“பிக் பாஸ் வீட்டிலிருந்து ரஜினிகாந்த் படம் அகற்றம்… கவின் மீது தனக்கு க்ரஷ் இருப்பதாக அபிராமி சொன்னது…  ‘முதல்நாளே பிக் பாஸ் தனது வேலைகளை ஆரம்பித்து விட்டார்’ என்ற முணுமுணுப்பு ரசிகர்களிடம் கேட்கத் தொடங்கியிருக்கிறது. இந்தநிலையில் பிக்பாஸ் வீட்டின் 16-வது விருந்தாளியாக மீரா மிதுன் என்ற மாடல் வீட்டுக்குள் சென்றார். ‘ஷோ தொடங்கிய இரண்டாவது நாளே புதிய கெஸ்ட் எதுக்கு. அதுவும் சர்ச்சைகளில் சிக்கி போலீஸ் புகார் வரை போன ஒருவரை எதுக்கு ஷோவுக்குள் கூப்பிடணும். ஏதோ ஃபீட் பேக் வந்திருக்கு, அதனாலதான் பரபரப்பை கூட்டறாங்க’ என்று பேசுகிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

Meera Mitun

‘பிக்பாஸை’ பின்னால் இருந்து இயக்கும் சிலரிடம் இதுகுறித்து பேசினோம்.

‘’மக்கள்கிட்ட பிக் பாஸுக்கு முதல் சீசனைவிட ரெண்டாவது சீசனுக்கு ஆர்வம் குறைஞ்சது. இப்ப மூணாவது சீசனுக்கு பாத்திமா பாபு, சேரன், மோகன் வைத்யானு தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களைப் பார்த்தப்ப, 2வது சீசனை விடவும் இது ‘டல்’லடிக்கும்‘னு தோணுச்சு. விசாரிச்சப்ப, மீரா மிதுன் முதல் இந்த முறை போட்டியாளர்களை இறுதி செய்தது முழுக்க முழுக்க சேனல்னு சொன்னாங்க.

முதல் சீசன்ல தயாரிப்பு நிறுவனமான எண்டமால், போட்டியாளரகள் பற்றி பக்காவா விசாரிச்ச பிறகே இறுதி செய்யப்பட்டாங்க. கடந்த சீசன்ல போட்டியாளர்களை முடிவு செய்யும் விஷயத்துல சேனலுக்கும் எண்டமால் நிறுவனத்துக்குமிடையே கருத்து வேறுபாடு உண்டானதாச் சொன்னாங்க. போன வருஷம் போட்டியாளர்களுடனான ஒப்பந்தமெல்லாம்கூட சேனலே நேரடியாகச் செய்து கொண்டது. இந்த முறையும் அப்படித்தான் நடந்திருக்குனு தெரியுது. ஏன்னா, ‘டக்’னு நினைச்ச நேரத்துல ஷோவுல மாற்றம் செய்ய முடியுதுன்னா ‘ஷோ’வின் லகான் சேனல் கையில இருக்குன்னுதானே அர்த்தம். இப்ப பாருங்க, மூணாவது நாளே மீரா மிதுனை உள்ளே அனுப்பி இருக்காங்க” என்று அர்த்தச் சிரிப்புடன் பேசுகிறார். இவர் கடந்த காலங்களில் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பணிபுரிந்த இயக்குநர்களில் ஒருவர்.

cheran

“மூனாவது சீசனின் முதல் மூன்று நாள் ரிப்போர்ட், என்ன எச்சரிக்கை மணி அடிச்சுதோ, மீரா மிதுனை இறக்கி விட்டிருக்காங்க. மீடியாக்கள்ல பரபரப்பா பேசப்படுறவங்களை உள்ளே இழுத்து வருவது சேனலுக்குப் புதிதில்லை. தாடி பாலாஜி – நித்யா இருவருக்குமிடையேயான குடும்பப் பிரச்னை போலீஸ்வரை சென்று மீடியாவில் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த ஒரே காரணத்துக்காகவே, கடந்த சீசனில் நித்யாவைத் தேர்வு செய்தார்கள். அதே கேட்டகிரியில்தான் இப்போது மீரா மிதுன்” என்கிறார் அந்த ‘பிக்பாஸ்’ இயக்குநர். சில தினங்களுக்கு முன் மீரா மிதுன் சென்னையின் சில ஈவென்ட் கம்பெனிகள் மீது போலீஸில் புகார் தந்தார். பதிலுக்கு அந்த நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் இவர் மீது புகார் செய்த விஷயங்களைப் பட்டியலிடுகிறார் மாடலிங் துறையைச் சேர்ந்த ஒருவர்.

‘‘அழகிப் போட்டி நடத்தி, அது மூலமா சினிமாவுல சான்ஸ் வாங்கித் தர்றேன்’னு பல பொண்ணுங்ககிட்ட பண மோசடி செய்திருக்காங்க மீரா. பாதிக்கப்பட்ட பொண்ணுங்க போலீஸ்ல பன்ணி சி.எஸ்.ஆர்.லாம் வாங்கியிருக்காங்க. பணம் தந்து ஏமாந்த ஒரு பொண்ணு, ‘அழகிப் போட்டிக்கான ஈவென்ட் எப்ப நடக்கும்னு கேட்டதுக்கு ஒரு டைம் இவங்க சொன்ன பதில்.. ‘ரஜினி சார் பொண்ணு மேரேஜ் நடக்குது. அவரே எனக்கு ஃபோன் பண்ணி, ‘என் பொண்ணு மேரேஜ் டைம்ல நீங்க ஷோ பண்ணாதீங்க. செலிபிரிட்டிகளெல்லாம் என் ஃபங்ஷனுக்கு வரமுடியாமப் போயிடும்’னு கேட்டுகிட்டார். அதனால தள்ளிப் போட்டிருக்கேன்’னு சொல்லியிருக்காங்க.  இதுல இருந்தே மீரா எப்படிப்பட்டவங்கனு தெரிஞ்சுக்கலாம்’ என்கிறார் அந்த மாடலிங் நண்பர்.

மீரா மிதுன்

இப்படி புகாருக்கு உள்ளான ஒருவரை பிக்பாஸ் ஏன் தன் ஷோவுக்கு அழைத்தார் என்றுதான் தெரியவில்லை. ஆனால் மீரா மிதுனின் கடந்த காலச் செய்திகள் அந்த வீட்டிலுள்ள மற்ற போட்டியாளர்களில் சிலருக்காவது தெரிந்திருக்கும். அவர்கள் மீராவுடன் அதுகுறித்துப் பேசுவார்கள். அதற்கு மீராவின் எதிர்வினை என்னவாக இருந்தாலும், அது கன்டென்ட். சேனலும் அதையேதான் எதிர்பார்க்கிறது. அதற்கு பலனும் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. வனிதா விஜயகுமார் மீராவை ‘பவர் ஸ்டார்’ எனக் கலாய்க்கிறார். அபிராமியும் மீராவைத் தனக்குப் பெர்சனலாகப் பிடிக்கவில்லை என்கிறார். அடுத்தடுத்த நாட்களில் இவர்களுக்கு மீரா நிச்சயம் பதில் தருவார். இது, கடந்த சீசனின் ஐஸ்வர்யா ரேஞ்சுக்கு மீராவைக் கொண்டு போய் நிறுத்தினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை.

இதற்கிடையில், ரஜினி மக்கள் மன்றத்தில் பொறுப்பு வகிப்பவரும்  ‘காலா’வில் நடித்த ஒருவருடன் பேசினோம். (கடந்த சீசனுக்கு இவருக்கு அழைப்பு வந்ததாம்) . ‘மீரா, ரஜினி சார் பேரைச் சொல்லி ஏமாத்தினவங்கனு நானும் கேள்விப்பட்டேன். இந்த விஷயமெல்லாம் சேனலுக்குத் தெரிஞ்சிருக்காதுன்னு நான் நினைக்கலை. ஏற்கெனவே அந்த வீட்டுல தலைவர் ஓவியத்தை வச்சுட்டு பிறகு எடுத்துட்டதுல நாங்கெல்லாம் ரொம்ப வருத்தத்துல இருக்கோம். இப்ப, இப்படியொரு விவகாரமா, இதெல்லாம் நல்லா இல்ல பிக் பாஸ்’ என்கிறார்.

இதற்கிடையில் பிக்பாஸுக்கு தடைகேட்டு வழக்குத் தொடர்ந்த வழக்கறிஞர்களுள் ஒருவர் நம்மிடம் பேசினார். ‘‘கடந்த சீசன்ல இப்படித்தான் ஐஸ்வர்யாவின் நண்பர்னு ‘கோபி’ங்கிறவரை ஷோவுக்குள் பேச வெச்சாங்க. கமலே அந்த நபரை ஐஸ்வர்யாகிட்டப்  பேசவெச்சார். ஷோ முடிஞ்சு அஞ்சாறு மாசம் இருக்கும். ஒரு நாள் சென்னை ஏர்போர்ட்ல அந்த கோபி போலீசால் கைது செய்யப்பட்டார். கோடிக் கணக்குல பொதுமக்களோட பணத்தைச் சுருட்டினார் என்பதுதான் அவர்மீதான புகார். இந்த மாதிரியான ஆட்களோட எப்படி சேனல் தொடர்புல  இருந்திச்சுனே தெரியலை. இன்னொரு முக்கியமான விஷயம், போட்டியாளர்களுடன் சேனல் செய்துகொள்கிற ஒப்பந்தத்துல ‘எஃப்.ஐ.ஆர் இருக்கிறவங்க இந்த ஷோவுல கலந்துக்க முடியாது’னு இருக்கறதாச் சொல்றாங்க. ஆனா அதெல்லாம் சும்மா பேருக்குத்தான்’ங்கிற மாதிரி தெரியுது’ என்கிறார் அந்த வழக்கறிஞர்.

மீரா மிதுன்

கடந்த முறை பிக் பாஸ் ஷோவிலிருந்து வெளியில் வந்தவுடன் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவும் ‘எஃப்.ஐ.ஆர் இருக்கிறப்ப பாலாஜியை எப்படி ஷோவுக்குள் அனுமதிச்சாங்கன்னே தெரியலை’ எனச் சொன்னதை இந்த இடத்தில் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. என்ன பிக் பாஸ், சில  போட்டியாளர்களால்தான் அக்கப்போர்னா, நீங்க பண்றது அதுக்கும் மேல இருக்கே?