நேற்றைக்கு முகினுக்கு ‘ஆராரிரோ நானிங்கு’ பாட அம்மாவை அழைத்துவந்து ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் உணர்ச்சிவசப்படுத்தினார் பிக் பாஸ். இன்று லாஸ்லியாவுக்கு `ஆனந்த யாழை’ மீட்டினார். லாஸ்லியாவின் குடும்பமே வந்து நடந்து கொண்ட விதத்திலும் லாஸ்லியாவைக் கேட்ட கேள்விகளிலும் அவர் சுக்கு நூறாகி, அவரின் காதலும் கானல் நீராக… கவினும் தன் பங்குக்கு அழ, வீடே ஓர் அழுவாச்சி காவியத்தைப் படைத்தது.

ஃப்ரீஸ் சொல்லி விளையாண்ட பிக் பாஸ்

பிக் பாஸ் வீட்டுக்குள் 80வது நாள். இது நிச்சயம் ஒரு மைல்கல் நம்பர்தான். இதை வெற்றிகரமாக விளையாடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

குட்டிச்சுவர் கேட்டருகே அமர்ந்து சாண்டி, தர்ஷனிடம் புலம்பிக் கொண்டிருந்தார் கவின். “இங்கயே சொல்லுனு நான் லாஸ்லியாவ கம்பெல் பண்ணவேல்ல. அப்டி சேரன் அண்ணா கேட்டதுதான் கஷ்டமா இருந்துச்சு. அதத்தான் பிக் பாஸ்கிட்ட கூடப் புலம்பிட்டிருந்தேன்” என்றார். எப்படியும் கமல் குறும்படம் போடுவார் என நினைக்கிறேன்.

Bigg Boss Sept 11

அடுத்து ‘ஃபுட்பால் விளையாடிக்கொண்டே டான்ஸ் ஆடுவது எப்படி’ என்று சாண்டி வீட்டினருக்குக் கற்றுக்கொடுத்தார். செம ஜாலியாகவும் டான்ஸ் கற்றலாகவும் அந்த செஷன் அமைந்தது.

அதன் பிறகு காலை 10.15க்கு முகின் கார்டன் ஏரியாவுக்குப் போகக் கண்ணாடிக் கதவைத் திறக்க ஃப்ரீஸ் சொன்னார் பிக் பாஸ். உடனே சாண்டியும் கவினும் வந்து அவரைச் சுற்றி நின்று கலாய்க்க ஆரம்பித்தனர். தாடியை இழுத்து “என்ன தாடி இது… ஆட்டுத்தாடியா” என்று சாண்டி கேட்டதும் ‘LOOP; சொன்னார் பிக் பாஸ். சாண்டி அதையே திரும்பத் திரும்ப லூப் மோடில் சொல்லிக்கொண்டிருந்தார். கவினை ஃப்ரீஸ் செய்தவர், முகினை ரிலீஸ் செய்தார். இப்படியே கொஞ்சநேரம் போனது டாஸ்க் விளையாட்டு. அதே போல பாத்ரூம் ஏரியாவில் கேமராவுடன் விளையாடிக் கொண்டிருந்த லாஸ்லியாவை லூப்பில் போட்டு ரசித்துக் கொண்டிருந்தார் பிக் பாஸ்.

பிறகு டைனிங் டேபிளில் இரண்டு குருவி பொம்மைகள், இரண்டு யானை பொம்மைகளை வைத்து கதை டெவலப் செய்துகொண்டிருந்தார் முகின். ‘பெரிய ராஜமௌலி’ என்று கிண்டல் செய்தார் தர்ஷன். சிறிது நேரம் கழித்து மேக்கப் செய்து கொண்டிருந்த ஷெரினை பிக் பாஸ் ஃப்ரீஸ் செய்ய, அவருக்கு தர்ஷன் வந்து லிப்ஸ்டிக் போட்டுவிட்டார். தாடி, மீசை வரைந்தார். கவின் சாண்டி எல்லாருமாக ஷெரினுக்கு கன்னாபின்னாவென்று முகம் முழுவதும் வரைந்தனர் வனிதாவை லூப்பில் போட்டு ஃப்ரீஸ் செய்தார்.

ஷெரினையும் வனிதாவையும் மட்டும் ரிலீஸ் செய்ய ஷெரின் பழிக்குப் பழி என எல்லா பாய்ஸுக்கும் மேக்கப் போட்டுவிட்டார். வனிதா அவற்றையெல்லாம் ரசித்ததாகத் தெரியவில்லை. ‘மேக்கப் போட வா’ என்று ஷெரின் அழைத்தபோதுகூட ‘நோ பேபி’ என்று மறுத்துவிட்டார். ஆனால் கோபத்தையெல்லாம் காட்டவில்லை. கொஞ்சநேரம் அந்த விளையாட்டுப் போனது.

வெல்டன் வனிதா!

”சேரப்பா சீக்ரெட் ரூம்ல இருக்கார்னு நினைக்கேன்” என்றார் லாஸ்லியா. வனிதா “எப்படிச் சொல்ற?” என்று கேட்டார். “தோணுது. அப்படி இல்லைன்னா, இந்த வீட்டுக்கு அவரு ஃபேமலியோட வருவாங்க” என்றார். லாஸ்லியா, தனக்கு அப்பா ஸ்தானத்தில் சேரனும் அவரது குடும்பமும் வரும் என்று நினைத்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.

Bigg Boss Sept 11

“எனக்கும் அப்படித்தான் தோணுது” என்ற வனிதா கவின், லாஸ்லியா இருவரும் என்ன பேசினீர்கள், எப்போது பேசினீர்கள் என்று கேட்டார்.

”நீ சேரன் அண்ணாவை ஜென்யூனா பாக்கற. அவர்கிட்ட சில விஷயங்கள் பகிர்ந்துகிட்டிருக்க. அப்ப கவின்கிட்ட பேசினா என்ன ப்ராப்ளம்?”

“நான் இந்த வீட்ல சேரப்பா நடந்திட்டிருக்கற சில விஷயங்கள வெச்சுப் பார்க்கறேன். கவின் வெளில நடந்தத, வெளில சேரப்பாவத் தெரிஞ்சுகிட்டதுல சில விஷயங்கள் வெச்சுப் பார்க்கறான். ரெண்டு பேருக்கும் பிடிக்கறதில்ல. நான் கஷ்டப்பட்டு அத புரியவெச்சுட்டிருக்கவும் முடியாது. ரெண்டு பேரையும் பிடிக்கறதால இந்த ரெண்டு பேர்கிட்டயும் நான் எமோஷனல் ஆகறேன். நான் அப்படி ஆகற பொண்ணுல்ல. ஆனா இந்த ரெண்டு பேர்கிட்டயும் ஆகிட்டிருக்கேன். எனக்கே புரியல.”

“அவருக்கும் புரியணும். உனக்கு அது வேணும்..” – வனிதா இப்படிச் சொல்வதைக் குறித்துவைத்துக் கொள்ளுங்கள். உன் மனரீதியாக ஒரு காதல் உணர்வில் இருக்கிறாய். உனக்கு அது தேவையாக இருக்கிறது. அதை சேரன் புரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான் இதற்குப் பொருள். இப்போது லாஸ்லியாவின் பக்கத்தில் இருந்து அவருடைய நியாயத்தைப் பேசுகிறார் வனிதா.

”கவின் என்ன சொல்றான்னா, உன் அப்பாக்கோ, அம்மாக்கோ பதில் சொல்ல வேண்டியது என் பொறுப்பு. ஆனா உனக்கு ஒருத்தர் முக்கியமாப்படறார்னு (சேரன்) அவருக்கெல்லாம் நான் பதில் சொல்லிட்டிருக்க முடியாதுங்கறான்.”

வனிதா: “சேரன் அண்ணா என்னைக்காச்சும் நீ கவின்கிட்ட பேசாத, பழகாதனு சொல்லிருக்காரா?” – இந்தக் கேள்வி சேரனின் பக்க நியாயத்தை ஒலிக்கிறது.

லாஸ்லியா: “இல்ல. அவர் எனக்கு அட்வைஸ்தான் பண்ணீருக்கார்.”

வனிதா, “அப்டி ஒரு விஷயம், நீங்க ஒண்ணும் தப்பா எதும் பண்லியே இங்க?” – இது மீண்டும் லாஸ்லியா, கவின் இருவரின் நியாயத்தை எடுத்துச் சொல்கிறது.

Bigg Boss Sept 11

”ஆமா. ஆனா திரும்ப கேம்க்கு போலாம்றப்ப இந்த விஷயம் வருதே. கவின், ‘இன்னைக்கே முடிவு சொல்லு’னெல்லாம் சொல்லல. அது ஏன் அப்டிக் கேட்டார்னுதான் புரியல!” எனக் குழம்பினார் லாஸ்லியா.

வனிதா: “ரொம்ப மைண்டைக் கெடுத்துக்காதீங்க. அவர் மனசுல இருக்கறதக் கேட்டுட்டார். அவ்ளோதான்.” – இது இரு தரப்ப்பையும் சமாதானப்படுத்துவதாய் இருக்கிறது.

இப்போது வனிதா பேசியதையெல்லாம் கவனியுங்கள். ஒவ்வொருவர் தரப்பிலிருந்தும் யோசித்துப் பேசியிருக்கிறார். ஆனால், இந்த மாதிரி அமைதியாக சம்பந்தப்பட்டவருடன் அவர் பேசி நாம் அடிக்கடி பார்க்க முடியாது. நாமினேஷனில் அவர் வரும்போது மட்டும் இப்படி நடந்துகொள்கிறாரோ என்று ஐயப்பட வைக்கிறார். இந்த வனிதாதான் எவ்வளவு நேர்மையாக இருக்கிறார்!

வெல்கம் – பேக் சேரப்பா!

ரகசிய அறைக்குள்ளிருந்து நோட்டமிட்டுக் கொண்டிருந்த சேரனை உள்ளே அனுமதித்தார் பிக் பாஸ்.

விக்ரம் வேதா தீம் இசை ஒலிக்க, வீட்டினர் குழம்பி கேட்டையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். தர்ஷன் சரியாக “சேரன் சார்” என்று கணித்தார். கேட் திறக்க சில நொடிகள் இருக்க ஃப்ரீஸ் சொன்னார் பிக் பாஸ். கேட் திறக்கப்பட சேரன் உள்ளே வந்தார்.

Bigg Boss Sept 11

ஃப்ரீஸாவது ஒண்ணாவது என்று எல்லாரும் கலைந்து சேரனைக் கட்டியணைத்து வரவேற்றனர். பிக் பாஸ் நியாயமாக இருந்தால் லக்சுரி பட்ஜெட்டில் கை வைக்கலாம். சென்ற சீசன்களில் எல்லாம் உறவினர்களைப் பார்த்த பிறகும் ஃப்ரீஸில் இருக்கும் ஹவுஸ்மேட் அழுதபடி “ப்ளீஸ் பிக் பாஸ்.. ரிலீஸ் சொல்லுங்க” என்றதெல்லாம் ஞாபகம் வருகிறது. இந்த சீசனில் இதுவரை ஒருவரும் அப்படிச் செய்யவில்லை. முகினின் அம்மா வரும்போது முகின் ஃப்ரீஸ் அவுட் ஆவதைக்கூட புரிந்து கொள்ளலாம். ஆனால் எல்லாருமே ரிலீஸ் ஆகிறார்கள். சேரனுக்கெல்லாம் ரிலீஸ் ஆவதும் அப்படித்தான். அவருக்கு இந்த ஃப்ரீஸ் கேம் தெரியும்; அவரும் ஹவுஸ்மேட்தான். அப்படி இருக்க எல்லாருமே, ஓனர்னா ஓரமாப் போய்யா என்று பிக் பாஸை டீல் செய்கிறார்கள்.

சேரன் கவினிடம் “ஏண்டா அவ்ளோ சீரியசான? சும்மா ஜாலியா கேட்டா ஜாலியா எடுத்துக்கடா” என்றார். சேரன்… இது தப்புதானே? நீங்க சீரியஸா கேட்டு ரகசிய அறையிலிருந்து ‘ஆடியன்ஸ் பார்த்துக்கங்கப்பா” என்றெல்லாம் சொன்னீர்கள்தானே?

பிறகு ரகசிய அறையிலிருந்து பார்த்ததையெல்லாம் பகிர்ந்து கொண்டார். வனிதா, ஷெரின், சேரன் மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டார்கள். லாஸ்லியா கவினைப் பற்றிச் சொன்னதை வேறு டோனில் சொன்னார்.

சேரன், லாஸ்லியாவின் மனதை கவின் அரெஸ்ட் செய்கிறார் என்றார். அது சரிதான் “அவன் பண்றது லாஸ்லியாவால கேமே விளையாடவிடாம செய்யும். லாஸ்லியா என்ன சொன்னாலும் அவன் விடமாட்டீங்கறான். அவ ‘வெளில போய் பார்த்துக்கலாம்’னா இவன் மூஞ்சியத் திருப்பிக்கறான். அவளுக்கு கன்ஃப்யூஸ் ஆகுது” என்றார். கவின் ஷெரினை நாமினேட் செய்ததைச் சொன்னார். அதுவும் என்ன காரணம் சொன்னார் என்றும் பகிர்ந்து கொண்டார். நாமினேஷன் பற்றியெல்லாம் சொல்லக்கூடாதுதானே பிக் பாஸ்?

Bigg Boss Sept 11

“தர்ஷன் பேரு வராதுனு நினைச்சேன்” என வனிதா சொல்ல, “எல்லாரும் செமயா கேம் விளையாடறாங்க. நீயும் நானும்தான் வேஸ்ட்” என்றார். இல்லை சேரன், ரகசிய அறைக்குள் இருக்கும்போது கவினைக் கேள்வி கேட்ட நீங்கள் அந்த ஸ்டாண்டிலேயே இருந்து கொண்டு வீட்டுக்குள் வந்தபிறகும் கவினை “நீ அவளை சொல்லு சொல்லுனு டார்ச்சர் பண்ணியே” என்று கேட்டிருக்கலாம். விளையாட்டுக்காகக் கேட்டேன் என்று ஏன் சொன்னீர்கள். அது கேம் இல்லையா?

உணர்ச்சிமயமான குடும்பம்

வெளியே அமர்ந்து எல்லாரும் பேசிக்கொண்டிருக்க ஃப்ரீஸ் சொன்னார் பிக் பாஸ். கதவைத் திறந்துகொண்டு லாஸ்லியாவின் அம்மாவும் சகோதரிகள் இருவரும் வந்தனர். ஏற்கெனவே சொன்னபடி ஃப்ரீஸாவது ஒண்ணாவது என்று எல்லாருமே எழுந்து நின்றனர். லாஸ்லியா ஓடிச்சென்று கட்டிப்பிடித்தார். அழ ஆரம்பித்தார்.

அம்மா சாதாரணமாக இல்லை என்பது தெரிந்தது. லாஸ்லியாவைக் கட்டிக்கொண்டு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருப்பது நன்றாகவே தெரிந்தது. பிறகு ஒவ்வொருவராய்ச் சென்று பேசி வணக்கம் சொன்னார். கவின் கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து நின்றார். கவினின் உடல்மொழியில் குற்றவுணர்ச்சி அப்பட்டமாய்த் தெரிந்தது.

Bigg Boss Sept 11

சேரனிடம் “நீங்க இருக்கீங்கன்ற தைரியத்துல இருந்தோம்” என்றார் பிறகு எல்லாரும் உள்ளே சென்றதும் லாஸ்லியாவின் அம்மா பேச ஆரம்பித்தார். “என்ன பண்ணீட்டிருக்கம்மா? நீ நீயா இல்லம்மா” என்று சொல்லவும் லாஸ்லியாவின் தங்கை “எங்கள யோசிச்சுப் பாரு. அதக்கூட விடு, அம்மாப்பாவை யோசிச்சுப் பாரு” என்றார். அப்போதுதான் லாஸ்லியாவுக்கு கவினுடனான காதல் அத்தியாயங்கள் முழுதும் இவர்களைக் காயப்படுத்தியிருக்கிறது; தனக்கும் குடும்பத்துக்கும் கெட்டபெயரை ஏற்படுத்தியிருக்கிறது என்பது புரிய ஆரம்பித்தது.

“ஒழுங்கா இருந்த நீ. இந்த இடத்துக்கு வர நீ எவ்ளோ கஷ்டப்பட்டிருக்க. நீ இங்க சரியில்ல. உன்னை யோசிச்சு யோசிச்சு அப்பாக்கு உடம்பு சரியில்லாமப் போச்சு. எல்லாத்தையும் விட்டுரு. உன்னை யூஸ் பண்ண விட்டிருக்க நீ. ஆரம்பத்துல நல்லா விளையாண்ட. இப்ப சரியில்ல. ஒருவனையும் நம்பாத. நீ துணிஞ்சவதானே. உன்னைப்பத்தி அம்மாக்குத் தெரியுமே. அம்மாக்குத்தானே தெரியும்! நீ செய்யற ஒண்ணே ஒண்ணைத் தவிர எல்லாம் நல்லா இருக்கு” என்றார் லாஸ்லியாவின் அம்மா.

நால்வரும் வெளியில் அமர்ந்து பேசிக்க்கொண்டிருக்க ’ஆனந்த யாழை’ பாடலை ஒலிக்கவிட்டார் பிக் பாஸ். லாஸ்லியாவுக்குப் புரிந்து அழ ஆரம்பிக்க, லாஸ்லியாவின் அப்பா உள்ளே வந்தார். லாஸ்லியாவை பத்து வருடங்கள் கழித்துப் பார்ப்பவர், முகத்தில் கடும் கோபத்தை வைத்துக்கொண்டே வந்தார். லாஸ்லியா அழுது கட்டியணைத்தபோதும் அதை சரியாக எதிர்கொள்ளாதவர் சேரனை சென்று இறுக்கக்கட்டிப்பிடித்தார். அதிலேயே எல்லாம் புரிந்துபோனது.

Bigg Boss Sept 11

பிறகு எல்லாரும் இருக்கும் இடம் வந்து சம்பிரதாய ஹலோக்கள் முடிந்து விரல் நீட்டி லாஸ்லியாவை நோக்கிக் கேள்விக்கணைகளை வீசினார். “என்ன சொல்லிட்டு வந்த நீ? என்ன சொல்லி அனுப்பினேன் நான். இதுக்கா உன்னை அனுப்பினேன். நான் அப்படியா வளர்த்தேன் உன்னை? ஊர் எங்களைத் திட்டறதுக்கா உன்னை அனுப்பினோம்?” என்று ஆரம்பிக்க தலையில் கைவைத்துக்கொண்டு கவின் உள்ளே போனார். உள்ளே போனவர் கீழே உட்கார்ந்து அழ ஆரம்பித்தார்.

“ஒண்ணும் இல்ல, பேசிக்கலாம்” என்று சேரன் சொல்ல “இல்லே. நாங்க அப்படி வளர்க்கல. வந்த வேலைய விட்டுட்டு.. என்ன பண்ணீட்டிருக்கா. இது ஒரு கேம் மட்டும்தானே… மத்தவங்க என்ன கதைக்கறாங்க.. நாங்க என்ன நினைப்போம்ன்னு பார்த்தியா நீ? காசுக்காக உன்னை அனுப்பினேன்னு பேசறாங்க. காசா எனக்குத் தேவை? பிச்சை எடுத்துட்டுப் போவேனே அதுக்கு. எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுபோட்டு கேமை கேமா விளையாடிட்டு வா!” என்று கொதித்தார்.

லாஸ்லியாவிடமிருந்து சற்றுத் தள்ளி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர், லாஸ்லியாவின் முகத்தைத் தொட்டு “இது என்ன முகத்துல” எனக்கேட்க லாஸ்லியா உடைந்து கதறி அழுது அப்பாவின் காலடியில் அமர்ந்து கண்ணீர் விட்டார். “அழாத” என்று கண்ணீரை அப்பா துடைத்துவிட அவரின் அம்மா “ஏன்னு எங்களுக்கே விளங்கல செல்லம்” என்றார். “ஊர் எப்படியெல்லாம் பேசும்னு தெரியும்தானே. அழக்கூடாது. விளையாடிட்டு மட்டும் வரணும்ல” என்று அப்பா லாஸ்லியாவைத் தட்டித் தேற்றிக்கொண்டிருந்தார்.

Bigg Boss Sept 11

உள்ளே கவின் “நான் போய் ஸாரி கேட்கட்டுமா?” என்றார். ”ஒண்ணும் வேணாம் கம்னு இரு” என்றார் வனிதா. சேரனும் தடுக்க “என் தப்புதானே… இப்படியெல்லாம் ரியாக்ட் பண்ணுவாங்கனு தெரியாதுண்ணே” என்றார். ‘அதத்தாண்டா நான் ஆரம்பத்துல இருந்து சொன்னேன்’ என்று நினைத்திருப்பார் சேரன்.

லாஸ்லியா ‘ஸாரிப்பா’ என்று அழுதுகொண்டிருந்தார். அவர் அப்பா “இதெல்லாம் வாரதுதான். தூக்கி எறிஞ்சுட்டு வா. மனுசனா இருந்தா எல்லாத்தையும் பார்க்கோணும். நல்லா நிமிர்ந்து வா. நீ எப்படியான ஆள். எப்படி புத்தி சொல்ற ஆள்? எண்ட புள்ளயப்பத்தி எனக்குத் தெரியும்தானே” என்று குரல் உடையச் சொல்ல லாஸ்லியா அவருக்கு நெற்றியில் முத்தமிட்டார்.

”எல்லாத்தையும் விட்டுடு செல்லக்குட்டி. கேம்க்குதானே வந்த? அப்பாக்கு சொல்லு… பழையபடி வருவேன்னு சொல்லு!” என்றார். லாஸ்லியாவும் தலையாட்டினார். “நாங்க இருக்கோம். நாங்க நாலுபேரும் உன்னைப் பார்த்துப்போம்” என்று அம்மாவும் சொன்னார். அடித்திருந்தால்கூட ஓகே. இந்த பாச அறிவுரைகளைத் தாங்காமல் அழுதுகொண்டே இருந்தார் லாஸ்லியா.

Bigg Boss Sept 11

உள்ளே கவின் அழுதுகொண்டே இருந்தார். “நான் இப்படியெல்லாம் ஆகும்னு நெனைக்வே இல்ல. எனக்கு இப்படிதான் ஆகும்னு ஐடியாகூட இல்ல. இப்டித்தான்னா அந்த ஃபீலிங்ஸை டெவலப் பண்ணிருக்கவே மாட்டேன்” என்றார்.

அதன்பிறகு மரியநேசன் (லாஸ்லியா அப்பாதான்!) உள்ளே வந்தார். எல்லாரையும் மீண்டும் கட்டியணைத்தார். “வனிதா உங்க அப்பாவோட ஃபேன் நான். உங்க ஃபேனும்கூட. போல்டா கதைக்கறீங்க வீட்டுக்குள்ள” என்றார். கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்த கவினை “ஹாய் தர்ஷன் இதெல்லாம் கேம் என்னா?” என்றார். ‘கவின்’ என்று திருத்தினார் சேரன். “ஆங்.. கவின். எல்லாம் தூக்கி எறிஞ்சுட்டு கேம் ஆடி வின் பண்ணி வாங்க. யார் ஜெயிச்சாலும் சந்தோஷம்தான். எல்லாரும் நண்பரா இருந்துட்டு நண்பராவே வாங்க. என்ன? அழாதீங்க. நீங்கள்லாம் ஆம்பளையா கெத்தா இருங்க. கெத்தா வாங்க வெளில” என்றார். சேரன் “கவின் எமோஷன்ல இருக்கார். ஸாரி சொல்லணும்னு சொன்னார்” என்றார்.

“டோண்ட் வர்ரி. இதெல்லாம் நடக்கறதுதான்” என்றார் மரியநேசன். அப்போது வெளியிலிருந்து லாஸ்லியாவும் அவர் அம்மாவும் உள்ளே வந்தனர். ‘கவின்ட்ட பேசும்மா’ என்று லாஸ் சொல்ல, அவர் அம்மா முகம் மாற விலகினார். அதை லாஸ்லியாவும் கவனித்தார். கவின் மரியநேசனுக்கு கைகொடுக்க அந்தப் பக்கம் லாஸ்லியாவின் அம்மா “எல்லாருமே விளையாடறாங்க நல்லா!” என்றது தெளிவாகக் கேட்டது.

Bigg Boss Sept 11

கவினிடம் “வாழ்க்கைல எல்லாம் வரும் போகும். அப்பாவா சொல்றேன். ஒரு ஆம்பளயா கெத்தா இருக்கணும். என் ஃப்ரெண்ட்ஸே கதைக்கறது என்னால சொல்ல முடியல. கேமா விளையாடிட்டு வரணும்” என்றார். சேரன் அருகில் அமர்ந்துகொண்டு “என் பிள்ளைக்காகப் பேசினீர்கள். தேங்க்ஸ்” என்றார்.

அங்கே லாஸ்லியாவை நெருங்கி அமர்ந்தபடி அவரது அம்மா கொஞ்சிக்கொண்டிருந்தார். “உங்களத் தலைகுனிய வெச்சுட்டேனாம்மா” என்று லாஸ்லியா கேட்க “அப்படி இல்லை” என்று அவரைத் தேற்றினார். “நான் எதையுமே யோசிக்கலம்மா” என்றார். எல்லாரும் அப்பாவை சுற்றி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். பிறகு லாஸ்லியாவின் அம்மா அப்பா சேரன், நால்வரும் நின்று பேசிக்கொண்டிருந்தனர். “அவ எங்கப்பாம்மா என்னை நம்புவாங்கனு சொல்லிட்டே இருந்தா!” என்றார் சேரன். “இப்பவும் நம்பறோம். சில குழப்பம். வீட்டுக்க்குள்ள வந்தாதான் இந்தச் சூழல் புரியுது. என்கூட பழகின ஆட்களே என்கிட்ட பேசற விதம் நல்லால்ல. என் முன்னாடியே கண்டதும் பேசறாங்க. போல்டா விளையாடிட்டு வா. அழாம கெத்தா இருந்துட்டு கெத்தா வா. எல்லாம் யோசிக்கணும். சமுதாயம் எப்படித் தூக்கி எறியும்?” என்றெல்லாம் சொன்னார் மரியநேசன்.

மீண்டும் சேரனை பக்கத்தில் வைத்துக்கொண்டு புலம்பினார் மரியநேசன். “நேத்து வர்றப்பகூட பழகின ஆளு ‘என்ன கல்யாணத்துக்குப் போறியா’னு கேட்டாங்க. எதும் தப்பா இருந்தாலும் ஆறுதல்தானே சொல்லணும்?” என்றார். அம்மா நிலைமையை சமமாக்கினார். “அவளாலதான் இவ்ளோ தூரம் வந்திருக்கோம். அதையும் பார்க்கணும். எப்படி இருந்தோம். புள்ளையாலதான் இப்படி மீண்டு வந்திருக்கோம்” என்றார்.

Bigg Boss Sept 11

”எல்லாரும் தனித்தனியா கேம் விளையாடறாங்க. சேரன்கூட இருக்கலாம். தர்ஷன்கூட கத. ஹேப்பியா இரு” என்றார். “ஒண்ணு சொல்லணும். கமல் சார் வர்றப்ப நீ காலுக்கு மேல் கால் போட்டுகிட்டுப் பேசற? அப்படியெல்லாம் பண்லாமா? அவர் எவ்ளோ பெரிய இடத்துல இருக்கார்?” என்று கேட்டார். “அதுல என்னப்பா இருக்கு? எழுதறவங்க எழுதிட்டுதான் இருப்பாங்க. அவருக்கான மரியாதை மனசுல இருக்குப்பா” என்றார் லாஸ்லியா.

“கேமாப் பாரு. அதுக்காக யார்கூடயும் கதைக்க வேண்டாம்னு சொல்லல. ஆனா பாத்து இரு” என்றார். லாஸ்லியாவை அருகில் அமர வைத்துகொண்டு அவர் கையைப் பிடித்துக் கொண்டு பேசினார்.

வெளியே கவினுக்கும் சாண்டிக்கும் உரசல் ஆரம்பித்தது. “நேரம் தெரியாம கலாய்க்குது சாண்டி. அதுக்குப் புரியவே மாட்டீங்குது. அது பண்றது அதுக்குப் புரியவே மாட்டீங்குது” என்றார். சாண்டி முகம்மாறி பாத்ரூமுக்குள் போனார். அங்கே போய் அழுதார் என்பது வெளியே அவர் வந்தபோதே தெரிந்தது. கவின் பாத்ரூம் ஏரியாவில் சென்று அமர்ந்தார். அழுத முகத்தோடு சாண்டி வெளியே கதவு வரை வந்தார். வெளியே வந்து ஆசுவாசப்ப்படுத்திக் கொண்டார். பிறகு திரும்பி வந்து கவினைப் பார்த்து ‘எல்லாரும் இருக்காங்க. உள்ள வா. தப்பாய்டும்.. வா” என்று அழைத்துக் கொண்டு சென்றார். கவின் என்னாச்சு எனக்கேட்க “எல்லாம் இருக்காங்க வா” என்றார்.

Bigg Boss Sept 11

சட்டென்று எல்லாருடனும் அமர்ந்து தன் கவலையை சைடில் வைத்துவிட்டு எல்லாருடனும் பேச ஆரம்பித்தார் சாண்டி. ‘தோசையெல்லாம் எப்படிச் சுட்டேன் பார்த்தீங்கள்ல?” என்று கேட்டார். மறுபடியும் சொல்கிறேன். கொஞ்சம் ஓவர் ஸ்டேட்மெண்ட்டாகக் கூடத்தோன்றலாம். தன் சோகத்தை மறைத்து சூழலுக்குள் பொருந்தி எல்லாரையும் மகிழ்விக்கும் சாண்டிக்குள் ஒரு பெரிய காமெடியன் இருக்கிறான். பயன்படுத்திக் கொள்வது திரையுலகத்தின் சாமர்த்தியம்!

இன்னும் லாஸ்லியாவின் குடும்பம் உள்ளேதான் இருக்கிறார்கள். தேவையான ஃபுட்டேஜுக்கு மேலயே கொடுத்துட்ட தாயே’ என்று கும்பிட்டபடி இன்றைய எபிசோடை முடித்தார் பிக் பாஸ்.

Bigg Boss Trivia

Veliki Brat. இதை எப்படிப் படித்தீர்களோ தெரியவில்லை. எனக்கும் உச்சரிப்புத் தெரியாது. இது பிக் பாஸ் செர்பியன் நாட்டு வெர்ஷனின் பெயர். 2006ல் ஆரம்பித்து 2015 வரை 10 சீசன்கள் வந்தது இந்நிகழ்ச்சி. ஒவ்வொரு வருடமும் மக்கள் பங்குகொள்ளும் சீசன் ஒன்று விஐபி சீசன் ஒன்று… என பரபரப்பாய் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. 2015க்குப் பிறகு என்ன காரணத்தாலோ கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பப்படவில்லை.