செஞ்சுரி போட்டுவிட்டது சீசன் 3. ரெண்டாவது சீசன் கொஞ்சம் டொங்கலானதால் ஆரம்பத்தில் சீசன் 3-க்கு முந்தைய சீசன்களின் வரவேற்பு இருக்கவில்லை. ஆனால் போகப்போக வனிதாவின் கைங்கர்யத்தால் சீசன் வெளியில் பரவலாகப் பேசப்பட்டது. சரவணன், மதுமிதா, மீரா மிதுன், கஸ்தூரி என்று வேறு சிலரும் தங்களாலான பங்களிப்பைச் செய்ய களைகட்டியது சீசன் 3. இந்த நூறாவது நாளில் நடந்தவற்றைப் பார்க்கும் முன்.. நேற்றைக்கு தர்ஷனைப் பற்றிப் பேசியது போல.. இன்று லாஸ்லியாவைப் பார்ப்போம்.

Bigg Boss Oct 1

பட்டாம்பூச்சி

லாஸ்லியா. நேற்றே சொன்னது போல ரசிகர்களுக்குப் பரவலாக அறிமுகமில்லாவிட்டாலும் ஆரம்பத்தில்யே கவனக்குவிப்பைப் பெற்றவர் லாஸ்லியா. யாருடனும் அதிகம் பேசவில்லை. அதே சமயம் யாரையும் ஒதுக்கித் தள்ளவும் இல்லை. ஷெரினுடனான மனக்கசப்புதான் இவரது முதல் நெகட்டிவ் கண்டெண்ட் எனலாம். அபியுடன் நட்பு, தர்ஷன் – முகினுடன் பாசம், சாண்டியுடன் தோழமை, சேரனுடன் அப்பா பாசம் என்று வளைய வந்துகொண்டிருந்தவர் கவினின் கடைக்கண் பார்வைக்குத் தடுமாறினார். கவினின் அன்பும் பாசமான பேச்சும் ஈர்க்க அவர் மீது காதல்வயப்பட்டார். சாக்‌ஷி அப்போது கவினுடன் நெருக்கம். இதனால் சாக்‌ஷி வெர்சஸ் லாஸ்லியா என்று கொஞ்சநாள் போனது. ’நீங்க ரெண்டு பேரும் இவ்ளோ க்ளோஸ்னு தெரியாது’ என்று சாக்‌ஷியிடம் பேசிய இவரை மீண்டும் கவின் கன்வின்ஸ் செய்தார். நீ மட்டும்தான் இப்ப என் ஃபோகஸ் என்று கவின் சொல்லாமல் சொல்ல அதை ஏற்காமல் ஏற்றார் லாஸ்லியா.

அதன்பிறகு எல்லாம் தலைகீழானது. வெளியில் லாஸ்லியாவுக்கு இருவேறு விமர்சனங்கள் உலவின. தப்பு – சரி எல்லாம் தாண்டி அவரது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சிலர் வீட்டுக்குள்ளும் வெளியிலும் நடந்து கொண்டனர் / எழுதினர். குடும்பங்களின் விசிட்டின்போது அதற்கும் ஒரு சவால் வந்தது. லாஸ்லியாவின் அப்பா அம்மாவின் அழுகை, பாசம், உணர்ச்சி, கவினையும் கடிந்து கொள்ளாமல் மரியநேசன் நடந்து கொண்ட விதம் என்று ஒரு காதலுக்கு மரியாதை குடும்ப எபிசோட் எல்லார் மனதிற்குள்ளும் ஓடியது.

Bigg Boss Sept 21

அதற்குப் பிறகும் லாஸ்லியா தன் மனம் சொல்லியபடியே நடந்து கொண்டார். ஜாலியாக இருந்தார். கவின் போன, அந்த வாரத்தில் மட்டும் மிகவும் மனமொடிந்து காணப்பட்டார். எல்லாரும் உற்சாகப்படுத்த கடந்து வந்துவிட்டார். இந்தப் போட்டியின் சர்ப்ரைஸ் பேக்கேஜில் இவரும் நிச்சயமாக ஒருவர்!

இனி இன்றைய நிகழ்ச்சி…

100வது நாள். உள்ளே வந்த டான்ஸர்ஸுடன் ரௌடி பேபிக்கு இந்நாள் ஹவுஸ்மேட்ஸும் முன்னாள் ஹவுஸ்மேட்ஸும் ஆடினர். முடிந்ததும் மீரா கண்ணை மூடி தியானம் செய்துகொண்டிருக்க சாண்டி அருகிலிருந்து அதைக் கிண்டல் செய்து கொண்டிருந்தார். தியானம் முடிந்து எழுந்தருளிய மீரா மிதுன் “நீதான் என் Positive Vibe (நேர்மறை அதிர்வுகள்) -லாம் எடுத்துட்டிருந்திருக்க. அதான் நீ கடுமையான போட்டியாளரா இருக்க..” என்றார். ‘இல்லீன்னா மட்டும் அம்மணி அப்டியே கிளுகிளுனு ஆடி ஜெயிச்சிருக்கும் பாரேன்’ என்றார் பக்கத்தூட்டு லட்சுமியக்கா.

Bigg Boss Oct 1

ஒரு மணி நேரத்தைக் கணக்கிடும் டாஸ்க். ஒரு வட்டமும் முள்ளும் இருந்தன. முகினும் சாண்டியும் லாஸ்லியாவும் ஷெரினும் அமர்ந்து ஒரு மணிநேரத்தைக் கணக்கிட வேண்டும். இரண்டிரண்டு பேர்களாக அமர்ந்து மனதுக்குள் கணக்கிட்டு ஒரு மணிநேரத்தைத் கணக்கிட்டுவிட்டு அவர்கள் கணிப்புப்படி முடிந்ததென்றால் அருகிலிருக்கும் மணியை அடிக்கவேண்டும். ஒருவர் கணக்கிடும்போது மற்றவர்கள் அவர்கள் கவனத்தைச் சிதறடிக்கலாம்.

லாஸ்லியா: 1.23
ஷெரின்: 1.18
சாண்டி: 1.17
முகின்: 53 நிமிடங்கள்

முகினின் கணிப்பு 1 மணி நேரத்துக்கு நெருக்கமாக இருந்ததால் அவர் வெற்றி பெற்றார்.

வின்னராக ஆளாளுக்குப் போட்டி போட சைலண்டாக ‘நானும் கேம்ல இருக்கேண்டா’ என்று இந்த சீசனில் திடீரென்று உற்சாகக் கமெண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார் பிக் பாஸ். இன்றைக்கும் அப்படி ஒன்று நடந்தது. ஷெரின், ஃபாத்திமா, சாண்டி, முகின், மீரா ஐவரும் அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். நீள பெஞ்ச்சில் ஷெரின், சாண்டி இருவருக்கும் நடுவில் ஃபாத்திமா அமர்ந்திருந்தார். சாண்டிக்கு அருகில் சேரில் முகின். முகினுக்கு அருகில் தரையில் மீரா. பிக் பாஸ் குரல் ஒலித்தது.

Bigg Boss Oct 1

“முகின்.. உங்க சேரை மீராவுக்குப் பக்கமா நகர்த்தி உட்காருங்க”

அவர் எழுந்து நகர்ந்து உட்கார்ந்தார். ‘கேமரா கோணம் மறைக்குது. . அதான் சொல்லிருக்கார்’ என்று பேசிக் கொண்டனர்.

“சாண்டி முகினுக்குப் பக்கத்துல போய் நில்லுங்க” என்றது குரல். அவரும் போய் நின்று கொண்டார். ‘எதற்கு இது’, ‘என்னமோ பண்ணப் போறாரு பிக் பாஸ்..’ ‘குரூப் ஃபோட்டோ எடுக்கறாங்களா?’ என்றனர் ஹவுஸ்மேட்ஸ்.

“ஃபாத்திமா” பிக் பாஸ் குரல் அழைக்க நிமிர்ந்தார் ஃபாத்திமா. “இப்ப எழுந்து போக இடம் இருக்கா?”

ஃபாத்திமா `இருக்கு பிக் பாஸ்’ என்றார். “அப்ப எழுந்து போய் மைக்கை மாட்டுங்க” என்று குரல் சொல்லவும் மொத்த ஹவுஸ்மேட்ஸும் பயங்கர ஜாலியாகி சிரித்தனர்.

வேற லெவல்ல லந்து பண்ற மேன் நீயி!

Bigg Boss Oct 1

சாண்டி எமோஷன் அண்ணாச்சி!

வீட்டில் இவர்கள் செய்த குறும்புத் தருணங்கள் ப்ளாஸ்மா டிவியில் ஒளிபரப்பப்பட்டது. எல்லாரும் சிரிப்பை அடக்க முடியாமல் கொண்டாடினர். பிறகு நேற்றைக்கு உணர்ச்சிப்பூர்வமான தருணங்களின் புகைப்படங்களை டிஸ்ப்ளே செய்திருந்தது போல இன்றைக்கு சிரிப்புத் தருணங்களை ஆக்டிவிட்டி ஏரியாவில் டிஸ்ப்ளே செய்திருந்தார்கள். அதைப் பார்த்து ஒவ்வொருவரும் தாங்கள் ரசித்துச் சிரித்த தருணங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

மோகன் வைத்யா “என்னை ரொம்ப ஹேப்பியா சிரிக்கச் சிரிக்க வெச்சுக்கிட்ட சாண்டி, கவின், முகின், தர்ஷன் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. ஐ லவ் யூ ஆல்” என்றார். “இவங்க இப்டி நடந்துகிட்டதுக்குத்தானே அந்தாளு மூஞ்சியத் தூக்கி வெச்சுட்டு, ‘வயசுக்கு மரியாத இல்லையா’னு திரிஞ்சாரு?” என்று கேட்டார் லட்சுமியக்கா. “அப்டித்தான்க்கா. வெள்ல போய்ப் பார்த்தப்பவும் திட்டிருப்பாரு.. சங்கடப்பட்டிருப்பாருதான். ஆனா அவங்க செஞ்சதெல்லாம் மக்கள் ரசிச்சிருக்காங்கன்றப்ப என்ன பண்றது.. தனக்கும் பிடிச்ச மாதிரி காட்டிக்க வேண்டிதுதான்” என்று சமாதானப்படுத்தினேன்.

Bigg Boss Oct 1

முகின் தான் மகிழ்ச்சியாக சிரித்த தருணங்களை நினைவுபடுத்திப் பேசினார். லாஸ்லியா அடுத்துப் பேசினார். பேசிய அனைவருமே சாண்டியைத் தவறாமல் குறிப்பிட்டனர். ஒவ்வொருவரும் தன்னைப் பாராட்டும்போது மகிழ்ச்சியடைந்தாலும் அதைத்தாங்க முடியாமல் இருந்தார் சாண்டி. குறிப்பாக லாஸ்லியா டாஸ்க் ஆனாலும் சரி, நார்மல் நாட்களானாலும் சரி – தோசை சுடுவதோ, குழந்தையாய் மாறுவதோ , பெண் வேடம் போடுவதோ.. – எதையாவது செய்து எல்லாரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார் சாண்டி என்பதைக் குறிப்பிட்டார்.

சாண்டி போய்ப் பேச நின்றார். நிலையாக நிற்காமல் ஆட ஆரம்பித்தார். அவர் அப்படிச் செய்கிறார் என்றாலே உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கிறார் என்று பொருள். அதேபோலவே பேச முடியாமல் அழுகை முட்டிக்கொண்டு வந்தது அவருக்கு. “எல்லாருக்கும் நன்றி. எல்லாரையும் ஜாலியா வெச்சுக்கணும்னு நினைச்சேன். அதப் பண்ணிட்டேன்றப்ப சந்தோஷமா இருக்கு. எல்லாரும் சேர்ந்துதான் இதப் பண்ணினோம். இப்ப எனக்கு என் பொண்டாட்டியோட வலி புரியுது. வெளில எல்லாரையும் ஹேப்பியா வெச்சுகிட்டு, வீட்டுக்குள்ள வந்து எரிஞ்சு விழுந்துட்டுப் போய்டுவேன்” என்று நா தழுதழுக்கப் பேசிக் கொண்டே வந்தவர் அழுகையை அடக்க வழி தெரியாமல் ஒரு ஐடியா செய்தார். “முகின் வாடா.. கட்டிப் பிடிச்சிக்கறேன்” என்றவர் முகினின் தோளில் முகம் புதைத்து அழுது தீர்த்தார்.

Bigg Boss Oct 1

சூப்பர் பார்ட்டி!

100ம் நாள் இரவு 9.45க்கு, “வெளில எல்லாருக்கும் ஒரு சர்ப்ரைஸ் பார்ட்டி காத்திருக்கு. எல்லாரும் தயாரா?” என்றார் பிக் பாஸ். எல்லாரும் ரெடி என்று கத்த, ‘கேக்கலயே.. கேக்கல’ என்று கலாய்த்துக் கத்த வைத்தார்.

சூப்பர் சிங்கர் மணி & Band வெளியே கார்டன் ஏரியாவில் தயாராக அமர்ந்திருந்தனர். சூப்பர் சிங்கர்ஸ் பிரியங்கா, திவாகர் என்று எல்லாரும் இருந்தனர். கீ போர்ட் ஸ்பெஷலிஸ்ட் கார்த்தியை சாண்டி கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’யில் ஆரம்பித்தது கச்சேரி. முகினுக்காக ஹொசன்னா பாடப்பட்டது. ஷெரினின் அழகிய அசுராவுக்கு எல்லாரும் ஆடினர். அதன்பிறகு முகினுக்கு ஒரு லைஃப்டைம் மொமண்ட் நடந்நது.

சூப்பர் சிங்கர் சௌந்தர்யா முகினிடம் “எதும் தப்பா பாடினா சாரி” என்று சொல்லி முகின் வீட்டிலிருக்கும்போது கம்போஸ் செய்த ‘சத்தியமா நான் சொல்லுறேண்டி.. உன் பார்வை ஆளத்தூக்குதடி..” பாடலைப் பாடினார். முகினும் அவரோடு சேர்ந்து பாடினார். ஒரு ஹைபிட்ச்க்கு எனக்கும் புல்லரிக்க வீட்டினர் அப்படிக் கொண்டாடினர். செம்ம கம்போஸிங் அது!

Bigg Boss Oct 1

இளையராஜா போட்டது என்று கேட்காமல் ‘பிரியங்கா பாடுவாங்களே’ என்று கேட்கும் அளவுக்கு அவர் குரலில் ஹிட்டான ‘சின்னச் சின்ன வண்ணக்குயில்’ பாடலை அவரே பாடினார். முடிக்கும்போது சாண்டியைப் பார்த்து ‘லாலா லாலா லாலா லாலா’ என்று பாட சாண்டி உருக ஆரம்பித்தார். அந்த எமோஷனை அப்படியே கொண்டு போனது அடுத்த பாடல். சிங்கர் திவாகர் ‘லாலாவுக்காக’ என்று ஒரு பாடலைப் பாடினார். இமான் தன் வாழ்நாளுக்கும் பெருமைப்பட்டுக்கொள்ள போட்ட ‘கண்ணான கண்ணே’ பாடல். சாண்டி, லாலா படத்தை ஒட்டிவைத்த குட்டித்தலையணையை வைத்துக்கொண்டு அந்தப் பாடலுக்கு நடனம் ஆடினார். எல்லாரும் உருக சிலர் அழ என்று உணர்ச்சிப் பிரவாகமாக இருந்தது. மியூசிக்!!!

இசை நிகழ்ச்சி முடிந்தது என்று பிக் பாஸ் அறிவிக்க “இன்னும் ஒரே பாட்டு ஒரே பாட்டு குருநாதா” என்று சாண்டி கெஞ்சினார். ”எல்லாரும் ப்ளீஸ் சொல்லுங்க” என்று சொல்லவைத்த பிக் பாஸ், அதன்பின் அனுமதி அளித்தார். குத்துப்பாடல்களின் மெட்லியோடு இசை நிகழ்ச்சி முடிந்தது.

Bigg Boss Oct 1

சாண்டி, லாஸ்லியாவை பயமுறுத்திய ஒரு குட்டிக் காட்சியோடு இன்றைய எபிசோட் நிறைவுற்றது.

Bigg Boss Trivia

பிக் பிரதர் லண்டனில் ஒரு சீசனில் முதல் ஐந்து வாரங்களூக்கு ஒரு சீக்ரெட் டாஸ்க் என்று கொடுப்பதாகவும் யார் அதை எடுத்துக் கொள்கிறார்களோ அவர்கள் கொடுத்த டாஸ்கை 5 வாரத்தில் வெற்றிகரமாக முடித்தால் வெற்றி பெற்றால் கிடைக்கும் பணம் மட்டும் கொடுக்கப்படும். அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறிவிடலாம் என்றும் சொன்னார். ஒருவர் அந்த சவாலை ஏற்றுக் கொள்ளவும் செய்தார். ஆனால் பிம்பிளிக்கி பிளாப்பிதான். காரணம் மற்ற ஹவுஸ்மேட்ஸூக்கு டாஸ்க்கே சவாலை ஏற்றுக் கொண்டவரை ஜெயிக்க விடக்கூடாது என்பதுதான்.