

பெஸ்ட் ஃப்ரெண்டு யாரு

 

எரியற தீயில் எண்ணை ஊற்றுவதுமாதிரி அடுத்த டாஸ்க். ’உங்க பெஸ்ட் ஃப்ரெண்டைப் பத்திச் சொல்லுங்க” என்றார் பிக்பாஸ். அதுவும் அழுதழுது சிவந்த கண்களோடு இருந்த சாண்டியை அழைத்தார். அவர் முக்கால்வாசி அழுகையும் கால்வாசி பேச்சுமாக “சித்தப்புதான் எனக்கு க்ளோஸ். அவ்ளோ க்ளோஸா யார்கூடயும் இருந்ததில்லை” என்றார். அம்மாதான் நண்பர் என அபிராமியும் ஷெரினும் சொன்னதில் இன்னொரு சமூகக்கோணம் புலப்பட்டது.

இருவரின் அப்பாக்களுமே இவர்களின் சிறுவயதில் அம்மாவை விட்டுப் பிரிந்து சென்று விட, இருவருமெ சிங்கிள் பேரண்ட் குழந்தைகள். அப்படி இருப்பவர்களுக்கு அம்மாக்கள் எவ்வளவு நெருக்கமாக நண்பர்களாக இருக்கிறார்கள் என்று தெரிந்தது. ஹாட்ஸ் ஆஃப் டு அப்படிப்பட்ட அம்மா-ஸ்!

கவினும் சரவணனை பெஸ்ட் ஃப்ரெண்ட் என்றார். சாண்டி, சரவணன் எதிர்பார்த்ததுதான். சேரனும் சரவணனைச் சொன்னதுதான் ‘யப்பா!’ என்றிருந்தது. ஒருவேளை சரவணன் போனதற்கும், அவர் தன்னை வாடா போடா என்று அவமரியாதையாகப் பேசியதற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்று சேரன் எண்ணிக்கொண்டிருப்பாரோ என்று தோன்றியது.

சாண்டி

“பிக்பாஸ்.. நான் என்ன உங்ககிட்ட கேட்கறது… நாட்டாமை டு பங்காளி பங்காளி டு நாட்டாமை” என்பது போல மதுமிதா நேரடியாக ”அப்பனே முருகா. வாட் ஈஸ் த ரீசன்?” என்று கடவுளிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

எவிக்‌ஷனில் போகும்போது வீட்டுக்குள் நடக்கிற ரியாக்‌ஷன்களைவிட, இப்படிப் போவதன் பாதிப்பு அதிகம் உணர்த்தியது சரவணன் போனவிஷயம். பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் இது முக்கியமானதாக இருக்கும். சனிக்கிழமை கமல் இதை கையாள்வதில் இருக்கிறது அவர் சாமர்த்தியம். இன்றைக்கே ‘வளையோசை கலகலவென பாட்ல நீங்க அமலாவை பஸ்ல உரசினதத்தான் அவரும் பண்ணிருந்தாரு. அதுக்கா அனுப்ச்சீங்க?’ என்று கலாய்க்கத் தொடங்கிவிட்டார்கள் நெட்டிசன்ஸ்!

மண்ட பத்திரம்!

Bigg Boss Trivia

பிக் பாஸ் வீட்டுக்குள் போய் வாழ்க்கையே மாற்றியமைத்துகொண்டவர்கள் நிறைய. `Big Brother Naija’ என்றழைக்கப்படும் நைஜீரியன் பிக்பாஸ் எடிஷனில், முதல் சீசனில் விளையாடிய ஒரு போட்டியாளர் Ebuka Obi-Uchendu. வழக்கறிஞர். இங்கே முதல் சீசன் ஓவியா போலவே எக்கச்சக்க ரசிகர்கூட்டத்தை சம்பாதித்தார். அவர்தான் வின்னர் என்று எதிர்பார்க்கப்பட்டிருக்க, 64ம் நாள் எவிக்ட் ஆகி வெளியேறினார். அவர் வெளியேறியதற்கு எக்கச்சக்கமான எதிர்ப்பு ரசிகர்களிடமிருந்து. வெளியே வந்த அவர் சில நிகழ்ச்சிகளுக்கு காம்பியரிங் செய்தார். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி 2013-ல் நம்ம ஊர் நீயா நானா போல நைஜீரியாவில் பிரபலமான ஒரு ஷோவான Rubbin’ Minds எனும் ஷோவைத் தொகுத்து வழங்கினார். பின், வேறு பல நிகழ்ச்சிக்கும் தொகுப்பாளர் ஆனார். அதன்பிறகுதான் பெரிய ஒரு ட்விஸ்ட்!

சில காரணங்களால் 11 வருடம் நைஜீரியாவில் பிக்பிரதர் ஷோ ஒளிபரப்படவில்லை.  2017ல் மீண்டும் ஒளிபரப்பைத் தொடங்கியது. அப்போது அனைவராலும் முன்மொழியப்பட்டு அந்த ஷோவைத் தொகுத்து வழங்கியவர் , சீசன் ஒன்றில் எவிக்ட் செய்யப்பட்ட அதே Ebuka – தான்! 2018-ல் மூன்றாவது சீசன் மற்றும், சென்ற வாரம் அங்கே ஆரம்பித்த நான்காவது சீசன் எல்லாவற்றுக்கும் தொகுப்பாளர் இவர்தான். ஸ்டைலா.. கெத்தா கலக்கிக்கொண்டிருக்கிறார் மனுஷன்!

ஓவியா… ரெடியா?