ராணி மகாராணி வனிதாவிடம் சண்டையிட்ட ஷெரினை வனிதா அழவைத்த மகத்தான நாள் இன்று. பிக் பாஸ் எனும் சகுனி செய்த ப்ளான் படி உள்ளே வந்த வனிதா வந்ததற்கு சம்பவம் ஒன்றை அரங்கேற்றினார்.

RECAP: நேற்றைக்கு வனிதா, தர்ஷனை வைத்து ஷெரினிடம் வாதம் செய்தார். கிராம டாஸ்கில், அவர் தர்ஷனுக்காக கொஞ்சம் விட்டுக்கொடுத்து விளையாடினார் என்றார். அதை ஷெரின் மறுக்க “நீ முகின் கிட்ட அப்படி நடந்துகிட்டிருந்தா தப்பா தெரியாது” என்று இழுக்க “எதுக்குத் தப்பா தெரியணும். எனக்குப் புரியல. நான் கவினுக்கும் பல டைம் அட்வைஸ் பண்ணீருக்கேன். ஃப்ரெண்டா இருந்திருக்கேன்” என்றார். அண்டசராசரத்தின் இண்டு இடுக்கெல்லாம் அறிந்த வனிதா “உனக்குப் புரியவே மாட்டீங்குது. இனிமே என்கிட்ட வந்து எதும் கேட்காத…” என்றார்.

Bigg Boss Sept 6

“Its Fine. எனக்கு சொல்றதுக்கு ஒண்ணுமில்ல” என்று எழுந்து சென்றார் ஷெரின்.

இன்றைக்கு அதன் தொடர் ஒளிபரப்பு. அதே – 73ம் நாள், நள்ளிரவு 11.05க்கு தர்ஷனுடன் மேற்கண்ட விவாதம் குறித்துப் பகிர்ந்து கொண்டார். “உன்னைப் பத்தி நானும் வனிதாவும் சண்ட போட்டுக்கிட்டோம்.”

“என்ன?”

“தேவையில்லாம என்னோட விஷயத்துல உன்னை இழுத்து இழுத்துப் பேசறாங்க. நீ என் ஃப்ரெண்ட். உன்னைப் பத்தி யாரும் தப்பா பேசினா நான் விட்டுக்குடுக்க மாட்டேன்”

“நீ என்னை யூஸ் பண்றதா அவங்கள்லாம் பேசிக்குவாங்க. அதான் நான் அப்பப்ப உன்கிட்ட இருந்து தள்ளி இருக்கேன்.” – தர்ஷன்.

Bigg Boss Sept 6

“என்ன இருக்கு இங்க யூஸ் பண்ணிக்கறதுக்கு?”

“எனக்கும் புரியல. கமல் சார் ஒருக்கா, ‘ஃப்ரெண்ட்ஸ்ங்கறீங்க.. நைட் ரெண்டரைக்கு என்ன பேச்சு” னு கேட்டப்பறம் நான் கொஞ்சம் உன்கூட அன் டைம்ல பேசறதக் கொறச்சுக்கிட்டேன்.”

“இங்க பாரு.. நீ எனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட். இந்த ஃப்ளர்ட் பண்றதுலாம் ஜாலிக்கு அப்பப்ப வரும். அவ்ளவுதான். அதைத்தாண்டி நான் ஒண்ணும் நினைக்கல. நீ எதுவும் என்னை நினைச்சுக் குழம்பிக்க வேண்டாம்.”

“இல்ல. நான் சில சமயம் எதாவது சொன்னா நீ ஹர்ட் ஆவியோனு பார்த்துப் பார்த்துப் பேசுவேன். ஏன்னா, நீ ஹர்ட் ஆகிட்டா எல்லாரும் கவனிக்கறாங்க. என்கிட்டயும் வந்து அவ ஏன் அப்செட்டா இருக்கான்னு கேட்கறாங்க. அதெல்லாம் தவிர்க்க, பார்த்துப் பார்த்துப் பேசறேன். நான் ஏதோ உன் ஃபீலிங்ஸை தூண்டறேனோன்னு யோசனையா இருக்கு. அதுனால அமைதியாகறேன் அப்பப்ப.”

“வனிதா என்னை ‘உன் ஃபோகஸ் போகுது. உன் ஃபோகஸ் போகுது’னு சொல்லிட்டே இருக்காங்க. அது கொஞ்சம் இரிடேட் ஆகுது எனக்கு. உனக்கு உன் லிமிட் தெரியும். எனக்கு என் லிமிட் தெரியும். என்னை நீயும் ஃபோர்ஸ் பண்ணினதில்ல, உன்னை நானும் ஃபோர்ஸ் பண்ணினதில்ல. ஒரு அழகான ரிலேஷன்ஷிப்பாதான் அது போய்ட்டிருக்கு. நல்ல ஃப்ரெண்ட்ஷிப் இது. இதுனால நாம விளையாடறது எந்த இடத்துலயும் குறைஞ்சு போகல.”

ஏற்கெனவே சொன்னது போல, இவர்கள் இருவரின் ரிலேஷன்ஷிப் ஒரு கத்தி மேல் நடப்பது போல இருந்தாலும், இருவருமே முதிர்ச்சியாக இதைக் கையாள்கிறார்கள்.

தொடரும் சர்ச்சை

Bigg Boss Sept 6

74ம் நாள் காலை விடிந்தது பிக் பாஸ் வீட்டில். அதிகாலைப் பாடலான ‘தப்பாத்தான் தெரியும்…’ பாடலில்

“குனியும்போது குத்தும் ஊருக்குள்ள
நிமிந்தேதான் நடக்கனும் வழியே இல்ல
துணை தேடி வெனை தேடும் உலகத்துல
தனியாவே இருந்தாலும் தப்பே இல்ல
தனியா வந்தேன் தனியா போவேன்
சொந்தம் பந்தம் தேவயில்ல
தேனா பேசி தானா வந்தா
வீணாப் போகும் ஏன்டா தொல்ல”

என்ற வரிகளை மட்டும் – கவினை ஃபோகஸ் செய்து – போட்ட பிக் பாஸ் பொல்லாத ஆளுதான்.

வனிதாவின் வார்த்தை விஷ அஸ்திரம் இன்று ஷெரினை நோக்கிப் பாய்ந்தது. ஷெரின் சமைக்காததைக் குறை சொல்ல, “நான் டாஸ்க் செஞ்சுட்டிருந்தேன்” என்றார். ‘அதையெல்லாம் காரணம் சொல்லக்கூடாது’ என்றார் பிக் பாஸின் செல்லாக்குட்டி வனி. எகிறினார் ஏஞ்சல் ஷெரின். ”சும்மா சும்மா என்னை புகார் சொல்லாத. நானும் 3 நாளா பாக்கறேன். நான் என்னமோ வேலையே செய்யலன்னு பேசற”

வனிதாவுக்கும் ஷெரினுக்குமான வார்த்தைப் போர் கொஞ்ச நேரம் நடக்க, ஷெரின் காபியுடன் வெளியில் சென்றார். ஃபாலோயர் தர்ஷனும் உடன் சென்றார். உள்ளே வனிதாவை சமாதானப்படுத்த சேரன் முயன்றபோது வனிதா சொன்ன ஒரு ஸ்டேட்மெண்டை லிம்கா புக் ஆஃப் ரெகார்டில் எழுதலாம்.

“அண்ணா, நீ சொல்றதக் கேட்டுக்கறேன். ஒத்துக்கல.”

Bigg Boss Sept 6

கேட்கறதே பெரிய இம்ப்ரூவ்மெண்ட்தான் தெய்வமே! அந்த தெய்வம் அதற்குப் பிறகு நேரே சிகப்பு கேட் குட்டிச்சுவருக்கு வந்தது. “டாஸ்க் டாஸ்க் பாட்டுக்கு நடக்கும். அதுக்காக நாம சாப்பாடு செய்யாம இருக்கக்கூடாது. எதப் பண்ணினாலும் ப்ளான் பண்ணிப் பண்ணனும்” என்றார்.

ஷெரின், ஏன் வனிதா என்னை டார்கெட் செய்கிறார் என்று சாக்‌ஷியிடம் புலம்பிக்கொண்டிருந்தார். வனிதா, சேரன் & மோகன் வைத்யாவிடம் “ஒருத்தங்க சண்டை போட்டா, அவங்களா உணரணும். இன்னொருத்தங்க ஏன் குடுகுடுனு ஓடி அவங்களை சமாதானம் பண்றாங்க? நேத்தே சாக்‌ஷிகிட்ட சொன்னேன். இப்பவும் போயிருக்கா அவ. எதுக்கு? இத நான் இந்த வீட்ல நூறாயிரம் வாட்டி சொல்லிருக்கேன்” என்றார். தத்துவம் நம்பர் பன்னிரெண்டாயிரத்து முப்பத்தாறு.

மீட்டிங் போட்டு பலத்தை காட்டு!

Bigg Boss Sept 6

காலை 10.55க்கு ராணியாதி ராணிய ராணியமார்த்தாண்ட ராணிய கம்பீர ராணிய குலதிலக – ஆங்.. குலோத்துங்கவை விடக்கூடாது – ராணிய குலோத்துங்க மகாராணிவனிதா ஒரு மீட்டிங்கைக் கூட்டினார். பிடிக்காத ஹெச் ஆர் போடும் ஆபீஸ் மீட்டிங்கில் உட்காரும் தோரணையிலேயே எல்லோரும் அமர்ந்திருந்தனர். நேற்றைக்கு ஷெரின் சமைக்கத்தவறினார் என்பதை ‘யூ டர்ன்’ எல்லாம் போட்டுச் சொன்னார். ஷெரின் அதை மறுத்தார். ‘தர்ஷனுக்கு காயம் பட்டப்ப கட்டுப்போடப் போன 3 நிமிஷம் தவிர நான் கரெக்டாதான் டாஸ்க் பண்ணினேன்’ என்றார்.

சாண்டி கொஞ்சம் கடுப்பாகி, “இதை ஏன் சுத்திவளைச்சுப் பேசணும். நேரடியாவே கேளுங்க” எனச் சொல்ல “இதத்தவிர வெட்டி முறிக்கற வேலை எதுவும் இருந்தா போகலாம். இது எல்லாருக்கும் தெரியணும்னுதான் பேசறேன்” என்றார் மகாராணி.

“டாஸ்க்ல வனிதாக்கா போட்ட தையலுக்காகத்தான் பில்லோ ரிஜெக்ட் ஆச்சே தவிர, ஷெரின் போட்ட டிசைனுக்காக ஆகல. அவ நல்லாவே டாஸ்க் பண்ணினா” என்று வனிதாவின் பிளட் பிரஷரை மீண்டும் ஏற்றினார் தர்ஷன். “இது டாஸ்க் பத்திக் கெடையாது” என்று வனிதா இடைமறிக்க “நான் என்ன சொல்றேன்னே தெரியாம நீங்க பேசாதீங்க. நான் இன்னும் முடிக்கல” என்றார் தர்ஷன்.

Bigg Boss Sept 6

பிறகும் வனிதா எதோ சொல்ல அமிதாப் மாமாக்கு கோபம் வந்துச்சுடா என்பது போல சேரனே டென்ஷனாகி “எத்தனை நேரம் கேட்கறது வனிதா? நீயே பேசிட்டிருப்பியா? மத்தவங்க பேசவேண்டாமா? முட்டாள் மாதிரி உட்கார்ந்திருக்க வேண்டியதா இருக்கு. ஒண்ணு சொல்றேன். யாரும் யாரையும் ஃபோர்ஸ் பண்ணி வேலை செய்ய வைக்க முடியாது. எப்படி வேலை செய்யறாங்கன்றது அவங்க ஸ்டைல். அவங்க சரியா வேலை செய்யலைனா மக்கள் பார்த்துப்பாங்க. வெளில அனுப்புவாங்க. யாரும் யாருக்கும் அட்வைஸ் பண்ணாதீங்க. அவங்கவங்க இஷ்டத்துக்கு அவங்கவங்க இருந்துக்குவாங்க” என்றார்.

‘நீதான் பேசினியா பள்னிச்சாமி?” என்பதுபோல எல்லாரும் பார்க்க “ஃபேக்ட்டு ஃபேக்ட்டு” என்றார் சாண்டி. வனிதாவின் ஈகோ எவரெஸ்டைத் தாண்ட ”என்ன ஃபேக்டு? அண்ணா சொன்ன பாய்ண்ட் எல்லாம் ஒத்துக்கறேன்.. ஆனா.” என்று சொல்ல “அதான் ஃபேக்டுன்னேன்” என்றார். அதற்குள் முகின், கவின், தர்ஷனெல்லாம் எழுந்து போய்விட “பஞ்சாயத்து முடிஞ்சிருச்சு. கெளம்பு கெளம்பு” என்பதுபோல டவலை டேபிளில் தட்டி எழுந்து போனார் சாண்டி.

ஷெரின், வனிதா மட்டும் கொஞ்சநேரம் வாதம் செய்ய “நேத்து நைட் சமைக்காதது தப்புதானே” என்று கேட்டார் சேரன். ஆமாம் என்று ஷெரின் சொல்ல ’அப்புறம்? அது தப்புதானே” என்றார் வனிதா.

Bigg Boss Sept 6

ஷெரின் வேறொரு பக்கம் சென்றமர்ந்திருக்க, அவ என்ன பண்றான்னு பார்த்துட்டு வரேன் என்று கிளம்பினார் சாக்‌ஷி. “போகாதே” என்று தடுத்தார் மகாராணி. ’அவ சரியாய்டுவா.. அதென்ன ஆளாளுக்குப் போய் சமாதானப்படுத்தறது?’ என்று கோபப்பட்டார்.

வனிதா எனும் அரக்கி

சாக்‌ஷி, பாத்ரூமில் லாஸ்லியா – அபிராமி சகிதம் அமர்ந்திருந்த ஷெரினின் கையைப் பிடித்து தனியே அழைத்து வந்தார். சேரனும் உடன் இருந்தார். “ஏன் என்னையும் தர்ஷனையும் வெச்சுப் பேசறாங்க” என்று புலம்பினார். சேரன், சாக்‌ஷிக்கு – பாய்ஸ் க்ளப் முன் நாம் பிரியக்கூடாது என்பதாக ஷெரினை சமாதானப்படுத்தினார். ‘தர்ஷனுக்கு வீட்ல முக்கியத்துவம் கூடுது. அதான் வனிதா கோபப்படறா’ என்றார் சேரன். வனிதாவை சாக்‌ஷி அழைத்து வந்து, அமர வைக்க மகாராணி முன் யார்தான் பேசமுடியும். அவர் பாட்டுக்கு அவர்தான் சரி, அவரைத்தவிர புல்பூண்டு முதல் உலகளந்தப் பெருமாள் வரை எல்லாரும் தவறு என்பதாகத் தன் வாதங்களை எடுத்துவைத்தார். ஒரு கட்டத்தில் ஷெரின் “எனக்கும் தர்ஷனுக்கும் எதும் இருக்குன்னா, அது என் பெர்சனல். அத சம்பந்தப்படுத்திப் பேச யாருக்கும் உரிமையில்லை’ என்றார். வனிதா “ஆஸ் எ கேப்டன், வேல நடக்கலைன்னா நான் கேப்பேன்” என்றார். வாதம் வலுக்க “இதுக்கு மேல இங்க பேச முடியாது” என்று எழுந்து சென்றார் சேரன்.

Bigg Boss Sept 6

வனிதா வாக்குவாதத்தின் எல்லை மீறி “தர்ஷனுக்கு வெளில ஒரு பொண்ணு இருக்கு. அது நம்ம எல்லாருக்கும் தெரியும். அப்படி இருக்கறப்ப ஷெரினுக்கு தர்ஷன் மேல கன்சர்ன் இருக்குன்னா, அப்ப அது தொடர்பு இல்லாம வெறும் ஃப்ரெண்ட்ஷிப்பா? அதை எப்படி ஒத்துக்கறது?” என்றார்.

ஷெரின் கோபம் எல்லை கடக்க “என்ன தைரியம் இருந்தா எனக்கும் அவனுக்கும் தொடர்புன்னு சொல்லுவ? நீலாம் ஒரு ஃப்ரெண்டுன்னு உன்கிட்ட பேசிட்டிருந்தேனே. இதுக்கு மேல என்னைப் பத்தியோ என் ஃப்ரெண்ட்ஷிப் பத்தியோ நீ பேசினா அவ்வளவுதான் ஆமா” என்று கத்தி நடந்து போனார். ’நீ கத்திக்கோ. உனக்கு சென்ஸ் இருக்கா’ என்றெல்லாம் வனிதா தன் லெவலுக்கு ரொம்பவுமே சாந்தமாகத்தான் உரையாடினார். கேமரா இல்லையென்றால் என்னவெல்லாம் அவர் சொல்லியிருப்பார் என்பது வேறு விஷயம்.

தர்ஷன் “அவ என்கூட ரிலேஷன்ஷிப்ல இருக்கானு எப்படிச் சொல்லலாம்” என்று கேட்க “உனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை தர்ஷன். நீ வராத” என்றார் வனிதா. “அதெப்படி நான் சம்பந்தமில்லை? என்னைப் பத்தித்தானே பேசறீங்க?” என்று கேட்க அவரை அருகில் வந்து அமர வைத்தார். “நேரடியா நீ இதுல சம்பந்தப்படலை” என்று சமாளித்தார்.

Bigg Boss Sept 6

மக்கள் நாய்களாம்ப்பா!

பாத்ரூமில் அமர்ந்து அழுதுகொண்டிருந்த ஷெரினிடம் சாக்‌ஷி பட்டவர்த்தமாக பொய் சொன்னார். “வெளில நீங்க ரெண்டு பேரும் ரிலேஷன்ஷிப்ல இருக்கறதாதான் மக்கள் நெனைச்சுட்டிருக்காங்க. அத நானும் பார்த்தேன். அதுனாலதான் வனிதாவும் நானும் உன் பேர் கெடக்கூடாதுன்னு பேசிட்டிருக்கோம். புரிஞ்சுக்கோ” என்று ஷெரின் மனதைக் குழப்பினார்.

ஷெரின் “எங்க ரிலேஷன்ஷிப் அழகா போய்ட்டிருக்கு. தப்பா எப்படித் தெரியும்?” என்று கேட்டார். சாக்‌ஷி “ஆனா அப்படித்தான் வெளில போகுது, உனக்கு எதிராகவும் தர்ஷனுக்கு சார்பாகவும்தான் ஷோ வெளில போயிட்டிருக்கு.” என்றார். அடப்பாவி புளுகி!

அண்டப்புளுகி சாக்‌ஷியின் கூனிமந்திரம் நன்றாகவே வேலை செய்தது. அவர் நேராக வனிதாவுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த தர்ஷனிடம் “உனக்கும் எனக்கும் ஒண்ணும் இல்ல. அது தப்பா வெளில போகறத நான் விரும்பல. அதுனாலா இந்த ஃப்ரெண்ட்ஷிப்பையும் முடிச்சுக்கறேன்” என்றார். தர்ஷன் “வெளில எப்படிப் போகுதுனு யாரோ சொல்றத நீ ஏன் கேக்கற. அத வெளில போய்ப் பார்த்துக்கலாம். நீ ஒண்ணும் என்னை ஹர்ட் பண்லியே” என்றதையும் ஷெரின் பொருட்படுத்தவில்லை.

Bigg Boss Sept 6

தாங்காமல் ஷெரின் பாத்ரூம் சென்று அழுதுகொண்டே இருந்தார். “நான் யார்கூடவும் அஃபேர் வெச்சுக்கற ஆள் இல்ல. தர்ஷனுக்கு ஆள் இருக்கு. அவளை சங்கடப்படுத்தற ஆள் நானில்லை.” என்றார். விஷவேர் சாக்‌ஷி, “யாரும் அப்படிச் சொல்லலயே” என்றார். நீதானேம்மா சொன்ன கொஞ்ச நேரம் முந்தி!

அதோடு நிற்கவில்லை சாக்‌ஷி. ‘கண்ட நாய்ங்க உன்னப்பத்தி கண்டதக் குரைக்கும். அதுக்கெல்லாம் நீ வருத்தப்படலாமா?”

ஷெரின் ‘என் கூடயே சுத்தற நாய் சொன்னா வருத்தமாதானே இருக்கும்.”

அதற்கு சாக்‌ஷி சொன்னதுதான் உச்சபட்ச அயோக்கியதனம். “நான் மக்களச் சொன்னேன்!”

முதலில் மக்கள் ஷெரினுக்கும் தர்ஷனுக்கும் தொடர்பு என்று பேசவே இல்லை. ரிலேஷன்ஷிப் வேறு / அஃபேர் வேறு. சாக்‌ஷிதான் மக்கள் தப்பா பேசறாங்க என்று பொய் சொன்னார். போதாக்குறைக்கு இப்போது மக்களை நாய்கள் என்றும் சொல்லிவிட்டார். சனிக்கிழமை கமல் வந்து “ரூல் புக்ல மக்களை யார் என்ன வேணும்னா சொல்லலாமாம்பா” என்பார். நாமும் ஹிஹிஹி என்று வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.

Bigg Boss Sept 6

தர்ஷன் சோகமாக பாத்ரூம் ஏரியா கதவருகே வந்து நின்றார். ”எப்பவாவது உன்னை நான் எமோஷனலா நெருங்கிருக்கேனா? உனக்கு வெளில ஆள் இருக்குன்னு தெரியும். எனக்கு யாரும் வெய்ட் பண்ல. இன்னொரு பொண்ணை ஹர்ட் பண்ணி அஃபேர் வெச்சுக்கற அளவு நான் சீப்பான ஆள் இல்லை. எப்படி என்னைப் பத்தி எல்லாரும் அப்படிப் பேசலாம். இனி யார்கூடவும் எனக்கு ஃப்ரெண்ட்ஷிப் இல்ல. அவ்ளோதான்” என்றார் ஷெரின். சேரனும் வந்து சமாதானப்படுத்த ஆறவில்லை ஷெரினுக்கு. “முடிஞ்சது… எல்லாம் முடிஞ்சது” என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

உங்க செல்லாக்குட்டி வனிதாவை உள்ள அனுப்பி ஏஞ்சலாட்டம் சுத்திட்டிருந்த ஷெரினை நாள் பூரா அழவெச்சுட்டீல்ல பிக் பாஸ்? இப்ப சந்தோஷமா ஒனக்கு?

Bigg Boss Trivia

ஃப்ரெஞ்ச் பிக் பிரதரான சீக்ரெட் ஸ்டோரியில் பிக் பாஸ் போலப் பேசுபவர் பிக் பாஸ் என்று சொல்லிக் கொள்ள மாட்டார். அதற்கு ‘த வாய்ஸ்’ என்று பெயரிட்டனர் . “This is the Voice” என்றுதான் தினமும் அந்தக் குரல் ஒலிக்கும்.